22 டிசம்பர், 2021

தேசிய கணித தினம்

       ஜீரோவை, ஹீரோ ஆக்கியவர்

     1887ஆம் ஆண்டு இதே நாளில்தான், உலகம் போற்றும் ஒரு கணிதமேதை தமிழகத்தில் உருவானார். காசுக்குக் கணிதத்தை விற்றவரல்ல அவர்; தன் மூளையின் மூலதனமாக்கியவர். கணிதத்தை மனப்பாடம் செய்யாமல், மனம் மயங்கிக் கற்றவர். அவர்தான் ராமானுஜம். ஈரோட்டில் சீனிவாச ஐயங்கார், கோமளத்தம்மா தம்பதி தவமாய் தவமிருந்து பெற்ற வரம் தான் ராமானுஜம். 

ராமானுஜம் வாழ்ந்த வீடு

       குடும்பச் சூழ்நிலை காரணமாக ஈரோட்டில் இருந்து கும்பகோணத்துக்கு இடம்பெயர்ந்தது ராமானுஜத்தின் குடும்பம். ராமானுஜத்தையும் வகுப்பறையில் பார்ப்பது கடினம். கோவில் மண்டபங்களில் சாக்பீஸ்கள் மூலம் பலவித கணக்குகளைப் போட்டு அதற்கு விடை காண்பார். விடையே கிடைக்காத பல கணக்குகளுக்கு, தூங்கும்போதும் கனவில் விடை கண்டுபிடிப்பார். 

     ஒருமுறை ராமானுஜத்தின் நண்பர் சாரங்கபாணி கணிதப் பாடத்தில், அவரை விட மதிப்பெண் கூடுதலாக பெற்றுவிட்டார். இதனால், அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் ராமானுஜம். அந்த அளவுக்கு எதிலும் முதலிடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 9ஆம் வகுப்பிலேயே பட்டப்படிப்பின் கணக்குகளுக்குத் தீர்வுகண்டதால், அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவே பின்னாளில் அவர் கணித மேதையாக உயர ஊக்கம் அளித்தது என்றால் மிகையல்ல. 

     கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் படிக்கும்போது கணிதத்தின் மீது கொண்ட ஆர்வமிகுதி காரணமாக மூன்று முறை ஆங்கில பாடத்தில் தோல்வியுற்றார். 

     அவர்தான், பின்னாளில் கணிதத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேற்றங்களை எழுதி வியக்கவைத்தார். ஒவ்வொரு நாளும் தனது கணிதக் குறிப்புகளை, சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதிவைத்தார். அதுவே பிற்காலத்தில் “ராமானுஜன் கணிதம்” என்ற புகழ்பெற்ற நூலானது. 

    1909 இல் திருமணமனவுடன் வேலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. இருபது ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துகொண்டே ‘பெர்நெவுவியன் எண்கள்’ என்ற கணிதத்துறை பற்றிய, சிறப்புக் கட்டுரையை வெளியிட்டார். 

   இதனால் உலகமே இவரது அறிவாற்றலைக் கண்டு வியந்தது. இதை அறிந்த சென்னை துறைமுக கழகப் பொறுப்பு தலைவர் ஸ்பிரிஸ் என்ற ஆங்கிலேயர்,இவரது கணிதக் குறிப்புகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். இதை படித்து பார்த்து வியந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்டி என்பவர், இங்கிலாந்துக்கு வரும்படி ராமானுஜத்துக்கு அழைப்பு விடுத்தார். 

பேராசிரியர் ஹார்டி

      1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்று பல கணித மேதைகளுடன் உரையாடினார். கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914–1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 

    அங்கு கிடைத்த உதவித்தொகை மூலம் டிரினிட்டி கல்லூரியில் பயின்றார். அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிரச் செய்தார். அவரை ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து இங்கிலாந்து நாடு பெருமைப்படுத்தியது. பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஃபெலோஷிப் பதவியும் (Fellowship Of Royal Society - FRS) அவருக்கு கிட்டியது. 

        ஒருமுறை, பேராசிரியர் ஹார்டி, சீனிவாச இராமானுசன் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது, தனது வாகன இலக்கமான 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்றார். உடனே, சீனிவாச இராமானுசன், அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.

1729 = 10 3  + 9 3    =  12 3   +  1  

     33 வயதை கடப்பதற்குள் அவரைக் காலன் கவர்ந்து சென்றுவிட்டான். குறுகிய காலத்தில் கணித மேதை ராமானுஜம் மறைந்தாலும், அவருடைய புகழ் காலத்தை வென்று சரித்திரம் படைத்து இருக்கிறது. 

      ராமானுஜம் கண்டுபிடித்த கணிதத்தின் ஆழ் உண்மைகள் தான் இன்று, அனைத்துத் துறையிலும் பயன்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. நேரு, தான் எழுதிய நூலில், ‘ராமானுஜத்தின் குறுகிய கால வாழ்வும், மரணமும் இந்தியாவின் நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தியாவில் உண்பதற்கு உணவும், கல்வியும் ஏற்படுத்தி கொடுத்தால், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், எழுத்தாளர்களும் உருவாகி, புதிய பாரதத்தினைப் படைப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

     ஜெர்மனியும், சுவீடனும் ஆண்டு முழுவதும் கணித மேதை ராமானுஜம் என்ற பெயரில் ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் மாநாட்டை நடத்துகின்றன. இதன் மூலம் தமிழரின் பெருமை போற்றப்படுகிறது. 

     2012ஆம் ஆண்டு ராமானுஜரின் 125ஆவது பிறந்த ஆண்டையொட்டி, அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும், அவர் பிறந்த தினமான டிசம்பர் 22 ஆம் தேதியை தேசிய கணித தினமாகவும் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியும் “தேசிய கணித தினம்” கொண்டாடப்படுகிறது. 

      கணித மேதையின் பிறந்த நாளான இன்று, இளைய தலைமுறை இணையத்திலேயே செலவழிக்காமல் ராமானுஜரின் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் போற்றி, தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

Where Generations live, learn and love - The Hindu Magazine Online edition - September 28,2025

  The Hindu Magazine