8 டிசம்பர், 2021

SAARC அமைப்பு தினம்

 

        தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் என்றழைக்கப்படும் அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் இன்று. 

     SAARC (South Asian Association for Regional Cooperation)  இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூட்டான் ஆகிய, ஏழு நாடுகள் இணைந்து, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்ற, 'சார்க்' அமைப்பை,  1985 டிசம்பர் 8இல் துவக்கின.1983 இல் டெல்லியில் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த இறுதிமுடிவு எடுக்கப்பட்டது. 

       சார்க் அமைப்பானது தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , ஒத்துழைப்பு , வர்த்தகம் , முதலீடுகள், சமூக வளர்ச்சி , நட்புறவுடன் கூடிய தலையீட்டின் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு என்பனவற்றினைக் குறிக்கோளாகக் கொண்டு, கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும்.

       தெற்காசிய நாடுகளிடையேயான ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் 1940-களிலேயே தொடங்கிவிட்டது. ஏப்ரல் 1947-ல், டெல்லியில் நடந்த ஆசிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்பான மாநாடு, 1950 இல் பிலிப்பைன்ஸில் நடந்த பாகியோ மாநாடு, 1954 இல் இலங்கையில் நடந்த கொழும்பு அதிகாரங்கள் மாநாடு ஆகிய மாநாடுகளில் இதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன.

      1970 களின் இறுதியில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தின. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூட்டாகச் செயல்படுவது உள்ளிட்ட யோசனைகளை, அந்த நாடுகள் முன்வைத்தன. 1981 இல் இலங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட 6 நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இதுபற்றி விவாதித்தார்கள்.

      தொடக்கத்தில் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற இந்தியாவும் பாகிஸ்தானும் தயக்கம் காட்டின. தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து தனக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்று இந்தியாவுக்குச் சந்தேகம் இருந்தது.

      அதேபோல், இந்த நாடுகளில் இந்தியத் தயாரிப்புகளின் வர்த்தகம் பரவுவதன் மூலம், தனக்கு பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் பாகிஸ்தானிடம் இருந்தது. எனினும், தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

      சீனா, ஈரான் நாடுகள், இந்த அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட, ஒன்பது நாடுகள், 'சார்க்' அமைப்பின் பார்வையாளர்களாக உள்ளன.  

     துவக்கத்தில், ஆண்டுதோறும் நடந்த, 'சார்க்' கூட்டம்,  அதன் பின், இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. 

7 டிசம்பர், 2021

சோ - நினைவுநாள்

 

      நாடகாசிரியர், நடிகர், துக்ளக் பத்திரிகை ஆசிரியர், வழக்குரைஞர், அரசியல் ஆலோசகர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி.

    சத்திய கங்கை ஆசிரியர் பகீரதன் எழுதிய "தேன்மொழியாள்' என்ற நாடகத்தில் "சோ' என்ற கதாபாத்திரத்தில் ராமசாமி நடித்தார். அப்போது முதல் அவர் பெயர் "சோ'வாக மாறியது. 

      சோ, கதை-வசனம் எழுதி இயக்கிய முதல் படம் "முகமது பின் துக்ளக்'. இப்படத்தின் டைட்டிலில் "கதை-வசனம் சோ' என்று தனியாக ஒரு கார்டு வரும். இறுதி கார்டில் டைரக்ஷன் "கற்றுக் கொள்ள முயற்சி'' சோ என்று தன்னடக்கத்தோடு வித்தியாசமாக கார்டு போட்டிருக்கிறார்.

இன்றைய அரசியல் பற்றி சோ பேசுவார்!

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் தினத்துக்குச் சில நாள்களுக்கு முன்பு இப்படியொரு அறிவிப்பு வெளியாகும். ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் காட்சியளிக்கும். அவ்வளவுதான். அதற்குமேல் வேறெந்த விளம்பரமும் இருக்காது. ஆனால், அவர் பேசவிருக்கும் மியூசிக் அகாடமி (பெரும்பாலும்) மதியம் முதலே ஜனத் திரளால் மூச்சுத் திணற ஆரம்பித்து விடும். ஆறு மணிக்குப் பேசப்போகிறார் என்றாலும், நான்கு மணிக்கெல்லாம் கட்சி வித்தியாசங்களை எல்லாம் தகர்த்து எறிந்து விட்டு, அரங்கில் குழுமி விடுவார்கள். 

    தொண்டையைச் செருமியபடி, அவர் பேசத் தொடங்கினால், வந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் அதிரடிதான். எள்ளல், பகடி, ஏகடியம், நக்கல், நையாண்டி ஆகியவற்றைக் கலந்து அவர் வெளிப்படுத்தும் கூர்மையான, வெளிப்படையான விமர்சனங்களுக்கு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் அதிகம். அவர் என்ன சொல்கிறார் என்பதை மாநிலத் தலைவர்கள் தொடங்கி இந்தியத் தலைவர்கள் வரை பலரும் உன்னிப்பாகக் கவனித்து, உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பது வழக்கம்.

     மேடையில் மட்டுமல்ல, தன்னுடைய துக்ளக் பத்திரிகையின் வழியாக நடப்பு அரசியலை நறுக்கென்று விமர்சிப்பது சோவின் பாணி. ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சோவுக்கு மேடை நாடகத்தில்தான் நாட்டம் அதிகம். அங்கும் அரசியல்தான். நறுக் சுறுக் வசனங்களால் நிரம்பிய அந்த நாடகங்கள், அரசியல் அரங்கில் பலத்த வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, சம்பவாமி யுகே யுகே நாடகத்தைச் சொல்லவேண்டும்.

      சோவின் 'ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு', 'முகமது பின் துக்ளக்', 'சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. 'விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்' என்ற நாடக நிறுவனத்தை 1954இல் தொடங்கினார்.'நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது' என்று பெருமையுடன் கூறுவார்.

      எங்கு பார்த்தாலும் ஊழல். ஊழலை ஒழிக்க இறைவனே அவதாரம் எடுத்து வந்தாலும்கூட, அவன் திரும்பிப் போக வேண்டியதுதான் என்பதுதான் அந்த நாடகத்தின் உள்ளடக்கம். அப்போது ஆட்சியில் இருந்தவர் முதலமைச்சர் பக்தவத்சலம். அவர் நாடகத்துக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். விஷயம் வெளியே கசிந்தது. வழக்கு தொடுத்தார் சோ. பின்னர் நீதிமன்ற அனுமதியோடு வெளியான அந்த நாடகம் சோவைப் பிரபலமாக்கியது. 

     தனது சொந்த உழைப்பில் 'துக்ளக்' என்ற வார இதழை 1970ஆம் ஆண்டும், 'பிக்விக்' என்ற ஆங்கில இதழை 1976ஆம் ஆண்டும் ஆரம்பித்துப் பத்திரிகையாளராகவும் முத்திரை பதித்தார்.

       அப்போதைய மத்திய அரசு, நெருக்கடி நிலையை அமல்படுத்தியபோது, தமிழகத்தில் அதிகம் நெருக்கடிகளை எதிர்கொண்டவர் சோ. முக்கியமாக, அவருடைய பத்திரிகையான துக்ளக், அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை எடுத்தார் சோ. பத்திரிகையை கறுப்பு அட்டையுடன் வெளியிட்டார்.

     அப்போதைய பிரதமரின் நடவடிக்கையை விமர்சித்து கேலிச் சித்திரங்களையும் கருத்துப் படங்களையும் வெளியிட்டார் சோ. அதன் காரணமாக கடுமையான தணிக்கைக்கு உள்ளானது துக்ளக். ஒருகட்டத்தில் துக்ளக் பத்திரிகையையே நிறுத்தி விட்டார். ஆனாலும் தலைமறைவுப் பத்திரிகைகள் பலவற்றில் தன்னுடைய விமர்சனங்களைத் தொடர்ச்சியாக எழுதினார். பிறகு பலருடைய வற்புறுத்தலால் மீண்டும் துக்ளக்கைத் தொடங்கினார். 


     சோ கதை வசனம் எழுதிய படங்கள்: நீலகிரி எக்ஸ்பிரஸ், ஆயிரம் பொய், பொம்மலாட்டம், நினைவில் நின்றவள், தேன்மழை, நிறைகுடம்! 


    சோ முதன்முதலாக நடித்த திரைப்படம் சிவாஜி நடிப்பில், ஏ.பீம்சிங் இயக்கிய "பார் மகளே பார்' (1963). இப்படத்தில் சோ ராமசாமியின் கதாபாத்திரத்தின் பெயர் மாடசாமி. 

 
    சோ இயக்கிய படங்கள் 4. அவை: முகமது பின் துக்ளக் (1971), மிஸ்டர் சம்பத் (1972), யாருக்கும் வெட்கமில்லை (1975), உண்மையே உன் விலை என்ன? (1976) 

   

கடந்த அரை நூற்றாண்டு அரசியலில் சோவின் மேடை, பத்திரிகை, அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் கவனத்துக்கும் ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் உரியவை என்பதில் சந்தேகமில்லை! 


கொடிநாள்

 


     கொடி நாள் என்பது, இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும்.

    ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக, இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல், இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

      கடுங்குளிர், உறைபனி, பேய்மழை, வெள்ளம், போன்ற இயற்கை இடர்ப்பாடுகள், உணவு, குடிநீர், தங்குமிடம் போன்ற வசதிகள் இல்லாத இடங்கள், குடும்பம், உறவுகளை விட்டுத் தனித்திருத்தல் - இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, நாட்டுப் பாதுகாப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் நம் படைவீரர்கள்.

 “தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக முப்படை வீரர்கள் திகழ்கிறார்கள்".
      முப்படை வீரர்களுடைய குன்றாத விசுவாசமும் கடமையில் காட்டும் உண்மையான அர்ப்பணிப்பும் இந்தியாவை வலிமையுள்ள தேசமாக மாற்றியுள்ளது.

     வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புகள், உள்நாட்டுக் கலவரங்கள், இயற்கைச் சீற்றம் போன்றவற்றினைத் தீரமுடன் எதிர்கொண்டு, தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் வீரர்கள் ஆற்றிய தியாகம் அளவிடற்கரியது. 

       அவர்களுடைய வாழ்நாளின் சிறந்த தருணங்களை, நாட்டிற்காகவே அர்ப்பணித்துச் சேவையாற்றி, இராணுவத்திலிருந்து விடைபெறும் போது, நம்முடைய நன்றியை அவர்களுக்குக் காணிக்கையாக்க வேண்டியது அவசியமாகும்.

    தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும்,ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதி, படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 

   பெற்ற சுதந்திரத்தைப் பேணி, நாட்டின் எல்லைகளைக் காவல்தெய்வங்களாகக் காத்தும், இயற்கைப் பேரிடர்களின்போது, உற்ற துணைவர்களாக நின்றும், நம்மைப்பாதுகாக்கும் படைவீரர்களுக்கு, நன்கொடைகளை கொடிநாள் நிதியாக, மனமுவந்து அளிப்போம்

6 டிசம்பர், 2021

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

 

          

          1891 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மாஹூ என்ற பகுதியில் பீமாராவ் அம்பேத்கர் பிறந்தார். சிறுவயதில் கனவுகளுடன் கல்வி கற்கச் சென்ற அம்பேத்கரை,‌‌ தீயாய்த் தீண்டியது தீண்டாமை. 

         புத்தகப் பையுடன், சாக்குப் பையையும் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்‌களின் கனவுகளையும் சுமந்து சென்றார் அம்பேத்கர். ‌தாழ்த்தப்‌பட்ட மக்களின் முன்னேற்றத்தை மூச்சாகக் கொண்டு கல்வி கற்ற அம்பேத்கர், வெளிநாட்டில் சட்டம், மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்‌டம் பெற்றார்.

         அம்பேத்கர்,

“கல்வி என்பது புலிப் பாலைப் போன்றது. அதைக் குடித்த எவராலும் புலியைப் போல உறுமுவதைத் தவிர, அடங்கி நடந்துவிட முடியாது”   என்பார்.

          ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாய், குரலற்ற மக்களின் நாயகனாக விளங்கிய அம்பேத்கர் வெறுமனே அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு பொருளாதார நிபுணர், சட்ட வல்லுநர், தத்துவங்களின் ஆழத்தில் திளைத்தவர், சமயங்களைப் படித்தவர், இசையின் நுட்பம் தெரிந்தவர். 

          புனே ஒப்பந்தத்திற்குப் பிறகு 'இந்திய ராணுவம்' குறித்து நூல் எழுதத் தொடங்கியவர். நீர்ப்பாசனம், மின்னாற்றல் குறித்து கட்டுரைகள் எழுதியவர். மாநிலங்களின் உரிமைகள், மொழி, இனக்குழுக்கள், மக்கள்நலத்திட்டங்கள், அரசின் தன்மை, போராட்டங்களின் வழிமுறை என பலதளங்களில் சிந்தித்து உரையாடல் நிகழ்த்தியவர்.

         படித்து முடித்து இந்தியா திரும்பிய அம்பேத்கர், தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்காக "பகிஷ்கரித் ஹித்தஹாரிணி" என்ற இயக்கத்தை தொடங்கினார். பின்பு சாதி வெறியால் சகித்து வாழும் மக்களுக்கு, தலைவனாக ஓய்வின்றி உழைத்தார். 

       நசுக்கப்பட்டவர்களின் நாயகனாக இருந்த அம்பேத்கர், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் உலகமே வியக்கும் வகையில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக உரையாற்றினார்.‌‌ 

       த‌னது தன்னி‌கரற்ற உழைப்பால், தாழ்த்தப்பட்டோருக்காக 1946 ஆம் ஆண்டு சித்தார்த்தா சட்டக் கல்லூரியை தொடங்கினார். அபரிமிதமான அறிவாற்றல் கொண்டவராக இ‌ருந்தார்.‌ அல்லும் பகலும் உழைத்து நாடே போற்றும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். 

         அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார். 

       ‘ஜனநாயகம்’ என்ற அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். 

       சுருக்கமாகச் சொன்னால் அம்பேத்கர் நமக்குச் சொன்ன செய்தி, ஒன்றே ஒன்றுதான். 

“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்" 

    என்பதுதான் அது.

         இன்றைக்கு மாநில குரூப்1, குரூப்2 என்று அதிகாரிகள் தேர்வாவதற்கு அவரே அடிப்படை. தொழிலாளர் துறை அமைச்சர் என்கிற முறையில் 1942 நவம்பர் 27 ஆம் நாள் அவர் கூட்டிய ஏழாவது இந்திய தொழிலாளர் மாநாட்டில்தான் வேலைநாள் என்பது எட்டுமணி நேரம் என்கிற மகத்தான முடிவினை அறிவித்தார் அம்பேத்கர்.

       தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், அகவிலைப்படி அறிமுகம், ஆழ்துளைச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்களை பணி செய்ய வைப்பதற்கு தடை, மகப்பேறு விடுப்பு என தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல்வேறு உரிமைகள் அவர் வழியாக வந்தவையே.

       பொதுநிதி, வங்கித்துறை சீர்திருத்தங்கள் பற்றிய சமீபத்திய விவாதங்களில் அம்பேத்கரின் வழிகாட்டுதல் போற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கி உருவாக்கம் அவரது சிந்தனைக்குழந்தை தான் எனப்படுகிறது. இன்சூரன்ஸ் அரசுடைமையாக்கம், மத்திய மின்தொகுப்பு, சுரங்கங்கள் மீதான அரசுரிமை, தொழில் மயமாக்கம் என்று தேசிய கட்டுமானத்தில் அவரது பங்களிப்பு எல்லையற்று விரிகிறது.

         இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியராகவும் இருந்தார்..

       “எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்” 

        என்ற டாக்டர் அம்பேத்கர், 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் தனது வாழ்க்‌கைப் பயணத்தின் கடைசிப் பக்கத்தை எழுதி முடித்தார். 

5 டிசம்பர், 2021

வால்ட் டிஸ்னி பிறந்தநாள்

 

     குழந்தைகளைக் களிப்பூட்டும் கதாபாத்திரங்களைப்படைத்த வால்ட் டிஸ்னி என்னும் உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிறந்த நாள் இன்று. 

  இவர்,ஒரு மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவனத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் இணைந்த உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

    இருபதாம் நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கத்திற்காகப் பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைவுப்படம் அமைப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மவுஸ் போன்ற கற்பனைக் கதாப்பாத்திரங்கள். 

   இவர் ஐம்பத்து ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் விருதுகளும் வென்றுள்ளார். இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகச்சாதனை . இதனால், இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றவர்.

    ஏழு எம்மி விருதுகள் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து பூங்கா(அனஹெயிம்) 

 மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள், டோக்கியோ டிஸ்னி (ஜப்பான்) மற்றும் டிஸ்னிலாந்து ,சீனா (ஹாங்காங்) போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.

    வால்ட் டிஸ்னி தினமும் 4.30 மணிக்கு எழுந்து தினசரி பத்திரிக்கைகளை விற்பனை செய்து வந்தார். அதனால் பள்ளிகளில் போதிய நேரம் செலவிட இயலாத காரணத்தினால் மோசமான தரங்களையே (grades) பெற்றார். ஆனாலும் தன்னுடைய தினசரி பத்திரிக்கைகளை விற்பனை செய்வதனை ஆறு வருடங்கள் தொடர்ந்து செய்தார். மேலும் சனிக்கிழமை தோறும் கேலிச்சித்திரம் வரைவதற்காக சிறப்பு வகுப்புகளுக்கும் சென்றார். 

    1917 ஆம் ஆண்டில் எலியாஸ் ஓ ஷெல் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். எனவே அவர்கள் மறுபடியும் தங்களுடைய இடங்களுக்கு சென்றனர். வால்ட் டிஸ்னி மெக்கின்லே உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் பள்ளி அளவில் செயல்படும் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். அதில் இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமான கேலிச்சித்திரங்களை வரைந்தார். மேலும் சிகாகோ அகாதமியில் இரவு படிப்பினை மேற்கொண்டார்.

      1920 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி , ஐவெர்க்ஸ் ஆகியோர் இணைந்து தொழில் துவங்கினர். ஆனால் அவர்கள் தொடங்கிய தொழிலில் வாடிக்கையாளர்களைக் கவர இயலவில்லை. எனவே அதனை தற்காலிகமாக விட்டுவிடலாம் என முடிவு செய்து விளம்பர நிறுவனம் ஒன்றினை தொடங்கினர். அதனை ஏ.வி.குகர் எனவரின் தலைமையில் மேற்கொண்டனர். பின் அவர்களுடன் ஐவெர்கஸ் இணைந்தார். அதனை அவர்கள் பிரிவகம் அசைவுப்படம் மூலம் செயல்படுத்தினர். அப்பொழுதுதான் டிஸ்னிக்கு அசைவுப்படத்தின் மீது ஆர்வம் வந்தது. மேலும் அவர் மட் அண்ட் ஜெஃப் (Mutt and Jeff) மற்றும் கோகோ தெ க்ளொவ்ன் (Koko the Clown.) போன்ற அசைவுப்படங்களை வரையத் தொடங்கினார்.

       1923 ல் டிஸ்னி ஹாலிவுட் பக்கம் சென்றார். மேலும் அப்பொழுது அமெரிக்காவில் கேலிச்சித்திரத்திற்கான நிறுவனங்கள் அங்கு அதிகமாக இருந்தன. அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தினை தேர்வு செய்தார். ஏனெனில் அவருடைய தம்பிக்கு காசநோய்க்கான சிகிச்சையினை அங்குதான் எடுத்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அவரும் அவருடைய தம்பியும் இணைந்து “தி வால்ட் டிஸ்னி” என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தின் பெயரிலேயே அவர்கள் படங்களைத் தயாரித்தனர்.

    ஓஸ்வல்ட் என்பதற்கு பதிலாக டிஸ்னி மற்றும் ஐவெர்க்ஸ் இணைந்து மிக்கி மவுஸ் என்பதனை உருவாக்கினர். ஆனால் அது எவ்வாறு உருவானது என்பது பற்றிய தெளிவான வரலாறு தெரியவில்லை. அதற்கு முதலில் மோர்ட்டிமர் எலி (Mortimer Mouse) அல்லது மிக்கி மவுஸ் என்றும் பெயர் வைக்க நினைத்தனர். ஐவெர்க்ஸ் இதற்கான உருவத்தினை சற்று மேம்படுத்தினார். 1947 ம் ஆண்டு வரையில் மிக்கி மவுஸிற்கு ஒலிவடிவம் கொடுத்து வந்தனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் பின்வருமாறு கூறினார், யுபி (Ub) மிக்கிகு உருவம் கொடுத்தார் ஆனால் டிஸ்னி இதற்கு உயிர் கொடுத்தார்.

   மிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்கான நியமனம் மற்றும் ஆஸ்கார் விருது வாங்கிய முறைக்காக வால்ட் டிஸ்னி செய்த சாதனை. இவர் வாங்கிய நான்கு ஆஸ்கார்கள், சிறப்பு விருதுகள் மற்றும் ஒன்று அவர் மறைவுக்கு பின் வழங்கப்பட்டது.


உலகத் தன்னார்வலர் தினம் (International Volunteer Day)

  


    பன்னாட்டுத் தன்னார்வலர் நாள் (International Volunteer Day) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் நாள் உலகெங்கும் நினைவு கூரப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1985 ஆம் ஆண்டில் இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. 

    இந்நாள் உள்ளூரிலும், சர்வதேச அளவிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, தன்னார்வ முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கங்கள் ஊக்குவிப்பதோடு, நிலையான, முன்னேற்ற இலக்குகளை அடைவதற்குத் தன்னார்வர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் வழி வகுக்கிறது. 

 தன்னார்வலர் என்போர் யார்? 

     தன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார். பல தன்னார்வலர்கள் அரசு சார்பற்ற அமைப்புக்கள் மூலம் சேவை செய்கின்றனர். இவர்கள் சில வேளைகளில் முறைசார்ந்த தன்னார்வலர்கள் எனப்படுகின்றனர். 

   பல தன்னார்வலர்கள் இவ்வாறன்றித் தனிப்பட்ட முறையிலோ அல்லது சிறு,சிறு குழுக்களாகவோ சேவை செய்கின்றனர். வரைவிலக்கணப்படி, தன்னார்வலர்கள் தம் சொந்தப் பணத்தில் செலவு செய்ததைத் திரும்பப் பெறுவதன்றி, தாம் செய்யும் வேலைகளுக்காக எவ்வித கொடுப்பனவுகளையும் பெறமாட்டார்கள். 

      தன்னார்வலர் மேலாண்மை 

      மருத்துவ நிலையங்கள் போன்ற பல அமைப்புகளுக்குத் தொடர்ச்சியாகத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். பெரிய அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள்,இயற்கைப்பேரிடர்,போர் பாதிப்பு போன்றவற்றுக்கு நூற்றுக்கணக்கில் அல்லது சில வேளை ஆயிரக் கணக்கில் கூடத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர்.

    திருவிழாக்கள் போன்று மக்கள் அதிகளவு கூடும் வேளைகளில் காவல்துறைக்கு உறுதுணை புரியத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இத் தேவை தொடர்ச்சியானதாக அன்றி, ஒரு தடவையோ, ஆண்டுக்கு ஒருமுறையோ சில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ மட்டுமே வேண்டியிருக்கும்.

    இத்தகைய நிகழ்வுகளின் வெற்றி உள்ளூர்ப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தன்னார்வலர் தொடர்பான பொருளியல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. 

   இந்தியாவில் தன்னார்வலர்களின் போக்கில் மாற்றம் உள்ளதால் பல தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 

        ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் உலக நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும். இது உலகளாவிய தன்னார்வலர்களை, ஐக்கிய நாடுகளின் பங்காளர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர் திட்டமானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் நிர்வாகிக்கப் படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது பான், ஜெர்மனியில் அமைந்துள்ளதுடன் ஏனைய நாடுகளில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்த் திட்ட நாட்டு அலுவலகத்திற்கூடாக (country offices) செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. 

       ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1970 இல் உருவாக்கப்பட்டதாகும். தன்னார்வலர்களை, வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து சேர்த்துக்கொள்கின்றார்களெனினும் தற்போது 70% பேர் வளர்ச்சியடைந்த நாடுகளையே சேர்ந்தவர்கள். 

       ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டு, நேர்காணப்பட்டு, ஐக்கிய நாடுகளுடன் கூட்டியங்கும் ஒரு அமைப்பால் திட்டங்கள் பற்றி விளக்கப்படுகிறது. 

      1971 இல் இருந்து 30, 000க்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் 140 நாடுகளில் பல்வேறுபட்ட திட்டங்களில் பயனபடுத்தப்பட்டனர்.

உலக மண் நாள்

 


       # ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5ஆம் நாள் உலக மண் நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஐந்து நிமிடமும்,கால்பந்து மைதான அளவு  மண்,மண்ணரிப்பின் மூலம் சேதமடைகிறது.

      # ஆரோக்கியமான மண் வளத்தை மேம்படுத்துவது, நன்மை பயக்கும் வகையில் மேலாண்மை செய்வது ஆகியவற்றுக்காக இந்தநாளை ஐ.நா அர்ப்பணித்துள்ளது. 

      # மண் அறிவியலுக்கான சர்வதேச சங்கம் இப்படிஒரு நாள் கடைபிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை 2002இல் ஐநாவுக்கு வலியுறுத்தியது. ஐ.நாவின் துணை அமைப்பான, உணவு மற்றும் விவசாய நிறுவனமும் (FAO)உலக மண் நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தது.

      # உலகமண் நாள் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்த முக்கியமானவர்களில் ஒருவரும், உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவருமான, தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜின் பிறந்த நாள் டிசம்பர் 5. அவரைக் கெளரவிக்கும் விதமாக இந்த நாள் உலக மண் நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    # உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். 

     # ஒரு தேக்கரண்டி நல்ல மண்ணில், உலகத்தில் உள்ள மக்கள் தொகையை விட கூடுதல் எண்ணிக்கையில் நுண்ணுயிரிகள் உள்ளன (சுமார் 5 இலட்சம் கோடி நுண்ணுயிர்கள் உள்ளன).

அத்தனை கழிவுகளையும் மட்கவைக்கும் சக்தி மண்ணுக்கு உண்டு. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களே அப்பணியைச் செய்கின்றன.இவ்வுலகில் இறந்துபோன தாவர, விலங்குகளையும், கழிவுகளையும் மட்கச் செய்து உரமாக்குவதில், நுண்ணியிர்களின் பங்கு மகத்தானது.

      # நீரின் அசுத்தத்தை வடித்துச் சுத்தமாக்கித் தரும் மகத்துவம் மண்ணிற்கு உண்டு. உறிஞ்சும் பஞ்சு போல, தண்ணீரை தன்னுள்ளே உறிஞ்சி வைத்து, பூமியில் வெள்ளம் வராமல் பாதுகாக்கிறது. ஒரு ஹெக்டேர் நிலம் 3,750 டன் தண்ணீரைத் தேக்கி வைத்துப் பாதுகாக்கும் திறன் பெற்றது. 

  # கருவிலிருந்து மனிதன் உருவாகப் பத்து மாதங்கள் போதும். ஆனால் ஒரு சென்டி மீட்டர் மண் உருவாக, 500 ஆண்டுகள் ஆகும்.

    # மண்ணைக் கடவுளாய் மதித்துத் திருநீறு போல நெற்றியில் இட்ட நாம், அறிந்தும், அறியாமலும் இயற்கையைச் சிதைக்கத் துவங்கி விட்டோம். இரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகளால் மண் மாசுபட்டு மனிதஇனம் நோய்வாய்ப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பஞ்ச பூதங்களில் முதன்மையானது நிலம். நிலமான மண்ணில் மாசுபட்டால் நீர், காற்றுடன் அனைத்தையும் பாதிக்கும்.

     # 1960 க்கு முன்பு, இந்தியாவில் பல பஞ்சங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக கோடைகாலத்தில் வெறும் 2-3 மாதங்களில் முப்பது லட்சம் மக்களின் உயிரைப் பறித்தது. ஆறுகள் வறண்டு, மண் குறைந்துவிட்டால் நாம் மீண்டும் அந்த மாதிரியான நிலைக்குச் செல்வோம். நாம் இப்போது சரியான காரியங்களைச் செய்யாவிட்டால், இந்த நிலம் எதிர்காலத்தில் மக்களைத் தக்கவைக்காது.

     # உண்மையில், நாம் செயல்பட வேண்டிய நேரம் இதுதான். இன்னும் பத்து முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு நிலையான முயற்சி எடுத்தால், முழுச் சூழ்நிலையையும் நாம் மிக எளிதாக மாற்ற முடியும்.

   * நீடித்த நிலையான வேளாண்மைக்கு மண்வள பாதுகாப்பினை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், தனிமனித ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதை நாம் உணர்ந்து, வருங்கால தலைமுறைக்கு, மண்ணை மலடாக்காமல் வளமாக்கிச் செல்வோம் எனச் சூளுரை ஏற்போம்.

4 டிசம்பர், 2021

புதுக்கவிதைப் பிதாமகன் ந. பிச்சமூர்த்தி நினைவுநாள்


ந.பிச்சமூர்த்திக்கு அவரின் பெற்றோர் அவர் பிறந்தவுடன் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். ஆனால் இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்ததால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரைப் “பிச்சை” என்று அழைத்தனர். அதன்பிறகு பிச்சை என்ற பிச்சமூர்த்தி ஆனார்.

    தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். 

   “இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன. 

  யாப்புச் சிறையில் சிக்கித் தவிக்காமல் தங்கு தடையின்றி நெஞ்சில் நேரே ஊடுருவுவது புதுக்கவிதை.

   புதுக்கவிதையில் வடிவத்தை விட கருத்துக்கே முக்கியத்துவம் தரப்படுகின்றது. ஏனெனில் கருத்தற்ற வெற்றுச் சொல் கவிதை ஆகாது என்பதே இதன் அடிநாதம். பாரதிக்குப்பின் தமிழ்க் கவிதை உலகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. பல்வேறு கவியாளுமைகளும் தமிழ்க்கவிதையுலகை அணி செய்தனர். அவர்களில் முக்கியமானவர் ந. பிச்சமூர்த்தி. 

