சிறுவயதில் நாம் பல பாடல்களைப் பாடியிருப்போம்.
"கைவீசம்மா கைவீசு!',... "தோசையம்மா தோசை!',... "அம்மா இங்கே வா வா!',....."மாம்பழமாம் மாம்பழம்” இந்த பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் யார் தெரியுமா?
பள்ளியில் சக மாணவன் ஒருமுறை தட்டு கிட்டு, லட்டு, கட்டு, மட்டு, வட்டு, விட்டு, பிட்டு என்று வேடிக்கையாக சொற்களை அடுக்கிக் கொண்டே போனான்! ஒத்த ஓசையுடைய அந்தச் சொற்கள் சிறுவன் மனதில் ஒரு பாடலைத் தோற்றுவித்தன.
அதை உடனே தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டான். அது பிற்காலத்தில் ஒரு பெரிய குழந்தை இலக்கியப் பாடலாக மாறப்போகிறது என்பது அன்று அவனுக்குத் தெரியாது! அந்தப் பாடல்தான் எளிய பொருள் நிறைந்த பல பாடல்கள் அச்சிறுவனால் பிற்காலத்தில் எழுதக் காரணமானது. அவர் யார் தெரியுமா?
அவர்தான் பிற்காலத்தில் 'குழந்தைக் கவிஞர்' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட கவிஞர் திரு.அழ.வள்ளியப்பா ஆவார்.
இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள "ராயவரம்' என்னும் சிற்றூரில் 7.11.1922 அன்று பிறந்தார். குடும்பப் பொறுப்புகள் காரணமாக அவரால் கல்வியைத் தொடர முடியவில்லை. எனவே தனது 18-ஆவது வயதில் சென்னையில் இருந்த "சக்தி' பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்தார். இவர் எழுதிய முதல் கதை "ஆளுக்குப் பாதி' என்பதாகும்.
1941 ஆம் ஆண்டு இவருக்கு வங்கியில் வேலை கிடைத்தது. வங்கியில் பணிபுரிந்து கொண்டே பாலர் மலர், சங்கு போன்ற சிறுவர் இதழ்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1951 முதல் 1954 வரை "பூஞ்சோலை' என்ற சிறுவர் இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார்.அந்நாளில் சிறுவர் இதழ்களில் பலர் எழுதிவந்தனர். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, 1950 இல் "குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.
இவர் எழுதிய சிறுவர் பாடல்கள் யாவும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளி வந்தன.1944 ஆம் ஆண்டு "மலரும் உள்ளம்' என்ற தொகுதியும்,1954 ஆம் ஆண்டு 135 பாடல்கள் கொண்ட தொகுதியும் ,1961இல் மற்றொரு தொகுதியும் வெளிவந்தன.
"நம் நதிகள்' என்ற தலைப்பில், இவர் தமிழகத்தின் ஆறுகள் பற்றிய நூல் ஒன்றை எழுதினார். இந்நூலை, புதுதில்லியில் உள்ள "தேசியப் புத்தக டிரஸ்ட்' (National Book Trust) பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டது! இது, தமிழக எழுத்தாளர் ஒருவருக்கும் கிடைக்காத பெருமையாகும். இவர் 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம்,1 ஆய்வு நூல், 2 மொழி பெயர்ப்பு நூல்கள், 1தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
இவற்றில் 2 நூல்களுக்கு மத்திய அரசின் பரிசுகளும், 6 நூல்களுக்கு மாநில அரசின் பரிசுகளும் கிடைத்துள்ளன. இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்லாது தலை சிறந்த பேச்சாளரும் ஆவார். 1979ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்திலும், 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரைகள் மிக முக்கியமானவையாகும்.
பல தொண்டு நிறுவனங்கள் இவருக்கு "குழந்தை இலக்கிய முன்னோடி', "பிள்ளைக் கவியரசு,' "மழலைக் கவிச் செம்மல்” போன்ற பல விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன .1982 ஆம் ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்ற விருது அளித்தது.
வள்ளியப்பா குழந்தைகளோடு பழகும் பொழுது, தானும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். அவர்களோடு மனம் விட்டுப் பேசி ஆடிப்பாடி மகிழ்வார். அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளை அழைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் கதை சொல்வார். இதற்காக ஏராளமான குழந்தைகள் அவர் வீட்டுக்கு வருவர்.
ஒருநாள் சிறுவன் ஒருவன் புதுச்சட்டை அணிந்து வந்தான். காரணம் கேட்டதற்கு, "எனக்கு இன்று பிறந்தநாள்!' என்று கூறினான். உடனே சிறுமி ஒருத்தி, "நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன்!' என்று கூறினாள். மற்றொரு சிறுமி குறுக்கிட்டு, "நான் புதன்கிழமை பிறந்தேன்!' என்று கூறினாள்.
வள்ளியப்பாவிற்கு உடனே ஒரு பாடல் தோன்றியது அதுதான்.
"ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை நன்றாய்
பாடம் படித்திடுமே!
திங்கள்கிழமை பிறந்த பிள்ளை தினமும்
உண்மை பேசிடுமே!'
இவ்வாறு ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு சிறப்பைக் கூறி, "இந்தக் கிழமை ஏழுக்குள் எந்தக் கிழமை நீ பிறந்தாய்?' என்று முடித்திருப்பார்.
அவரது திறமைக்கு இந்தப் பாடல் ஒன்றே சான்றாகும். குழந்தைகளோடு ஒன்றி வாழ்ந்த நம் கவிஞர் 16.3.1989 அன்று காலமானார்.
தகவல் துளிகள்
(1) வள்ளியப்பா ஓய்வு பெற்றபின் 1983 முதல் 1987 வரை கோகுலம் இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
(2) இவரது பல பாடல்கள் நூல்களாக மட்டும் இல்லாமல் குறுந்தகடு வடிவிலும் வெளிவந்துள்ளன.
(3) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இவரது பாடல்களை மிகவும் நேசித்தார் . "குழந்தை உள்ளம் கொண்டவர் மட்டுமே குழந்தைகளுக்கு எழுத முடியும்!' என்று கூறினார்.
(4) மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கம், வள்ளியப்பா பற்றி இப்படி குறிப்பிட்டார்."தமிழில் நான்கு வகையான பாக்கள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் என்னை பொருத்தவரை பா வகைகள் ஐந்து. அவை ஆசிரியப்பா ,வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் வள்ளியப்பா!'
(5) கவிஞரும், எழுத்தாளருமான கொத்தமங்கலம் சுப்பு, வள்ளியப்பா அவர்களை பின்வருமாறு பாராட்டினார்.
"வள்ளியப்பா ஒரு புள்ளியப்பா! அவர் வரையும் பாக்கள் வெள்ளியப்பா! வளரும் பிள்ளைகளுக்கு பள்ளியப்பா!'
(6) இவருக்கு "குழந்தைக் கவிஞர்' என்ற பட்டத்தை வழங்கியவர் திரு தமிழ்வாணன் ஆவார்.
(7) இவர் இறக்கும் பொழுதும் குழந்தை இலக்கியம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். "குழந்தை இலக்கியத்தை பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்க வேண்டும்' என்று பேசி முடித்து மயங்கிச் சரிந்தார், இந்தத் தமிழ் குழந்தை இலக்கியத்தின் முன்னோடி.
குழந்தைகளின் கவனத்தைக் கவர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. குழந்தைக் கவிஞர் என்று சொன்னாலே அழ. வள்ளியப்பாதான் மனதில் தோன்றுவார். இந்தச் சாதனையை குழந்தைகள் உலகம் என்றும் கொண்டாடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக