3 மார்ச், 2022

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்தநாள்

      அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக , இவர் கொண்டாடப்படுகிறார்.


     தனது இளமைப் பருவத்தில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்." இவரது தாயாரும் மனைவியும் செவிப்புலன் குறைவுடையவர்கள். இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

     கிரகாம்பெல்லின் கடந்த கால அனுபவம்தான் டெலிபோனை உருவாக்கப் பயன்பட்டது. இவர் 1874ல் இரும்பு மற்றும் காந்தத்தை பயன்படுத்தி ஒரு மின்சுற்றை உருவாக்கி, பின் மின்சாரம் இல்லாமல் காந்தத்தை பயன்படுத்தி ஒலியை அதிர வைத்தார்.

     1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்."(Watson, come here, I want to see you) என்பதுதான். இந்தச் சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

      ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்

       பெல்லுக்குப் புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு, மிக விரைவிலே அவர் பிலடெல்பியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்பிற்குப் பரிசும் கிடைத்தது. எனினும், இந்த கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,000,000 டாலருக்கு ‘Western union telegraph company’ என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோதும், அதை வாங்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. 

       அதனால் பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு, தங்களுடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இதுதான் இன்றைய ‘அமெரிக்க Telephone மற்றும் Telegraph company’ இன் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாக பெருமளவில் வணிகமுறையில் வெற்றிகிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப்பெரிய தனியார் வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.

      இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி நாம் பேசும் ஒலிஅலைகளை, காந்த அலைகளாக மாற்றி, மீண்டும் ஒலியாக மாற்றினார். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டெலிபோனை உருவாக்கினார். கிரகாம்பெல் வாழ்க்கை குறிப்பு:-

* 1876ல் டெலிபோன் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்றார்.

* 1877ல் “பெல் டெலிபோன்’ கம்பெனியை உருவாக்கினார்.

* 1879ல் இது பிரிட்டன் டெலிபோன் நிறுவனத்துடன் இணைந்தது.

* 1880ல் “அமெரிக்கன் பெல் டெலிபோன் கம்பெனி’ என மாற்றப்பட்டது.

* 1881 ஜனவரியில், 25 தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் பெல் இணைந்து ஓரியன்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.

* 1922 இல் கனடாவில் உள்ள நோவல் நகரில் கிரகாம்பெல் இறந்தார்.

     தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சியைக் கைவிடவில்லை. வேறு பல சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டுடிருந்தார். 

        1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்க குடிமகன் ஆனார். கிரகம்பெல் தனியாக மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களைக் கண்டுபிடித்தார். 

உலகக் காட்டுயிர் தினம் (World Wildlife Day)

      அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவர இனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வோராண்டும், மார்ச் 3 அன்று உலகம் முழுவதும் உலகக் காட்டுயிர் தினம் (World Wildlife Day) அனுசரிக்கப்படுகிறது. 

    2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஐ. நா நடத்திவருகிறது.

       காட்டுயிர்களைச் சுரண்டுவது என்பது 130.000 – 70.000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் வெளியேறிய காலத்தில் இருந்தே மனிதனின் குணவியல்பாக இருந்துவருகிறது. உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களின் அழிவு விகிதம் கடந்த சில நூறு ஆண்டுகளாக மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனால் நாம் இந்த உலகில் ஹோலோசீன் பெருமளவு அழிவு எனப்படும். 

      ஆறாவது பெரும் அழிவு நிகழ்வில் இருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. காட்டுயிர் அழிப்பு எப்பொழுதும் குறிப்பிட்ட இனங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதில்லை. எனினும் பூமி முழுவதும் எண்ணற்ற இனங்களின் குறிப்பிடத்தக்க இழப்பு, காட்டுயிரை அழித்தலின் திறனாய்வில் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. 

    திரும்பக்கிடைக்காத வன எண்ணிக்கைகளுக்கு சேதம் விளைவித்தலின் நிலையாக இந்த அழிவு இருக்கிறது. அதிகப்படியாகக் கொல்லுதல், இருப்பிடத்தை அழித்தல் மற்றும் துண்டாக்குதல், அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களின் தாக்கம் மற்றும் தொடர் அழிவு உள்ளிட்ட நான்கு மிகவும் பொதுவான காரணங்கள் காட்டுயிரை அழித்தலுக்கு வழிவகுக்கின்றன.

