தை மாதத்தில் வரும் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை, தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம். சிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் பல அற்புத சக்திகளை பெற்றனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் தேவர்களை சிறைபிடிக்க தொடங்கினர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.
தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீ பிழம்புகளை உருவாக்கினார். அந்த 6 தீப்பிழம்புகளும் 6 குழந்தைகளாக மாறின.
அந்த 6 குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். கார்த்திகைப் பெண்கள் அந்த 6 குழந்தைகளுக்கும் போர்க் கலைப் பயிற்சியளித்தனர். பிறகொரு நாள் அன்னை பார்வதி தேவி வந்து தன் 6 புத்திரர்களையும் ஒருசேர அணைக்க, அறுவரும் இணைந்து ஒருவராக மாறினர்.
6 குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும், அறிவும் இணைந்து தோன்றிய முருகன் பல கலைகளில் சிறந்து விளங்கினார். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்
அசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவுகாலம் வந்த போது பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேலை கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூச தினமாகும்.
முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.
பழனி முருகன் ஞானவேலைப் பெற்றதால் மற்ற முருகன் கோவில்களை காட்டிலும் தைப்பூச விழாவானது பழனி முருகன் கோவிலில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நன்னாளை எதிர்நோக்கி முருக பக்தர்கள், துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பழனிக்குச் சென்று முருகனைத் தரிசிப்பது வழக்கம்.
தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருகக் கடவுள்.
எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
குரு பகவானுக்கும் குருவாக கல்லால மரத்தின் கீழ் உபதேசித்த சிவபெருமானுக்கும், சிவனால் மனங்குளிர உபதேச மந்திரம் உபதேசித்த முருகப் பெருமானுக்கும் இப்பூசநாள் உகந்தது. இம்மாதிரி ஒரு தைப்பூச நாளில்தான் நடராஜப் பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாதருக்குத் தமது திருக்கூத்தை காட்டியருளினார்.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பினாங்கு, மொரீஷியஸ் முதலிய வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக