உலக இரத்தக் கொடையாளர் தினம்
(ஜூன் 14)
"ஒரு சொட்டு மனிதாபிமானம் — இரத்தம் கொடுத்து, உயிரைக் காப்போம்"
கார்ல் லான்ஸ்டைனர் என்ற அறிவியலாளரின் பிறந்த நாள் ஏன் சிறப்பானது?
ஜூன் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக இரத்தக் கொடையாளர் தினம், நோபல் பரிசு வென்ற ஆஸ்திரிய அறிவியலாளர் கார்ல் லான்ஸ்டைனரின் பிறந்த நாள் ஆகும். ABO இரத்த வகை அமைப்பை கண்டுபிடித்த இவரது கொடை, நவீன இரத்தமாற்று மருத்துவத்தின் அடித்தளமாக விளங்குகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO), சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச இரத்தமாற்று சமூகம் ஆகியவற்றின் இணைந்த முயற்சியால் 2004 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஊதியமின்றி தன்னார்வமாக இரத்தம் கொடுக்கும் கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதும், பாதுகாப்பான இரத்த வழங்கல் முறையை உலகெங்கும் வலுப்படுத்தவேண்டும் என்ற அழைப்பை விடுப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.
2026 ஆண்டின் சிறப்புக் கருப்பொருள்
இந்த ஆண்டின் மையக் கருத்து: "One Drop of Humanity — Give Blood, Save Lives" — ஒவ்வொரு இரத்தக் கொடையும் மனித உயிர்களைக் காப்பாற்றுகிறது; சமூகங்களை வலுப்படுத்துகிறது; நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சுகாதார அமைப்புகளை உருவாக்குகிறது என்ற செய்தியை உலகிற்கு அனுப்புகிறது.
உலகளாவிய தரவுகள் என்ன சொல்கின்றன?
WHO வெளியிட்ட Global Status Report on Blood Safety and Availability 2025 அறிக்கையின்படி, 168 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் 2013 முதல் 2023 வரையிலான ஒரு தசாப்தத்தில் உலக இரத்தச் சேகரிப்பு 19 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டு மட்டும் உலகளவில் 12 கோடி இரத்தக் கொடைகள் பெறப்பட்டன; இவற்றில் 85 சதவீதத்திற்கும் அதிகமான கொடைகள் தன்னார்வக் கொடையாளர்களிடமிருந்தே வந்தன.
ஒரு யூனிட் இரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றும் ஆற்றல் கொண்டது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. பிரசவத்தில் அதி ரத்தப் போக்கு ஏற்படும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான இரத்த சோகை, விபத்தில் காயம்பட்டவர்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுவோர், தலசீமியா நோயாளிகள் — இவர்கள் அனைவருக்கும் இரத்தமே உயிர்மூச்சு.
இந்தியாவின் நிலைமை — முன்னேற்றமும் சவாலும்
இந்தியாவில் 2023 இல் 1.26 கோடி யூனிட்கள் சேகரிக்கப்பட்டிருந்தது; 2024 இல் 1.46 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது — இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி. தன்னார்வக் கொடைகள், மொத்த சேகரிப்பில் 74.55 சதவீதமாக உள்ளன. தேசிய அரிய இரத்தக் கொடையாளர் பதிவேடு (RDRI) 300க்கும் அதிகமான அரிய இரத்த அடையாளங்களுக்கு சோதிக்கப்பட்ட 4,000 கொடையாளர்களை பதிவு செய்துள்ளது; இந்தப் பதிவேடு e-RaktKosh தளத்துடன் இணைக்கப்படும்போது நாடு முழுவதும் சரியான இரத்தம் சரியான நோயாளிக்கு விரைவாகக் கிடைக்கும்.
எனினும் சவால்கள் இன்னும் உள்ளன. இந்தியாவில் இரத்தக் கொடை வீதம் 0.8 சதவீதமாக உள்ளது — WHO பரிந்துரைக்கும் 1 சதவீதத்தை விட குறைவு. வருடாந்திரத் தேவையான 1.5 கோடி யூனிட்களுக்குப் பதிலாக, 1.1 கோடி யூனிட்களே சேகரிக்கப்படுகின்றன; 40 லட்சம் யூனிட் பற்றாக்குறை நிலவுகிறது. வளரும் நாடுகள் உலக மக்கள்தொகையில் 82 சதவீதம் கொண்டிருந்தாலும், உலக இரத்த வழங்கலில் வெறும் 39 சதவீதத்தையே பங்களிக்கின்றன என்று WHO தரவுகள் காட்டுகின்றன.
இரத்தக் கொடை — உடலுக்கு நல்லதா? 👌
இரத்தக் கொடையால் உடலுக்கு தீங்கு என்று பலர் தவறாக நம்புகின்றனர். உண்மை இதோ 👇
- ஒருவர்
கொடுக்கும் 350–450 மி.லி. இரத்தம் 48 மணி நேரத்தில் உடலால் மீட்கப்படும்.
- சிவப்பணுக்கள் 4 முதல் 6 வாரங்களில் புதுப்பிக்கப்படும். மேலும் இரத்தக் கொடை
இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
- இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சமப்படுத்தி
இதயநோய் அபாயத்தை குறைக்கும்.
- ஆண்டுதோறும் இலவச இரத்த பரிசோதனையும் கிடைக்கும்.
- 18 முதல் 65 வயது வரை, 45 கிலோவிற்கு மேல் எடை உள்ளவர்கள், ஆண்கள் 3 மாதத்திற்கு ஒருமுறையும், பெண்கள் 4 மாதத்திற்கு ஒருமுறையும் கொடுக்கலாம்.
தமிழகம் எங்கே நிற்கிறது?
தமிழ்நாட்டில் TANSACS, தமிழ்நாடு இரத்தமாற்று சேவை, IRCS போன்ற அமைப்புகள் தீவிரமாக செயல்படுகின்றன. e-RaktKosh போர்டல் மூலம் இரத்தக் கிடைப்பிடத்தை இணையத்தில் கண்காணிக்க முடிகிறது. Helpline 104 மூலம் இரத்தம் தேவைப்படுவோர் உதவி பெறலாம். இருப்பினும் கிராமப்புற பகுதிகளில் விழிப்புணர்வு இன்னும் போதுமான அளவில் இல்லை என்பதே உண்மை.
முன்னேற வேண்டிய பாதை
புதிய கொடையாளர்களையும், பழைய கொடையாளர்களையும் தொடர்ந்து இரத்தம் கொடுக்க ஊக்குவிப்பது மட்டுமே நிலையான இரத்த வழங்கலை உறுதிசெய்யும். ஆண்டு முழுவதும் தன்னார்வக் கொடை நடைபெறும் கலாச்சாரத்தை உருவாக்குவதும், நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, சரியான இரத்தம், சரியான நோயாளிக்குக் கிடைக்கும்படி செய்வதும் இப்போது மிக அவசியம்.
ஒரு முறை இரத்தம் கொடுக்கும் பழக்கம் வந்துவிட்டால், அது வாழ்நாள் கொடையாகி விடும். நம்மில் ஒவ்வொருவரும், ஆண்டில் மூன்று அல்லது நான்கு முறை மட்டும் கொடுத்தாலே போதும் — இந்தியாவில் இரத்தப் பற்றாக்குறை என்பதே மறைந்துவிடும்.
"இரத்தம் வழங்கி, உயிரைக் காப்பாற்றுவோம்!"


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக