உலக மக்கள்தொகை தினம் - ஜூலை 11
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை
11ஆம் தேதி உலகம் முழுவதும் "உலக மக்கள்தொகை
தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்ட
அமைப்பு (UNDP) இந்நாளைத் தொடங்கி வைத்தது.
1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள்தொகை
500 கோடியைத் தொட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மக்கள்தொகை வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள், குடும்பக்
கட்டுப்பாடு, பாலின சமத்துவம், தாய் மற்றும்
சேய் நல்வாழ்வு, இளைஞர் உரிமைகள் போன்ற முக்கியத் தலைப்புகளின்மீது
உலக கவனத்தை ஈர்ப்பதே இந்நாளின் நோக்கமாகும்.
சமீபத்திய நிலவரம்
2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் உலக மக்கள்தொகை 8000 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தியா, சீனாவை முந்திக்கொண்டு இன்று உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. இது நமக்குப் பெருமை மட்டுமல்ல, பெரும் பொறுப்பையும் சேர்த்தே தருகிறது. உணவு உற்பத்தி, ,இருப்பிடம், குடிநீர் வளம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை இத்தனை பேருக்கும் சமமாக வழங்குவது எளிதான காரியமல்ல.
சுவாரசியமாக, மக்கள்தொகை வளர்ச்சி விகிதம், உலகளவில் மெதுவாகக் குறைந்து வருகிறது. ஜப்பான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகள் மக்கள்தொகைக் குறைவால் அவதிப்படும் நிலையில், ஆப்பிரிக்கக் கண்டம் இன்னும் அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவிலும் தென் மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி கிட்டத்தட்ட நிலைப்புத் தன்மையை அடைந்துவிட்ட நிலையில், வடமாநிலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி விகிதம் காணப்படுகிறது.
சவால்களும் வாய்ப்புகளும்
மக்கள்தொகை பெருக்கம் ஒரு பக்கம் சவால்களை உருவாக்கினாலும், மறுபக்கம் "மக்கள்தொகைப் பயன்" (Demographic Dividend) எனும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தியாவின் சராசரி வயது இன்று 28 - க்கும் குறைவாக உள்ளது என்பது, உலகின் இளம் தொழிலாளர் படையை நாம் பெற்றிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இந்த இளம் சக்தியை சரியான முறையில் கல்வி, திறன் மேம்பாடு, தொழில் வாய்ப்புகள் மூலம் பயன்படுத்தினால், அடுத்த மூன்று பத்தாண்டுகளுக்கு இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்க முடியும்.
ஆனால் இந்த வாய்ப்பு, தானாக நிகழாது. போதிய வேலைவாய்ப்புகள் இல்லாவிட்டால், இளைஞர் திரள் ஒரு சுமையாக மாறும் அபாயமும் உள்ளது. எனவே மக்கள்தொகைக் கொள்கை , வெறும் "கட்டுப்பாடு" என்பதைத் தாண்டி, தரமான கல்வி, சுகாதாரம், பெண்களுக்கான கல்வியறிவு, குடும்பக் கட்டுப்பாட்டு வசதிகளை எளிதில் அணுகும் வகையிலான திட்டமிடலாக மாற வேண்டும்.
பெண்களும், மக்கள்தொகைக் கொள்கையும்
உலக அனுபவம் நமக்குக் கற்பிக்கும் ஒரு உண்மை என்னவெனில், பெண்களின் கல்வியறிவு உயரும்போது மக்கள்தொகை வளர்ச்சி
விகிதம் தானாகவே குறைகிறது என்பதே. கேரளா , இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பெண் குழந்தைகளுக்குக் கல்வி
வழங்குவது, திருமண வயதை உயர்த்துவது, பெண்களுக்கு
பொருளாதார சுதந்திரம் வழங்குவது ஆகியவை மறைமுகமாக மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு உதவும்
வழிகளாகும். கட்டாயத் திட்டங்களைவிட, இத்தகைய
கல்வி சார்ந்த அணுகுமுறையே நீடித்து நிற்கும் தீர்வாக அமைகிறது.
நினைவில் கொள்க!
உலக மக்கள்தொகை தினம் நமக்கு நினைவூட்டுவது என்னவெனில், ஒவ்வொரு மனிதனும் ஒரு புள்ளிவிவரம் மட்டுமல்ல, வாய்ப்புகளுக்கும், திறமைக்கும் உரிமையுடையவன் என்பதே. மக்கள்தொகையை ஒரு சுமையாகப் பார்க்காமல், சரியான திட்டமிடலுடன் அதை வளத்தின் ஆதாரமாக மாற்றுவதே இக்காலத்தின் தேவை. கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்யும்போது மட்டுமே, இந்தியா, தன் இளம் மக்கள்தொகையின் முழுத் திறனையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


