தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
“இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.
யாப்புச் சிறையில் சிக்கித் தவிக்காமல் தங்கு தடையின்றி நெஞ்சில் நேரே ஊடுருவுவது புதுக்கவிதை.
புதுக்கவிதையில் வடிவத்தை விட கருத்துக்கே முக்கியத்துவம் தரப்படுகின்றது. ஏனெனில் கருத்தற்ற வெற்றுச் சொல் கவிதை ஆகாது என்பதே இதன் அடிநாதம். பாரதிக்குப்பின் தமிழ்க் கவிதை உலகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. பல்வேறு கவியாளுமைகளும் தமிழ்க்கவிதையுலகை அணி செய்தனர். அவர்களில் முக்கியமானவர் ந. பிச்சமூர்த்தி.
பாரதியின் வசன கவிதையையும் வால்ட் விட்மனின் கவிதைகளையும் தன் முன்னோடியாகக் கொண்டு புதுக்கவிதை என்னும் புதிய வகைமையைத் தொடங்கி வைத்தார்.19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய ”புல்லின் இதழ்கள்” எனும் கவிதைத் தொகுப்பே புதுக்கவிதை இலக்கிய வகையின் முதல் முயற்சியாகும்.
நா.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியன், கு.பா.ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், சி.மணி, நகுலன், ஞானக்கூத்தன், சிற்பி, மு.மேத்தா, கவிக்கோ அப்துல் ரகுமான், மீரா, ஈரோடு தமிழன்பன், நா.காமராசு போன்றோர். இவர்கள் ஆரம்பக் காலகட்டத்தில் புதுக்கவிதை எழுதி தமிழ்ப்புதுக்கவிதை வளர்ச்சிக்குத் துணை நின்றனர்.
வாழ்க்கை சார்ந்த இயல்பான பார்வையே பிச்சமூர்த்தியின் கவிதைகள். இயற்கையை, அதன் அழகை, அதன் ஒழுங்கைப் பாடிவந்தாலும், சமகால வாழ்க்கையையும் அவர் பாடத் தவறவில்லை.
இவரின், கிளிக்கூண்டு, காட்டுவாத்து, வழித்துணை, பெட்டிக்கடை நாராயணன் ஆகிய கவிதைகள் மிகவும் புகழ்பெற்றவை.
இவருடைய முதல் கவிதை – நடுத்தெரு நாராயணன் இவருடைய முதல் சிறுகதை – சயின்சுக்குப் பலி இவருடைய முதல் வசனகவிதை – காதல் (1934) 1933 – “முள்ளும் ரோசாவும்” என்ற சிறுகதை, கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது.
வாழ்க்கை மீதான விமர்சனங்கள், புலம்பல்கள் ஏதுமின்றி அவற்றை நம்பிக்கையோடும் அதே நேரம் எதார்த்தத்தோடும் அணுகியவர் பிச்சமூர்த்தி. அதற்கு ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளே சாட்சி. கலை, கலைக்காகவே என்று சொல்லும் ந. பி யின் இலக்கியக் கொள்கை என்றபோதும், அவர் படைப்புகளின் அடிநாதமாக விளங்குவது மானுடம் சார்ந்த மகத்தான நம்பிக்கை.
அவர் படைப்புகளைப் படிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு மிகவும் அற்புதமானது. இன்றைய இளம் தலைமுறையினரிடமும் அவர் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.அப்போதுதான் தமிழ் இலக்கியப்படைப்புகளின் நீட்சி, பரப்பு,ஆழம் ஆகியவற்றை அவர்களும் கண்டு வியக்கமுடியும்.
வானத்திலும் தெரியும் மண்ணின் ஒளிவெள்ளத்தையும், மனிதனின் மனநிழல்களையும் சொற்களில் ஒருசேரப் பிடிக்கத் துடித்தவர். பல்லாயிரமாண்டுக் கூட்டுச் சமூக நனவிலியின் நங்கூரத் தொன்மம் ந.பிச்சமூர்த்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக