28 ஜூன், 2026

INTERNATIONAL DAY OF THE TROPICS 2026

 


சர்வதேச வெப்ப மண்டல தினம் ஜூன் 29, 2026
(
INTERNATIONAL DAY OF THE TROPICS)

வெப்ப மண்டலம்: பூமியின் உயிர்த்துடிப்பு

            பூமியின் இதயம் என்று அழைக்கப்படும் வெப்ப மண்டலப் பகுதிகளின் சிறப்பை உலகுக்கு உணர்த்தவும், அவை எதிர்கொள்ளும் சவால்களை முன்வைக்கவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29 அன்று சர்வதேச வெப்ப மண்டல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

            ஐக்கிய நாடுகள் சபை 2016-ஆம் ஆண்டு தீர்மானம் A/RES/70/267 மூலம் இந்நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2014 ஜூன் 29 அன்று வெளியிடப்பட்ட முதல் 'வெப்ப மண்டல நிலை அறிக்கை'யின் நினைவாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வெப்ப மண்டலம் என்றால் என்ன?

           
     
வெப்ப மண்டலம் என்பது, புவியின் கக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையே அமைந்துள்ள பகுதி. இப்பகுதி உலகின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 40% ஆகும். உலகின் உயிரினப் பல்வகைமையில் சுமார் 80% இங்கே காணப்படுகிறது. உலகின் சதுப்பு நிலக் காடுகளில் 95% இப்பகுதியில்தான் உள்ளன. லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தென் ஆசியா, பசிபிக் தீவுகள் என்று பரந்து விரியும் இப்பகுதிகள் இல்லாமல் உலகின் இயற்கைச் சுழற்சியே சாத்தியமில்லை.

நம் தமிழ்நாடும் இந்த வெப்ப மண்டலத்தின் ஓர் அங்கம் என்பது நம் பெருமை.

நிலை அறிக்கையின் பிறப்பு

            2014 ஜூன் 29 அன்று வெளியிடப்பட்ட 'வெப்ப மண்டல நிலை அறிக்கை',  12 முன்னணி வெப்ப மண்டல ஆராய்ச்சி நிறுவனங்களின், 3 ஆண்டு கூட்டு முயற்சியின் விளைவு. இதை , மியான்மரின் நோபல் பரிசு பெற்ற அங் சான் சூயி அறிமுகப்படுத்தினார். இந்த அறிக்கை, சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம் என்ற மூன்று கண்ணோட்டங்களில் வெப்ப மண்டலப் பகுதிகளை ஆய்வு செய்து, உலக கவனத்தை இங்கே திருப்பியது.

சவால்கள்: தொடரும் அச்சுறுத்தல்கள்

            வெப்ப மண்டலங்களில், காட்டை அழிப்பது, நகரமயமாதல், மக்கள்தொகைப் பெருக்கம், தட்பவெப்பநிலை மாற்றம் ஆகியவை கூட்டாக நெருக்கடியை அதிகரிக்கின்றன. 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையின் பெரும்பகுதி வெப்ப மண்டல நாடுகளில் வசிக்கும், ஆனால் அதே நேரத்தில், இங்கே வறுமையும் ஊட்டச்சத்துக் குறைபாடும் அதிகமாக இருக்கும். வெப்ப மண்டலக் காடுகள் கார்பனை உள்வாங்கி, வானிலையை ஒழுங்குபடுத்தும் இயற்கை உள்கட்டமைப்பாகச் செயல்படுகின்றன. இவை அழியும்போது, அந்நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் விளைவுகள் பரவுகின்றன.

நீதியின் குரல்


            காலநிலை மாற்றத்திற்கு மிகக் குறைவாக காரணமான வெப்ப மண்டல நாடுகளே, அதன் விளைவுகளை மிகவும் கடுமையாக அனுபவிக்கின்றன. இது ஓர் அநீதி ; ஓர் உலகளாவிய அக்கறையின்மை. இந்த ஏற்றத்தாழ்வை உணர்ந்து, உலகின் வல்லரசுகளும் பன்னாட்டு அமைப்புகளும் வெப்ப மண்டல நாடுகளுக்கு நிதி, தொழில்நுட்பம், கொள்கை ஆதரவு வழங்க வேண்டும்.

நாம் என்ன செய்யலாம்?

            சர்வதேச வெப்ப மண்டல தினம் வெறும் நினைவு தினம் மட்டுமல்ல செயல்பாட்டு அழைப்பும்கூட. மரங்களை வளர்ப்பது, காடு அழிப்பை எதிர்ப்பது , நிலையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது, இளையோருக்கு வெப்ப மண்டல உயிரினங்களின் முக்கியத்துவத்தைக் கற்பிப்பது இவை எல்லாம் நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யக்கூடிய பங்களிப்புகள். 

                           
#TropicsDay #DayOfTheTropics2026,             #DayOfTheTropics, #வெப்பமண்டலதினம்

என்ற சமூக ஊடக
க் குறிச்சொற்களால் விழிப்புணர்வைப் பரப்பலாம்.

            இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு, வெப்ப மண்டலப் பகுதியின் அங்கமாக இருப்பதால் நம் மண்ணின் உயிர்ப்பைக் காக்கும் பொறுப்பு நமக்கும் உண்டு. சர்வதேச வெப்ப மண்டல தினம் நம்மை அந்தப் பொறுப்புணர்வுடன் விழிப்படையச் செய்யட்டும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக