24 டிசம்பர், 2021

எம்.ஜி.ஆர் நினைவு நாள்

 வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி....


      இலங்கையில் தேயிலை உள்ளிட்ட பிற தோட்டங்கள் நிறைந்த கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோபால மேனனுக்கும், சத்யபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்ஜிஆர். இவரது மூத்த சகோதரர் பெயர் எம்.ஜி. சக்ரபாணி. எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா பூர்விகமான கேரளத்தின் பாலக்காடுக்குத் திரும்ப முடிவெடுத்தார்.

       ஆனால், உறவினர்களின் ஆதரவு கிடைக்காததால் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வேலு நாயரின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார் சத்யபாமா. அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.

       பதினான்கு வயதில் நடிப்புத்துறைக்குள் நுழைந்த எம்ஜிஆருக்கு ஆரம்ப காலத்தில் கைகொடுத்தது மேடை நாடகமும் நாடகக் கலைஞர்களும்தான். பதின்ம வயதில் தனது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியுடன் பாய்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் எம்ஜிஆர். அங்கு கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்தாலும் எம்ஜிஆரின் கனவு, வெள்ளித்திரை மீதே இருந்தது.

     அந்தக் காலத்தில் நடிப்புத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதுவும் கதாநாயகனாக வேண்டுமானால், அவருக்கு இயல்பாகவே ஆடலும், பாடலும், வார்த்தை சுத்தமாக தமிழ் பேசவும் சரியான உச்சரிப்பும் தெரிந்திருப்பது கட்டாயம்.

     இந்த நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் அவரது சகோதரரை மேடை நாடகங்களில் பங்கேற்கச் செய்ய ரங்கூனுக்கு அனுப்பி வைத்தார் கந்தசாமி முதலியார். அவர்தான் எம்ஜிஆரின் திரை வாழ்க்கைக்கான ஆதர்ச வழிகாட்டி என பின்னொரு நாளில் எம்ஜிஆரே குறிப்பிட்டார். ரங்கூனில் ஆண், வேடம் மட்டுமின்றி பெண் வேடத்திலும் எம்ஜிஆர் நடித்தார்.

     14 வயதில் மேடை நாடகங்களில் தோன்றிய எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரை செட்டுக்குள் நுழைய ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சதி லீலாவதி என்ற படத்தில் ஓர் ஊழல் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர்.

      அதன் பிறகு சிறு, சிறு வேடங்கள் அவருக்கு கிடைத்தாலும், எல்லா திரை நாயக, நாயகிகளுக்கும் ஏற்படுவது போன்ற திருப்புமுனை, எம்ஜிஆருக்கு 1950ஆம் ஆண்டில்தான் நடந்தேறியது. அப்போது வரலாறறுக்காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை ஏழை, எளியவர்களின் நாயகனாக, உலகுக்கு அடையாளப்படுத்தியது வெள்ளித்திரை.


    அந்த ஒரு திருப்பத்திலேயே தனக்கான பாதை எது என்பதை உணர்ந்தவராக தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாகவும், அவை சாமானியர்களை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். அதற்கு கைகொடுத்தவை,  கதை வசனங்கள் மற்றும் திரைப்பாடல்கள்.

     1936 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டுவரை அவர் இறப்புக்குப் பிறகு வெளியான இரண்டு படங்கள் உட்பட எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 136. அவற்றில் 132 படங்கள் தமிழிலும், இரண்டு படங்கள் மலையாள மொழியிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தலா ஒரு படமும் அடங்கும்.

    எம்ஜிஆருக்குப் பல விஷயங்கள் அவரை முதன்மையானவராக உலகுக்கு அடையாளப்படுத்தின. அது இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தின் முதல்வராக முதலாவதாக பதவிக்கு வந்த நடிகர் என்பது. அதைப்போல, இந்திய திரைப்பட வரலாற்றில், குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்ற முதலாவது நடிகராக அவர் அறியப்பட்டார். 1972ஆம் ஆண்டில் ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது.

    திரையில் முதல் படத்தில் தனக்குக் கிடைத்த புகழ், சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர், திரை வாழ்க்கையுடன் சேர்த்து அரசியல் வாழ்க்கையையும் தேர்வு செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

    1972இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். தனது புதிய கட்சி, அண்ணாவின் கோட்பாடுகளைப் பின்பற்றும் என்று அறிவித்தார் எம்ஜிஆர்.எம்ஜிஆர் தமது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த பள்ளிகளில் சத்துணவு, இலவச பற்பொடி, சீருடை, காலணி போன்றவை சிறார்கள் மனதில் எம்ஜிஆருக்கு ஒரு நீங்காத இடத்தை பெற்றுத்தந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் எம்ஜிஆரின் அரசியலைக் கொண்டு சேர்க்க உதவியது.

    1984இல் சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகளால் சுகவீனம் அடைந்தார் எம்ஜிஆர். அதன் பிறகு வெளிநாட்டு மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை மேற்கொண்டார்.

     பின்னர் நடந்த தேர்தலில் பிரசாரத்துக்கு செல்லாமலேயே வென்ற எம்ஜிஆர், ஆட்சியில் தொடர்ந்தபோதும், அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், எம்ஜிஆரின் உயிர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிரிந்தது.

அவரது வாழ்வு 

“வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? 


என்ற கேள்விக்கு விடையாக அமைந்தது.

நன்றி : பி.பி.சி

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...