5 ஜூலை, 2026

பிஏபி பாசனத்திற்கு குழாய் மூலம் நீர் விநியோகிப்பது சாத்தியமா?

        


            பிஏபி பாசனத்திற்கு குழாய் மூலம் நீர் விநியோகிப்பது சாத்தியமா?

'ரூ.1 லட்சம் கோடி தேவை': பிஏபி பாசனத்திற்கு குழாய் மூலம் நீர் விநியோகிப்பது சாத்தியமா? முக்கியமான 3 சவால்கள்       

          நாலே கால் லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் பழமையான பரம்பிக்குளம்ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) திறந்தவெளிக் கால்வாய்களுக்குப் பதிலாக, குழாய்களில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தைத் தயாரிக்குமாறு பிஏபி அதிகாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதற்கு ஒரு தரப்பு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பும், மற்றொரு தரப்பில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

          இந்த திட்டத்தால் நீர் திருட்டு, நீர்க்கசிவு, நீர் ஆவியாதல், திறந்தவெளிக் கால்வாய்களில் ஏற்படும் மனித, காட்டுயிர்கள் உயிரிழப்பு தடுக்கப்படுமென்று கடைமடை விவசாயிகள் கூறுகின்றனர். 

          ஆனால் இதற்கு பெரும் நிதிச்செலவு ஏற்படும் என்பதுடன், இதனால் கால்வாய்க்கு நிலம் கொடுத்த விவசாயிகள் பாதிப்படைவர் என்று பாலாறு படுகை திட்டக்குழுத் தலைவர் உள்ளிட்ட வேறு சில விவசாய அமைப்பினர் தெரிவிக்கின்றனர். 

          இத்திட்டம் சாத்தியம் என்றாலும் இரட்டிப்பு பலன் தரும் என்றாலும் ஒரு லட்சம் கோடி நிதி தேவைப்படும் என்கிறார் ஓய்வு பெற்ற பிஏபி தலைமைப் பொறியாளர் இளங்கோவன். 

          நிதி சாத்தியம், தொழில்நுட்ப சாத்தியம் மற்றும் சமூக ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் புதிய திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்பதால் அதுபற்றி ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகக் கூறுகிறார் பிஏபி தலைமைப் பொறியாளர் முருகேசன். 

பிஏபி பிரமாண்டமான பாசனத்திட்டம் பற்றிய குறிப்பு 

                                                                         ஆழியாறு

          தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி, இரு மாநிலங்களிலும் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் நதிகளின் குறுக்கே ஆங்காங்கே அணைகள் கட்டி, பாசனம், குடிநீர் மற்றும் நீர் மின் உற்பத்திக்குப் பயன்படுத்துவதே பிஏபி என்றழைக்கப்படும் பரம்பிக்குளம்ஆழியாறு பாசனத்திட்டமாகும். காமராசர் முதல்வராக இருந்தபோது இத்திட்டத்துக்காக 2 மாநிலங்களிடையே ஒப்பந்தம் போடப்பட்டது. 

          இத்திட்டத்தில் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, மேல் ஆழியாறு மற்றும் காடம்பாறை ஆகிய 8 அணைகள் மலைப்பகுதிகளிலும், ஆழியாறு மற்றும் பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை ஆகிய 2 அணைகள், மலையடிவாரத்திலும் கட்டப்பட்டுள்ளன. 

          தற்போது 4 மண்டலங்களில் பாலாறு படுகையில் 3.77 லட்சம் ஏக்கரும், ஆழியாறு படுகையில் 45 ஆயிரம் ஏக்கருமாக சுமார் நாலே கால் லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் தரப்படுகிறது. இத்திட்டத்தில் பாசனப்பரப்பு அதிகரிக்கப்பட்டதே தவிர, ஒப்பந்தப்படி இத்திட்டத்தில் கட்டப்பட வேண்டிய ஆனைமலையாறுநல்லாறு அணைகள் இன்னும் கட்டப்படவில்லை. இதனால் கடைமடை விவசாயிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை, சமமான நீர் பங்கீடு இல்லை என்ற புகார்களும், போராட்டங்களும் வலுத்து வருகின்றன. 

          இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், கடந்த ஜூன் 20 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. 


          அப்போது வெள்ளகோவில் கிளை கால்வாய் பாசன சங்கத்தலைவர் வேலுச்சாமி, சட்டப்படி வழங்க வேண்டிய சமச்சீர் பாசன முறைப்படி தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை என்றும், கடந்த 6 ஆண்டுகளாக வெள்ளகோவில் கடை மடை பகுதிக்குத் தண்ணீர் வருவதேயில்லை என்றும் பேசினார். 


          அதுபற்றி பிஏபி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட அமைச்சர், சட்டப்படியான சமச்சீர் பாசனத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் உத்தரவிட்டார். 

          பிஏபி திட்ட கால்வாய்களை சீரமைக்க கடந்த திமுக ஆட்சியில், ரூ.4500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைச் செயல்படுத்த ரூ.8 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் இருந்தது. அந்த திட்டத்தை ரத்து செய்வதாக அவர் அறிவித்தார். 

          அதற்குப் பதிலாக, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய குழாய் வழியாக தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை புதிய முன்மொழிவாக தயாரித்து அனுப்புமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தினார். 

          ''குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தின் வாயிலாக ஸ்காடா, சென்சார் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நிகழ்நேர கண்காணிப்பு முறையில் தண்ணீர் வீணாகாமல் தடுக்கமுடியும். மத்திய அரசின் 'ஒரு துளி நீரில் அதிக பயிர்' என்ற இலக்கை எளிதாக எட்டமுடியும்.'' என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். 


          அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, வெள்ளகோவில் கிளை கால்வாய் பாசன சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஆனால் பாலாறு படுகையிலுள்ள பிற பகுதிகளின் பாசன சபை விவசாயிகள், இது சாத்தியமேயில்லை என்று இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

          இந்தத் திட்டம் சாத்தியமா என்பதை ஆராய்வதற்கு முன், இத்திட்டத்தின் கால்வாய்கள் பற்றி அறிவது அவசியம். 

        பரம்பிக்குளம்ஆழியாறு பாசனத் திட்டத்தில், 6 சுரங்கங்கள், 210 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 4 நீர் மின் உற்பத்தி நிலையங்கள். 7 பிரதானக் கால்வாய்கள் மற்றும் கிளைக் கால்வாய்கள், பகிர்மானக்கால்வாய்கள் அமைந்துள்ளன. 

          இத்திட்டத்தின் தொகுப்பு அணைகளிலிருந்து பரம்பிக்குளம் அணைக்கு வரும் தண்ணீர், சர்க்கார்பதி வரை மலையிலிருந்து சுரங்கம் வழியாக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து காண்டூர் கால்வாய் வழியாக மலைப்பகுதிகளில் 48.9 கி.மீ. தூரத்துக்கு திருமூர்த்தி அணைக்குக் கொண்டு வரப்படுகிறது. 

          திட்டத்திலேயே இந்த காண்டூர் கால்வாய் என்பதுதான் மிகப்பிரமாண்டமான கால்வாயாகும். இதேபோன்று திருமூர்த்தி அணையிலிருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பாலாறு படுகை பாசன நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பரம்பிக்குளம் பிரதானக் கால்வாய் (PMC) 125 கி.மீ. நீளம் கொண்டது. 

          இவற்றைத் தவிர்த்து, சர்க்கார்பதியிலிருந்து ஆழியாறு அணைக்கும், பாசனத்துக்கும் தண்ணீர் கொண்டு செல்லப் பயன்படும் ஆழியாறு ஃபீடர் கால்வாய்–13.4 கி.மீ., சேத்துமடை கால்வாய்–8.2 கி.மீ., பொள்ளாச்சி கால்வாய்–48 கி.மீ., வேட்டைக்காரன்புதூர் கால்வாய் –17.2 கி.மீ., ஆகிய நீளங்களில் அமைந்துள்ளதாக பரம்பிக்குளம்ஆழியாறு பாசனத்திட்டத்தின் ஆவணங்களில் விளக்கப்பட்டுள்ளது. 

          இவற்றைத் தவிர்த்து, கிளைக்கால்வாய் மற்றும் பகிர்மானக்கால்வாய்களின் நீளம் 1400 கி.மீ. தூரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று பிஏபி அதிகாரிகள் தகவல் பகிர்கின்றனர். 

          தற்போது அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் ஜீரோ பாயிண்டிலிருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைசிப்பகுதி வரையிலும் திறந்தவெளிக் கால்வாய்கள் மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும்போதுதான், குழாய் பதித்து தண்ணீர் திருடுவது, கால்வாய் பராமரிப்பின்மையால் தண்ணீர் கசிவது, வெப்பத்தால் நீர் ஆவியாவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடைமடைக்கு தண்ணீர் வருவதில்லை என்பது குற்றச்சாட்டாகவுள்ளது. 

          பிபிசியிடம் பேசிய வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வேலுசாமி, ''குழாய்களில் நீர் கொண்டு வரும் திட்டம் சாத்தியமானதுதான் என்பது மட்டுமின்றி அது காலத்தின் கட்டாயமும் கூட. காமராசர் தொலைநோக்கோடு கொண்டு வந்த பிஏபி திட்டத்தின் 2.0 என்பது குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்வதுதான்.'' என்றார். 

          ஆனால் இந்த திட்டத்துக்கான செலவு மிக அதிகமாக இருக்கும் என்றாலும் அது கால்வாய் பராமரிப்புச் செலவு, ஆவியாதலால் ஏற்படும் நீரிழப்பு, நீர்க்கசிவு, நீர் திருட்டு, தண்ணீர் மாசு, உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்கிறார் அவர். 

          ''திறந்தவெளிக் கால்வாய்களில் விழுந்து மனிதர்கள், கால்நடைகள், காட்டுயிர்கள் உயிரிழப்பது தடுக்கப்படும். கிளைக்கால்வாய்களில் தண்ணீர் கொடுத்தாலும் எல்லா விவசாயிகளுமே தென்னை உள்ளிட்ட பயிர்கள் அனைத்துக்கும் சொட்டு நீர்ப்பாசனத்தில்தான் நீர் பாய்ச்சுகின்றனர். இப்போது தண்ணீர் தருவது போலவே அதே அளவு நீரை குழாய்களில் கொடுத்தாலும் இதே பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சலாம்.'' என்றார் வேலுசாமி. 

'நிதி தான் பெரும் சிக்கல்' 

          இந்தக் கருத்தை மறுக்கும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் பாசனசபை தலைவருமான உடுக்கம்பாளையம் பரமசிவம், குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்வது சாத்தியமேயில்லை என்பதோடு, இதனால் கால்வாய்களுக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்கிறார். 

          பிபிசியிடம் பேசிய பரமசிவம், ''கால்வாய்களுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பெரியளவில் இழப்பீடு தரப்படவில்லை. அவர்கள் நிலத்தடி நீரால் பயன்பெறுகின்றனர். குழாய் மூலம் கொண்டு சென்றால் அதுவும் பறிபோய்விடும். கால்வாய் பராமரிப்புக்கு ரூ.185 கோடி ஒதுக்கவே பல ஆண்டுகளானது. பெரும்தொகை தேவைப்படும் குழாய் திட்டத்தை செயல்படுத்துவது இப்போதைக்கு சாத்தியமில்லை.'' என்றார். 

          ''ஆயிரம் கனஅடி தண்ணீர் காண்டூர் கால்வாயில் வரும். ஆயிரத்துக்கும் அதிகமான கி.மீ. தூரத்துக்கு தண்ணீரை பம்ப் செய்ய வேண்டும். அதற்கு எவ்வளவு மோட்டார், எவ்வளவு மின்சாரம், எவ்வளவு செலவாகும் என்பதை கற்பனை செய்யவே முடியாது. இப்போது தண்ணீரைத் திறந்துவிட்டால் புவியீர்ப்பு விசையால் கடைசி வரை தண்ணீர் பாய்கிறது.'' என்றார் பரமசிவம். 

          பிஏபி திட்ட கால்வாய்களைச் சீரமைக்க ரூ.4500 கோடி மதிப்பில் முந்தைய திமுக ஆட்சியின்போது, ரூ.8 கோடி மதிப்பில் தயாரித்த விரிவான திட்ட அறிக்கை, நிதித்துறையின் பரிசீலனையில் இருந்த நிலையில்தான் அத்திட்டத்தை ரத்து செய்வதாக அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். 

          அந்தத் திட்டத்தைக் கைவிடாமல் நிறைவேற்ற வேண்டுமென்று பாலாறு படுகை திட்டக்குழு சார்பில், அதன் தலைவர் மெடிக்கல் பரமசிவம் நீர்வளத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார். 

          பிபிசியிடம் பேசிய மெடிக்கல் பரமசிவம், ''சில நாட்களுக்கு முன்பு, நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் ஆனந்தை சென்னையில் திட்டக்குழு சார்பில் விவசாயிகள் பலரும் நேரில் சந்தித்து, ரூ.4500 கோடி மதிப்பிலான பிஏபி சீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தினோம். அதைக் கேட்ட அவர், நிதியமைச்சர் மரியவில்சனைச் சந்திக்குமாறு கூறினார். அவரிடம் இதுபற்றி விளக்கியபோது, அவர் நிச்சயமாக திட்டத்தைப் பரிசீலித்து விரைவில் முடிவை அறிவிப்போம் என்றார். ஆனால் அருண்ராஜ் ரத்து செய்வதாகக் கூறியிருப்பதற்குக் காரணம் தெரியவில்லை.'' என்றார். 

          குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை வரவேற்கும் வெள்ளகோவில் கால்வாய் விவசாயிகள் குறித்து பிபிசியிடம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த இவர்கள் உள்ளிட்ட பல்வேறு பாசனசபை விவசாயிகளும், வெள்ளகோவிலில் விவசாயத்தை விட அரிசி ஆலை, சாயஆலைகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்கே தண்ணீர் விற்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர். வெள்ளகோவில் பகுதியில் அரசின் சார்பில் அஜ்மாயிஸ் எனப்படும் பயிர் கணக்கீடு எடுத்தால் இந்த உண்மை தெரியவரும் என்கின்றனர் இவர்கள். 

          இதை முற்றிலும் மறுக்கும் வெள்ளகோவில் கால்வாய் பாசனசபை தலைவர் வேலுசாமி, ''சரியான தண்ணீர் கிடைக்காத காரணத்தால் விவசாயம் குறைந்திருக்கிறது. அதற்காக தண்ணீரை வாங்கி விற்பதாகக் கூறுவது அபத்தமான குற்றச்சாட்டு. இங்கே வந்து யாரும் ஆய்வு செய்யட்டும். நீர் மேலாண்மை நோக்கில்தான் நாங்கள் இந்த திட்டத்தை வரவேற்கிறோம். தற்போது ஒரு டிஎம்சி எடுக்க வேண்டிய இடத்தில் 2.75 டிஎம்சி தண்ணீர் எடுத்துத்தர வேண்டியுள்ளது. குழாயில் கொண்டு சென்றால் மிகச்சரியான அளவில் தண்ணீர் எடுத்தால் போதும்.'' என்றார். 

          ஆனால் பிஏபி திட்டத்தில் சுரங்கங்கள், கால்வாய்கள், தொகுப்பு அணைகள் அனைத்துமே புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்ட ஓர் அறிவியல் அதிசயம் என்று கூறும் பாலாறு படுகை திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம், அதை மாற்றி குழாயில் கொண்டு செல்வது இந்தத் திட்டத்தின் தொலைநோக்கை சீரழிப்பதாக இருக்கும் என்கிறார் அவர். 

        ''குழாயில் தண்ணீரைக் கொண்டு சென்றால் மோட்டார் வைத்து பம்ப் செய்யாமல் பகிர்மானக் கால்வாய்களில் தண்ணீரை விநியோகிக்க முடியாது. இதை விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பார்கள். அதனால் முதற்கட்டமாக இந்தத் திட்டத்தை ஒரு பகுதியில் பரீட்சார்த்த முறையில் செய்து பார்த்துவிட்டு, அதில் கிடைக்கும் பலனைப் பொறுத்து மற்ற இடங்களில் செயல்படுத்தலாம்.'' என்றார் பாலாறு படுகை திட்டக்குழுத்தலைவர் பரமசிவம். 

          இவ்விரு தரப்பின் கருத்துக்கும் பொதுவாக ஒரு கருத்தை முன்மொழியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞருமான ஈசன் முருகசாமி, பிஏபி பாசனப்பகுதிகளில் பல இடங்களில் தொழிற்சாலைகள், விளைநிலங்கள் கலந்து இருக்கும் நிலையில், குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்றால் பாசன நிலங்களுக்கு மட்டும் தண்ணீர் சரியாகக் கொடுக்க முடியும் என்றார். 

          பிபிசியிடம் பேசிய ஈசன் முருகசாமி, ''இத்திட்டத்தால் தற்போது தருவதை விட இரட்டிப்பாக தண்ணீர் விநியோகிக்க முடியும் என்று இத்துறையில் இருந்து அனுபவம் பெற்ற முன்னாள் பொறியாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் இந்த திட்டத்தை ஏற்கெனவே அரசிடம் முன்மொழிந்துள்ளனர். '' என்றார். 


          மேலும் தொடர்ந்த அவர், ''சில விவசாயிகள் கூறுவது போல ரூ.4500 கோடி மதிப்பில் கால்வாய்களில் கான்கிரீட் போட்டால் இரு பகுதிகளிலும் உள்ள விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. ஆனால் குழாய் மூலம் வந்தால் எல்லா விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியாக சமப்பங்கீடு இருக்கும். தண்ணீர் சுத்தமாக வரும். இப்படி பல அனுகூலங்கள் இருப்பதால் இந்த திட்டம், விவசாயிகள், அரசு, அதிகாரிகள், பொதுமக்கள் என எல்லாருக்கும் பயன்தரும்.'' என்றார். 

          இத்திட்டம் குறித்து ஓய்வு பெற்ற பிஏபி தலைமைப்பொறியாளரும், தமிழக அரசின் நீர் ஆதார வளர்ச்சிக்குழுமத்தின் முன்னாள் துணைத்தலைவருமான இளங்கோவன், ''இது சாத்தியமே. இந்தத் திட்டத்தில் ஒரே ஆண்டில் 4 மண்டலங்களுக்கும் தண்ணீர் கொடுக்க முடியும். நான் தலைமைப் பொறியாளராக இருந்தபோது, பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் 4 பகுதிகளில் 5600 ஏக்கர் பரப்பு பயன் பெறும் வகையில், கிளைக் கால்வாய்களில் குழாய் பதித்து 4 மாதிரி திட்டங்களைச் செயல்படுத்த ரூ.100 கோடி நிதி கோரி பரிந்துரை அனுப்பினோம். அது பரிசீலனையில் இருந்தபோது 2021-இல் ஆட்சி மாறி பின் கைவிடப்பட்டது.'' என்றார். 

          ''அத்திட்டத்தின்படி, 1–3 ஆகிய மண்டலங்களுக்கு ஒரே நேரத்திலும், 2–4 மண்டலங்களுக்கு ஒரே நேரத்திலும் தண்ணீர் கொடுத்துவிட்டால் அடுத்த ஆண்டில் 4 மண்டலத்துக்கும் தண்ணீர் கொடுக்க முடியும். முதற்கட்டமாக திருமூர்த்தி அருகிலுள்ள உயர் மட்டக்கால்வாய் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் இத்திட்டத்தை ஆறே மாதங்களில் செயல்படுத்தலாம்.'' என்றார் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் இளங்கோவன். 

          ''காண்டூர் கால்வாய்க்குப் பதிலாக குழாயில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமேயில்லை. அதில் 1100 கனஅடிக்குப் பதிலாக 1000 கனஅடிதான் தண்ணீர் எடுக்க முடிகிறது. அதற்குக் காரணம் இடையிலுள்ள சுரங்கங்களில் அடைப்பு ஏற்படுவதுதான். அந்தப் பகுதிகளில் குழாய்களைப் பதிக்கலாம். ஒரே விஷயம் இத்திட்டத்துக்கு ஒரு லட்சம் கோடி நிதி தேவைப்படும் என்பதுதான். அதனால் இத்திட்டத்தை படிப்படியாகச் செயல்படுத்தினால் இரட்டிப்பு பலன் கிடைக்குமென்பது உறுதி.'' என்றார். 

          அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ள இந்த திட்டம் குறித்து நீர்வள ஆதாரத்துறை திட்ட முன்மொழிவு தயாரிக்கிறதா என்றும், அமைச்சர் கூறியுள்ள படி இத்திட்டம் சாத்தியமா என்பது குறித்தும் சில கேள்விகளை பிஏபி தலைமைப் பொறியாளர் முருகேசனிடம் பிபிசி தமிழ் முன் வைத்தது. அதற்குப் பதிலளித்த அவர், ''தேர்தலுக்கு முன்பாகத்தான் விரிவான திட்ட அறிக்கை தயாரானது. அது பரிசீலிக்கப்படும் முன்பே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நிதிச் சாத்தியம், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஒத்துழைப்பு என 3 விஷயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது.'' என்றார். 

          ''பல்லடம் பிஏபி பாசனப்பகுதியில் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் சார்பில், பாசன முறைகளை நவீனமயப்படுத்தி மேம்படுத்தும் திட்டம், ரூ.59.41 கோடி மதிப்பில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படுகிறது. இதில் நவீன தொழில்நுட்பத்துடன் குழாய்கள் அமைத்து பாசனத்துக்கு நேரடியாக தண்ணீர் கொண்டு செல்லப்படவுள்ளது. ஆனால் அமைச்சர் அறிவித்த பிஏபி திட்டம் முழுவதும் குழாய் மூலமாக நீர் விநியோகிப்பது பற்றி நிறைய ஆய்வு செய்யவேண்டும்.'' என்றார் தலைமைப் பொறியாளர் முருகேசன்.


நன்றி: News & Photos : பி.பி.சி

https://t.me/bbctamil/45088 

பிரபலமான இடுகைகள்