பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி, ஐரோப்பாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட் பிறந்தநாள் இன்று.
ஜேம்ஸ் வாட், ஸ்காட்லாந்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் படங்கள் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். காகிதம் வாங்க காசு இருக்காது என்பதால், வீட்டுத் தரையிலேயே வரைவார். இவரது ஓவியங்களில் வட்டம், சதுரம், முக்கோணம் என கணித சம்பந்தமானவை அதிகம் இடம்பெறும்.
பிறவியிலேயே சற்று பலவீனமானவர். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். தொடர்ந்து பள்ளிக்குச் செல்லமுடியாததால், தன் அம்மாவிடம், வீட்டிலேயே கல்வி கற்றார்.
உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும் இயந்திரங்களைப் பற்றியே கனவு காண்பார். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். ஊர் திரும்பிய அவருக்கு கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்தில் இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை கிடைத்தது.
தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு 1764-ல் கிடைத்தது. அதில் அதிக சக்தி வீணாவதைக் கண்டார்.
உடல்நிலை அனுமதிக்காதபோதும் மனம் தளராமல் கடுமையாக உழைத்தார். இயந்திரத்தில் சக்கரம் பொருத்தும் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி அதை மாற்றம் செய்தார்.இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. இதற்கு காப்புரிமை பெற்றார்.
இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்தார்.
1775 இல் பொறியாளர் மேத்யூ போல்டன் என்பவருடன் கூட்டு சேர்ந்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இருவரும் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்து பெரும் செல்வந்தர்களாயினர். இவரது கண்டுபிடிப்புகள் மனிதகுலத்துக்கு வரப்பிரசாதமாக விளங்கின.
அதுவரை மனித, விலங்கு ஆற்றல்களையே நம்பியிருந்த தொழில் உலகம் புதிதாக நீராவி என்ற இயற்கை சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கியது. உற்பத்தி பல மடங்கு பெருகியது. தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது.
ஜேம்ஸ் வாட்டின் கண்டுபிடிப்பு பல துறைகளில் ஊடுருவியுள்ளது. 1783 ஆம் ஆண்டு ஒரு படகில் நீராவி இயந்திரத்தைப் பொருத்தி அதனை இயக்கினார் Marques de zafra என்பவர். 1804 ஆம் ஆண்டு Richard Trevithick என்பவர் நீராவி இயந்திரத்தைக் கொண்டு இயங்கும் இரயில் வண்டியைக் கண்டுபிடித்தார்.
அவையிரண்டும் ஆரம்பத்தில் வெற்றியடையாவிட்டாலும் சில ஆண்டுகளில் நீராவிப் படகும், நீராவி இரயிலும் முறையே கடல் மற்றும் நிலப்போக்குவரவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. நீராவிப் படகுகள் கடல் அலைகளை வெற்றிக் கொண்டன. நீராவி இரயில்கள் நிலப்பரப்புகளை வெற்றி கண்டன.
மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு ‘வாட்’ என இவரது பெயரே சூட்டப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகள் பல துறைகளுக்கும் பரவின. துணி காயவைக்கும் இயந்திரம், நச்சுக் காற்றைப் பிரித்தெடுக்கும் கருவி, சிற்பங்கள் மறு உருவாக்கம் செய்யும் கருவி என்று இவரது கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீள்கிறது.ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் இவரே.
ஒரு பலம் வாய்ந்த குதிரை ஒரு சராசரி வேலையைச் செய்வதற்கு எவ்வளவு சக்தியைப் பயன்படுத்துகிறதோ அதுதான் ஒரு குதிரை சக்தி.
550 பவுண்ட் எடையை ( ஏறத்தாழ 250 கிலோ) ஒரு நொடிக்குள் ஓர் அடி உயரத்திற்கு தூக்குவதற்கு தேவைப்படும் சக்தியை ஒரு குதிரை சக்தி அதாவது ஒரு 'Horsepower' என்று நிர்ணயித்தார் ஜேம்ஸ் வாட். இன்றளவும் எந்த இயந்திரத்தின் வலிமையும் குதிரை சக்தி அளவில்தான் கணக்கிடப்படுகிறது.
வாழ்நாள் முழுவதும் ஏறக்குறைய நோயாளியாகவே வாழ்ந்த இவர் மனிதகுலத்துக்கு வழங்கிய மகத்தான பங்களிப்புகள் ஏராளம்.இயற்கையான நீராவி சக்தியை மகத்தான சக்தியாக மனிதகுலத்துக்கு மடைமாற்றிய வரலாற்று நாயகர் ஜேம்ஸ் வாட் 83 வயதில் மறைந்தார்.
வறுமையும், நோயும், அவரது தன்னம்பிக்கைக்கும், உழைப்புக்கும் தடைபோட முடியவில்லை. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வானத்தை வசப்படுத்த உதவிய காரணங்கள் இன்றைக்கும்கூட பொருந்தக்கூடியவைதான்.
ஜேம்ஸ் வாட்டைப்போல தடைகளைக் கண்டு தயங்காமல் தன்னம்பிக்கையோடு உழைக்கும் எவருக்கும், எப்போதும், எந்த வானமும் வசப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக