19 ஜனவரி, 2022

சீர்காழி கோவிந்தராஜன் பிறந்தநாள்

 இசை வளம் நிரம்பிய சீர்காழியில் பிறந்து இசை உலகில் தன்னிகரற்று விளங்கித் தமிழிசை வளர்ச்சியில் தனியாக அடையாளப்படுத்தக் கூடியவராக இருந்தவர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன்.

    ஜனவரி 19, 1933-ல் பிறந்த சீர்காழிக்குச் சிறுவயதிலேயே இசை ஆர்வமும் கலைப்பற்றும் அதிகம். கோயில் சார்ந்த இசையனுபவத்தில் லயித்து நிற்பார். இறைபக்தியும் அவரிடம் இயல்பாக இருந்தது. மகனின் இசை ஆர்வத்தைக் கண்ட தந்தை மகனுக்கு இசைப்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். இவரே தான் கற்ற இசையைப் பலவிதமாகப் பாடிக் கூடியிருப்போரை மகிழ்விப்பார். பாடும்பொழுது அதில் தனது சொந்த ஆலாபனையையும் சேர்த்துக் கொள்வார். 

    கல்வியிலும் மிகுந்த அக்கறை காட்டினார். ஆசிரியர்களின் பாராட்டுக்கும் உரித்தானவராக இருந்தார். பள்ளியில் கற்ற கல்வியும் வீட்டில் பெற்ற இசைப் பயிற்சியும் இவருடைய எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமிட்டன. அந்தக் காலத்தில் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட எம். கே. தியாகராஜபாகவதர், டி. ஆர். மகாலிங்கம் போன்றோரின் பாட்டுகளை சீர்காழி அற்புதமாகக் பாடிவந்தார்.

    1949-ல் சென்னை தமிழிசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 'இசைமணி' என்னும் பட்டத்தையும் பெற்றார். சங்கீதத்தில் மேலும் பயிற்சிபெற விரும்பி சென்னை மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் (இப்போது தமிழ்நாடு அரசு இசைச் கல்லூரி) மேற்படிப்பு படித்தார். 1951-ல் 'சங்கீத வித்துவான்' எனும் பட்டத்தைப் பெற்றார்.

    இவர் எல்லா மொழிக் கீர்த்தனத்திலும் மரபுமுறை வழுவாமல் பொருளுணர்ந்து உச்சரித்துப் பாடும் பயிற்சியை முறையாக வளர்த்துக் கொண்டார். தமிழ்க்கீர்த்தனங்கள் சீர்காழியின் குரலில் புதிய கோலங்கள் பூண்டன. எடுப்பான குரல், சுருதி சுத்தம், தெளிவான உச்சரிப்பு-இது தான் 'சீர்காழி' என்று அடையாளம் காட்டுமளவிற்குத் தனித்தன்மை மிக்கவராக இருந்தார். 

    இசைக் கச்சேரிகளுக்கான வாய்ப்புகள் பெருகின. தமிழிசை இயக்கம் தொடர்ந்து வலுப்பெற்று இருப்பதற்கு சீர்காழியில் இசைக்கோலங்களும் தக்க பின்புலமாகவே இருந்தன.

    சாதாரணமாக மூன்றுமணி நேரம் நடத்தும் கச்சேரியை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வார். அதாவது முதல் ஒருமணி நேரம் சாஸ்திரிய சங்கீதம். இரண்டாவது ஒருமணி நேரம் பக்திப் பாடல்கள். கடைசி ஒரு மணி நேரம் திரைப்பட இசை. இந்தப் பகுப்பு சாதாரண இசை ஆர்வலர்கள்வரை அனைவரையும் இசை அனுபவத்தில் மூழ்க வைக்கும் சிறப்புக் கொண்டது.

    பக்திப்பாடல் இசைத் தொகுப்பில் சீர்காழியின் குரல் தனித்தொலிக்கும். சீர்காழி பாடிய கந்தர் அலங்காரம், கந்தர் சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி, திருப்புகழ், திருமந்திரம், சகலகலாவல்லி மாலை போன்றவற்றுக்கு டி. ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். "ஒவ்வொரு பாடகருக்கும் ஒரு தனிமுத்திரை உண்டு.

    சீர்காழி திரையிசை, இறையிசை, நிறையிசை (பண்ணிசை) ஆகிய மூன்றிலும் முத்திரை பதித்தவர். 1953-ல் 'பொன்வயல்' எனும் திரைப்படத்தில் 'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற பாடலைப் பாடி அறிமுகமானார். அன்று முதல் திரை இசையில் சீர்காழியின் பாடல்கள் தனித்துவம் மிக்கவையாகவே விளங்கின. 

    தொடர்ந்து அவர் பாடிய பாடல்கள் அவரது குரலால் தனிச்சிறப்புப் பெற்றன. இவர் பலரது இசையமைப்பிலும் பாடல்கள் பாடத் தொடங்கினார். தன் இசைவாழ்வுக்கு முதன்முதல் ஆலோசனை கூறி வழிகாட்டிய மேதை ஜி. இராமநாதன் இசையிலும் பல பாட்டுக்களைப் பாடியுள்ளார்.

    'பட்டணம் தான் போகலாமடி' (எங்க வீட்டு மகாலட்சுமி - இசை எம்.வேணு),


 'அமுதும் தேனும் எதற்கு' (தைபிறந்தால் வழி பிறக்கும் - இசை கே.வி.மகாதேவன்), 

'மாட்டுக்கார வேலா' (வண்ணக் கிளி - இசை கே.வி.மகாதேவன்), 


    'வில் எங்கே கணை எங்கே' (மாலையிட்ட மங்கை - இசை விஸ்வநாதன்-இராமமூர்த்தி) என்று பல்வேறு பாடல்கள் பாடினார். பட்டிதொட்டியெங்கும் சீர்காழியின் குரல் ஒலித்தது. சீர்காழியின் வெண்கல நாதம் இசையியல் வரலாற்றில் தனித்தன்மை மிக்கதாகவே இருந்தது.

    கர்ணன் படத்தில் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது’ எனும் பாடலில், சீர்காழி கோவிந்தராஜனின் குரல் கேட்போரின் கண்களைக் கலங்கச் செய்து விடும்.


    பக்திக்குத் தமிழ்மொழியின் சிறப்பு ஆழமானது, அழகானது. இதனால்தான் பக்தியிசை தமிழ் சார்ந்த அழகியல் தத்துவத்தின் பின்னணியில் வெளிப்படும்போது அது ஏற்படுத்தும் தாக்கம் உணர்வு பூர்வமானது. சீர்காழியின் பக்திப்பாடல்கள் ஆத்மார்த்த தரிசனத்தின் நிகழ்காலச் சாட்சி ஆகும். மனித மனங்களை மனித நிலைப்பட்ட இறைவனுடன் தொடர்புபடுத்தும் ஒரு கருவியாகவே பக்தி இசை விளங்குகிறது.

    திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

    தமிழ்த் திரையிசை கூடத் தமிழர் வாழ்புலத்தின் கடத்துகையின் ஒருவித மோதல் நிலை என்றே கூறலாம். ஆனால் அது சுகமானது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா (நீர்க்குமிழி), உள்ளத்தில் நல்ல உள்ளம் (கர்ணன்), வெற்றி வேண்டுமா (எதிர்நீச்சல்) போன்ற பாடல்கள் ஏற்படுத்தும் பதிவுகள் ஆழமானவை. இதற்குப் பாடல் வரிகள் மட்டுமல்ல அந்த வரிகள் எந்த குரலில் ஒலிக்கின்றன என்பதும் முக்கியம். இதுபோல் எத்தனையோ பாடல்களைக் குறிப்பிட முடியும். 

    பாரதி, பாரதிதாசன் பாடல்களைச் சீர்காழியின் குரலில் கேட்கும்பொழுது ஏற்படும் சுகம் சொல்லிமாளாது.சீர்காழி பாடி நடித்த படங்களும் உண்டு. அப்படங்களில் அவர் பாடிய பாடல்கள் அவருக்கு பெரும்புகழைப் பெற்றுக் கொடுத்துள்ளன. திரையிசையிலும் நடிப்பிலும் அவரளவிற்கு தனித்துவம் பேணக் கூடியவர்கள் வெகுசிலரே. அவர்களுள் ஒருவர் சீர்காழி.    

    இசையரசு, இசைப்புலவர், இசைப்பேரறிஞர் போன்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழகம் மட்டும் அல்ல தமிழ்பேசும் நாடுகளிலும் சீர்காழியின் குரல் ஓங்கியொலித்தது அவரது பாடல் இன்றுகூட புதிய அனுபவங்களைத் தரும் வகையிலேயே உள்ளது. 

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராகவும் இவர் பணிபுரிந்ததுண்டு. அத்துடன் இசையியல் பற்றிய நுட்பமான, ஆழமான கருத்துக்களையும் கொண்டிருந்தார்.

    கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதோடு மேலும் பல கௌரவங்களுக்கு உரியவராகவே விளங்கிவந்தார். இவர் மார்ச் 24, 1988-ல் மறைந்தாலும் இவர் பாடிய பாடல்கள் மூலம் அவரது குரல் உயிர்கொண்டு வாழ்கிறது. இசை உலகில் சீர்காழி ஓர் சகாப்தம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...