12 ஜனவரி, 2022

தேசிய இளைஞர் தினம்

 விழிமின், எழுமின், உழைமின், கருதிய காரியம் 

கைகூடும்வரை...

   கொல்கத்தா நகரில், மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் சாலையில் குதிரை வண்டி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த வண்டியின் உள்ளே தாயாகி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் பயணித்துக் கொண்டிருந்த வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரை திடீரென்று கட்டுப்பாடற்று வேகமாக ஓடத் தொடங்கியது. குதிரை வளர்த்தவரோ சாலையில் விழுந்து கிடக்க, குதிரை வண்டி வேகமாக ஓடியது. உள்ளே செய்வதறியாத பெண் மரண பயத்துடன் அமர்ந்திருக்க, மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தது. 

    அப்போது சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஓர் இளைஞன் சட்டென குதிரையின் மீது பாய்ந்து அடக்க முயற்சித்து தோல்வி கண்டான். தரையில் விழுந்து கைகால்களில் ரத்தகாயங்கள் ஏற்பட்டது. இருந்தாலும் அவன் மனம் தளரவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து குதிரையை அடக்கி, அந்த பெண்ணைக் காப்பாற்றினான். அப்போது அவனுக்கு வயது பதினைந்து.

    இந்த சம்பவத்தை கண்கூடாகப் பார்த்து வியந்த மக்கள்கூட்டம் அவனது வீரத்தை வெகுவாகப் பாராட்டியது. ஆனால் அந்த இளைஞனோ,பாராட்டுகளையெல்லாம் சிறிதும் காதில் போட்டுக்கொள்ளாமல் இயல்பாக அந்த இடத்தைக் கடந்து சென்றான். அந்த இளைஞனால் தான் பல ஆண்டுகளுக்குப்பிறகு, அமெரிக்க மண்ணில், தனது ஆர்ப்பாட்டமில்லாத, ஆன்மீக உரையால், மிகப்பெரும் மக்கள் சமுத்திரத்தை ஆட்கொள்ள முடிந்தது. அந்த வீரமிக்க இளைஞன் நரேந்திரன் எனப்பட்ட விவேகானந்தர் தான்.

    சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை தேசிய இளைஞர் தினமாக இந்திய அரசு கடந்த 1984 ஆம் ஆண்டில் அறிவித்தது. அதற்கு அடுத்த ஆண்டான 1985, ஜனவரி12 ஆம் தேதி முதன்முதலாக இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.  அதைத் தொடர்ந்து ஒவ்வோராண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.  

    விவேகானந்தர் என்னும் மாமனிதர் ஆன்ம யோகி என்பதைக்காட்டிலும் கர்ம யோகியாகவே அடையாளம் காணப்படுகிறார். காரணம் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவற்றில் அவர், செயலுக்கே முக்கியத்துவம் அளித்தார். அதுவே ஆன்மீக விடுதலைக்கும் வழிவகுக்கும் என்றார்.

    கல்வி இன்றியமையாதது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றினார் விவேகானந்தர்.

“வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல. வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி”


    என்றார். இந்தியச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட அவர் முன்வைத்த சிந்தனைகளில் கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார்.

    “வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல. தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி”

    என்றார்.

    “எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். 

    இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவள் (ன்) என்பதை நம்பு. பலவீனமானவள் (ன்) என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே!” என்று அறைகூவல் விடுத்தார்.

    “நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே! பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்” என்றார்.தெற்கே ராமேசுவரத்தில் இருக்கும் ஒருவர் வடக்கே காசிக்கு செல்லவேண்டும் என்றும், வடக்கே காசியில் இருக்கும் ஒருவர் தெற்கே ராமேசுவரத்திற்கு செல்லவேண்டும் என்று நினைக்கும் வரையில் நம்முடைய தேசம் கலாச்சார ரீதியில் ஒரு வல்லர சாகவே இருக்கும் என்றார் சுவாமி விவேகானந்தர். 

     “ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். அதுவே ஆன்மீகத்தில் புதிய விடியல்”
என்றார் சுவாமி விவேகானந்தர்.

    “எல்லாமே கிடைத்துவிடும். ஆனால் வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்”

    என எழுச்சி உரை ஆற்றினார். உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன. உனக்கு நிகர் நீயே. உன் மீது நம்பிக்கை வை. உன்னால் எதுவும் முடியும். வழக்கமான சம்பிரதாயமான சடங்கில் விவேகானந்தருக்கு நம்பிக்கை இல்லை.

     மதம் என்பது ஆன்மிகம்” என்னும் தெளிவைக் கொண்டவர். நான் மறைந்த பின் ஆயிரம் ஆண்டுகள் என்னுடைய தாக்கம் இருக்கும் என்றார். இந்த தீர்க்க தரிசனம் யாருக்கு வரும்?

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை



    ஒவ்வோர் இளைஞனும் தன்னை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தனக்கு வந்த உயர்வைக் கொண்டு, அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். சாதி, மத, இன பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட கலாச்சாரமே, பாரத கலாச்சாரம்.

    இதில் மலிவான சிந்தனைகளுக்கு இடமே இல்லை. பணம், பதவி, புகழ் போன்ற சாதாரண இலக்குகளை நோக்கமாகக் கொள்ளாமல் உலக நன்மை என்னும் பரந்துபட்ட சிந்தனையை இளைஞர்கள் தங்களின் மனத்தில் கொண்டு, உயர்ந்த நோக்கத்தை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர்.

