18 ஜனவரி, 2022

தைப்பூசம்

     வினைகளைக் கண்டு அஞ்சாதே.வேலுண்டு, வினையில்லை,மயிலுண்டு,பயமில்லை. குகனுண்டு, குறையில்லை என்று உணர்த்தும் தினம் - தைப்பூச தினம்.


    தை மாதத்தில் வரும் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை, தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம். சிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் பல அற்புத சக்திகளை பெற்றனர். 

    ஒரு கட்டத்தில் அவர்கள் தேவர்களை சிறைபிடிக்க தொடங்கினர்.  தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

    தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீ பிழம்புகளை உருவாக்கினார். அந்த 6 தீப்பிழம்புகளும் 6 குழந்தைகளாக மாறின.

    அந்த 6 குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். கார்த்திகைப் பெண்கள் அந்த 6 குழந்தைகளுக்கும் போர்க் கலைப் பயிற்சியளித்தனர். பிறகொரு நாள் அன்னை பார்வதி தேவி வந்து தன் 6 புத்திரர்களையும் ஒருசேர அணைக்க, அறுவரும் இணைந்து ஒருவராக மாறினர். 

    6 குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும், அறிவும் இணைந்து தோன்றிய முருகன் பல கலைகளில் சிறந்து விளங்கினார். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்    

    அசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவுகாலம் வந்த போது பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேலை கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூச தினமாகும்.

     அவ்வாறு அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.

    முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

    பழனி முருகன் ஞானவேலைப் பெற்றதால் மற்ற முருகன் கோவில்களை காட்டிலும் தைப்பூச விழாவானது பழனி முருகன் கோவிலில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நன்னாளை எதிர்நோக்கி முருக பக்தர்கள், துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பழனிக்குச் சென்று முருகனைத் தரிசிப்பது வழக்கம்.

    தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருகக் கடவுள்.

    எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.



        பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. மன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது.

    தை நீராடுதல் பூச நட்சத்திரம் கூடிய நன்னாளில் கொண்டாடப்படுகிறது. நட்சத்திரங்களின் தலைவனாக புராணங்களில் சொல்லப்படும் பிரஹஸ்பதி என்னும் தேவ குருவை பூஜிப்பதாகக் கொள்வர். பிரஹஸ்பதி அறிவின் தெய்வமாகக் கருதப்படுபவர். எனவே தைப்பூசத்தன்று புனித நீர் நிலைகளில் நீராடி குருவை வழிபட கல்வி - கேள்வி - ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.


    குரு பகவானுக்கும் குருவாக கல்லால மரத்தின் கீழ் உபதேசித்த சிவபெருமானுக்கும், சிவனால் மனங்குளிர உபதேச மந்திரம் உபதேசித்த முருகப் பெருமானுக்கும் இப்பூசநாள் உகந்தது. இம்மாதிரி ஒரு தைப்பூச நாளில்தான் நடராஜப் பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாதருக்குத் தமது திருக்கூத்தை காட்டியருளினார்.

    மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பினாங்கு, மொரீஷியஸ் முதலிய வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

வள்ளலார் நினைவு நாள்

  “பசிப்பிணிதான் மனிதனுக்கு பெரும்பிணி, ஆதலால் பசியாற்ற உணவளிப்பதே உயர்ந்த அறம் என்று நாள்தோறும் அணையாத அடுப்பெரியச் செய்து காலமெல்லாம் அன்னதானம் அளிக்கும் அரும்பணியைத் தொடங்கிய அருட்பிரகாச வள்ளலார் ஒளியில் கலந்த தினம் இன்று.


     கடலூர் மாவட்டம் வடலூருக்கு அருகில் உள்ள மருதூரில் 05.10.1923 அன்று இராமையாப் பிள்ளை, சின்னம்மையார் ஆகியோரின் மகனாக இராமலிங்கம் எனும் திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவர் பிறந்த ஆறாவது மாதத்திலேயே இவரின் தந்தை மரணமடைந்த காரணத்தால், தாயார் மற்றும் அண்ணன் சபாபதி அவர்களின் வளர்ப்பில் சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வந்தார். 

    சிறுவயதிலேயே பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லாத வள்ளலார், கந்தகோட்டம் முருகன் கோவிலுக்கு தினமும் சென்று மனமுருக பாடல்களைப் பாடத்தொடங்கினார்.

 “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” 

    என்று தொடங்கும் பாடலை கந்த கோட்டத்தில் வள்ளலார் பாடுவதைக் கண்ட அவரது ஆசிரியர் , வள்ளலாரின் மெய்யாற்றலை உணர்ந்து மனமுருகினார், வள்ளலார், தான் கற்பிக்கும் கல்விக்கு அப்பாற்பட்டவர் என்று கூறினார். அதன்பின்னர் வள்ளலார் முழுவதுமாக இறைப்பணியில் தொண்டாற்றத் தொடங்கினார். 

    தனது ஒன்பதாவது வயதிலேயே அறிஞர்கள் நிறைந்த அவையில் அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் மிகச்சிறந்த ஆன்மீக உரையாற்றினார் வள்ளலார். அதன்பின்னர் நாடு முழுவதும் உள்ள பல கோவில்களுக்கும் சென்று இறைவனை வேண்டி வழிபட்டு பாடல்களைப் பாடினார்.

     உருவ வழிபாட்டை மறுத்து, உள்ளெழும் ஜோதி வழிபாட்டை பிரபலமாக்கி மக்களை அறிவு வழியே ஆற்றுப்படுத்திய ஞான வள்ளல் இவர். கருமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு என ஆன்மாவை மறைக்கும் ஏழு திரைகளின் வழியே அருள்பெரும் ஜோதியை வழிபடச் செய்த மெய்ஞ்ஞான குரு இவர். 

       'சாதி, சமயம், இனம், மொழி, நாடு என எந்தப் பாகுபாடும் நம்மில் கூடாது. எல்லா மக்களையும் சகோதர நோக்குடன் நேசிக்கவேண்டும், ஏனெனில் எல்லா உயிரிலும் இறைவனே வசிக்கிறார்' என்ற இவரின் உயரிய கருத்துக்கள்  மக்களைக் கவர்ந்தது. 


     பசிப்பிணி போக்குவதுதான் எல்லா அறங்களுக்கும் மேலானது என்று போதித்த வள்ளலார், 1867 ஆம் ஆண்டில் வடலூர் அருகே பார்வதிபுரம் என்னும் கிராமத்தில் மக்களிடம் 80 காணி நிலத்தை தானமாகப் பெற்று சமரச சுத்த சன்மார்க்க தரும சாலையை நிறுவினார். 

    மக்களிடம் தானமாகப் பொருட்களை வாங்கி ஏழை, பணக்காரர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என சாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் மூன்றுவேளையும் உணவு வழங்கத் தொடங்கினார். அந்த அன்னதானப் பணி இப்போதுவரையும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    1867 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி நிறுவப்பட்டு எரியத்தொடங்கிய 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்ட அடுப்பு 153 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரிந்து, மக்களின் பசிப்பிணியைப்போக்கி வருகிறது.

 “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உயிர்நேயம் வளர்த்த வள்ளலாரின் கொள்கைகள்

 *கடவுள்ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் 

*எதிலும் பொது நோக்கம் வேண்டும் எந்த உயிரையும்கொல்லக்கூடாது, புலால் உண்ணக்கூடாது 

*எல்லா உயிர்களும், நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது 

*பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு பாராது உணவளித்தல் வேண்டும் 

*சாதி, மத வேறுபாடுகள் கூடாது, மத வெறி கூடாது

* இறந்தவர்களை எரிக்கக் கூடாது, சமாதி வைத்தல் வேண்டும்

     வடலூரில் சத்திய தரும சாலைக்கு அருகில் 1871ஆம் ஆண்டு ஒளித்திருக்கோவிலை அமைக்கத்தொடங்கினார் வள்ளலார், அதன்பின்பு 1872 ஆம் ஆண்டு முதல் தைப்பூச நாளில் ஏழு திரைகள் விலகி இந்த கோவிலில் ஜோதி தரிசனம் நிகழ்ந்து வருகிறது. 

    1874 ஆம் ஆண்டு தைப்பூச நாளில் ஒளியாய் மாறினார் வள்ளலார். வள்ளலார் ஏற்றிய ஞான தீபம் இன்றும் உலகெங்கும் பல மக்களால் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. அவர் ஆற்றிய பசிப்பிணி நீக்கும் அற்புதப் பணியை இன்றும் பல மக்கள் சிரமேற்கொண்டு செய்து வருகிறார்கள். 


    வள்ளலார் என்ற தூய ஆன்மா நம்மிடையே இல்லை என்றாலும் அவரது கொள்கைகளும் தூய பணிகளும் இன்றும் மக்களிடையே பரவி வருகின்றன. அதுவே அவரின் வாழ்வுக்கும் கிடைத்த வெற்றி எனலாம்.

17 ஜனவரி, 2022

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்

 


    இலங்கையில் தேயிலை உள்ளிட்ட பிற தோட்டங்கள் நிறைந்த கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோபால மேனன், தாய் மருதூர் சத்யபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்ஜிஆர்.

    இவரது மூத்த சகோதரர் பெயர் எம்.ஜி. சக்ரபாணி. எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா பூர்விகமான கேரளத்தின் பாலக்காடுக்கு திரும்ப முடிவெடுத்தார்.

    ஆனால், உறவினர்களின் ஆதரவு கிடைக்காததால் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வேலு நாயரின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார் சத்யபாமா. அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.

    பதினான்கு வயதில் நடிப்புத்துறைக்குள் நுழைந்த எம்ஜிஆருக்கு ஆரம்ப காலத்தில் கைகொடுத்தது மேடை நாடகமும் நாடகக் கலைஞர்களும்தான். பதின்ம வயதில் தனது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியுடன் பாய்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் எம்ஜிஆர். அங்கு கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்தாலும் எம்ஜிஆரின் கனவு வெள்ளித்திரை மீதே இருந்தது.

    அந்தக் காலத்தில் நடிப்புத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதுவும் கதாநாயகனாக வேண்டுமானால், அவருக்கு இயல்பாகவே ஆடலும், பாடலும், வார்த்தை சுத்தமாக தமிழ் பேசவும் சரியான உச்சரிப்பும் தெரிந்திருப்பது கட்டாயம்.

    இந்த நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் அவரது சகோதரரை மேடை நாடகங்களில் பங்கேற்கச் செய்ய ரங்கூனுக்கு அனுப்பி வைத்தார் கந்தசாமி முதலியார். அவர்தான் எம்ஜிஆரின் திரை வாழ்க்கைக்கான ஆதர்ச வழிகாட்டி என பின்னொரு நாளில் எம்ஜிஆரே குறிப்பிட்டார். ரங்கூனில் ஆண் வேடம் மட்டுமின்றி பெண் வேடத்திலும் எம்ஜிஆர் நடித்தார்.


    14 வயதில் மேடை நாடகங்களில் தோன்றிய எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரை செட்டுக்குள் நுழைய ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சதி லீலாவதி என்ற படத்தில் ஓர் ஊழல் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர்.


    அதன் பிறகு சிறு, சிறு வேடங்கள் அவருக்கு கிடைத்தாலும், எல்லா திரை நாயக, நாயகிகளுக்கும் ஏற்படுவது போன்ற திருப்புமுனை, எம்ஜிஆருக்கு 1950ஆம் ஆண்டில் நடந்தேறியது. அப்போது வரலாறறுக்காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை ஏழை, எளியவர்களின் நாயகனாக உலகுக்கு அடையாளப்படுத்தியது வெள்ளித்திரை.

    1936ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டுவரை அவர் இறப்புக்குப் பிறகு வெளியான இரண்டு படங்கள் உட்பட எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 136. அவற்றில் 132 படங்கள் தமிழிலும், இரண்டு படங்கள் மலையாள மொழியிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தலா ஒரு படமும் அடங்கும்.

    அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1953ஆம் ஆண்டில் தன்னை எம்ஜிஆர் இணைத்துக் கொண்டார். தேசிய அரசியலில் இருந்து திராவிட அரசியலுக்கு எம்ஜிஆர் வருவதற்கு உரமாக இருந்தவர் மறைந்த தமிழக முதல்வர்
மு. கருணாநிதி.

    எம்ஜிஆருக்கு, பல விஷயங்கள் அவரை முதன்மையானவராக உலகுக்கு அடையாளப்படுத்தியது. அது இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தின் முதல்வராக முதலாவதாக பதவிக்கு வந்த நடிகர் என்பது. அதுபோல, இந்தியத் திரைப்பட வரலாற்றில், குறிப்பாக, தென்னிந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதை பெற்ற முதலாவது நடிகராக அவர் அறியப்பட்டார். 1972 ஆம் ஆண்டில் ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது.


    திரையில் முதல் படத்தில் தனக்குக் கிடைத்த புகழ், சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர், திரை வாழ்க்கையுடன் சேர்த்து அரசியல் வாழ்க்கையையும் தேர்வு செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

    1962 இல் தனது 50ஆவது வயதில் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1967 இல் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் எம்ஜிஆர்.1977இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, மிகப்பெரிய பலத்துடன் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.


    1977 முதல் 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.


    முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளியோர் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத்திட்டம், தமிழ் மீது கொண்டிருந்த மாறாதப் பற்றின் காரணமாக அவர் நடத்திய 5 ஆம் உலகத்தமிழ் மாநாடு, 1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசச் சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவச வேட்டி சேலை வழங்கிடும் திட்டம், சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி ஆகிய குறிப்பிடத்தக்கவை. 


    அரசியலில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், தன் வாழ்நாளின் இறுதிவரையில் கலைஞர் கருணாநிதி உடனான உயர்ந்த, உன்னதமான நட்பினை என்றும் போற்றி வந்தவர். 

    பகுத்தறிவுக்குப் புறம்பான மந்திரக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர் நடிக்கத் தயங்கினார். அதைப் பற்றி கேள்விகேட்ட போது, ’படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் சினிமாப் பார்க்கிறார்கள். அவர்கள் நான் படத்தில் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அவர்களிடம் மந்திரத்தில் மாங்காய் விழும் என்பது போல நான் நடித்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அல்லவா? நடிகன் என்ற முறையில் எனக்கு ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது. அதைக் காக்க நினைக்கிறேன்’ என்று சொன்னார், எம்.ஜி.ஆர்!

    எம்.ஜி.ஆர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். மருதமலை முருகன் ஆலயத்திலும், மூகாம்பிகை ஆலயத்திலும் அவர் பாதம் பட்டிருக்கிறது. ஆனாலும், அவர் பக்திப்படங்களில் நடித்ததில்லை. இதைக் கேட்டபோது, ‘எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனைக் கோயில்களை வைத்து வளர்க்கமுடியாத பக்தியை, சினிமாப் படங்களா வளர்த்துவிடப்போகிறது? என்னைப் பொறுத்தவரை தாயிடம் அன்பு, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்தப் பண்புகளே மனதை தூய்மையாக்கும். மனத்தூய்மையே பக்தி…’ என்று சொன்னார், எம்.ஜி.ஆர். 


    எம்.ஜி,ஆரின் மொத்த வாழ்க்கையையே நாடோடி மன்னன் என்ற வார்த்தையில் அடக்கிவிடலாம். ஜூபிடர் பிக்சர்ஸூக்கு வந்து தரையில் படுத்துறங்கி திரையில் கதாநாயகனாகும் வரை அவர் நாடோடி. அப்புறம், திரைவானில் கொடிகட்டிப் பறந்து, அரசியலில் நுழைந்து சாதித்து கண்மூடியபோது, அவர் மன்னன்!




15 ஜனவரி, 2022

இந்திய ராணுவ தினம்

     வீர வணக்கம்

கே.எம்.கரியப்பா

    1949 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 15ஆம் நாள், இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக திரு.கே.எம்.கரியப்பா பதவியேற்ற நாள். அதற்கு முன், சுதந்திரம் பெற்ற பின்னரும் பதவியிலிருந்த பிரிட்டிஷ் அரசின் சர் ஃப்ரான்சிஸ் புட்செரி வெளியேற, இந்திய ராணுவத்துக்கு ஓர் இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

    நாட்டுக்காகக் குருதி சிந்தி, சொந்த விருப்பு வெறுப்புகளைத் துச்சமென மதித்து,நாட்டின் பாதுகாப்பே முக்கியம் எனக்கருதி, எதிரிகளுடன் போரிட்டு, வீரமரணம் எய்தும் உயர்ந்த போக்கினை வெறும் ‘தியாகம்’ என்ற சொல்லில் அடக்கிவிடமுடியாது.

