7 டிசம்பர், 2021

சோ - நினைவுநாள்

 

      நாடகாசிரியர், நடிகர், துக்ளக் பத்திரிகை ஆசிரியர், வழக்குரைஞர், அரசியல் ஆலோசகர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி.

    சத்திய கங்கை ஆசிரியர் பகீரதன் எழுதிய "தேன்மொழியாள்' என்ற நாடகத்தில் "சோ' என்ற கதாபாத்திரத்தில் ராமசாமி நடித்தார். அப்போது முதல் அவர் பெயர் "சோ'வாக மாறியது. 

      சோ, கதை-வசனம் எழுதி இயக்கிய முதல் படம் "முகமது பின் துக்ளக்'. இப்படத்தின் டைட்டிலில் "கதை-வசனம் சோ' என்று தனியாக ஒரு கார்டு வரும். இறுதி கார்டில் டைரக்ஷன் "கற்றுக் கொள்ள முயற்சி'' சோ என்று தன்னடக்கத்தோடு வித்தியாசமாக கார்டு போட்டிருக்கிறார்.

இன்றைய அரசியல் பற்றி சோ பேசுவார்!

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் தினத்துக்குச் சில நாள்களுக்கு முன்பு இப்படியொரு அறிவிப்பு வெளியாகும். ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் காட்சியளிக்கும். அவ்வளவுதான். அதற்குமேல் வேறெந்த விளம்பரமும் இருக்காது. ஆனால், அவர் பேசவிருக்கும் மியூசிக் அகாடமி (பெரும்பாலும்) மதியம் முதலே ஜனத் திரளால் மூச்சுத் திணற ஆரம்பித்து விடும். ஆறு மணிக்குப் பேசப்போகிறார் என்றாலும், நான்கு மணிக்கெல்லாம் கட்சி வித்தியாசங்களை எல்லாம் தகர்த்து எறிந்து விட்டு, அரங்கில் குழுமி விடுவார்கள். 

    தொண்டையைச் செருமியபடி, அவர் பேசத் தொடங்கினால், வந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் அதிரடிதான். எள்ளல், பகடி, ஏகடியம், நக்கல், நையாண்டி ஆகியவற்றைக் கலந்து அவர் வெளிப்படுத்தும் கூர்மையான, வெளிப்படையான விமர்சனங்களுக்கு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் அதிகம். அவர் என்ன சொல்கிறார் என்பதை மாநிலத் தலைவர்கள் தொடங்கி இந்தியத் தலைவர்கள் வரை பலரும் உன்னிப்பாகக் கவனித்து, உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பது வழக்கம்.

     மேடையில் மட்டுமல்ல, தன்னுடைய துக்ளக் பத்திரிகையின் வழியாக நடப்பு அரசியலை நறுக்கென்று விமர்சிப்பது சோவின் பாணி. ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சோவுக்கு மேடை நாடகத்தில்தான் நாட்டம் அதிகம். அங்கும் அரசியல்தான். நறுக் சுறுக் வசனங்களால் நிரம்பிய அந்த நாடகங்கள், அரசியல் அரங்கில் பலத்த வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, சம்பவாமி யுகே யுகே நாடகத்தைச் சொல்லவேண்டும்.

      சோவின் 'ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு', 'முகமது பின் துக்ளக்', 'சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. 'விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்' என்ற நாடக நிறுவனத்தை 1954இல் தொடங்கினார்.'நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது' என்று பெருமையுடன் கூறுவார்.

      எங்கு பார்த்தாலும் ஊழல். ஊழலை ஒழிக்க இறைவனே அவதாரம் எடுத்து வந்தாலும்கூட, அவன் திரும்பிப் போக வேண்டியதுதான் என்பதுதான் அந்த நாடகத்தின் உள்ளடக்கம். அப்போது ஆட்சியில் இருந்தவர் முதலமைச்சர் பக்தவத்சலம். அவர் நாடகத்துக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். விஷயம் வெளியே கசிந்தது. வழக்கு தொடுத்தார் சோ. பின்னர் நீதிமன்ற அனுமதியோடு வெளியான அந்த நாடகம் சோவைப் பிரபலமாக்கியது. 

     தனது சொந்த உழைப்பில் 'துக்ளக்' என்ற வார இதழை 1970ஆம் ஆண்டும், 'பிக்விக்' என்ற ஆங்கில இதழை 1976ஆம் ஆண்டும் ஆரம்பித்துப் பத்திரிகையாளராகவும் முத்திரை பதித்தார்.

       அப்போதைய மத்திய அரசு, நெருக்கடி நிலையை அமல்படுத்தியபோது, தமிழகத்தில் அதிகம் நெருக்கடிகளை எதிர்கொண்டவர் சோ. முக்கியமாக, அவருடைய பத்திரிகையான துக்ளக், அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை எடுத்தார் சோ. பத்திரிகையை கறுப்பு அட்டையுடன் வெளியிட்டார்.

     அப்போதைய பிரதமரின் நடவடிக்கையை விமர்சித்து கேலிச் சித்திரங்களையும் கருத்துப் படங்களையும் வெளியிட்டார் சோ. அதன் காரணமாக கடுமையான தணிக்கைக்கு உள்ளானது துக்ளக். ஒருகட்டத்தில் துக்ளக் பத்திரிகையையே நிறுத்தி விட்டார். ஆனாலும் தலைமறைவுப் பத்திரிகைகள் பலவற்றில் தன்னுடைய விமர்சனங்களைத் தொடர்ச்சியாக எழுதினார். பிறகு பலருடைய வற்புறுத்தலால் மீண்டும் துக்ளக்கைத் தொடங்கினார். 


     சோ கதை வசனம் எழுதிய படங்கள்: நீலகிரி எக்ஸ்பிரஸ், ஆயிரம் பொய், பொம்மலாட்டம், நினைவில் நின்றவள், தேன்மழை, நிறைகுடம்! 


    சோ முதன்முதலாக நடித்த திரைப்படம் சிவாஜி நடிப்பில், ஏ.பீம்சிங் இயக்கிய "பார் மகளே பார்' (1963). இப்படத்தில் சோ ராமசாமியின் கதாபாத்திரத்தின் பெயர் மாடசாமி. 

 
    சோ இயக்கிய படங்கள் 4. அவை: முகமது பின் துக்ளக் (1971), மிஸ்டர் சம்பத் (1972), யாருக்கும் வெட்கமில்லை (1975), உண்மையே உன் விலை என்ன? (1976) 

   

கடந்த அரை நூற்றாண்டு அரசியலில் சோவின் மேடை, பத்திரிகை, அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் கவனத்துக்கும் ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் உரியவை என்பதில் சந்தேகமில்லை! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...