“பசிப்பிணிதான் மனிதனுக்கு பெரும்பிணி, ஆதலால் பசியாற்ற உணவளிப்பதே உயர்ந்த அறம்” என்று நாள்தோறும் அணையாத அடுப்பெரியச் செய்து காலமெல்லாம் அன்னதானம் அளிக்கும் அரும்பணியைத் தொடங்கிய அருட்பிரகாச வள்ளலார் ஒளியில் கலந்த தினம் இன்று.
கடலூர் மாவட்டம் வடலூருக்கு அருகில் உள்ள மருதூரில் 05.10.1923 அன்று இராமையாப் பிள்ளை, சின்னம்மையார் ஆகியோரின் மகனாக இராமலிங்கம் எனும் திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவர் பிறந்த ஆறாவது மாதத்திலேயே இவரின் தந்தை மரணமடைந்த காரணத்தால், தாயார் மற்றும் அண்ணன் சபாபதி அவர்களின் வளர்ப்பில் சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வந்தார்.
சிறுவயதிலேயே பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லாத வள்ளலார், கந்தகோட்டம் முருகன் கோவிலுக்கு தினமும் சென்று மனமுருக பாடல்களைப் பாடத்தொடங்கினார்.
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”
என்று தொடங்கும் பாடலை கந்த கோட்டத்தில் வள்ளலார் பாடுவதைக் கண்ட அவரது ஆசிரியர் , வள்ளலாரின் மெய்யாற்றலை உணர்ந்து மனமுருகினார், வள்ளலார், தான் கற்பிக்கும் கல்விக்கு அப்பாற்பட்டவர் என்று கூறினார். அதன்பின்னர் வள்ளலார் முழுவதுமாக இறைப்பணியில் தொண்டாற்றத் தொடங்கினார்.
தனது ஒன்பதாவது வயதிலேயே அறிஞர்கள் நிறைந்த அவையில் அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் மிகச்சிறந்த ஆன்மீக உரையாற்றினார் வள்ளலார். அதன்பின்னர் நாடு முழுவதும் உள்ள பல கோவில்களுக்கும் சென்று இறைவனை வேண்டி வழிபட்டு பாடல்களைப் பாடினார்.
உருவ வழிபாட்டை மறுத்து, உள்ளெழும் ஜோதி வழிபாட்டை பிரபலமாக்கி மக்களை அறிவு வழியே ஆற்றுப்படுத்திய ஞான வள்ளல் இவர். கருமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு என ஆன்மாவை மறைக்கும் ஏழு திரைகளின் வழியே அருள்பெரும் ஜோதியை வழிபடச் செய்த மெய்ஞ்ஞான குரு இவர்.
'சாதி, சமயம், இனம், மொழி, நாடு என எந்தப் பாகுபாடும் நம்மில் கூடாது. எல்லா மக்களையும் சகோதர நோக்குடன் நேசிக்கவேண்டும், ஏனெனில் எல்லா உயிரிலும் இறைவனே வசிக்கிறார்' என்ற இவரின் உயரிய கருத்துக்கள் மக்களைக் கவர்ந்தது.
பசிப்பிணி போக்குவதுதான் எல்லா அறங்களுக்கும் மேலானது என்று போதித்த வள்ளலார், 1867 ஆம் ஆண்டில் வடலூர் அருகே பார்வதிபுரம் என்னும் கிராமத்தில் மக்களிடம் 80 காணி நிலத்தை தானமாகப் பெற்று சமரச சுத்த சன்மார்க்க தரும சாலையை நிறுவினார்.
மக்களிடம் தானமாகப் பொருட்களை வாங்கி ஏழை, பணக்காரர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என சாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் மூன்றுவேளையும் உணவு வழங்கத் தொடங்கினார். அந்த அன்னதானப் பணி இப்போதுவரையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
1867 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி நிறுவப்பட்டு எரியத்தொடங்கிய 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்ட அடுப்பு 153 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரிந்து, மக்களின் பசிப்பிணியைப்போக்கி வருகிறது.
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உயிர்நேயம் வளர்த்த வள்ளலாரின் கொள்கைகள்
*கடவுள்ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
*எதிலும் பொது நோக்கம் வேண்டும் எந்த உயிரையும்கொல்லக்கூடாது, புலால் உண்ணக்கூடாது
*எல்லா உயிர்களும், நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
*பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு பாராது உணவளித்தல் வேண்டும்
*சாதி, மத வேறுபாடுகள் கூடாது, மத வெறி கூடாது
* இறந்தவர்களை எரிக்கக் கூடாது, சமாதி வைத்தல் வேண்டும்
வடலூரில் சத்திய தரும சாலைக்கு அருகில் 1871ஆம் ஆண்டு ஒளித்திருக்கோவிலை அமைக்கத்தொடங்கினார் வள்ளலார், அதன்பின்பு 1872 ஆம் ஆண்டு முதல் தைப்பூச நாளில் ஏழு திரைகள் விலகி இந்த கோவிலில் ஜோதி தரிசனம் நிகழ்ந்து வருகிறது.
1874 ஆம் ஆண்டு தைப்பூச நாளில் ஒளியாய் மாறினார் வள்ளலார்.
வள்ளலார் ஏற்றிய ஞான தீபம் இன்றும் உலகெங்கும் பல மக்களால் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. அவர் ஆற்றிய பசிப்பிணி நீக்கும் அற்புதப் பணியை இன்றும் பல மக்கள் சிரமேற்கொண்டு செய்து வருகிறார்கள்.
வள்ளலார் என்ற தூய ஆன்மா நம்மிடையே இல்லை என்றாலும் அவரது கொள்கைகளும் தூய பணிகளும் இன்றும் மக்களிடையே பரவி வருகின்றன. அதுவே அவரின் வாழ்வுக்கும் கிடைத்த வெற்றி எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக