30 ஜூன், 2026

NATIONAL DOCTORS DAY - JULY 1

 


💊 Pill, Emoji by Samsungஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம்💊 Pill, Emoji by Samsung

 🩺 Stethoscope, Emoji by SamsungNATIONAL DOCTORS DAY💉 Syringe, Emoji by Samsung

          "ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்பார்கள். ஆனால் இன்றோ மருத்துவர்கள் இல்லையென்றால் பல கோடி மக்களின் வாழ்வே துன்பமயமாகிவிடும்.

          சமூகத்தில், மருத்துவர்களின் முக்கியப் பங்கை
நிரூபிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி இந்தியா முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

          இந்த நாள் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதலமைச்சரும், புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்கள் ஜூலை 1, 1882 அன்று பிறந்தார். அதே நாளில்தான், 1962ஆம் ஆண்டு அவர் காலமானார்.

          மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய தொண்டையும், நாட்டுக்கு அவர் செய்த பணிகளையும் போற்றும் விதமாக, 1991ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு இந்நாளை மருத்துவர்கள் தினமாக அறிவித்தது.

          மருத்துவர் என்ற பணி வெறும் வேலை அல்ல; அது ஒரு வாழ்க்கை நெறிமுறை. நோயாளியின் வலியை தன் வலியாக உணர்ந்து, இரவு பகலாக உழைப்பது, அவசர காலங்களில் தூக்கத்தைத் தியாகம் செய்வது, புதிய நோய்களை எதிர்கொள்ள தொடர்ந்து கற்றுக்கொள்வது என மருத்துவர்களின் பணி பன்முகத்தன்மை கொண்டது.          

        கோவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டத்தில், தங்கள் உயிரையே பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றிய மருத்துவர்களின் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

          இந்நாளின் முக்கிய நோக்கம், மருத்துவர்களின் சேவையை பாராட்டுவதோடு, பொது சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும். மருத்துவர்-நோயாளி உறவில் நம்பிக்கையை வலுப்படுத்துவதும், மருத்துவத் தொழிலை நோக்கி இளைஞர்களை ஈர்ப்பதும் இந்நாளின் முக்கிய இலக்குகளாகும்.

         
கிராமப்புறங்களில் போதிய வசதிகள் இல்லாமலும், நகரங்களில் அதிக பணிச்சுமையுடனும் பணியாற்றும் மருத்துவர்களின் சவால்களைப் பற்றிச் சிந்திக்கவும் இந்நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

          ஒரு நல்ல மருத்துவர் என்பவர் , அறிவியல் அறிவோடு மட்டுமல்லாமல், மனிதநேயத்தோடும் செயல்படுபவர். நோயாளியின் மனநிலையைப் புரிந்து, ஆறுதல் வார்த்தைகளால் தைரியம் ஊட்டுவதே உண்மையான மருத்துவரின் கடமை. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட மருத்துவர்களைக் கௌரவிக்கும் இந்நாளில், அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்போம்.

          நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – இருப்பினும் நோய் வந்தபிறகு, உயிர்,உடல் எனும் செல்வங்களைக் காக்க மருத்துவரை நாடிச் செல்வதே அறிவுடைமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்