5 டிசம்பர், 2021

உலக மண் நாள்

 


       # ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5ஆம் நாள் உலக மண் நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஐந்து நிமிடமும்,கால்பந்து மைதான அளவு  மண்,மண்ணரிப்பின் மூலம் சேதமடைகிறது.

      # ஆரோக்கியமான மண் வளத்தை மேம்படுத்துவது, நன்மை பயக்கும் வகையில் மேலாண்மை செய்வது ஆகியவற்றுக்காக இந்தநாளை ஐ.நா அர்ப்பணித்துள்ளது. 

      # மண் அறிவியலுக்கான சர்வதேச சங்கம் இப்படிஒரு நாள் கடைபிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை 2002இல் ஐநாவுக்கு வலியுறுத்தியது. ஐ.நாவின் துணை அமைப்பான, உணவு மற்றும் விவசாய நிறுவனமும் (FAO)உலக மண் நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தது.

      # உலகமண் நாள் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்த முக்கியமானவர்களில் ஒருவரும், உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவருமான, தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜின் பிறந்த நாள் டிசம்பர் 5. அவரைக் கெளரவிக்கும் விதமாக இந்த நாள் உலக மண் நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    # உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். 

     # ஒரு தேக்கரண்டி நல்ல மண்ணில், உலகத்தில் உள்ள மக்கள் தொகையை விட கூடுதல் எண்ணிக்கையில் நுண்ணுயிரிகள் உள்ளன (சுமார் 5 இலட்சம் கோடி நுண்ணுயிர்கள் உள்ளன).

அத்தனை கழிவுகளையும் மட்கவைக்கும் சக்தி மண்ணுக்கு உண்டு. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களே அப்பணியைச் செய்கின்றன.இவ்வுலகில் இறந்துபோன தாவர, விலங்குகளையும், கழிவுகளையும் மட்கச் செய்து உரமாக்குவதில், நுண்ணியிர்களின் பங்கு மகத்தானது.

      # நீரின் அசுத்தத்தை வடித்துச் சுத்தமாக்கித் தரும் மகத்துவம் மண்ணிற்கு உண்டு. உறிஞ்சும் பஞ்சு போல, தண்ணீரை தன்னுள்ளே உறிஞ்சி வைத்து, பூமியில் வெள்ளம் வராமல் பாதுகாக்கிறது. ஒரு ஹெக்டேர் நிலம் 3,750 டன் தண்ணீரைத் தேக்கி வைத்துப் பாதுகாக்கும் திறன் பெற்றது. 

  # கருவிலிருந்து மனிதன் உருவாகப் பத்து மாதங்கள் போதும். ஆனால் ஒரு சென்டி மீட்டர் மண் உருவாக, 500 ஆண்டுகள் ஆகும்.

    # மண்ணைக் கடவுளாய் மதித்துத் திருநீறு போல நெற்றியில் இட்ட நாம், அறிந்தும், அறியாமலும் இயற்கையைச் சிதைக்கத் துவங்கி விட்டோம். இரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகளால் மண் மாசுபட்டு மனிதஇனம் நோய்வாய்ப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பஞ்ச பூதங்களில் முதன்மையானது நிலம். நிலமான மண்ணில் மாசுபட்டால் நீர், காற்றுடன் அனைத்தையும் பாதிக்கும்.

     # 1960 க்கு முன்பு, இந்தியாவில் பல பஞ்சங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக கோடைகாலத்தில் வெறும் 2-3 மாதங்களில் முப்பது லட்சம் மக்களின் உயிரைப் பறித்தது. ஆறுகள் வறண்டு, மண் குறைந்துவிட்டால் நாம் மீண்டும் அந்த மாதிரியான நிலைக்குச் செல்வோம். நாம் இப்போது சரியான காரியங்களைச் செய்யாவிட்டால், இந்த நிலம் எதிர்காலத்தில் மக்களைத் தக்கவைக்காது.

     # உண்மையில், நாம் செயல்பட வேண்டிய நேரம் இதுதான். இன்னும் பத்து முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு நிலையான முயற்சி எடுத்தால், முழுச் சூழ்நிலையையும் நாம் மிக எளிதாக மாற்ற முடியும்.

   * நீடித்த நிலையான வேளாண்மைக்கு மண்வள பாதுகாப்பினை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், தனிமனித ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதை நாம் உணர்ந்து, வருங்கால தலைமுறைக்கு, மண்ணை மலடாக்காமல் வளமாக்கிச் செல்வோம் எனச் சூளுரை ஏற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...