8 ஜனவரி, 2022

ஸ்டீவன் ஹாக்கிங் பிறந்த நாள்

         "வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!" 

    என்னும் தன்னம்பிக்கைச் சொற்றொடருக்கு உரிமையாளரான ஸ்டீவன் ஹாக்கிங் பிறந்த நாள் இன்று.மேல் வரிசையில் பற்கள் கிடையாது. கீழிருக்கும் சில பற்கள் மேல் உதட்டை அழுத்தி வெளிவந்து நிற்கும். தலை, வலது பக்கம் சாய்ந்திருக்கும். 

        நெற்றியை அதிகம் மறைக்காத கேசம். கேமராவும் சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி. கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட வீல் சேர். மிகக் குறைவான எடைகொண்ட பொட்டலமாய், சுருண்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவம். கன்னத்தில் சில தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்துபோய்விட்டன. 

            எந்தவொரு மனிதனும் வாழவே முடியாத சூழல். ஆனால், அளப்பறிய சாதனைகளோடு சரித்திரம் படைத்த ஓர் அதி அற்புதன். இவ்வளவு வலிகளையும் கடந்து அவர் சிரிப்பார். எலும்போடு ஒட்டியிருக்கும் அவரின் கன்னத் தசைகள் சிறிய அசைவைக் கொடுக்கும். அது அத்தனை அழகாய் இருக்கும். உலக அண்டவியல் ஆராய்ச்சியின் அறிவு - அழகன் ஸ்டீபன் ஹாக்கிங்.

            ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்குப் பிறகு பெரிதும் புகழ்பெற்ற விஞ்ஞானி யார் என்று கேட்டால் ஸ்டீவன் ஹாக்கிங் பெயரைத்தான் சொல்ல முடியும். 1942 ஜனவரி 8 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். ஆக்ஸ்ஃ போர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் என தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படித்தார். ஆராய்ச்சி மாணவராக இருக்கும்போது ‘ஆமியோட்ராஃபிக் லேட்டரல் ஸ்கிலரோஸிஸ்’ (Amyotrophic Lateral Sclerosis - ALS ) என்ற நோய்த் தாக்குதலுக்கு ஆளானார்.ஒரு கட்டத்தில், பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில், 'ஈக்வலைஸர்' என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு வெளியுலகத்தோடு தொடர்பு கொண்டிருந்தார். 

            தசை-நரம்புகளின் கட்டுப்பாட்டை இழந்ததால் குறுகிய காலத்தில் அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். அப்போது அவருக்கு 21 வயது. ஆனால், அதன் பிறகு 55 ஆண்டுகள் வாழ்ந்தார். அறிவியல் உலகின் போக்கையே மாற்றினார்.கருந்துளைகளைப் பற்றிய கருத்தாக்கங்களில் மிகச் சிறந்த பங்களிப்புகளை ஆற்றினார்.

            இவர் எழுதிய "எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" ( A Brief History of Time) என்ற புத்தகம், தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரபஞ்சவியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கருதப்படுகிறது. 

                தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விமானமொன்றில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையில்லாத நிலையை உணர்ந்தார். அண்டார்க்டிகா உட்பட அனைத்துக் கண்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். விஞ்ஞானி என்பதைத் தாண்டி அறிவியல் சிந்தனை, கற்பனாசக்தி, தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கான முன்னுதாரணம் ஹாக்கிங்.

            " நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். இந்தப் பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகரவேண்டிய காலகட்டம் இது. மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது.நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன் " என உறுதிபடக் கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கைக் காலன் வென்றுவிட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...