13 டிசம்பர், 2021

எழுத்தாளர், தீபம் நா.பார்த்தசாரதி நினைவுநாள்

 

      நா.பார்த்தசாரதி புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. 

    வத்தலக்குண்டு அருகே நதிக்குடி கிராமத்தில், 1932-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி பிறந்தார் அமரர் "தீபம்' நா. பார்த்தசாரதி. வாழ்ந்த காலங்கள் 55 ஆண்டுகள்தான். அதற்குள் அவர் படைத்தவை 93 புத்தகங்கள். இவற்றில் சிறுகதை, குறுநாவல் தொகுதிகளும் உண்டு. அவற்றில் இடம்பெற்றுள்ள படைப்புகளின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பார்த்தால், அவர் படைத்த மொத்தப் படைப்புகளின் கூட்டுத்தொகை பிரமிக்க வைக்கும். எழுத்தே வாழ்வாக வாழ்ந்து மறைந்தவர் நா.பா.

     ராமன், கிருஷ்ணன் போன்ற இதிகாச நாயகர்கள் மாதிரி அவர் படைத்த "குறிஞ்சிமலர்' நாவலின் கதாபாத்திரங்களான அரவிந்தனும் பூரணியும் வாசகர்கள் மனத்தில் நிலைபெற்றுவிட்டார்கள். ஏராளமான பேர் தங்கள் குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணி என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார்கள், மகிழ்கிறார்கள்.

       எல்லாவகைப் படைப்புகளையும் எழுத முடிந்த ஆற்றல் மிக்க எழுத்தாளர் அவர். அவரது குறிஞ்சிமலர், பொன்விலங்கு முதலிய சமூக நாவல்கள் எத்தனை புகழ்பெற்றனவோ, அதற்கு இணையாக அவரது மணிபல்லவம், நித்திலவல்லி, பாண்டிமாதேவி, ராணி மங்கம்மாள் ஆகிய சரித்திர நாவல்களும் புகழடைந்தன. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என அவர் தொடாத துறையே கிடையாது.

           தற்கால இலக்கியவாதிகளில், நா.பா.வின் தனித்தன்மை அவரது எழில் கொஞ்சும் நடைதான். "அவள் பார்வையே ஒரு பேச்சாக இருந்தது என்றால், அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது” என்பதுபோல வார்த்தைகளை மடக்கிப்போட்டு அழகிய வாக்கியங்களை அவரால் எழுத முடிந்தது. 

       கதாநாயகியின் பாதங்களில் மருதோன்றிச் சுவடு தென்பட்டதைப் பற்றிச் சொல்லும்போது, "சிவப்பு மையால் அடிக்கோடிட்டதுபோல'' என்று எழுதினார் அவர். அழகிய கையெழுத்தைப் பற்றி எழுதும்போது, "தேர்ந்து பழகிய கை, பூத்தொடுத்த மாதிரி'' என்று எழுதினார். இப்படி இதுவரை யாரும் சொல்லாத புத்தம் புதிய உவமைகளை எழுதும் அவரது ரசனை மிகுந்த மனம் பலரையும் கவர்ந்தது.

   “அறிவாளிகள் சுயமரியாதை காரணமாகத் தட்டத் தயங்குகிற கதவுகளை முட்டாள்கள் உடைத்துக்கொண்டு உள்ளே போய் உட்கார்வதுதான் இன்று நாட்டின் அவலம்'' என்பன போன்ற அவரது வரிகள், அன்றைய காலத்தை விடவும் இன்று இன்னும் அதிகமாகப் பொருந்துகின்றன.

     அவரது எழுத்து இளைஞர்கள் பலரையும் ஈர்க்க முக்கியக் காரணம், அவற்றில் தென்பட்ட சுயமுன்னேற்றச் சிந்தனைகள். அவரது எழுத்தைப் படித்தால் ஒரு மில்லி மீட்டராவது மனம் மேம்படும் என்று நம்பியே இளைஞர்கள் அவர் எழுத்தைக் கொண்டாடினார்கள். 

"குறிஞ்சிமலர்” தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்டபோது, அதில் அரவிந்தனாக நடித்த இன்றைய முதல்வர் மாண்புமிகு. ஸ்டாலின், அந்தத் தொடரில் நடித்ததால் தன் மனம் மென்மைப்பட்டதாகக் கூறி மகிழ்ந்தார்.

 சாகித்ய அகாதெமி பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு உள்படப் பல பரிசுகள் பெற்றவர் நா.பா.

     நா.பா., எண்ணற்றவர்களின் உள்ளம் கவர்ந்த சிறந்த பேச்சாளரும் கூட. தற்கால இலக்கியம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் தம் பேச்சாற்றலால் முத்திரை பதித்தார். அக்காலகட்டத்தில் சோ, ஜெயகாந்தன் ஆகியோரோடு நா.பா.வும் ஸ்தாபன காங்கிரஸ் மேடைகளில் பேசினார். 

       காமராஜ் எந்த அளவு நா.பா.வைக் கவர்ந்தார் என்றால், தமது "சத்தியவெள்ளம்' என்ற நாவலில் அவரை ராமராஜ் என்ற பெயரில் பாத்திரமாக ஆக்கும் அளவு. 

      பழந்தமிழைக் கசடறக் கற்றுப் "பண்டிதர்' பட்டம் பெற்றவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட விருதுகளில் ஒன்று "கம்பராமாயணத் தத்துவக் கடல்” என்பது. கல்வி கற்க வயதே இல்லை என்ற கருத்துடைய நா.பா.,

       இறுதி நாள் வரை கல்வி கற்றார். தம் 45 வயதுக்குமேல் பச்சையப்பன் கல்லூரியில் மாலை வகுப்பில் சேர்ந்து தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றார். "பழந்தமிழர் கட்டிடக்கலையும் நகரமைப்பும்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

      டாக்டர் தி.முத்து கண்ணப்பர்தான் அவரின் நெறியாளர். ஆய்வேட்டைச் சமர்ப்பித்தும், நேர்காணலில் கலந்துகொள்ள வாய்ப்பின்றி, அது என்று நிகழவிருந்ததோ, அன்று காலமானார். முனைவர் பட்டம் பெறும் முன்பே அமரர் பட்டம் பெறும்படி நேர்ந்தது அவரது துரதிருஷ்டம்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...