13 பிப்ரவரி, 2012

13/02/2012


1. சிரியாவில், அரசுக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிக்கு, அல்கைதாவின் தலைவர் அய்மன் அல் ஷவாரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
2. இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மூன்று நாட்கள் பாகி்ஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 
3. தென்னாப்பிரிக்காவின் புதிய கரன்சியில் 93 வயதான முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா படம் இடம்பெறுகிறது.
4. போதிய அளவில் ரயில் பெட்டிகள் இல்லாததால், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 99 புதிய ரயில்களில், 31 ரயில்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது.
5. தமிழும், வரலாறும் இணைந்தால் தமிழகத்தையும், தமிழ் பண்பாட்டையும் மீட்டு உருவாக்கம் செய்ய முடியும், என, தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தார் சுந்தரமூர்த்தி கூறினார்.
6. ஓட்டுப் போட லஞ்சம் கொடுப்பவர்களுக்குத் தண்டனை அளிக்க வகை செய்யும், தேர்தல் கமிஷனின் ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
7. வீட்டுக் கடன்களுக்கான வட்டி மீதான வரித் தள்ளுபடி வரம்பை தற்போதுள்ள 1.5 லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 
8. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், புலிகள் மற்றும் வன உயிரினங்களின் கணக்கெடுப்புத் துவங்கி மூன்று நாட்களாக நடந்து வருகிறது.
9. முதல்வரான பின், தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்துக்கு இரண்டாவது முறையாக இன்று நேரில் செல்லும் முதல்வர், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
10. முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரின், பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

11 பிப்ரவரி, 2012

11/02/2012


1. ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையின் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
2. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மேல்முறையீட்டு மனுவை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
3. எதிரியின் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும், ஒலியின் வேகத்தைவிட விரைவாக செல்லக் கூடிய, நவீன ஏவுகணை, ஒடிசாவில் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
4. மும்பை இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில், 3 பேர் மீது விசாரணை நீதிமன்றம் விதித்திருந்த தூக்குத் தண்டனையை, உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
5.  உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு , 10 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று நடைபெற உள்ளது.
6.  பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும் முன் அவர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
7.  இலங்கை கடற்பகுதியில் சிறைப் பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை, மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
8.  மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில்,விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்த்தால்,3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
9. தொடர் மின்வெட்டைக் கண்டித்து, கோவையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்,வேலைநிறுத்தம் செய்து வருகின்றன.
10. முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 5ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

10 பிப்ரவரி, 2012

10/02/2012




1. பாகிஸ்தான் அதிபர் ஆசிபர் அலி ஜர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை திரும்பத் தொடங்க, சுவிட்சர்லாந்துக்கு கடிதம் எழுதும்படி பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. அமெரிக்காவில் 26ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டில் புதிய  ணுமின் நிலையங்கள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3.  இலஞ்சப் புகாரை அடுத்து, 74 வயதான,தென்கொரியா நாடாளுமன்றத் தலைவர் பார்க் ஹீ-டி, பதவி விலகினார்.
4. குடியரசுத் தலைவர் மாளிகையின்மொகல் கார்டன்பொதுமக்கள் பார்ப்பதற்காக பிப்ரவரி 10 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும்.
5.  குளிர்பதனக் கிடங்குகள் மேம்பாட்டிற்கான தேசிய மையம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான தொகுப்பு நிதியாக ` 25 கோடி ரூபாயையும் வழங்கியுள்ளது. 
 6. பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, வரும் 20ஆம் தேதி துவங்குகிறது.
7.  பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சார்க் அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பாகிஸ்தானும், வங்கதேசமும் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்துள்ளன. 
8. முல்லைப் பெரியாறு அணையில், நீரின் அழுத்தத்தை அளவிடும் கருவியைப் பொருத்தும் கேரளத்தின் முயற்சியை, தடுத்து நிறுத்த வேண்டும் என்று, பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
9.  கல்வி கற்பதில் மந்தமாக உள்ள, குழந்தைகளை கண்டறிவது எப்படி என்பது தொடர்பான, இரண்டு நாள் பயிற்சி முகாம், கவுண்டம்பாளையத்தில் நடந்தது.
10.  ரோகித் சர்மாவிற்கு,வாய்ப்பு அளித்தால், முன் வரிசையில் இருக்கும் சேவக், சச்சின் அல்லது காம்பிரை நீக்க வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

9 பிப்ரவரி, 2012

09/02/2012


1. கிளர்ச்சியைக் கைவிட்டு தேச ஒற்றுமையைக் காப்பாற்றுமாறு,மாலத்தீவின் புதிய அதிபர் முகமது வாஹீத் ஹசன், அந்த நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
2. திபெத் பிரச்னை சீனாவின் உள்நாட்டு பிரச்னை.எனினும் இப்பிரச்னையில் சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.
3. குறைந்தபட்சம் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, உலகின் பழமைவாய்ந்த ஓவியம் ஒன்று ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்ட்டுள்ளது.
4. கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட, குஜராத் கலவரத்தைக் குறித்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது இறுதி அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.
5. ஹரியானா மாநிலம், குருசேத்ராவில் அமைக்கப்பட்டுள்ள 207 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில், 90 அடி நீளம், 60 அடி அகலமுள்ள தேசியக் கொடியை, குடியரசுத் தலைவர் ஏற்றி வைத்தார்.
6. ஆளில்லாமல் பறந்து தாக்கும் திறன் கொண்ட லக்ஷியா-1 விமானம் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
7. கோவையில் கள்ளநோட்டு வைத்திருந்ததாக, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இருவரை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
8. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கும் பணி குறித்து, தனிக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
9. தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள 4.85 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் படிப்படியாக மீட்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறினார்.
10. முத்தரப்பு ஒருநாள் மட்டைப்பந்துப்போட்டித்  தொடரில், இந்திய அணி முதல் வெற்றியை பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில், ஸ்வின், விராத் கோலி ஆகியோரின் சிறப்பானஆட்டத்தால் இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

8 பிப்ரவரி, 2012

புதிய வடிவமைப்பில் 10 ஆம் வகுப்பு தமிழ் 2 வினாத்தாள்









தமிழ் - இரண்டாம் தாள்
காலம்:2 1/2மணி                            பிரிவு - Ⅰ                                                                            மதிப்பெண்கள் : 100
                                          (மதிப்பெண்கள் :20)
                                                   பகுதி – 1
                          அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.                                                                               5×1=5
(1)  ஒருபொருட் பன்மொழிக்கு எடுத்துக்காட்டு
(அ)பாம்பு பாம்பு  (ஆ) மடமட  (இ) மீமிசை ஞாயிறு  (ஈ) சோறு உண்டான்.
(2)வினைத்தொகை பயின்று வந்துள்ள சொற்றொடரைத் தேர்ந்தெழுதுக.
(அ)அருவிலை  (ஆ) மடக்கொடி  (இ)உகுநீர்  (ஈ) வெஞ்சினம்.
(3)உரிச் சொற்றொடரைத் தேர்ந்தெழுதுக.
(அ)உறுவேனில்  (ஆ) நின்கேள்  (இ) நீர்முகில்  (ஈ) இரவுபகல்.
(4)பொதுமொழி அல்லாத சொல்லைத் தேர்ந்தெழுதுக.
(அ)எட்டு  (ஆ)செம்போத்து  (இ) வேங்கை  (ஈ) பலகை.
(5)கீழ்க்கண்டவற்றுள் பண்புத்தொகையைத் தேர்ந்தெழுதுக.
(அ)ஈன்குழவி  (ஆ) திண்டிறல்  (இ) உற்றநோய்  (ஈ) வாழ்க.
                                                                பகுதி – 2
கோடிட்ட இடங்களை நிறைவு செய்க.                                                                5×1=5
(6)ஒருபொருள் குறித்துவரும் சொற்களையே __________என்பர்.
(7)நன்னூல் கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்பது _________விடை.
(8)நண்பகல் என்பது ___________திணைக்குரிய சிறுபொழுது.
(9)மொழியமிழ்து – இவ்வுருவகத்துக்கான உவமை _________.
(10) மரவேர் என்பது ____________விகாரம் ஆகும்.
                                                                 பகுதி – 3
சுருக்கமாக விடையளிக்க                                                                                 10×1 = 10
(11)புரிந்த – இச்சொல்லிலுள்ள விகுதியை எடுத்தெழுதுக.
(12)கீழ்க்காணும் தொடரிலுள்ள ஒருமை பன்மைப் பிழைகளை நீக்கி எழுதுக.
இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது.
(13)கீழ்க் காணும் தொடரிலுள்ள சந்திப்பிழைகளை நீக்கி எழுதுக.
ஆசிரியர் பெயரை தம் பெயருடன் சேர்த்து பீமாராவ் அம்பேத்கராக மாறினார்.
(14)கீழ்க்காணும் தொடரில் அமைந்துள்ள பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்சொல் எழுதுக.
                  பஜாரில் கூட்டம் ஜாஸ்தி.
(15)கீழ்க்காணும் தொடரிலுள்ள வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக.
                 குமார் காத்துக்காக தாவாரத்தில் படுத்து உறங்கினான்.
(16)கீழ்க்காணும் உரைப்பகுதிக்குப் பொருத்தமான நிறுத்தற்குறியிட்டு எழுதுக.
                வருக வணக்கம் இருவரும் இணைந்து வந்துள்ளீர்கள் என்ன செய்தி
(17)பொய்யா விளக்கு – இலக்கணக் குறிப்பு தருக.
(18)கீழ்க்காணும் மரபுத் தொடர் குறிக்கும் பொருள் யாது?
               இளங்கோவின் குடும்பத்தினர் வாழையடி வாழையாக, வேளாண்மைத் தொழில் செய்து வருகின்றனர்.
(19)நானிலம் – இத்தொகைச் சொல்லை விரித்தெழுதுக.
(20)இளமையில் கல் – இத்தொடரைச் செய்தித் தொடராக்குக.
                                                                  பிரிவு - Ⅱ
                                              (மதிப்பெண்கள் :10)
                              5வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                        5×2=10                                    
(21)அடுக்குத் தொடருக்கும்,இரட்டைக்கிளவிக்கும் உள்ள வேறுபாடு யாது?
(22)வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
(23)சிற்றோடை – பிரித்தெழுதிப் புணர்ச்சிவிதி தருக.
(24)சிறுபொழுதுஎத்தனை வகைப்படும்? அவை யாவை?
(25)ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் யாது?
(26)சொற்பின்வருநிலையணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
(27)செம்மொழி – பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
                                                                 பிரிவு - Ⅲ
                                               (மதிப்பெண்கள் : 50)
                                                                 பகுதி – 1
கீழ்க்காணும் வினாக்களுள் இரண்டனுக்கு விடையளிக்க                                 2×5=10
(28)கீழே உள்ள பாடலில் பயின்றுவரும் பாவகையைக் குறிப்பிட்டு,அதன் இலக்கணம் எழுதுக.
அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
சிறந்தார்க்குச் செவ்வ னுரைப்ப – சிறந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.
(29)வஞ்சப்புகழ்ச்சி அணி அல்லது உவமை அணியைச் சான்று தந்து விளக்குக.
(30)கீழ்க்காணும் குறட்பாவிற்கு அலகிட்டு வாய்பாடு தருக.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படா அதவர்.
                                                                   பகுதி – 2
எவையேனும் இரண்டனுக்கு ஒவ்வொன்றும் அரைப்பக்க அளவில் விடையளிக்க.2×5 =10       
(31)எம்.ஜி. இராமச்சந்திரனின் பிறப்பு மற்றும் நடிப்புத் துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புப் பற்றி எழுதுக.
(32) அண்ணா எழுதிய கடிதத்தில் இடம்பெறும் கருத்துகள் நான்கினை எழுதுக.
(33)புகை – உங்களுக்குப் பகை. பேஷ்! இதை நீயே படிச்சுக் காட்டு.
       கமலநாதன் புன்னகை மறையத் துவங்கியது.
(அ)கமலநாதன் முகத்தில் புன்னகை மறைய கோகிலா கூறியதையும், அதற்கு அவர் கூறிய மறுமொழியும் யாவை?
                                                                      பகுதி – 3
(34) (அ) கீழ்க்காணும் பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம்செய்க.3+2=5
ஆஸ்பத்திரியில் அவுட்பேசண்ட் வார்டில் டாக்டரைப் பார்த்தேன்.டாக்டர் பேசண்டுகளுக்கு மெடிசன் கொடுத்துக் கொண்டிருந்தார்.
(ஆ)கீழுள்ள அரபு எண்களைத் தமிழெண்களாக மாற்றுக.
87, 321, 405, 69.
(35) (அ) கீழ்க்காணும் ஆங்கில உரைப்பத்தியைத் தமிழாக்கம் செய்க.   3+2=5

                         Schools do not stop with teaching the children, the lessons alone do more .It is in the schools.That the boys and girls form some regular habits. They learn to behave in an orderly way. They are corrected whenever they go wrong.
(ஆ)கீழ்க் காணும் ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
1. Birds of the same feather flock together.
2. Prevention is better than cure.
                                                                        பகுதி – 4
கீழ்க்காணும் வினாக்களுள் ஒன்றனுக்கு விடையளிக்க.                                    5               
(36)(அ) கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை நிறைவு செய்து பொருத்தமான தலைப்பை இடுக.
கீழ்வானம் சிவக்கத் தொடங்கியிருந்தது. பறவைகள் ஒலியெழுப்பியவாறே தத்தம் கூடுகளை விட்டுப் பறக்கத்தொடங்கின. அந்த விடியற்காலை நேரத்தில் திடீரென்று வானில் ஓர் ஒளி தோன்றியது.அப்போது_________________________________
                                                              (அல்லது)
கீழ்க் காணும் தலைப்பில்  8 வரிகளில் கவிதை ஒன்று எழுதுக.
பள்ளி அல்லது எழுதுகோல்.
                                                                         பகுதி – 5
(37) கீழ்க்காணும் பாடலின் திரண்ட கருத்தை எழுதி,அப்பாடலில் அமைந்துள்ள ஏதேனும் ஐந்து நயங்களை எடுத்தெழுதுக.                                                       5                                     
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்
மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க்காகத் துயர்படுவான்
தானம் வாங்கக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்.
-       நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
      பகுதி – 6
(38)படிவம் நிரப்புதல்                                                                                                                           5 
                                                                       பகுதி – 7
(39) (அ) கீழ்க்காணும் வாழ்வியல் சூழலைப்படித்து விடையளிக்க            3+2=5                       
எழிலனும் தமிழரசனும் நெருங்கிய நண்பர்கள்.ஆனால் எழிலனுக்கு தமிழரசன் மட்டுமெ நண்பன். தமிழரசனுக்கோ வகுப்பில் மட்டுமின்றி பள்ளியிலும் அனைவரும் நன்பர்களே.பார்க்கும் யாவரிடத்திலும் அன்பாகவும் நட்பாகவும் பழகுவான்.பெரியவர்களிடமும் மரியாதையுடன் நடந்துகொள்வான்.தன்னால் முடிந்த உதவிகளும் செய்வான். எழிலனும் நல்ல மாணவன் தான். ஆனால் தானாகச் சென்று பழகமாட்டான்.வினாவுக்கு மட்டுமே விடை சொல்வான்.தமிழரசனிடம் எல்லோரும் நெருங்கிப் பழகுவது எழிலனுக்கு வேதனையைத் தந்தது.
Ⅰ.இவர்களுள் யாரைப்போல் இருப்பது நல்லது?
Ⅱ.தன்னிடம் அனைவரும் நெருங்கி பழகுவதற்கு எழிலன் என்ன செய்ய வேண்டுமென்று நீ நினைக்கிறாய்?
Ⅲ.உனக்கு நண்பர்கள் உண்டா? எத்தனை பேர்?

(ஆ)கீழ்க்காணும் சூழலைப்படித்து வினாக்களுக்கு நும் கருத்தை எழுதுக.
            விழிமாற்றுத் திறனாளி ஒருவர் சாலையைக் கடப்பதற்காக நெடுநேரமாக்க் காத்துக் கொண்டிருக்கிறார்.அந்த வழியாகப் பலரும் கடந்து செல்கின்றனர். ஆனால் அவருக்கு உதவ ஒருவரும் முன்வரவில்லை.
(ⅰ)இதுபோன்றதொரு சூழலில் நீ எவ்வாறு செயல்படுவாய்?
(ⅱ)பிறருக்கு உதவுவதால் வெளிப்படும் பண்பு யாது?
                                                                   பிரிவு - Ⅳ
                                               (மதிப்பெண்கள் :20)
                                                        பகுதி – 1
கீழ்க்காணும் வினாக்களுள் ஒன்றனுக்கு விடையளிக்க.                                                   10
(40)(அ)நும் ஊரில் குடிநீர் வசதி வேண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு கூட்டு விண்ணப்பம் வரைக.    
(அல்லது)
(ஆ)நும் பள்ளி இலக்கிய மன்ற ஆண்டுவிழாவிற்கு வருகை தரும் புலவர் ஒருவருக்கு வரவேற்பு மடல் வரைக.
                                                                     பகுதி – 2
கீழுள்ள வினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்குக் குறிப்புகளைக் கொண்டு ஒருபக்க அளவில் கட்டுரை எழுதுக.தலைப்பு ஒன்று தருக.                                                                          10
(41)(அ) கணினி – தோற்றம் – வளர்ச்சி –இணையம் –இணையதள வசதி- கணினி வழிக்கல்வி- கணினியின் வியத்தகு சாதனைகள் – பயன்படும் துறைகள் – உலகம் உள்ளங்கையில்.
                                                            (அல்லது)
(ஆ)பாரதியார் – பிறப்பும் இளமையும் – விடுதலை வேட்கை – தேசியக் கவிஞர் – முன்னறி புலவர்-சமுதாயத் தொண்டு- இறப்பு.   

                                                         --------------------------------


                                                           


08/02/2012


1. இந்தியாவுக்கு அளிக்கப்படும் நிதியுதவி தொடர, இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. கடந்த ஒரு வாரமாக நடந்துவரும் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது நஷீத் நேற்று பதவி விலகினார்.
3. சிரியாவில், ஏராளமான மக்கள் ராணுவத்தினரால் கொல்லப்படுவதைக் கண்டித்து, அங்குள்ள தூதரகத்தை அமெரிக்கா மூடிவிட்டது. இங்கிலாந்து, தனது தூதரைத் திரும்பப் பெற்றுள்ளது.
4.ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுங்குளிர் நிலவுகிறது.  பிகானீர்,பிலானி ஆகிய இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.5 டிகிரி செல்சியஸ் பதிவானது.
5. இந்தியா முழுவதும், 50 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், சர்வதேசத் தரத்திலான படிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
6. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய நிதிநிலை அறிக்கையை, மார்ச்16 தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்றும், இரயில்வே பட்ஜெட், 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், மத்திய அரசு அறிவித்துள்ளது.
7. தமிழகத்தில், மின்பற்றாக்குறை அதிகரிப்பால், மாநிலம் முழுவதும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. 
8. செயற்கைக்கோள் உதவியுடன், கட்டடங்களைக் கண்காணித்து, சொத்து வரியைத் துல்லியமாக மதிப்பிடும் புதிய நடைமுறையைக் கொண்டு வர, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது..
9.  2012-2013-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர்  தலைமையில்,தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
10. கடந்த ஆண்டு ஏப்ரலில், உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடிய பின், முத்தரப்பு ஒரு நாள் மட்டைப்பந்துத் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும், பெர்த்தில் இன்று விளையாடுகின்றன.

7 பிப்ரவரி, 2012

07/02/2012


1. ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம், இஸ்ரேலுக்கு இல்லை; வளைகுடா பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்த ராணுவ நடவடிக்கையும், எண்ணெய் விலை உயர்வுக்கு வழி வகுத்து விடும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
2. காஷ்மீருக்காக, இன்னொரு போரை பாகிஸ்தானால் தாங்க முடியாது என்று, காஷ்மீர் ஒற்றுமை தினத்தில், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி கூறினார்.
3. சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் பொதுமக்கள் மீது ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 
4. மத்திய அரசின் வரவுசெலவுத் திட்டத்தில், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ` 2 இலட்சமாக உயர்த்தப்படக்கூடும் என்று தெரிகிறது.
5. பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, அதிக அதிகாரம் கொண்ட தேசிய அளவிலான புதிய அமைப்பு, மார்ச் 1ஆம் தேதி உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
6. பிரதமர் அலுவலகம், "டுவிட்டர்' சமூக வலைதளத்தில் இணைந்ததற்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்துள்ளதை அடுத்து, "பேஸ்புக்'கிலும் இணைவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7.  அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பான, தவறான கொள்கை முடிவுகளை, நீக்கம் செய்வதற்கு, நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
8.  மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள், கிராமங்களில் ஓராண்டு பணியாற்றுவதை, கட்டாயமாக்கும் திட்டம், விவாத அளவிலேயே உள்ளது என்று, இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கூறினார்.
9.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.), முதல் முறையாக கலந்தாய்வு மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10. முத்தரப்புத் தொடரின் அடுத்த ஆட்டத்தில், இர்பான் பதானுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என, இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

6 பிப்ரவரி, 2012

06/02/2012


1.  இலங்கை இனப்பிரச்னைக்கு, வெளிநாடுகள் கூறும் யோசனைகளை ஏற்கமாட்டோம் என்று, அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்தார்.
2.  அமெரிக்கப் பொருளாதாரம், உறுதியாகவும், வேகமாகவும் மீண்டெழுவதாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
3. ஈரான் மீது, அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகள் தாக்குதல் நடத்துவதற்கு, எந்த நாடாவது இடம் கொடுத்தால், அந்நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
4. இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் உட்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
5.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளியோருக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குருசரண் கௌர் வலியுறுத்தினார்.
6. நமது நாட்டில் மகளிரை,துர்கா, காளி, லட்சுமி போன்ற தெய்வங்களுடன் ஒப்பிட்டு கவுரவிக்கிறார்களே தவிர, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பதில்லை என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி, வேதனையுடன் தெரிவித்தார்.
7.  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனியில் இன்று திருக்கல்யாண வைபவமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து, நாளை தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது.
8.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இலவசமாக மனு எழுதுவதன் மூலம், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை அறிந்து கொள்ள,பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளின், நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
9.நம் நாட்டு மக்களுக்கு, அடுத்த 10 ஆண்டுகளில், 50 கோடி வீடுகள் தேவையெ, இந்தியத் தொழிற்சாலை மற்றும் வர்த்தகக் கழக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
10. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 32 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட, முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரின் முதல் ஆட்டத்தில், இந்தியாவை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

3 பிப்ரவரி, 2012

03/02/2012


1. சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதீசுவில், புதிய தூதரை நியமிப்பது என்றும், அதற்கான புதிய தூதரகம் அமைப்பது என்றும் இங்கிலாந்து அறிவித்தது.புதிய தூதரகம் அமைக்கப்படும் வரை, தற்காலிகமாக,கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில், இத்தூதரகம் செயல்படும்.
2.  தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கு பிரதமர் யூசுப் ரசா கிலானி உத்தரவிட்டுள்ளார்.
3. உள்நாட்டுப் போரின் போது நடந்த அத்துமீறல்கள் பற்றிய அறிக்கையை, ஐக்கிய நாடுகள் அவைக்கு அனுப்பப் போவதில்லை என இலங்கை அரசு கூறியுள்ளது.
4. இஸ்ரேலைத் தாக்கும் நோக்கில், 2 இலட்சம் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்பட சுமார் 100 கிலோ எடை கொண்ட, யுரேனியம் செறிவூட்டப்பட்ட 4 அணு குண்டுகளை, ஈரான் தயாரித்துள்ளதாக, இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
5. 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட 122, 2ஜி அலைக்கற்றை உரிமங்களை
உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நீக்கம் செய்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வெளிப்படையாக இருக்கவேண்டும் என்ற, பிரதமரின் அறிவுரை புறக்கணிக்கப் பட்டுள்ளது என்றும், சட்டத்துக்கு முரணான முறையில் அந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கடுமையாகச் சாடியுள்ளது.
6. ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோருக்கு 15 நாள்களுக்குள் சம்பளம் கொடுக்க வேண்டும் என, பிரதமர் கூறியுள்ளார்.
7.  தங்களுக்குச் செலுத்த வேண்டிய பாக்கியை செலுத்தாததால், இந்தியன் ஆயில் உட்பட மூன்று எண்ணெய் நிறுவனங்கள், ஏர் இந்தியாவுக்கு நேற்று எரிபொருள் தருவதை நிறுத்தின.  இந்தப் பிரச்னையால், ஏர் இந்தியா விமானங்கள் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
8.  புவி வெப்பமடைவதைத் தடுக்க வேண்டும் என்பதில் வளர்ச்சியடைந்த நாடுகளிடையே போதிய அக்கறையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
9. பாரதியார் பல்கலைக்கழகத்தில் ` 60 கோடியில் 5 மெகாவாட்  திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
10. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர்கள் கொண்ட, மட்டைப்பந்துப் போட்டி இன்று மெல்போர்னில் நடக்கிறது. தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய அணி, இம்முறை, முதல் வெற்றியைத் தேடி களமிறங்குகிறது.

2 பிப்ரவரி, 2012

02/02/2012


1.  சிரியாவில் நிலவி வரும் அரசியல் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இராணுவத் தீர்வு பலன் தராது என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
2. சவுதி அரேபியாவில், ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்தப் போவதாக, வெளியான தகவல்களை, தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.
3. இதுவரை, தென் சீனக் கடலில், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் தீவிரம் காட்டி வந்த சீனா, தற்போது, கிழக்கு சீனக் கடலிலும், தனது தலையீட்டைத் துவக்கியுள்ளதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
4. தனியார் கூரியர் நிறுவனங்கள் மத்திய அரசுடன் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
5. ஈராஸ் என்ற 34 கிலோ மீட்டர் அகலமான, இரண்டாவது பெரிய விண்கல், செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பூமியைக் கடந்து சென்றது.
6. குஜராத் கலவரம் தொடர்பாக, முதல்வர் மோடிக்கு, அழைப்பாணை அனுப்பி விசாரிக்கும்படி, நானாவதி கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
7. மேற்கு வங்கத்தில், காவல்துறை சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை, அரசு நேற்று நீக்கியது. 
8. கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வீசிய சூறைக்காற்றின் காரணமாக,கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், திருவள்ளுவர் சிலைக்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
9. கோவை மாநகராட்சியில் புதிதாக 3,443 பணியிடங்களைத் தோற்றுவிக்க, ஒப்புதல் அளிக்கக் கோரி,தமிழக அரசுக்கு மாநகராட்சி மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
10. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இருபது ஓவர் மட்டைப்பந்து ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா.

பிரபலமான இடுகைகள்