   பாரதியின் வசன கவிதையையும் வால்ட் விட்மனின் கவிதைகளையும் தன் முன்னோடியாகக் கொண்டு புதுக்கவிதை என்னும் புதிய வகைமையைத் தொடங்கி வைத்தார்.19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய ”புல்லின் இதழ்கள்” எனும் கவிதைத் தொகுப்பே புதுக்கவிதை இலக்கிய வகையின் முதல் முயற்சியாகும். 

     நா.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியன், கு.பா.ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், சி.மணி, நகுலன், ஞானக்கூத்தன், சிற்பி, மு.மேத்தா, கவிக்கோ அப்துல் ரகுமான், மீரா, ஈரோடு தமிழன்பன், நா.காமராசு போன்றோர். இவர்கள் ஆரம்பக் காலகட்டத்தில் புதுக்கவிதை எழுதி தமிழ்ப்புதுக்கவிதை வளர்ச்சிக்குத் துணை நின்றனர். 

    வாழ்க்கை சார்ந்த இயல்பான பார்வையே பிச்சமூர்த்தியின் கவிதைகள். இயற்கையை, அதன் அழகை, அதன் ஒழுங்கைப் பாடிவந்தாலும், சமகால வாழ்க்கையையும் அவர் பாடத் தவறவில்லை. 

     இவரின், கிளிக்கூண்டு, காட்டுவாத்து, வழித்துணை, பெட்டிக்கடை நாராயணன் ஆகிய கவிதைகள் மிகவும் புகழ்பெற்றவை. 

   இவருடைய முதல் கவிதை – நடுத்தெரு நாராயணன் இவருடைய முதல் சிறுகதை – சயின்சுக்குப் பலி இவருடைய முதல் வசனகவிதை – காதல் (1934) 1933 – “முள்ளும் ரோசாவும்” என்ற சிறுகதை, கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. 

    வாழ்க்கை மீதான விமர்சனங்கள், புலம்பல்கள் ஏதுமின்றி அவற்றை நம்பிக்கையோடும் அதே நேரம் எதார்த்தத்தோடும் அணுகியவர் பிச்சமூர்த்தி. அதற்கு ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளே சாட்சி. கலை, கலைக்காகவே என்று சொல்லும் ந. பி யின் இலக்கியக் கொள்கை என்றபோதும், அவர் படைப்புகளின் அடிநாதமாக விளங்குவது மானுடம் சார்ந்த மகத்தான நம்பிக்கை.

    அவர் படைப்புகளைப் படிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு மிகவும் அற்புதமானது. இன்றைய இளம் தலைமுறையினரிடமும் அவர் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.அப்போதுதான் தமிழ் இலக்கியப்படைப்புகளின் நீட்சி, பரப்பு,ஆழம் ஆகியவற்றை அவர்களும் கண்டு வியக்கமுடியும். 

    வானத்திலும் தெரியும் மண்ணின் ஒளிவெள்ளத்தையும், மனிதனின் மனநிழல்களையும் சொற்களில் ஒருசேரப் பிடிக்கத் துடித்தவர். பல்லாயிரமாண்டுக் கூட்டுச் சமூக நனவிலியின் நங்கூரத் தொன்மம் ந.பிச்சமூர்த்தி.

3 டிசம்பர், 2021

டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்த நாள்

 


      * இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாகக் கருதப்பட்ட மற்றும் நாட்டின் முதல் குடிமகன் என கௌரவமாகப் போற்றப்பட்ட ‘குடியரசு தலைவர்’ பதவியை ஏற்ற சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர், ‘டாக்டர் ராஜேந்திர பிரசாத்’ ஆவார். 

   * இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில், அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசுத் தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

    * ராஜேந்திர பிரசாத் -  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். எந்த அளவுக்கு என்றால் ஓர்ஆசிரியர் ,"இந்த விடைத்தாளை எழுதியவன் என்னை விடத் திறமைசாலி !"எனத் தேர்வுத்தாளில் குறிக்கிற அளவுக்கு. சட்டக்கல்லூரியில் தங்க பதக்கம் பெற்றார் ராஜேந்திர பிரசாத்.

     * காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நல்ல வருமானம் தந்த தன் வக்கீல் தொழிலைத் துறந்தார். தரையைத் துடைப்பது ,கழிவறையைக் கழுவுவது,பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட கிளம்பினார் ஆங்கிலேய கவர்னர் திரட்டியது மாதிரி மூன்று மடங்கு அதிகமாக, முப்பத்தி எட்டு லட்சம் ரூபாய் திரட்டினார்.

    * மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1942 ல் “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்” கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனையும் பெற்றார்.

    * அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார். எந்த பணியிலும் ஈடுபடக் கூடாது என அரசு விதித்த தடையை மீறி, சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். காந்தியின் அழைப்புக்கு இணங்கி ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு தன் மகனை வெளியேற்றினார். காங்கிரசின் தலைவராகப் போஸிற்குப் பின் ,கிருபாளினிக்குப் பின் பதவியேற்றார்.

    * சட்ட வரைவுக்குழுவின் தலைவர் ஆக இருந்தார். இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பன்னிரெண்டு ஆண்டுகள் அவர் பதவி வகித்தது இன்றுவரை சாதனை. 

    ஜனவரி இருபத்தைந்து அவரின் உடன் பிறந்த சகோதரி இறந்து போனார் ,ஆனாலும் அடுத்த நாள் குடியரசு தினத்தன்று முறைப்படி கொடியேற்றி விட்டு அதற்கு அடுத்தத் தினமே போய் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அது தான் தேச ரத்னா ராஜேந்திர பிரசாத். 

    * இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதை மே 13, 1962 ஆம் ஆண்டில்  வழங்கிக் கெளரவித்தது.


பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

       உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை, உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3 ஐ அனுசரிக்கின்றது.

      1981 ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

      மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசாங்கமும், சேவை வழங்கும் நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

    இளமையில் கண்பார்வை இழந்த, கவிஞர் ஜான்மில்டன்  “இழந்த சொர்க்கம்” (https://www.britannica.com/topic/Paradise-Lost-epic-poem-by-Milton)  “மீண்ட சொர்க்கம்” எனும் புகழ் பெற்ற படைப்புகளை இயற்றினார். 

   கற்கும் திறனற்றவர் என்று பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனை (https://en.wikipedia.org/wiki/Thomas_Edison) ஊக்கப்படுத்தி அவருக்குக் கல்வியைக் கற்றுத்தந்து ஆய்வாளராக்கியதில் அவர் தாய் நான்சி எடிசனுக்குப் பங்குண்டு. மூளைவளர்ச்சித் திறனற்றவர் என்று முத்திரை குத்தப்பட்ட எடிசன், தன் மாற்றுத்திறனால் ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார்.

     முன்னேறுபவர்கள் ஒருநாளும் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதில்லை!அவர்கள் மூச்சுப்பிடித்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். 

    தடுமாறி விழுந்தவர்கள் களையும், தடம்மாறிச் சென்றவர்களையும் நேர்வழிப்படுத்தும் பேராசிரியர்களாக உலகப்புகழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்று பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கிங் ( https://www.hawking.org.uk/ ) இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் கற்று எல்லோரையும் போல் இயல்பாய் வாழ்ந்துகொண்டிருந்தபோது 21 வயதில் இயக்கு நரம்பணு நோயால் பாதிக்கப்பட்டுக் கைகால்கள் செயலிழந்து வாய்பேசமுடியா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    கணினியைப் பயன்படுத்தி அவர் சொல்வதை மாணவர்கள் புரிந்துகொள்ளுமளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன் குறையை அவர் துணிச்சலாக எதிர்கொண்டார். உடல்குறையை ஒரு பொருட்டாக எண்ணாமல் கடும்முயற்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

    உலகின் சிறந்த இசைமேதையான லுடுவிக் வான் பீத்தோவன், 


பியானோ இசைக்கலைஞராகத் தொடக்கத்தில் அறியப்பட்டார். புகழ்பெற்ற இசையமைப்பாளராக அவர் உருவான காலத்தில் 26 ஆவது வயதில் செவித்திறனை முற்றிலும் இழந்தார். இழந்த செவித்திறன் குறித்து அவர் வருந்தினார், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது.

    அவரது நண்பர்கள் தந்த ஊக்கத்தின் உதவியால் அதிலிருந்து மீண்டு இசையில் மூழ்கினார். உலகப் புகழ்பெற்ற நைன்த் சிம்பனி, வயலின் நோட்ஸ்களை உருவாக்கினார். அவரது இறுதிஊர்வலத்தில் இருபதாயிரம் பேர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஒருதிறன் குறைந்தால் மாற்றுத் திறன் உள்ளுக்குள்ளிருந்து பீறிட்டெழுந்தே தீரும் என்பதற்குச் சான்று பீத்தோவன்.

     இதுபோன்று உடல் குறைபாட்டைக் கருதாது வாழ்க்கையை வென்றவர்கள் ஏராளம். பாரா ஒலிம்பிக் என்ற விளையாட்டுப்போட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போட்டியாகும்.

மாற்றுத்திறனாளர்கள் வகைப்பாடு  (இந்திய அளவில்)

1 . பார்வைக் குறைபாடுடையோர். 

2 . கை,கால் குறைபாடுடையோர். 

3 . செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர்

 4 . மனவளர்ச்சி குன்றியவர்கள். 

5 . தொழுநோய் பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள். 

 என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளனர்.

      மாற்றுத்தினாளிகளைச் சமூகம் அங்கவீனர்கள் எனக் சுட்டிக் காட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

      இவ்வுலகில் மானிடராக பிறப்பதே அரியதாகும். அம்மானிடப்பிறப்பில் ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறையல்ல. ஒவ்வொருவரதும் ஊனமும் அங்கவீனமும் அவரது உடம்பில் தான் உண்டு. மனதிலே இல்லை என்பதை புரிந்து கொண்டு அனைவரும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதே நியதி.


பிரபலமான இடுகைகள்