    இப்படி, எது கல்வி என்பதில் தொடங்கி, உடலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்குப் பலம் அவசியம், சமூக நல்லிணக்கம் என்பதுவரை இளைஞர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் விவேகானந்தர்.

    ஆன்மிகத்தோடு சமய சார்பற்ற பார்வையும் கொண்டிருந்த அவருடைய சிந்தனைகளை, ஆன்மீகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால், இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும்.


11 ஜனவரி, 2022

ராகுல் திராவிட் பிறந்தநாள்

     இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 

    ராகுல் திராவிட், இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூரில்,பிறந்தார். கர்நாடகாவில் வாழும் ஒரு மகாராஷ்டிரிய தேஷஸ்தா குடும்பத்தை சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் தந்தை வழி முன்னோர்கள் தமிழ் நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள். அவர் பெங்களூரில் வளர்ந்தார். மராத்தி மற்றும் கன்னட மொழிகளைப் பேசுவார்.

    திராவிட் அவரது பன்னிரெண்டாவது வயதில் இருந்தே கிரிக்கெட்டை விளையாடத் துவங்கி விட்டார். அவர், மாநில அளவில் அண்டர்-15, அண்டர்-17 மற்றும் அண்டர்-19 பிரிவுகளில் விளையாடி உள்ளார். முதன் முதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேகி தாராபோரால், கோடை விடுமுறையில் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு கேம்பில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர், அவரது பள்ளி அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே முதல் சதம் அடித்தார். பேட்டிங் செய்ததுடன், விக்கெட் கீப்பராகவும் இருந்தார். பின்னர் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் குண்டப்பா விஸ்வநாத், ரோஜர் பின்னி, பிரிஜேஷ் படேல் மற்றும் தாராபோரின் அறிவுரையின் பேரில் , விக்கெட் கீப்பிங்கை நிறுத்தி வைத்தார்.


    மகாராஷ்டிராவுக்கு எதிராக ரஞ்சி ட்ரோபியில் விளையாட அவர் முதன் முதலில் பூனேயில் பிப்ரவரி மாதம் 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் அவர் ஏழாவது நிலையில் வருங்கால சக அணி வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்துடன் சேர்ந்து 82 ரன்கள் அடித்து ஆட்டத்தை சம நிலைப் படுத்தினார்.அவரது முழு முதல் சீசன் 1991-92 ஆம் ஆண்டில் இருந்தது. அப்பொழுது அவர் இரண்டு சதங்களை அடித்து தொடர் முடிவில் சராசரி 63.3 க்கு 380 ரன்கள் எடுத்திருந்தார்.இதன் பின்னர் திராவிட் சவுத் சோனில் நடக்கின்ற துலீப் ட்ரோபியில் ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1996 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் விளையாடிய வினோத் காம்ப்ளிக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கப் ஒரு நாள் போட்டியில், தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கிய டிராவிட் அமோகமான ஆரம்பத்தை காணவில்லை. இதற்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர், இங்கிலாந்து சுற்று பயணத்தில் தான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சய் மஞ்ச்ரேகர் காயமுற்றார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் முதன் முதலில் தோன்றினார். இவருடன் சவுரவ் கங்கூலியும் முதல் முதலில் களம் இறங்கினார்.

    1996 இல் இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய திராவிட் ஒரு வலது கை ஆட்டக்காரர். சில சமயங்களில் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டுள்ள திராவிட், உலகின் முன்னணித் துடுப்பாளர்களுள் ஒருவர். ராகுல் திராவிட் அக்டோபர் 2005இல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2004 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. திராவிட் 'சிறந்த ஆட்டக்காரர்' மற்றும் 'சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்' ஆகிய விருதுகளை, தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். 


    திராவிட், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களைக் கடந்து சாதனை புரிந்தவர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே வீரர் ஆவார். மேலும் திராவிட், டெஸ்ட் போட்டிகளில் அதிக கேச்சுகள் (210) பிடித்து சாதனை புரிந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 13000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை 24 நவம்பர் அன்று பெற்றார். 

    தேசிய இந்திய அணியின் மிகத் தேர்ச்சி பெற்ற கிரிக்கெட் வீரராக 1996 ஆம் ஆண்டு முதல் திகழ்ந்து வருபவர் ராகுல் ஷரத் டிராவிட் .இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் அந்த பதவியில் இருந்து 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விலகிக்கொண்டார். 2000 ஆம் ஆண்டில் டிராவிட் ஐந்து வீரர்களில் ஒருவராக இருந்து விஸ்டன் கிரிக்கேடர்ஸ் ஆப் தி இயர் விருதைப்பெற்றார். டிராவிடுக்கு ICC பிளேயர் ஆப் தி இயர் மற்றும் டெஸ்ட் பிளேயர் ஆப் தி இயர் விருதுகளும் 2004 ஆம் ஆண்டு துவக்க விழாக்களில் வழங்கப்பட்டன.

    நீண்ட நேரத்திற்கு நின்று பேட் செய்யக்கூடிய அவரது திறனைப்பார்த்து அவரை தி வால் என்று அழைக்கின்றனர். டிராவிட் பல தரப்பட்ட உலக சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரையும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது இந்திய வீரராக இருக்கிறார் 14 பிப்ரவரி 2007 அன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவதாகவும் இந்திய அணிவகுப்பில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து மூன்றாவதாகவும் இருந்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.

    இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் பத்து அணிகளுக்கும் எதிராக சதம் எடுத்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் ஆவார். 210 கேச்சுகளைப் பிடித்து டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேச்சுகளை பிடித்த வீரர் என்ற பெயரைப்பெற்றுள்ளார். 18 வீரர்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு சமையங்களில் 75 க்கும் மேற்பட்ட சதங்களை எடுக்கப் பங்களித்துள்ளார் டிராவிட். 

கொடிகாத்த குமரன் நினைவு நாள்

 திருப்பூர் குமரன் 

    காந்தியடிகளின், ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறையின் தடையை மீறி ஆர்பாட்டம் நடந்தது. இதற்குத் தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

    தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.

    'வந்தே மாதரம்' என்று கூறியபடி, கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

    உயிருக்குப் போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை, அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான்.

    அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான்.

    1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார். போதிய வருவாய் இன்றி குடும்பம் வறுமையில் வாடியது. வாழ  வழியின்றித் தவிக்கும் மக்களுக்கு அடைக்கலம் தந்து வாழவைக்கும் திருப்பூர் மாநகரம் அன்று, குமரனுக்கும் வழிகாட்டியது.செம்மையாகவும், கௌரவமாகவும் வாழ்ந்த குமரன், 11 வயது நிரம்பிய ராமாயி என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்.

    இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.

    1932 ஆம் ஆண்டு ஜனவரியில், காந்தியடியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, வீரத்துக்கு பெயர் போன கொங்குமண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

    காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கிக் குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தேமாதரம், வந்தே மாதரம்' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதியாகும்.

    மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடிக்கு ஏற்படவிருந்த இழுக்கைப் போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டியது.

    புதைக்கப்பட்டது இருபத்தெட்டே வயதான இளைஞன் குமரனின் சடலம். ஆனால் இன்றும் என்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது - குமரன், தன் உயிர்ச் சுடரால் ஏற்றிவைத்த தியாக தீபம்.


    ஆலமரம் கீழே விழும்போது, மரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதன் அடியில் சிக்கிச் சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை. திருப்பூர் குமரன் போன்ற உயிர் தியாகம் புரிந்த, எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூர்வதே, நாம் அவர்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.

10 ஜனவரி, 2022

எழுத்தாளர் ஆர். சூடாமணி பிறந்தநாள்

         எழுத்தே உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவர்; சமூக முன்னேற்றத்தைத் தம் எழுத்தில் அடி நாதமாக வைத்திருந்தவர்; தன் எழுத்தின் பயன் சமூக சீர்திருத்தத்துக்கு சென்று சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர்

ஆர்.சூடாமணி

        1931-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராகவன், சென்னை மாநில தலைமைச் செயலராக இருந்தார். தாய் கனகவல்லி சிற்பம், ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவர். பின்னாள்களில் சூடாமணி தன்னை ஓர் ஓவியராக நிலைநிறுத்திக் கொள்ள அவருடைய தாயும் காரணமாக இருந்திருக்கிறார். 

         எல்லாக் குழந்தைகளையும் போல ஆரோக்கியமாக வளர்ந்த சூடாமணிக்கு, ஐந்தாம் வயதில் அம்மை நோய் தாக்கியது. பலகட்டச் சிகிச்சைகளுக்குப் பிறகு மரணத்துக்கு மிக அருகில் சென்று மீண்டு வந்தார். ஆனாலும் அம்மை நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. 

        இவரின் இயல்பான உடல் வளர்ச்சி தடைபட்டது. வளர்ச்சி குறைவான குழந்தையாகவே வளர்ந்தார். இதன் காரணமாக இவருடைய தந்தை இவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. தன்னுடைய அருமை மகளுக்குப் பாடம் சொல்லித்தர ஆசிரியரை வீட்டுக்கே வரவைத்தார். கற்பதில் ஆர்வம் மிகுந்த சூடாமணி, தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்று விளங்கினார். சூடாமணியின் வாசிப்புத்தளம் விரிவடைந்தது. புத்தகங்களுக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டார். 

         சூடாமணி 1954 முதல் எழுதினாலும், இவரது முதல் சிறுகதை "காவேரி' என்னும் பெயரில் 1957-ஆம் ஆண்டு கலைமகளில் வெளியாகி பாராட்டைப் பெற்றது. இக்கதைக்காக இவருக்கு கலைமகள் வெள்ளிவிழா பரிசு வழங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு வெளிவந்த "மனதுக்கு இனியவள்' என்னும் நாவல் இவரை அனைவரும் அறியும்படி செய்தது. இந்நாவல் சூடாமணியின் வாழ்க்கையை மறைமுகமாகப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. தன் வரலாற்றுச் சாயல் கொண்டது.

         உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த இந்நாவலுக்கு சிறந்த நாவலுக்கான கலைமகள் ஸ்ரீநாராயணசாமி ஐயர் விருது வழங்கப்பட்டது. சூடாமணி, விவேகானந்தர் மீது அளவற்ற அன்பும் காந்தியத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவராக இருந்தார். எளிமையான வெண்மைநிற ஆடைகளை அணிவதையே விரும்பினார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இடைநிலை மற்றும் வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். 

        பெண் எழுத்தாளர் பலரை உருவாக்கிய கலைமகள் இதழ்தான் இவரையும் உருவாக்கியது. அதனால்,  “கலைமகள் எழுத்தாளர்” என்றே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தமிழைத் தவிர ஆங்கிலத்திலும்  “சூடாமணி ராகவன்” என்ற பெயரில் புனைகதைகளை எழுதியுள்ளார். இவருடைய நாவலொன்று "யாமினி' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

        "சிரத்தையான எழுத்துக்கும் வெகுஜன எழுத்துக்குமிடையே உள்ள இடைவெளியை நிரப்பியவர் சூடாமணி' என்று விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டவர். தமிழில் பெண்ணியமும் அதுசார்ந்த கோட்பாடுகளும் உருவாவதற்கு மறைமுகமாகக் களம் அமைத்துக் கொடுத்தவர் என்பதை அவரது படைப்புகளை வாசித்தவர்கள் நன்கறிவார்கள். ஆனாலும் தன்னை ஒரு பெண்ணியவாதியாக வெளிக்காட்டிக் கொள்ளாதவர். 

         சூடாமணியின் பெரும்பான்மையான கதைகள் குடும்பம் சார்ந்தவை. மனிதனின் ஆழ்மனச் சிக்கலை உளவியல் பூர்வமாக ஆராய்பவை. குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. தனக்குக் கிடைத்த வாழ்க்கையை அதன் குறைகளோடு ஏற்றுக்கொண்ட சூடாமணி தன் எழுத்தின் வழியே அன்பை விதைத்தவர்; உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்தவர்; "உளவியல் எழுத்தாளர்' என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

         இவர் படைத்த சிறுகதைகள்

         அந்த நேரம் (1969), இழந்த மகுடம் (1973), ஓர் இந்தியன் இறக்கிறான் (1975), ஆர். சூடாமணியின் சிறுகதைகள் (1978), உலகத்தினிடம் என்ன பயம் (1978), சுவரொட்டி (1985), அம்மா (1987), கிணறு (1991), அஸ்தமனக் கோலங்கள் (1993), காவலை மீறி (1996), ஆர். சூடாமணியின் கதைகள் (2001).

        இறுதியாகக் குறிப்பிட்டுள்ள இந்த நூலுக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது.

         பரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத இவருக்கு இலக்கியச் சிந்தனை பரிசை பலமுறை இவரது கதைகள் பெற்றுத்தந்தன. இருவர் கண்டனர் என்ற நாடகம் ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. மும்பை தமிழ்ச் சங்க விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

         சூடாமணிக்கு 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகக்கண் காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்புச் செய்தது. இத் தொகையைக்கூட பல்வேறு சேவை அமைப்புகளுக்குப் பகிர்ந்தளித்து மனநிறைவடைந்தார் சூடாமணி. 

         2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி சூடாமணி காலமானார்.அவர் விருப்பப்படி அவரின் மறைவுக்குப் பிறகு பல கோடி மதிப்புள்ள சொத்து இராமகிருஷ்ண மடத்துக்கே எழுதி வைக்கப்பட்டது. இத்தகு சிறப்பு மிகுந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி.

9 ஜனவரி, 2022

வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

         " திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற அருந்தமிழ்க் கவிஞர் ஔவையாரின் பாடலுக்கேற்ப, மனிதன் உயிர் வாழ, நாடு விட்டு நாடு செல்வது இயல்பு. வெளிநாடு வாழ் இந்தியர் (Non-Resident Indian - NRI) எனப்படுவோர், இந்தியாவில் வாழாமல், வேறொரு நாட்டிற்குப் புலம்பெயர்ந்த இந்தியக் குடியினர்ஆவர்.

        இவர்கள் இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள். இந்திய அரசு, வெளிநாட்டிற்குப் புலம்பெயர்ந்து, அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களையும், அத்தகைய பெற்றோர்களின் குழந்தைகளையும் இந்திய வம்சாவளி நபர் (Person of Indian origin, PIO) என்று வகைப்படுத்துகிறது நமது நாடு. இவர்களுக்குக் கடவுச்சீட்டை ஒத்த, பிஐஓ அட்டை வழங்கப்படுகிறது.

        இந்தியாவிலிருந்து,கல்வி பெறவும், பொருள் சேர்க்கவும், வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள், காலப்போக்கில் அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்வது இயல்பாகி விட்டது. அங்கு வாழும் இந்தியர்களின் உறவை, நாம் இழந்துவிட இயலாது. அவர்களையும் நம் நாட்டின் உணர்வோடு இணைக்க வேண்டும் என முடிவு செய்த அன்றைய பிரதமர் வாஜ்பாய் 2003 இல் ஜனவரி 9 ஆம் தேதியை, வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என அறிவித்தார். 

        அதன் பிறகு ஆண்டுதோறும் இந்தத் தினம் கொண்டாடப் படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915. அந்நாளே, வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது. .

        விழாக் கொண்டாட்டத்தின்போது வெளிநாடுவாழ் இந்தியர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பிரவசி பாரதிய சம்மான்  என்பது வெளிநாடுவாழ் இந்தியருக்கான விருதாகும்.

         வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி மத்திய, மாநில அரசுகளுடன் கலந்துரையாடவும், தொடர்புகளை மேற்கொள்ளவும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயவும் இவ்விழா உதவுகிறது. 


8 ஜனவரி, 2022

ஸ்டீவன் ஹாக்கிங் பிறந்த நாள்

         "வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!" 

    என்னும் தன்னம்பிக்கைச் சொற்றொடருக்கு உரிமையாளரான ஸ்டீவன் ஹாக்கிங் பிறந்த நாள் இன்று.மேல் வரிசையில் பற்கள் கிடையாது. கீழிருக்கும் சில பற்கள் மேல் உதட்டை அழுத்தி வெளிவந்து நிற்கும். தலை, வலது பக்கம் சாய்ந்திருக்கும். 

        நெற்றியை அதிகம் மறைக்காத கேசம். கேமராவும் சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி. கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட வீல் சேர். மிகக் குறைவான எடைகொண்ட பொட்டலமாய், சுருண்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவம். கன்னத்தில் சில தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்துபோய்விட்டன. 

            எந்தவொரு மனிதனும் வாழவே முடியாத சூழல். ஆனால், அளப்பறிய சாதனைகளோடு சரித்திரம் படைத்த ஓர் அதி அற்புதன். இவ்வளவு வலிகளையும் கடந்து அவர் சிரிப்பார். எலும்போடு ஒட்டியிருக்கும் அவரின் கன்னத் தசைகள் சிறிய அசைவைக் கொடுக்கும். அது அத்தனை அழகாய் இருக்கும். உலக அண்டவியல் ஆராய்ச்சியின் அறிவு - அழகன் ஸ்டீபன் ஹாக்கிங்.

            ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்குப் பிறகு பெரிதும் புகழ்பெற்ற விஞ்ஞானி யார் என்று கேட்டால் ஸ்டீவன் ஹாக்கிங் பெயரைத்தான் சொல்ல முடியும். 1942 ஜனவரி 8 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். ஆக்ஸ்ஃ போர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் என தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படித்தார். ஆராய்ச்சி மாணவராக இருக்கும்போது ‘ஆமியோட்ராஃபிக் லேட்டரல் ஸ்கிலரோஸிஸ்’ (Amyotrophic Lateral Sclerosis - ALS ) என்ற நோய்த் தாக்குதலுக்கு ஆளானார்.ஒரு கட்டத்தில், பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில், 'ஈக்வலைஸர்' என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு வெளியுலகத்தோடு தொடர்பு கொண்டிருந்தார். 

            தசை-நரம்புகளின் கட்டுப்பாட்டை இழந்ததால் குறுகிய காலத்தில் அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். அப்போது அவருக்கு 21 வயது. ஆனால், அதன் பிறகு 55 ஆண்டுகள் வாழ்ந்தார். அறிவியல் உலகின் போக்கையே மாற்றினார்.கருந்துளைகளைப் பற்றிய கருத்தாக்கங்களில் மிகச் சிறந்த பங்களிப்புகளை ஆற்றினார்.

            இவர் எழுதிய "எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" ( A Brief History of Time) என்ற புத்தகம், தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரபஞ்சவியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கருதப்படுகிறது. 

                தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விமானமொன்றில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையில்லாத நிலையை உணர்ந்தார். அண்டார்க்டிகா உட்பட அனைத்துக் கண்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். விஞ்ஞானி என்பதைத் தாண்டி அறிவியல் சிந்தனை, கற்பனாசக்தி, தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கான முன்னுதாரணம் ஹாக்கிங்.

            " நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். இந்தப் பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகரவேண்டிய காலகட்டம் இது. மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது.நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன் " என உறுதிபடக் கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கைக் காலன் வென்றுவிட்டான்.

உலக தட்டச்சு தினம்

                     *ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 8 ஆம் தேதி, உலக தட்டச்சு தினம் கொண்டாடப்படுகிறது. தட்டச்சு என்னும் எழுதப்பட்ட தகவல்தொடர்பு வடிவம், இன்று உலகையே ஆள்கிறது. இது வேகம், துல்லியம் மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது. தட்டச்சு செய்யும் போட்டிகளில் தட்டச்சு செய்பவர்கள் நுழைவதற்கான ஒரு நாள் இது.

                     *கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் 1868 ஆம் ஆண்டில் காப்புரிமை பெற்றதிலிருந்து தட்டச்சு இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஷோல்ஸ்  ஓர் அச்சுப்பொறிஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அச்சுப்பொறி கண்டுபிடிப்பிலிருந்து, தற்போது நடைமுறையிலுள்ள அச்சுப்பொறி வரை பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. தட்டச்சுப்பொறியில் QWERTY விசைப்பலகை தளவமைப்பு உள்ளது. QWERTY என்பது விசைப்பலகையின் மேல் இடது பகுதியில் உள்ள முதல் ஆறு விசைகளின் வரிசை.

                *1800 களின் பிற்பகுதி முழுவதும், பல பிரபல ஆசிரியர்கள் தட்டச்சுப்பொறியை தங்கள் கையெழுத்துப் பிரதிகளை எழுதப் பயன்படுத்தினர். இந்த ஆசிரியர்களில், மார்க் ட்வைன், எர்னஸ்ட் ஹெமிங்வே மற்றும் இயன் ஃப்ளெமிங் ஆகியோர் அடங்குவர். இந்த எளிமையான சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்திய எழுத்தாளர்கள் மட்டுமல்ல. அலுவலக ஊழியர்களும், தட்டச்சுப்பொறியை, எழுதுவதற்கும் தொடர்புகொள்வதற்கும் இன்றியமையாத கருவியாகத் தேர்வுசெய்தனர். 

            *பல ஆண்டுகளாக, தட்டச்சுப்பொறிகள் சிக்கலாகத் தோன்றினாலும், நாளடைவில் இலகுவான மற்றும் பயன்படுத்தத் தகுந்ததாகவும் மாறியது. தட்டச்சுப்பொறியின் மேம்பாடுகள் தட்டச்சு செய்பவரின் வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்க உதவியது.

            *1935 ஆம் ஆண்டில், ஐபிஎம் முதல் வெற்றிகரமான மின்சார தட்டச்சுப்பொறியை உருவாக்கியது. 1964 ஆம் ஆண்டில், முதல் சொல் செயலியை உருவாக்குவதன் மூலம் தட்டச்சுப்பொறியில் ஐபிஎம் கூடுதல் மேம்பாடுகளைச் செய்தது. 1980 களில், கணினிகள் தட்டச்சுப்பொறிகளை மாற்றத் தொடங்கின. இருப்பினும், தற்போது தட்டச்சு செய்யும் திறன் கணினியில் எழுதுவதற்கும் வேலை செய்வதற்கும் பயனுள்ளதாக இருந்தது.

                * உலகின் அதிவேக தட்டச்சு செய்பவர் நிமிடத்திற்கு 216 சொற்களைத் தட்டச்சு செய்தார் (WPM -Words per minute)   சராசரி தட்டச்சு வேகம் 41 wpm. பெண்கள் அதிகம் தட்டச்சு செய்வதைப் பயிற்சி செய்தாலும், சிறுவர்களே உண்மையில் வேகமான தட்டச்சு செய்பவர்கள். சராசரியாக, சிறுவர்கள் 44 wpm என தட்டச்சு செய்கிறார்கள், பெண்கள் 37 wpm இருப்பினும், தட்டச்சு செய்யும்போது வேகம் மட்டுமே காரணியாக இருக்காது. துல்லியமும் முக்கியமானது. 

            *சராசரி தட்டச்சு செய்பவர்கள் அவர்கள் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு 100 சொற்களுக்கும் 8 தவறுகளைச் செய்கிறார்கள். இது 92% துல்லியமான மதிப்பீடாகும். தொழில்முறை தட்டச்சு செய்பவர்கள் துல்லியமான மதிப்பீட்டை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

            * இன்று தட்டச்சுப்பொறிகள் செயல்பாட்டில் அதிகம் இல்லை என்றாலும், கணினியில் தட்டச்சு செய்வதற்கு அடைப்படை தட்டச்சுப்பொறியே என்பது மறுக்க இயலாத உண்மை. தற்போது தட்டச்சை எளிதாகக் கற்றுக்கொள்ள விளையாட்டு வடிவில் செயலிகள் உள்ளன என்பது இதன் பரிணாம வளர்ச்சி.

4 ஜனவரி, 2022

உலக பிரெய்லி நாள்

       ஐ.நா. சபையானது முதல் அலுவல் பூர்வமான உலக பிரெய்லி தினத்தினை 2019 ஜனவரி 04 ஆம் நாள் அனுசரித்தது. பார்வையற்றோர் படிக்க உதவும் பிரெய்லி எழுத்து முறையைக் கண்டறிந்த லூயிஸ் பிரெய்லி (Louis Braille) பிறந்த தினமான ஜனவரி 4 ஆம் தேதியன்று அவர் நினைவாக சர்வதேச பிரெய்லி தினம் அனுசரிக்கப்படுகிறது.


      உடல் குறையின்றிப் பிறந்தவா்களை விடவும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருப்பவா்கள் மாற்றுத்திறனாளிகள். அதிலும் பாா்வைத் திறன் குறைபாடு, சாதனைகளுக்குத்த்டையல்ல என்று நிரூபிததவர் லூயிஸ் பிரெய்லி.

      பிரான்சு நாட்டவரான லூயிஸ் பிரெய்லி ஜனவரி 4 ஆம் நாள் பாரிஸ் அருகில் கூப்ரே என்ற இடத்தில் 1809 இல் எந்தக் குறையும் இன்றிப் பிறந்தவா்தான். அவருக்கு மூன்று வயது இருக்கும்போது அவரது தந்தையின் பணியிடத்தில் கூா்முனை கொண்ட கம்பியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஒரு கண்ணில் அந்தக் கம்பி குத்தியதில் ஒரு கண்ணின் பாா்வையை இழக்க நேரிட்டது.


       சில ஆண்டுகளில்,பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால்,  இன்னொரு கண் பாா்வையையும் இழந்தாா். இந்த இழப்பு அவரின் கற்றலுக்கு எந்த விதத்திலும் தடை செய்யவில்லை. 1819-இல் படிப்பு உதவித்தொகை கிடைக்கப்பெற்று தனது சொந்த ஊரிலிருந்து பாரிஸ் நகருக்குச் சென்று அங்கு தேசிய பாா்வையற்ற குழந்தைகள் பள்ளியில் (Royal Institute For the Blind) பயின்றாா். 

   அங்கு, பாா்வைக் குறைபாடற்ற, மாவீரன் நெப்போலியனின் படையில் பணியாற்றிய பிரான்ஸ் ராணுவ அதிகாரியான சாா்லஸ் பாா்பியா் பாா்வையற்றோருக்கான கற்றலுக்கு முன்னோடியாக புடைப் புள்ளி (எம்போஸ்ட்) எழுத்து முறையைக் காட்சிப்படுத்தினாா்.

     இந்த முறை ராணுவத்தினா் இருட்டில் பயன்படுத்துவதற்காக சாா்லஸ் பாா்பியா் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், இம்முறை பிரான்ஸ் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டதேயில்லை. எந்த ஒரு பாா்வையற்றோருக்கான பள்ளியிலும் அறிமுகப்படுத்தப் படவில்லை. 

     அதில் ஒலிப்பு முறைகளைக் குறிக்கும் புள்ளிகள் அட்டையின் மீது பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதன் மீது ஆா்வம் காட்டிய லூயிஸ் பிரெய்லி, இந்த முறையினைத் தழுவி தனது ஒன்று முதல் ஆறு புடைப்புப் புள்ளிகள் மற்றும் ஓட்டைகள் கொண்ட முறையினை இசைக் குறியீடு முறையில், மாணவராக இருந்த போது 15-ஆவது வயதிலேயே கண்டுபிடித்தாா்.

     பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப் புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.

      அந்த மொழியில் பாடங்கள், சூத்திரம், அறிவியல் கோட்பாடு, கணக்கு, இசைக்குறிப்பு, கதை,  கட்டுரை, நாவல் என எல்லாவற்றையும் எழுதலாம், படிக்கலாம் என்பதை அவர் நிரூபித்தார்.

     எந்தக் கூா்முனைக் கருவியினால் தனது பாா்வையை இழந்தாரோ, அதே போன்ற கூா்முனை உளியினைக் கொண்டு இதை உருவாக்கினாா் லூயி பிரெயில். 1926-லிருந்து பயிற்றுனராக அந்தப் பள்ளியில் பணியாற்றத் தொடங்கினாா். 

     பாா்பியா் அறிமுகப்படுத்திய முறையினை லூயி பிரெயில் ஆறு புள்ளிகளாகக் குறைத்தது, பாா்வையற்றோா் வேகமாகப் படிக்க ஏதுவாக இருந்தது. புள்ளிகள் சாா்லஸ் பாா்பியா் அறிமுகப்படுத்திய ரோமானிய எழுத்துக்களைப் போல இல்லாமல் பாா்வையற்றவா்களுக்கு ஏற்றதாக இருந்தது.

      தற்போது தொழில் நுட்ப வளா்ச்சியால், இயந்திர பிரெய்லி எழுத்துக்கள், மின்னணு பிரெய்லி குறிப்புக்கள், மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 


      லூயிஸ் பிரெய்லி கண்டுபிடித்த, பிரெய்லி எழுத்துமுறை, அவர் பிறந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல் இன்று ஒட்டுமொத்த உலகிலும் இருக்கும் பார்வையற்றோர் அனைவருக்கும் ஒரு வரமாக அமைந்திருப்பதை யாரும் மறுக்க இயலாது!

2 ஜனவரி, 2022

தேசிய அறிவியல் புனைகதை தினம் (National Science Fiction day)

 அறிவியல் புனைவுகதைகள், நம்மை ஆச்சரியப்படுத்தி, அறிவை விரிவாக்கி, நம் கற்பனைத்திறனின் எல்லையை விரிவாக்குபவை


         தேசிய அறிவியல் புனைகதை தினத்திற்காக, ஜனவரி 2 தேர்ந்தெடுக்கப்பட்டது தற்செயலானது அல்ல. 400 க்கும் மேற்பட்ட அறிவியல் புனைகதை படைப்புகளை எழுதிய பிரபல அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோவின் பிறந்த தேதி என்பதால் தான். அவர்  ‘அறிவியல் புனைகதை’ ( Science Fiction) இலக்கியத்தின் பல்வேறு பகுதிகளைத் தொட்டவர். 

ஐசச் அசிமோவ்
      பெரும்பாலான மக்கள் அவர்கள் விரும்பும், ஏதேனும் ஒரு பகுதியை புனைகதைகளுக்குள் கண்டுபிடிக்க முடியும். அறிவியல் புனைகதைகளில், E.T. the Extra-Terrestrial போன்ற வேற்றுக்கிரக வாசிகளுடன், விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட கதைகள் அடங்கும். 


E.T. the Extra-Terrestrial 

Starwars போன்ற விண்வெளிப் போர்கள். H. G. Wells போன்றோரின் புகழ்பெற்ற புத்தகங்கள், The Time Machine அல்லது The Doctor Who Franchise போன்ற காலப் பயணங்களும் இந்த வகையை உள்ளடக்கியிருக்கலாம். சூப்பர் ஹீரோத் திரைப்படங்கள் கூட, அறிவியல் புனைகதைகளை உள்ளடக்கியவை.

எச்.ஜி.வெல்ஸ்

      எனவே, அறியப்படாதவற்றாலும், எதிர்காலத்தில் விஞ்ஞானம் எதைக் கொண்டு வர முடியும் என்பதற்கான சாத்தியக் கூறுகளாலும் நீங்கள் ஈர்க்கப்பட்டால், நீங்கள் அறிவியல் புனைகதைகளின் ரசிகராக இருக்கலாம் அல்லது ஏற்கனவே இருந்திருக்கலாம். 

The Doctor Who Franchise

       அதனால்தான் இந்த வித்தியாசமான புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் கொண்டாட தேசிய அறிவியல் புனைகதை நாள் சரியான நாளாகும். 


    ஒவ்வொரு நாளும் அதன் கதைகளை நுகரும் அளவுக்கு நீங்கள் அறிவியல் புனைகதையை விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இந்தச் சிறப்பு நாள் உங்கள் கற்பனையைத் தூண்டுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு! அறிவியல் புனைகதைகள் வெறும் கற்பனைகள் அல்ல. எதிர்காலத்தில் உண்மையாகவும் வாய்ப்புள்ளவை. 

     எனவே அறிவியல் புனைகதைகளைப் படித்தும் , அவற்றின் அடிப்படையில் உருவாகும் திரைப்படங்களைக் கண்டும், நம் அறிவை விசாலப்படுத்துவோம்.

1 ஜனவரி, 2022

DRDO அமைப்பு தினம்

 



      ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி 1 அன்று, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation - DRDO) அதன் நிறுவன தினத்தை இன்று அனுசரிக்கிறது. 

     டிஆர்டிஓ -1958 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்காக வெறும் 10 ஆய்வகங்களுடன் நிறுவப்பட்டது மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கான அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது. 

     இன்று, டிஆர்டிஓ பல அதிநவீன இராணுவ தொழில்நுட்பப் பகுதிகளில் பணிபுரிகிறது, இதில் ஏரோநாட்டிக்ஸ், பாதுகாப்பிற்கான ஆயுதங்கள், போர் வாகனங்கள், மின்னணுவியல், கருவிகள், பொறியியல் அமைப்புகள், ஏவுகணைகள், பொருட்கள், கடற்படை அமைப்புகள், மேம்பட்ட கணினி, உருவகப்படுத்துதல், சைபர், உயிர் அறிவியல் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கும். 

    கோவிட் தொற்றுக்காலத்தின் போது டிஆர்டிஓவின் பங்களிப்பு மறக்க இயலாதவை. இந்தியாவில் கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க, கிட்டத்தட்ட 40 டிஆர்டிஓ ஆய்வகங்கள் 50 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களையும், 100 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளையும் போர்க்கால அடிப்படையில் உருவாக்கியுள்ளன. 

   PPE கருவிகள், சானிடைசர்கள், முகமூடிகள், UV-அடிப்படையிலான கிருமிநாசினி அமைப்புகள், ஜெர்மி க்ளீன் மற்றும் வென்டிலேட்டரின் முக்கியமான பாகங்கள் ஆகியவை மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் வென்டிலேட்டர் உற்பத்திக்கு வழிவகுத்தன. மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக டிஆர்டிஓ குறுகிய காலத்தில் டெல்லி, பாட்னா மற்றும் முசாபர்பூரில் மூன்று பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளை நிறுவியது. 


   மொபைல் வைராலஜி ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகம் (MVRDL) கோவிட்-19 ஸ்கிரீனிங் மற்றும் R&D நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக பல்வேறு இடங்களில் கோவிட் பரிசோதனை திறன்களை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

அர்ஜுன் டாங்க்

     அர்ஜுன் (Arjun MBT)) இந்தியாவின் டி. ஆர். டி. ஒ நிறுவனம் இந்திய தரைப்படைக்காக உருவாக்கிய ஒரு கவச வாகனமாகும் (டாங்கு). இது மகாபாரதத்தில் வரும் அர்சுனன் என்னும் கதாப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கபடுகிறது. இதன் உச்ச வேகம் 70 கி.மி. ஆகும். இந்திய ராணுவம் 2000ஆவது ஆண்டில் 124 அர்ஜுன்களை டி. ஆர் டி ஒ விடம் கோரியது. இது சென்னையில் உள்ள ஆவடி கவச வண்டிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இதன் உருவாக்கம் பல்வேறு தாமதங்களையும் பல தோல்விகளையும் தாண்டி வந்தது ஆகும். இது இந்திய ராணுவத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள டி-90 என்னும் கவச வாகனத்திற்கு பதிலாக எதிர்காலத்தில் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இன்று  எதிரிகளின் டாங்கிகளை அழிக்கும்  வகையில் அர்ஜூன் டாங்கியில் (எம்பிடி) லேசர் வழிகாட்டும் ஏவுகணையை (ஏடிஜிஎம்) பொருத்தி வெற்றிகரமாக சோதனை செய்தது. 

நாக் ஏவுகணை
     மக்களின் மனங்கவர்ந்த, அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார் என்பது நினைகூரத்தக்கது.


     இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்குப் பின்புலமாக இருந்து,நம் நாட்டை வலிமையாக்கும் இவ்வமைப்பின் பணிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளைச் சமர்ப்பிக்கிறோம்.


பிரபலமான இடுகைகள்