26 ஜூன், 2026

அனைவரும் தயிர் சாப்பிடலாமா?

                                         தயிர்
        அனைத்து வயதினருக்கும் ஓர் அருமருந்து
_________________________________________________________

            தயிர் என்பது இந்திய உணவு முறையில் பல நூற்றாண்டுகளாக இடம்பெற்றுவரும் ஓர் இயற்கையான உணவாகும். பசும்பாலை நொதிக்கவைத்து உருவாக்கப்படும் இந்த உணவு, உடல் நலத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது. "அனைத்து வயதினரும் தயிர் சாப்பிடலாமா?" என்ற கேள்விக்கு விடை தேடும்போது, வயது வாரியாக அதன் பயன்களையும் கட்டுப்பாடுகளையும் புரிந்துகொள்வது அவசியம்.


தயிரிலுள்ள சத்துகள்

            தயிரில் உள்ள சத்துகள் அதை ஒரு முழுமையான உணவாக மாற்றுகின்றன. 100 கிராம் (97 மி.லி) தயிரில் பின்வரும் சத்துகள் உள்ளன:

  • கால்சியம் – 120 மி.கி (எலும்புக்கு வலுவூட்டும்)
  • புரதம் – 3.5 கிராம் (தசை வளர்ச்சிக்கு உதவும்)
  • வைட்டமின் B12 நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும்
  • வைட்டமின் D உணவிலிருந்து ,கால்சியம் உறிஞ்சுதலுக்குத் துணைபுரியும்
  • புரோபயோடிக்ஸ் குடல் நலன் காக்கும் நன்மை செய்யும் பாக்டீரியா
  • பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்
  • மக்னீசியம் தசைச் செயல்பாட்டிற்குத் தேவையான தாது

இந்தச் சத்துக்களின் கலவை, தயிரை ஒவ்வொரு வயதினருக்கும் பயனுள்ளதாக ஆக்குகிறது.


வயது வாரியான பயன்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்

பச்சிளம் குழந்தைகள் (0 – 6 மாதம்)

            இந்த வயதில் தாய்ப்பால் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் ஃபார்முலா பால் மட்டுமே குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அளிக்கும். தயிர் அல்லது வேறு எந்த திட உணவும் இந்தக் கட்டத்தில் கொடுக்கவே கூடாது. குழந்தையின் செரிமான மண்டலம் இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறாததால், வெளி உணவுகள் தீங்கு செய்யலாம்.

குழந்தைகள் (6 – 12 மாதம்)

            8 முதல் 10 மாதத்திற்குப் பிறகு, சிறிய அளவில் தயிரை உணவில் சேர்க்கலாம். இந்த நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

  • கொழுப்பு நீக்காத, முழுக் கொழுப்புள்ள தயிரை மட்டுமே கொடுக்கவும்
  • இனிப்பு அல்லது உப்பு எதுவும் சேர்க்க வேண்டாம்
  • ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றினால், உடனே நிறுத்தவும்
  • ஒரு நாளைக்கு 2 முதல் 3 தேக்கரண்டி போதுமானது

சிறு குழந்தைகள் (1 – 5 வயது)

            இந்த வயதில், தயிர் அன்றாட உணவில் சேர்க்கப்படலாம். எலும்புகள் வேகமாக வளரும் இக்காலத்தில் கால்சியம் மிகவும் அவசியம். தயிர் சாதம்- இந்தியக் குழந்தைகளுக்கு மிகவும் பழக்கமான உணவு இது செரிமானத்தையும் எளிதாக்குகிறது.

பள்ளி வயது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் (6 – 25 வயது)

            உடல் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், தயிரின் நன்மைகள் பல மடங்கு அதிகரிக்கின்றன:

  • தினமும் ஒரு கப் தயிர், எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும்
  • தேர்வு நேரத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்
  • விளையாட்டு வீரர்களுக்கு தசைச் சீரமைப்புக்குப் பயன்படும்
  • சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும்

பெரியவர்கள் (25 – 60 வயது)

            நடுத்தர வயதினருக்கு தயிர் ஒரு நல்ல நண்பன். அலுவலக வேலை, மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் என பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இவர்களுக்கு, தயிர் பின்வரும் நன்மைகளை அளிக்கிறது:

  • குடல் நோய்களைத் தடுக்கும்
  • நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்
  • இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்
  • உடல் எடையைச் சமநிலைப்படுத்தும்
  • நீரிழிவு நோயின் ஆபத்தைக் குறைக்கும்

முதியோர் (60 வயதிற்கு மேல்)

வயதானவர்களுக்கு தயிர் மிகவும் அவசியமான உணவாகிறது. ஏனெனில்:

  • எலும்பு தேய்மானம் (osteoporosis) தடுக்கப்படும்
  • மூட்டு வலி குறையும்
  • செரிமானச் சிக்கல்கள் தீரும்
  • வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் சரியாகும்

இரவில் குளிர்ச்சியான தயிர் சாப்பிடுவதை தவிர்க்கலாம், வெதுவெதுப்பான அல்லது அறை வெப்பநிலையில் உள்ள தயிர் சிறந்தது.


யாருக்கு எச்சரிக்கை தேவை?

அனைவரும் தயிர் சாப்பிடலாம் என்றாலும், சில நிலைகளில் கவனம் தேவை:

  • லாக்டோஸ் சகிப்பின்மை உள்ளவர்கள் தயிரில், லாக்டோஸ் அளவு பாலை விடக் குறைவாக இருக்கும், எனவே சிறிய அளவில் முயற்சிக்கலாம்
  • பால் ஒவ்வாமை உள்ளவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்
  • சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சேர்க்காத, வீட்டில் செய்த தயிரை மட்டுமே சாப்பிடவும்
  • சிறுநீரக நோயாளிகள் புரத அளவைக் கண்காணிக்க மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்

இறுதியாக…..

            இன்றைய இளம் தலைமுறையினர், தயிர் உண்பதைத்  தவிர்த்து, பிறவற்றில் கவனம் செலுத்துவது, இளம் வயதிலேயே எலும்பு,மனநலம், தசை தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மனதில் கொண்டு, மருந்தாக எண்ணியேனும் தயிரை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிர் என்பது இயற்கை நமக்கு அளித்த ஓர் அரும்பொக்கிஷம். குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் சரியான வயதில், சரியான அளவில், சரியான முறையில் சாப்பிட்டால் தயிர், உடல் ஆரோக்கியத்தைப் பேணும் சிறந்த உணவாக விளங்குகிறது. நம் முன்னோர்கள், தினமும் தயிரை உணவில் சேர்த்துக்கொண்டதற்கு இதுவே காரணம். 

                       இன்றே நம் தட்டில் ஒரு கப் தயிருக்கு இடம் கொடுப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக