புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7-ந் தேதி, நாடு முழுவதும் ‘உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்' அனுசரிக்கப்படுகிறது.
உண்மையில் புற்றுநோய் ஒரு புரியாத புதிர் என்றே சொல்லலாம்.உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதம் அதிகரித்தே வருகிறது. 1984 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு இருந்த புற்றுநோயின் தாக்குதல், தற்போது 90 முதல்100 பேராக அதிகரித்துள்ளது.
இந்த உலகளாவிய அவசரநிலையைச் சமாளிக்கவும் நோயைக் கட்டுப்படுத்துவதில் நமது பங்கு என்ன என்ற முக்கியமான செய்தியைப் பரப்ப இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், நோய் குறித்த தவறான கருத்துக்கள், புற்றுநோயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காணவும், சரியான சிகிச்சையைப் பெறவும் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மக்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த தினத்தின் பின்னணியில் உள்ள வரலாற்று உண்மைகள்:
1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் UICC கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது. உலகளவில் புற்றுநோய் விழிப்புணர்வை ஒருங்கிணைத்துப் பரப்புவதற்கான முயற்சிகளில் WHO மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் UICC-ஐ ஆதரித்து வருகின்றன.
2021-ஆம் ஆண்டு உலக புற்றுநோய் தினத்திற்கான தீம்
ஒவ்வொரு வருடமும் UICC இந்த தினத்திற்கு ஒரு கருப்பொருளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் ‘I can, we can’ என்பது தீர்மானமாக இருந்தது. புற்றுநோய் சுமையை எதிர்த்து என்னால் போராடமுடியும். நம் அனைவராலும் போராட முடியும் என்பது தான் அதன் அர்த்தம். எனவே, புற்றுநோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கவும், ஆரம்பகால நோயறிதல், சிகிச்சைகள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையின் சவால்களை சமாளிக்கவும் நம்மால் முடியும்.
அதன்படி 2021 இன் தீம் என்னவென்றால் ‘I Am and I Will’ என்பது தான். இதன் பொருள் புற்றுநோயை எதிர்த்து இந்தப் போரில் வெற்றி பெறுவதற்கான திறனை நான் கொண்டுள்ளேன் என்பதாகும்.
பாதிப்புக்கு காரணம்
கார்சினோஜென் கார்சினோஜென்கள் எனப்படும் ஒருவகை ஊக்கிதான் நமது உடம்பில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இது புகையிலையில் மட்டுமே இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் வழியாகவும் உடலுக்குள் நுழைகின்றது. செயற்கை வேதிப்பொருட்கள் செயற்கை வேதிப்பொருட்களான சோடியம் பென்சோயிட், சோடியம் நைட்ரேட் ஆகியவை குழந்தைகளைப் பாதிப்பதுடன், பெரியவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வரக் காரணமாகின்றன.
செல்கள் பாதித்தால் கட்டியாகும். மரபுவழி, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணிகள் சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய்க்கான கட்டியா என்று தீர்மானிக்கின்றன.
புற்றுநோய்கள் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டவை. எந்த அளவு பாதிப்பு, குணப்படுத்த முடிவு, எவ்வளவு காலமாகும் என்பதை புற்றுநோயின் காலம்தான் முடிவு செய்யும்.
ஆரம்ப நிலையில் நோய் கண்டறியப்பட்டால் நோயை குணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எளிது
மார்பகம், கர்ப்பப் பை பெண்களின் மார்பு பகுதியில் ஏற்படும் இந்த வகை புற்றுநோய் மிகவும் ஆபத்தானது என்றே கூறலாம். ஏனென்றால், 2018-ம் ஆண்டில் மட்டும் 21 லட்சம் பேருக்கு மார்பகப் புற்றுநோய் வந்துள்ளது. அதில் இந்தியாவில் 1,62,468 பதிவாகியுள்ளது. 50-64 வயதுடைய பெண்களுக்கு இவ்வகை அதிகமாக வருகிறது.
உலகம் முழுவதும் 2018-ல் 6,27,000 பேரை, இந்தியாவில் 87,090 பேரையும் பலிவாங்கியுள்ளது இந்தப் புற்றுநோய். இதற்கு அடுத்தப்படியாக 21-67 வயதுடைய பெண்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் வருகிறது. இந்தியாவில் 2018ல் 96,922 பேருக்கு இவ்வகை புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 60,078 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
நுரையீரல் புற்றுநோய் புகைப்பழக்கம் அல்லது மாசு அதிகம் உள்ள காற்றை அதிகம் சுவாசிப்பதால் இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது. 2018ல் 67,795 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 63, 475 பேர் பலியாகினர்.
ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோய்
இந்தியாவில் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் 16 சதவீதம் இவ்வகை புற்றுநோய்தான். புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவை உட்கொள்வதால், இந்த புற்றுநோய் வருகிறது. 2018-ல் 72,616 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கல்லீரல் புற்றுநோய்
அதிவேகமாகப் பரவும் புற்றுநோயில் 2ஆவது இடம் வகிக்கிறது கல்லீரல் புற்றுநோய். சர்வதேச அளவில் ஒவ்வோர் ஆண்டும் 7,50,000 பேர் இதனால் இறக்கின்றனர். அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 7,80,000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இந்தியாவில் 2019ல் ஜூலை வரை 25,999 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதேபோல், 19,676 பேர் பலியாகியுள்ளனர்.
மனவலிமை வேண்டும்
புற்றுநோய் ஒன்றும் பரவும் நோய் இல்லை. ஆனால், பரவும் என்று எண்ணி புற்றுநோயாளிகள் பலர் தனிமைப்படுத்தப் படுகிறார்கள். இதனாலே மனவலிமையற்று, பல நோயாளிகள் நடைபிணமாக மாறிவிடுகின்றனர். உணவுப் பழக்கம், உடற்பயிற்சி தினமும் உடற்பயிற்சி செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது புற்றுநோயிலிருந்து மட்டுமன்று எந்த நோயில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.
ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி, நோய்க்குத் தீர்வு கண்டு வாழ்வை மீட்டு எடுக்கலாம். பரிசோதனை அவசியம் புற்றுநோய் ஒரு நாளில் ஊருவாவதில்லை. நாள் பட்ட புண் போன்றதுதான். எனவே குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது முழு உடலைப் பரிசோதனை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை இல்லை என்றாலும், இதற்காக ஒரு தொகையை தனியார் மருத்துவமனையில் கொடுப்பதில் தவறேதுமில்லை.
இந்தியாவிலேயே வசதி புற்றுநோயின் தீவிரத்துக்கு ஏற்றாற்போல அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சுச் சிகிச்சை, கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை, இலக்குச் சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை போன்ற பலவகையான சிகிச்சை முறைகள் இந்தியாவிலே உள்ளன.
புற்றுநோய் வந்து, அதை மன உறுதியோடு அதை எதிர்த்துப் போராடி வெற்றிகொண்டவர்கள் பலர் நம்மிடையே உள்ளனர் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்