    தாய் மண்ணில் விதையாகிப் போன சரித்திர நாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாகவும் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.


    உலகின் மூன்றாவது மிகப்பெரிய ராணுவ சக்தியாகத் திகழும் இந்திய ராணுவம் 13 லட்சம் வீர்ர்களைக் கொண்டது. நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துவருகின்றது.உலகில் அதிகமாக ராணுவத் தளவாடங்களுக்கு செலவு செய்யும் நாடு, உலகின் மிகப்பெரிய கடற்படை கொண்ட நாடு, என நாட்டின் அந்தஸ்த்தைக் காட்டவோ, எதிரிகளின் சிம்மசொப்பனம் இந்திய தேசம் எனப் பறைசாற்றுவதற்கோ இந்தப் பட்டியல் அல்ல. 


    இதையெல்லாம் தாண்டிய பலம், வேற்றுமை மறந்து நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும், அமைதியையும் மட்டுமே கருதி போர்களிலும், இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களிலும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெறும் இந்திய அரசுப் பணியாளனாக அல்லாமல், ஒரு மாவீரனாக தன் தோள்களில் தன் தேசத்தை சுமப்பவனுக்கு, கொண்டாட்டங்களால் அல்ல ஒரு இந்தியக் குடிமகனாக அவனை மனதில் நிறுத்தி நினைவுகூறுவதே மிகப்பெரிய மரியாதை. 

    சகமனிதனுக்குக் கிடைக்கப்பெறும் சாதாரண அடிப்படை சந்தோஷங்களைக் கூட தனக்குள்ளே அழுத்திவைத்துக்கொண்டு  சுற்றம், சூழல் எதையும் பொருட்படுத்தாது, தன்னை மெலுகாக்கி, தேசப்பற்றைத் திரியாக்கி, தியாகச் சுடராக ஒளிவீசிக் கொண்டிருக்கும் நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றாக நிமிர்ந்து நின்று பெருமிதமாக செலுத்தலாம் வீரவணக்கம்.

                           கூடுதல் தகவல்கள்                      

*இந்திய ராணுவம் தனது வீரர்களுக்கு அதிக வசதி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்த புது சீருடையை ஜனவரி 15ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.

*இந்திய ராணுவத்தினருக்கான புதிய சீருடையை தேசிய ஆயத்த ஆடை தொழில்நுட்ப நிறுவனத்துடன் (NIFT) இணைந்து இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. 

*இந்த புது வடிவ சீருடை அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தும் டிஜிட்டல் அச்சு வடிவிலான அம்சத்தைக் கொண்டது.

*பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, இந்த புதிய டிஜிட்டல் சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது. 

*மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளிலும், காடு, மலை, பனிக்காலங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு உகந்ததாகவும் இந்த ஆடை இருக்கும்.

*இந்தச் சீருடையில் மேல்சட்டையை ராணுவத்தினர் கால்சட்டைக்குள் சொருகிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வெளியே தொங்க விட்டிருக்க வேண்டும்.

*புதிய உருமறைப்பு வண்ணக்கலவைச் சீருடை, மஞ்சள் மண் நிறம், பச்சை மற்றும் ஆலிவ் நிறங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

*இந்திய ராணுவ தின கொண்டாட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக, வெவ்வேறு காலகட்டத்தில், குறிப்பாக சுதந்திரத்துக்கு முந்தைய காலங்களில் இருந்தது முதல் தற்காலம் வரை இந்திய ராணுவ பயன்படுத்தி வந்த சீருடைகளில் வீரர்கள் அணிவகுத்துச் செல்வர்.

*அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் வீரர்கள் அணிவகுப்பில் ஏந்திச் செல்வர்.

*இந்த சீருடையில் பெண் வீராங்கனைகளுக்கும் வசதியாக இருக்கக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

*குடியரசு தின அணிவகுப்பில் இந்த புதிய சீருடையிலேயே ராணுவ வீரர்கள் அணிவகுத்து செல்வர்.

*இந்த ராணுவச் சீருடைகள் வெளி சந்தையில் விற்பனைக்கு வராது. அரசு அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே இதை பெற முடியும். போலிகளைக் கண்டறியும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*இந்தப் புதிய சீருடை தேசிய அளவில் முழுமையாக அமல்படுத்த 6 முதல் 8 மாதங்கள் வரை ராணுவப் பிராந்தியத் தலைமையகங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

14 ஜனவரி, 2022

பொங்கல் நல்வாழ்த்துகள்


*பொங்கல் நல்வாழ்த்துகள்* 


 உழைத்து உழைத்தே ஓய்ந்து போன, 
உலகின் முதலாளி... 

 ஊருக்கே உணவிட்டும், 
தன் வயிற்றை நிரப்பாது, 
உவகை கொள்ளும் உழைப்பாளி... 

 ஆடை தந்தவனே, 
இன்று அரைக் கந்தையில், 
ஆதரவற்று... 

 வரும் தைத் திங்களாவது 
உழவனின் இழிநிலை போ(க்)கி, 
உலகுக்கு பெருமை உரைக்கட்டும்.... 

 தைத் திங்கள் முதல் நாளில் 
தவறாது நினைவு கூர்வோம். 
விவசாயி என்னும் முதற்கடவுளை... 

 

13 ஜனவரி, 2022

போகிப்பண்டிகை

 மாதங்களில் நான் மார்கழி - பகவான் கிருஷ்ணர்


    இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.

இந்திரனைப் போற்றும் பண்டிகை 

    தான், மழை பொழிவதால் மட்டுமே, விவசாயம் செழிப்பாக இருக்கிறது என்ற கர்வத்துடன் இருந்தான் இந்திரன். இந்திரனுடைய ஆணவத்தைக் குறைக்க நினைத்த கிருஷ்ணர் இந்திரனின் வழிபாட்டைத் தடுத்து கோவர்த்தனமலைக்கு வழிபாடுகள் செய்வதற்கு மக்களைத் திசை திருப்பிவிட்டார். இதனை கண்ட கோபம் அடைந்த இந்திரன் ஏழு நாள்கள் விடாமல் பெருமழை பொழியச் செய்து மக்களைத் துன்புறுத்தினான்.

    மக்களைத் துன்பத்திலிருந்து பாதுகாக்க, கோவர்த்தன மலையைக் குடை போன்று தன்னுடைய ஒற்றை விரலால் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினார்.

    ஆணவத்தைத் துறந்த இந்திரன், கிருஷ்ணரைப் பணியவே, கிருஷ்ணர், போகிப் பண்டிகையன்று, இந்திரனை(போகியை)க் கொண்டாட வரம் நல்கினார்.

    பழையவற்றையும், தேவையற்றதையும் தூக்கி எறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழமையான, துயரமான நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை "போக்கி' எனப்பட்டது. அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும்.

    பல்வேறு தெய்வீகக் குணங்களைத் தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது.

     போகியன்று, வீட்டின் கூரையில் வேப்பிலை, பூளைப்பூ மற்றும் ஆவாரம் பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கி இருந்த குப்பைகள், தேவையற்ற பொருட்களை வீட்டிலிருந்து தூக்கி எறிவார்கள். வீட்டிலிருந்து மட்டுமல்ல மனதிலிருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். 

    மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவதைகளுக்கான வழிபாட்டுக் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. அந்த சமயத்தில் பூஜை, பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது.

     மார்கழி மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது.அதனால் அதனை பீடுடை மாதம் (பெருமைக்குரிய மாதம்)என்பர். காலப்போக்கில் மக்கள் இதை மாற்றி, பீடை மாதம் எனத் தவறுதலாக அழைக்கத் தொடங்கிவிட்டனர். இதற்குப்பின், தை வந்த பிறகு தான் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்”

    மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னோர்களுக்கு பூஜை காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் சிறப்பு. போகிப் பண்டிகையன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்தி விடுவார்கள். 

    இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். போகி தினத்தன்று, பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவார்கள் என்பது முன்னோர்கள் நம்பிக்கை. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய்- வெற்றிலை, பாக்கு, வாழை பழம் வைத்து தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்,
வழுவல கால வகையினானே’ 
- பவணந்தி முனிவரின் நன்னூல் 


12 ஜனவரி, 2022

தேசிய இளைஞர் தினம்

 விழிமின், எழுமின், உழைமின், கருதிய காரியம் 

கைகூடும்வரை...

   கொல்கத்தா நகரில், மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் சாலையில் குதிரை வண்டி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த வண்டியின் உள்ளே தாயாகி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் பயணித்துக் கொண்டிருந்த வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரை திடீரென்று கட்டுப்பாடற்று வேகமாக ஓடத் தொடங்கியது. குதிரை வளர்த்தவரோ சாலையில் விழுந்து கிடக்க, குதிரை வண்டி வேகமாக ஓடியது. உள்ளே செய்வதறியாத பெண் மரண பயத்துடன் அமர்ந்திருக்க, மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தது. 

    அப்போது சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஓர் இளைஞன் சட்டென குதிரையின் மீது பாய்ந்து அடக்க முயற்சித்து தோல்வி கண்டான். தரையில் விழுந்து கைகால்களில் ரத்தகாயங்கள் ஏற்பட்டது. இருந்தாலும் அவன் மனம் தளரவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து குதிரையை அடக்கி, அந்த பெண்ணைக் காப்பாற்றினான். அப்போது அவனுக்கு வயது பதினைந்து.

    இந்த சம்பவத்தை கண்கூடாகப் பார்த்து வியந்த மக்கள்கூட்டம் அவனது வீரத்தை வெகுவாகப் பாராட்டியது. ஆனால் அந்த இளைஞனோ,பாராட்டுகளையெல்லாம் சிறிதும் காதில் போட்டுக்கொள்ளாமல் இயல்பாக அந்த இடத்தைக் கடந்து சென்றான். அந்த இளைஞனால் தான் பல ஆண்டுகளுக்குப்பிறகு, அமெரிக்க மண்ணில், தனது ஆர்ப்பாட்டமில்லாத, ஆன்மீக உரையால், மிகப்பெரும் மக்கள் சமுத்திரத்தை ஆட்கொள்ள முடிந்தது. அந்த வீரமிக்க இளைஞன் நரேந்திரன் எனப்பட்ட விவேகானந்தர் தான்.

    சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை தேசிய இளைஞர் தினமாக இந்திய அரசு கடந்த 1984 ஆம் ஆண்டில் அறிவித்தது. அதற்கு அடுத்த ஆண்டான 1985, ஜனவரி12 ஆம் தேதி முதன்முதலாக இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.  அதைத் தொடர்ந்து ஒவ்வோராண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.  

    விவேகானந்தர் என்னும் மாமனிதர் ஆன்ம யோகி என்பதைக்காட்டிலும் கர்ம யோகியாகவே அடையாளம் காணப்படுகிறார். காரணம் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவற்றில் அவர், செயலுக்கே முக்கியத்துவம் அளித்தார். அதுவே ஆன்மீக விடுதலைக்கும் வழிவகுக்கும் என்றார்.

    கல்வி இன்றியமையாதது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றினார் விவேகானந்தர்.

“வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல. வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி”


    என்றார். இந்தியச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட அவர் முன்வைத்த சிந்தனைகளில் கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார்.

    “வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல. தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி”

    என்றார்.

    “எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். 

    இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவள் (ன்) என்பதை நம்பு. பலவீனமானவள் (ன்) என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே!” என்று அறைகூவல் விடுத்தார்.

    “நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே! பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்” என்றார்.தெற்கே ராமேசுவரத்தில் இருக்கும் ஒருவர் வடக்கே காசிக்கு செல்லவேண்டும் என்றும், வடக்கே காசியில் இருக்கும் ஒருவர் தெற்கே ராமேசுவரத்திற்கு செல்லவேண்டும் என்று நினைக்கும் வரையில் நம்முடைய தேசம் கலாச்சார ரீதியில் ஒரு வல்லர சாகவே இருக்கும் என்றார் சுவாமி விவேகானந்தர். 

     “ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். அதுவே ஆன்மீகத்தில் புதிய விடியல்”
என்றார் சுவாமி விவேகானந்தர்.

    “எல்லாமே கிடைத்துவிடும். ஆனால் வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்”

    என எழுச்சி உரை ஆற்றினார். உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன. உனக்கு நிகர் நீயே. உன் மீது நம்பிக்கை வை. உன்னால் எதுவும் முடியும். வழக்கமான சம்பிரதாயமான சடங்கில் விவேகானந்தருக்கு நம்பிக்கை இல்லை.

     மதம் என்பது ஆன்மிகம்” என்னும் தெளிவைக் கொண்டவர். நான் மறைந்த பின் ஆயிரம் ஆண்டுகள் என்னுடைய தாக்கம் இருக்கும் என்றார். இந்த தீர்க்க தரிசனம் யாருக்கு வரும்?

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை



    ஒவ்வோர் இளைஞனும் தன்னை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தனக்கு வந்த உயர்வைக் கொண்டு, அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். சாதி, மத, இன பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட கலாச்சாரமே, பாரத கலாச்சாரம்.

    இதில் மலிவான சிந்தனைகளுக்கு இடமே இல்லை. பணம், பதவி, புகழ் போன்ற சாதாரண இலக்குகளை நோக்கமாகக் கொள்ளாமல் உலக நன்மை என்னும் பரந்துபட்ட சிந்தனையை இளைஞர்கள் தங்களின் மனத்தில் கொண்டு, உயர்ந்த நோக்கத்தை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர்.

    இப்படி, எது கல்வி என்பதில் தொடங்கி, உடலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்குப் பலம் அவசியம், சமூக நல்லிணக்கம் என்பதுவரை இளைஞர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் விவேகானந்தர்.

    ஆன்மிகத்தோடு சமய சார்பற்ற பார்வையும் கொண்டிருந்த அவருடைய சிந்தனைகளை, ஆன்மீகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால், இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும்.


11 ஜனவரி, 2022

ராகுல் திராவிட் பிறந்தநாள்

     இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 

    ராகுல் திராவிட், இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூரில்,பிறந்தார். கர்நாடகாவில் வாழும் ஒரு மகாராஷ்டிரிய தேஷஸ்தா குடும்பத்தை சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் தந்தை வழி முன்னோர்கள் தமிழ் நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள். அவர் பெங்களூரில் வளர்ந்தார். மராத்தி மற்றும் கன்னட மொழிகளைப் பேசுவார்.

    திராவிட் அவரது பன்னிரெண்டாவது வயதில் இருந்தே கிரிக்கெட்டை விளையாடத் துவங்கி விட்டார். அவர், மாநில அளவில் அண்டர்-15, அண்டர்-17 மற்றும் அண்டர்-19 பிரிவுகளில் விளையாடி உள்ளார். முதன் முதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேகி தாராபோரால், கோடை விடுமுறையில் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு கேம்பில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர், அவரது பள்ளி அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே முதல் சதம் அடித்தார். பேட்டிங் செய்ததுடன், விக்கெட் கீப்பராகவும் இருந்தார். பின்னர் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் குண்டப்பா விஸ்வநாத், ரோஜர் பின்னி, பிரிஜேஷ் படேல் மற்றும் தாராபோரின் அறிவுரையின் பேரில் , விக்கெட் கீப்பிங்கை நிறுத்தி வைத்தார்.


    மகாராஷ்டிராவுக்கு எதிராக ரஞ்சி ட்ரோபியில் விளையாட அவர் முதன் முதலில் பூனேயில் பிப்ரவரி மாதம் 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் அவர் ஏழாவது நிலையில் வருங்கால சக அணி வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்துடன் சேர்ந்து 82 ரன்கள் அடித்து ஆட்டத்தை சம நிலைப் படுத்தினார்.அவரது முழு முதல் சீசன் 1991-92 ஆம் ஆண்டில் இருந்தது. அப்பொழுது அவர் இரண்டு சதங்களை அடித்து தொடர் முடிவில் சராசரி 63.3 க்கு 380 ரன்கள் எடுத்திருந்தார்.இதன் பின்னர் திராவிட் சவுத் சோனில் நடக்கின்ற துலீப் ட்ரோபியில் ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1996 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் விளையாடிய வினோத் காம்ப்ளிக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கப் ஒரு நாள் போட்டியில், தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கிய டிராவிட் அமோகமான ஆரம்பத்தை காணவில்லை. இதற்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர், இங்கிலாந்து சுற்று பயணத்தில் தான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சய் மஞ்ச்ரேகர் காயமுற்றார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் முதன் முதலில் தோன்றினார். இவருடன் சவுரவ் கங்கூலியும் முதல் முதலில் களம் இறங்கினார்.

    1996 இல் இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய திராவிட் ஒரு வலது கை ஆட்டக்காரர். சில சமயங்களில் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டுள்ள திராவிட், உலகின் முன்னணித் துடுப்பாளர்களுள் ஒருவர். ராகுல் திராவிட் அக்டோபர் 2005இல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2004 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. திராவிட் 'சிறந்த ஆட்டக்காரர்' மற்றும் 'சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்' ஆகிய விருதுகளை, தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். 


    திராவிட், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களைக் கடந்து சாதனை புரிந்தவர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே வீரர் ஆவார். மேலும் திராவிட், டெஸ்ட் போட்டிகளில் அதிக கேச்சுகள் (210) பிடித்து சாதனை புரிந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 13000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை 24 நவம்பர் அன்று பெற்றார். 

    தேசிய இந்திய அணியின் மிகத் தேர்ச்சி பெற்ற கிரிக்கெட் வீரராக 1996 ஆம் ஆண்டு முதல் திகழ்ந்து வருபவர் ராகுல் ஷரத் டிராவிட் .இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் அந்த பதவியில் இருந்து 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விலகிக்கொண்டார். 2000 ஆம் ஆண்டில் டிராவிட் ஐந்து வீரர்களில் ஒருவராக இருந்து விஸ்டன் கிரிக்கேடர்ஸ் ஆப் தி இயர் விருதைப்பெற்றார். டிராவிடுக்கு ICC பிளேயர் ஆப் தி இயர் மற்றும் டெஸ்ட் பிளேயர் ஆப் தி இயர் விருதுகளும் 2004 ஆம் ஆண்டு துவக்க விழாக்களில் வழங்கப்பட்டன.

    நீண்ட நேரத்திற்கு நின்று பேட் செய்யக்கூடிய அவரது திறனைப்பார்த்து அவரை தி வால் என்று அழைக்கின்றனர். டிராவிட் பல தரப்பட்ட உலக சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரையும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது இந்திய வீரராக இருக்கிறார் 14 பிப்ரவரி 2007 அன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவதாகவும் இந்திய அணிவகுப்பில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து மூன்றாவதாகவும் இருந்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.

    இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் பத்து அணிகளுக்கும் எதிராக சதம் எடுத்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் ஆவார். 210 கேச்சுகளைப் பிடித்து டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேச்சுகளை பிடித்த வீரர் என்ற பெயரைப்பெற்றுள்ளார். 18 வீரர்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு சமையங்களில் 75 க்கும் மேற்பட்ட சதங்களை எடுக்கப் பங்களித்துள்ளார் டிராவிட். 

கொடிகாத்த குமரன் நினைவு நாள்

 திருப்பூர் குமரன் 

    காந்தியடிகளின், ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறையின் தடையை மீறி ஆர்பாட்டம் நடந்தது. இதற்குத் தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

    தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.

    'வந்தே மாதரம்' என்று கூறியபடி, கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

    உயிருக்குப் போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை, அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான்.

    அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான்.

    1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார். போதிய வருவாய் இன்றி குடும்பம் வறுமையில் வாடியது. வாழ  வழியின்றித் தவிக்கும் மக்களுக்கு அடைக்கலம் தந்து வாழவைக்கும் திருப்பூர் மாநகரம் அன்று, குமரனுக்கும் வழிகாட்டியது.செம்மையாகவும், கௌரவமாகவும் வாழ்ந்த குமரன், 11 வயது நிரம்பிய ராமாயி என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்.

    இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.

    1932 ஆம் ஆண்டு ஜனவரியில், காந்தியடியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, வீரத்துக்கு பெயர் போன கொங்குமண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

    காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கிக் குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தேமாதரம், வந்தே மாதரம்' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதியாகும்.

    மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடிக்கு ஏற்படவிருந்த இழுக்கைப் போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டியது.

    புதைக்கப்பட்டது இருபத்தெட்டே வயதான இளைஞன் குமரனின் சடலம். ஆனால் இன்றும் என்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது - குமரன், தன் உயிர்ச் சுடரால் ஏற்றிவைத்த தியாக தீபம்.


    ஆலமரம் கீழே விழும்போது, மரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதன் அடியில் சிக்கிச் சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை. திருப்பூர் குமரன் போன்ற உயிர் தியாகம் புரிந்த, எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூர்வதே, நாம் அவர்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.

10 ஜனவரி, 2022

எழுத்தாளர் ஆர். சூடாமணி பிறந்தநாள்

         எழுத்தே உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவர்; சமூக முன்னேற்றத்தைத் தம் எழுத்தில் அடி நாதமாக வைத்திருந்தவர்; தன் எழுத்தின் பயன் சமூக சீர்திருத்தத்துக்கு சென்று சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர்

ஆர்.சூடாமணி

        1931-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராகவன், சென்னை மாநில தலைமைச் செயலராக இருந்தார். தாய் கனகவல்லி சிற்பம், ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவர். பின்னாள்களில் சூடாமணி தன்னை ஓர் ஓவியராக நிலைநிறுத்திக் கொள்ள அவருடைய தாயும் காரணமாக இருந்திருக்கிறார். 

         எல்லாக் குழந்தைகளையும் போல ஆரோக்கியமாக வளர்ந்த சூடாமணிக்கு, ஐந்தாம் வயதில் அம்மை நோய் தாக்கியது. பலகட்டச் சிகிச்சைகளுக்குப் பிறகு மரணத்துக்கு மிக அருகில் சென்று மீண்டு வந்தார். ஆனாலும் அம்மை நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. 

        இவரின் இயல்பான உடல் வளர்ச்சி தடைபட்டது. வளர்ச்சி குறைவான குழந்தையாகவே வளர்ந்தார். இதன் காரணமாக இவருடைய தந்தை இவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. தன்னுடைய அருமை மகளுக்குப் பாடம் சொல்லித்தர ஆசிரியரை வீட்டுக்கே வரவைத்தார். கற்பதில் ஆர்வம் மிகுந்த சூடாமணி, தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்று விளங்கினார். சூடாமணியின் வாசிப்புத்தளம் விரிவடைந்தது. புத்தகங்களுக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டார். 

         சூடாமணி 1954 முதல் எழுதினாலும், இவரது முதல் சிறுகதை "காவேரி' என்னும் பெயரில் 1957-ஆம் ஆண்டு கலைமகளில் வெளியாகி பாராட்டைப் பெற்றது. இக்கதைக்காக இவருக்கு கலைமகள் வெள்ளிவிழா பரிசு வழங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு வெளிவந்த "மனதுக்கு இனியவள்' என்னும் நாவல் இவரை அனைவரும் அறியும்படி செய்தது. இந்நாவல் சூடாமணியின் வாழ்க்கையை மறைமுகமாகப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. தன் வரலாற்றுச் சாயல் கொண்டது.

         உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த இந்நாவலுக்கு சிறந்த நாவலுக்கான கலைமகள் ஸ்ரீநாராயணசாமி ஐயர் விருது வழங்கப்பட்டது. சூடாமணி, விவேகானந்தர் மீது அளவற்ற அன்பும் காந்தியத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவராக இருந்தார். எளிமையான வெண்மைநிற ஆடைகளை அணிவதையே விரும்பினார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இடைநிலை மற்றும் வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். 

        பெண் எழுத்தாளர் பலரை உருவாக்கிய கலைமகள் இதழ்தான் இவரையும் உருவாக்கியது. அதனால்,  “கலைமகள் எழுத்தாளர்” என்றே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தமிழைத் தவிர ஆங்கிலத்திலும்  “சூடாமணி ராகவன்” என்ற பெயரில் புனைகதைகளை எழுதியுள்ளார். இவருடைய நாவலொன்று "யாமினி' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

        "சிரத்தையான எழுத்துக்கும் வெகுஜன எழுத்துக்குமிடையே உள்ள இடைவெளியை நிரப்பியவர் சூடாமணி' என்று விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டவர். தமிழில் பெண்ணியமும் அதுசார்ந்த கோட்பாடுகளும் உருவாவதற்கு மறைமுகமாகக் களம் அமைத்துக் கொடுத்தவர் என்பதை அவரது படைப்புகளை வாசித்தவர்கள் நன்கறிவார்கள். ஆனாலும் தன்னை ஒரு பெண்ணியவாதியாக வெளிக்காட்டிக் கொள்ளாதவர். 

         சூடாமணியின் பெரும்பான்மையான கதைகள் குடும்பம் சார்ந்தவை. மனிதனின் ஆழ்மனச் சிக்கலை உளவியல் பூர்வமாக ஆராய்பவை. குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. தனக்குக் கிடைத்த வாழ்க்கையை அதன் குறைகளோடு ஏற்றுக்கொண்ட சூடாமணி தன் எழுத்தின் வழியே அன்பை விதைத்தவர்; உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்தவர்; "உளவியல் எழுத்தாளர்' என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

         இவர் படைத்த சிறுகதைகள்

         அந்த நேரம் (1969), இழந்த மகுடம் (1973), ஓர் இந்தியன் இறக்கிறான் (1975), ஆர். சூடாமணியின் சிறுகதைகள் (1978), உலகத்தினிடம் என்ன பயம் (1978), சுவரொட்டி (1985), அம்மா (1987), கிணறு (1991), அஸ்தமனக் கோலங்கள் (1993), காவலை மீறி (1996), ஆர். சூடாமணியின் கதைகள் (2001).

        இறுதியாகக் குறிப்பிட்டுள்ள இந்த நூலுக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது.

         பரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத இவருக்கு இலக்கியச் சிந்தனை பரிசை பலமுறை இவரது கதைகள் பெற்றுத்தந்தன. இருவர் கண்டனர் என்ற நாடகம் ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. மும்பை தமிழ்ச் சங்க விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

         சூடாமணிக்கு 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகக்கண் காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்புச் செய்தது. இத் தொகையைக்கூட பல்வேறு சேவை அமைப்புகளுக்குப் பகிர்ந்தளித்து மனநிறைவடைந்தார் சூடாமணி. 

         2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி சூடாமணி காலமானார்.அவர் விருப்பப்படி அவரின் மறைவுக்குப் பிறகு பல கோடி மதிப்புள்ள சொத்து இராமகிருஷ்ண மடத்துக்கே எழுதி வைக்கப்பட்டது. இத்தகு சிறப்பு மிகுந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி.

பிரபலமான இடுகைகள்