     காட்டில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் அதனைச் சுற்றி வாழும் மற்ற உயிர்களுடன் உட்சுற்றுப் பிணைப்பைக் கொண்டுள்ளன. நீர்யானை போன்ற பெரிய தாவர உணவு உண்ணி விலங்குகளில், நீர் யானையில் வளரும் பல ஒட்டுண்ணி பூச்சிகளை பூச்சியுண்ணுகின்ற பறவைகள் உணவாக உட்கொள்கின்றன. இந்த நீர்யானையானது இறப்பதற்கும் கூட இந்தப் பறவைகளின் கூட்டம் காரணமாகிவிடுகிறது. 

       மேலும் இது பறவைகளைச் சார்ந்திருக்கும் மற்ற இனங்கள் பாதிக்கப்படுவதன் மூலமாக தொடர்ந்து அழிவுக்கு வழிவகுக்கிறது. டோமினோ விளைவு எனவும் குறிப்பிடப்படும் இந்தத் தொடர் விளைவுகளின் தொடர்ச்சி, சூழ்நிலையியல் சமூகத்தில் ஏற்படக்கூடிய மிகவும் அழிவு ஏற்படுத்தக்கூடிய செயல்பாட்டிற்கு வெகுதொலைவில் இருக்கிறது. மற்றொரு எடுத்துக்காட்டாக இந்தியாவில் காணப்படும் இரட்டைவால் குருவிகள் மற்றும் உண்ணிக் கொக்குகள், கால்நடைகளின் உடல் மேற்பகுதியிலிருப்பவற்றை உண்கின்றன. 

     அதனால் அவற்றை கிருமி நீக்கம் செய்யப்பட்டவையாக இருக்க விடுகின்றன. ஒரு வேளை நாம் இந்தப் பறவைகளின் இருப்பிடங்களை அழித்தால் அதனால் கால்நடைகளின் எண்ணிக்கையில் இழப்பு ஏற்பட ஏதுவாகலாம். ஏனெனில் அவற்றால் சில நோய்கள் பரவ வாய்ப்பு ஏற்படலாம். பாம்புகளை அழிப்பதால்,எலிகளின் எண்ணிக்கை பெருகி, உணவுப்பஞ்சம் ஏற்படலாம். பறவைகளைக் கொல்வதால், பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.தவளைகளின் அழிவு கொசுக்களின் எண்ணிக்கைப் பெருக்கம்.


    எனவே உயிர்களுக்கிடையே உள்ள பிணைப்பு, உணவுச் சங்கிலியின் இன்றியமையாமை ஆகியவற்றை அறிந்து., வன உயிர்களைக் காப்பது இப்பூவுலகில் வாழும் ஒவ்வொருவரின் கடமையாகிறது.


1 மார்ச், 2022

தினமணி ஏ.என்.சிவராமன்

 தினமணி ஏ.என்.சிவராமன்

    சிவராமன் திருநெல்வேலி மாவட்டத்துக்காரர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள ஆம்பூர் இவரது சொந்த ஊர். இவர் ஆரம்பக் கல்வியை எர்ணாகுளத்தில் பயின்றார். பின்னர் தம் சொந்த ஊரான ஆம்பூருக்குக் குடிபெயர்ந்து, உயர்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்றபோது, அப்போது மகாத்மா காந்தி சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் (1921) கலந்து கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். மகாத்மாவின் அழைப்பை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அதனால் அவருக்கு பதினெட்டு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதன் காரணத்தால் அவருடைய கல்லூரி படிப்பு தடைப்பட்டது.

    சிறைத் தண்டனைக்குப் பின் சிவராமன் முன்னணி தமிழ் பத்திரிக்கையாளரான டி. எஸ். சொக்கலிங்கத்தின் தலைமையில் 'காந்தி' பத்திரிகையில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் ராஜாஜியின் வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்காக பத்திரிக்கை வேலையை கைவிட்டார். மீண்டும் சிறை சென்ற சிவராமன் இருபது மாதங்களில் விடுதலையானார். விடுதலையான சிவராமன் 'காந்தி ' பத்திரிக்கையில் மறுபடியும் பணியில் சேர்ந்தார்.    

    1934 ஆம் ஆண்டு தினமணி இதழ் ஆரம்பிக்கப்பட்ட போது, சொக்கலிங்கம் ஆசிரியராகவும் ஏ.என்.சிவராமன் உதவி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தார்கள். 1944 இல் சொக்கலிங்கம் தினமணியை விட்டு வெளியேறியபோது, ஏ.என்.சிவராமன் தினமணியின் ஆசிரியராக ஆனார். அதன் பின்னர் தொடர்ந்து 44 ஆண்டுகள் 1987 வரை, தினமணி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

    'கணக்கன்', 'ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி', 'குமாஸ்தா', 'அரைகுறை வேதியன்', ‘அரைகுறை பாமரன்(அகுபா) போன்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார்.

    தீவிர காங்கிரஸ்காரர், மேலும் காமராசரின் பற்றாளராகத் திகழ்ந்தார். இருந்தபோதும், 1967 தேர்தலை ஒட்டிய காலகட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக சிவராமன் எழுதிய கட்டுரைகள் ஆட்சி மாற்றத்திற்கு உதவியதாக அறிஞர் அண்ணாதுரை குறிப்பிட்டிருக்கிறார்.

    மொழிகளைக் கற்பதிலும், புத்தக வாசிப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட சிவராமன் தனது 93ஆவது வயதில் புதுக்கல்லூரி பேராசிரியர் உதவியுடன் அராபிய மொழியையும் கற்றிருக்கிறார்.

    பத்திரிக்கையாளனாக இருப்பதற்கு விருது இடையூறாக இருந்து விடக்கூடாதென்பதற்காக நடுவண் அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் ஆகியவற்றை ஏற்க மறுத்து விட்டார். ஆனால், திருக்கோவிலூரில் 'கபிலர் விருதை'யும், பத்திரிக்கைப் பணியை பாராட்டி அளிக்கப்பட்ட பி.டி.கோயங்கோ (1988) விருதையும், அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற விருதையும் (நிறுவியவர் வா.செ.குழந்தைசாமி) ஏற்றுக் கொண்டார்.

    இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் ஆக்கப் பணி விருதைப் பெற்றுள்ளார்.

படைப்புகள்

சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயம்

ரஷ்யப்புரட்சி 17 ஆண்டு அனுபவம்

இந்தியாவின் வறுமை பற்றி கணக்கன் ஆராய்ச்சி

அப்பல்லோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்

சுதந்திரப் போராட்ட வரலாறு

மேற்கோள்கள்

28 பிப்ரவரி, 2022

தேசிய அறிவியல் நாள்

     சர்.சி.வி. ராமன் தன்னுடைய புகழ்மிக்க 'ராமன் விளைவு' குறித்து 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி உலகிற்கு அறிவித்த நாள். அவரின் இந்தக் கண்டுபிடிப்புக்கு 1930 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் நாளாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 

     ''ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்'' என்ற ராமன் சிறுவயதில், அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார். 

     மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன. 

     இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார்.

     ஒருநாள், 'பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, 'இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்து,  முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார். 

     அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். 

    இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, 'இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

     மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, 'கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன். இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். 'அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். 

    அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார். ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ''அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே'' என்பார். 

    அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார். ''கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ''கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே'' என்றார் ராமன். 

     ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். 

                                            அங்கே சென்றவர், 

''ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்"

                 என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

24 பிப்ரவரி, 2022

செல்வி. ஜெயலலிதா பிறந்தநாள்

 

    செல்வி. ஜெயலலிதா தமிழ்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

    எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாகவும் விளங்கினார். தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவர் ஜெ.ஜெயலலிதா.

    ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூரில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியைச் சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். 

    ஜெயலலிதா அவர்கள் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார்.

    ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் பிரசென்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். 

    ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பைக் கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

    அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ்p படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி வெற்றிப்படப்பட்டியலில் இடம் பெற்றன. நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது இயல்பான நடிப்பு பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

    1968 இல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். அரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசிப் படமாக 1980 இல் வெளியான  “நதியைத் தேடி வந்த கடல்” இருந்தது.

    அதே ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதா அவர்களை 1982 இல் பிரச்சாரச் செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரைத் திறம்பட இந்தியப் பாராளுமன்றத்தில் செயல்பட வழிவகுத்தது. நாடாளுமன்றத்தில் தன் ஆங்கிலப் புலமையால் பல தலைவர்களைக் கவர்ந்தார்.


    தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை தி.மு.க. நிறுவனரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணா அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர், அவர் தீவிரமாக அ இஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். அவர் அரசியலில், எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராகத் திகழ்ந்தார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிடச் செய்தது. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராகப் பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிரப் பங்கை வெளிப்படுத்தினார்.

    எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அ.இ.அ.தி.மு.க - வின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

    1991ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜெ. ஜெயலலிதா 1991 சூலை 24ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

    இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார். 

    தனது ”தொட்டில் குழந்தை” திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் பாராட்டைப் பெற்ற இந்தியாவைச் சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

விருதுகள்

‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக்கொடுத்தது.

சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.

‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு  சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.

தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கிக் கௌரவித்தது.

சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.

‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது.

சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.

கலைமாமணி விருது - தமிழ்நாடு அரசு (1972)

சிறப்பு முனைவர் பட்டம் - சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)

தங்க மங்கை விருது - பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்.


    2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ,75 நாள்களுக்குப் பிறகு காலமானார்.

22 பிப்ரவரி, 2022

தில்லையாடி வள்ளியம்மை நினைவு நாள்

 

    

    எதிரிகளை எதிர்ப்பதற்கு வயதோ, பாலினமோ, அனுபவமின்மையோ எதுவும் தடையே இல்லை என்று தம் வாழ்வின் மூலம் முன் உதாரணமாகத் திகழ்ந்தவர் தில்லையாடி வள்ளியம்மை. பதின்வயதில் வள்ளியம்மையின் தீரம் மிக்கச் செயல்பாடுகள் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரை நன்றியுடன் நினைவுகூரத்தக்கதாக விளங்குகின்றன. 

    தமிழகத்தின் புகழ்பெற்ற தரங்கம்பாடி அருகிலுள்ள சின்னக் கிராமம்தான் தில்லையாடி. அதுதான் வள்ளியம்மையின் பூர்வீகம். இவரின் முன்னோர்கள் தென் ஆப்பிரிக்காவில் குடியேறியவர்கள். தங்கச் சுரங்கங்களும், வைரச் சுரங்கங்களும் நிறைந்த ஜோகன்ஸ்பர்க் நகரில் முனுசாமி - மங்களத்தம்மாள் மகளாக, 1898 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அன்று பிறந்தவர் வள்ளியம்மை. எளிமையான குடும்பம் வள்ளியம்மையுடையது.

    அந்நியர் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த நாடு விடுதலை பெற எத்தனையோ பேர் தன்னலம் மறந்து தளராது உழைத்த காலம் அது. எவ்வளவு இன்னல் நேரிடினும், உயிரை இழந்தாலும் தாய்நாட்டின் விடுதலையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று போராடிக்கொண்டிருந்த காலம் அது. இந்த மனநிலை உலகம் முழுவதும் அடிமைப்பட்டிருந்த நாட்டு மக்களிடையே நிலவியது. அம்மாதிரியான தீரம் மிக்க மனோ திடத்துடன் இருந்தவர்களில் முக்கியமானவர் வள்ளியம்மை. 

    `இருண்ட கண்டம்' என்று கருதப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் பொன்நகரம் என்று அழைக்கப்படும் இடம் ஜோகன்ஸ்பர்க். ஒரு காலத்தில் மக்கள் நடமாட்டமின்றி காய்ந்த புல் தரையாகக் காட்சி அளித்தது. அங்கு, தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்பட்டதனால் வளம் கொழிக்கும் பூமியாக மாறியது. தங்கச் சுரங்கம் உலகத்தின் கவனத்தை ஈர்த்த இந்த ஜோகன்னஸ்பர்க் நகரத்தில்தான் நமது வரலாற்று நாயகி வள்ளியம்மை பிறந்ததும், படித்ததும்.

     தென் ஆப்பிரிக்காவில் குடியமர்ந்து அந்த நாட்டைப் பொன் விளையும் பூமியாக மாற்றிய இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம். அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பினால் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. சின்ன வயதிலேயே சமூக நடப்புகளைக் கூர்ந்து கவனித்து வந்த வள்ளியம்மையின் எண்ணமெல்லாம் நிறவெறி கொடுமையை எதிர்த்து அண்ணல் காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டத்தையே சுற்றிச் சுழன்றது. இந்திய மக்களுக்கு இன்னல் விளைந்த போதெல்லாம் வள்ளியம்மைக்கு அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் கனன்றுகொண்டிருந்தது.

    காந்தி, தனது சத்தியாகிரகப் போராட்டத்தின் உச்சகட்டமாக 1913 ஆம் ஆண்டு, எல்லைகளை அனுமதியின்றி தாண்டக் கூடாது என்ற விதிகளை மீறி நேட்டாலிலிருந்து டிரான்ஸ்வாலுக்குள் நுழைந்தார். அது அங்கு வாழ்ந்த மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. காந்தியுடன் சென்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களில் 16 வயதே ஆன வள்ளியம்மையும் ஒருவர். அந்தப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். 

    எந்தச் சூழலில் இதிலிருந்து விலகி விடக் கூடாது என்ற மனநிலையில் இருந்தார் வள்ளியம்மை. அந்தப் போராட்டத்தில் காந்தியடிகளில் மனைவி கஸ்தூரிபாயும் கலந்து கொண்டிருந்தார். இறுதியில், அன்னை கஸ்தூரிபாயுடன் கைதாகி பீட்டர்மாரிட்ஸ்பர்க் சிறையில் கடுங்காவலில் வைக்கப்பட்டார் வள்ளியம்மை. சிறையில், கடுமையான உழைப்பும் அரை குறைச் சாப்பாடும் வள்ளியம்மையின் உடல்நிலையை வெகுவாகப் பாதித்தது. ஆயினும் தன் உறுதியைக் கைவிட வில்லை. 

    சிறையில் சொற்களால் சொல்ல முடியாத துன்பங்களைச் சந்தித்த வள்ளியம்மை நோயாளியாக விடுதலையானார். அவருக்கு இன்ன நோய்தான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 16 வயதே ஆகியிருந்த வள்ளியம்மை, 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாளில் மரணமடைந்தார்.

15 பிப்ரவரி, 2022

கலிலியோ கலிலி பிறந்தநாள்

 

    கலீலியோ கலிலி  இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற வானியல் அறிஞர் ஆவார். இவர் ஒரு இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார்.

 தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல், சூரியப் புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

    பைசாவின் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று இவர் நிகழ்த்திய விழும் பொருள்கள் குறித்த ஆய்வு, பல காலமாக அரிஸ்டாட்டில் கூறிய கருத்தை உடைத்தது. “ஒரே நேரத்தில் கனமான பொருள் கனமில்லா பொருள் ஆகியவற்றை விழச்செய்யும்போது கனமான பொருள் முதலில் கீழே விழும், பின்னர்தான் கனமில்லா பொருள் கீழே விழும்” என்பது அரிஸ்டாட்டில் கூற்று. இவர் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று வெவ்வேறு நிறைகளையுடைய பொருள்களைக் கீழே விழச்செய்து, பொருள்கள் கீழே விழும் நேரத்திற்கும், அதன் நிறைக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.

    அவர் வாழ்ந்த காலம் வானியல், பூமி அமைப்பு என அறிவியல் துறைகள் அனைத்துமே மதத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. புதிய கோட்பாடு, புதிய எண்ணங்கள், புதிய கருத்துகள் எனப் புதிதாக யார் எதை முன்வைத்தாலும் அவை மதத்திற்கு எதிரானவை என அதனை முன்மொழிந்தோர் தண்டிக்கப்பட்டனர். பூமிதான் அண்டத்தின் மையம் என்றும் அதனைச் சுற்றித்தான் பிற கோள்கள் வலம் வருகின்றன என்று கூறப்பட்டு அது மத நம்பிக்கையாகவும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த புவிமையக்கோட்பாடு (ஜியோ சென்ட்ரிக்)தான் பல நூற்றாண்டுகளாகக் (கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள்) பின்பற்றப்பட்டு வந்தது.

    3 ஆம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் என்கிற கிரேக்க வானியலாளர் முதன்முதலாகப் புவி சூரியனைச் சுற்றிவருகிறது என்று தன் கோட்பாட்டை முன்வைத்தார், ஆனால், அது அப்போது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் கோபர்நிக்கஸ் என்கிற வானியலாளர் புவிமையக்கோட்பாட்டை முன்வைத்தார். இவரின் கருத்தையும் அப்போது யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதை எதிர்த்த மத நம்பிக்கையுடைய மற்ற வானவியலாளர்கள் வெவ்வேறு கோட்பாட்டை முன்வைத்தனர். ஏனென்றால் பைபிளிள் “உலகம் நிலையானது, அசையாதது” எனக் கூறப்பட்டது. டைக்கோ பிராஹே என்கிற வானவியலாளர் கோபர்நிக்கஸின் புவிமையக்கோட்பாட்டை ஆதரித்தார், ஆனால், மத நம்பிக்கையுடைய  அவரால் அதை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சூரியனும் நிலவும் பூமியைச் சுற்றி வருகின்றன, மீதமுள்ள கோள்கள் சூரியனை வேறொரு பாதையில் சுற்றிவருகின்றன என்றார்.

    இவ்வாறாக அண்ட அமைப்பை பற்றியும் புவியின் அமைப்பைப் பற்றியும் பல விதமான குழப்பங்கள் இருந்த நிலையில், கலீலியோ கண்டுபிடித்த தொலைநோக்கிகள் மூலம் பல குழப்பங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.

    சூரியமையக்கோட்பாட்டை ஆதரித்ததால், அது மதத்துக்கு எதிரானது எனவும், மதநம்பிக்கைக்கு எதிராகச் செயல்பட்டதைக் குற்றம் எனவும் கருதி அவர் 1633 ஆம் ஆண்டு முதல் சாகும் வரை வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். 1642ஆம் ஆண்டு இருதயக் கோளாறு காரணமாக இயற்கை எய்தினார். சிறைவைக்கப்பட்ட கடைசி ஒன்பதாண்டுக் காலத்தில்தான், ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பொருள்களின் இயக்கம் குறித்த சோதனைகளை (Motion Of Experiments) எழுதி வைத்தார். அவரின் குறிப்புகள் அறிவியலின் மறுமலர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தது.

    இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நவீன இயற்பியலின் தந்தை" என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.

13 பிப்ரவரி, 2022

உலக வானொலி நாள்

     


    தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திடாத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டு பிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை  இழக்கவில்லை. இப்போதும் உலக மக்கள் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது.

    வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நாவின் துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13 ஐ உலக வானொலி நாளாக 2011 இல் அறிவித்தது. 1946 இல் ஐ.நா வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13 ,உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    இன்றளவில் தொலைக்காட்சி, இணையம் என, ஊடகம் பல்வேறு புதுமைகளுக்கு உட்பட்ட போதிலும், வானொலி என்பது பெரும்பான்மையோர் பயன்படுத்தும் ஊடகங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான கிராமங்களில் மக்கள் வானொலியைப் பயன்படுத்தித்தான் அன்றாடத் தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.

உலக வானொலிநாள் 2022 - துணைக் கருப்பொருள்கள்

1. வானொலி இதழியல் மீது நம்பிக்கை 2. நம்பிக்கை மற்றும் அணுகல்  3. வானொலி நிலையங்களின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை

     பரபரப்புச் செய்திகளாகட்டும், பயனுள்ள தகவல்களாகட்டும் படிக்காத பாமரர்களுக்கும் அதனைக் கொண்டு சேர்த்ததில் வானொலியின் பங்கு அளப்பரியது. இன்று எத்தனையோ தொலைத்தொடர்பு சாதனங்களும் நிகழ்ச்சிகளும் வந்துவிட்டாலும், வானொலியில் கேட்ட , இன்று ஒரு தகவலோ, ஒலிச்சித்திரமோ தந்த அந்த உணர்வை, நிச்சயம் ஈடுசெய்ய முடியாது என்பதே அந்தக் காலத்து மக்களின் ஒரே குரல். 

    அடர்ந்த காட்டிலோ,யாருமற்ற தனிமையிலோ, மனக்கவலையிலோ, உற்சாகமற்ற வேளைகளிலோ, காத்திருக்க வேண்டிய நேரத்திலோ, உறக்கம் தவிர்க்கவோ, அறிவை வளர்க்கவோ, தெரிந்த அறிவைப் புதுப்பித்துக் கொள்ளவோ, உறங்க வைக்கவோ,மகிழ்ச்சியைக் கூட்டவோ…. இவ்வாறு வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் நம்மோடு உற்ற நண்பனாய் இருப்பது வானொலி.



செய்திகள் வாசிப்பது - சரோஜ் நாராயணசாமி

  

செய்திகள் வாசிப்பது - ஜெயாபாலாஜி

     மனதில் நின்ற செய்தி வாசிப்பாளர்கள் சிலரை நினைகூர்வோம்.சரோஜ் நாராயணசாமி, சாம்பசிவம், ஜெயாபாலாஜி…. இன்னும் பலர்.

எஸ்.பி.பி உடன் பி.ஹெச்.அப்துல் ஹமீது


நடராஜ சிவம்


    இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர்கள் - எஸ். பி. மயில்வாகனம் (இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில், திருப்பிப்பார், ஜோடி மாற்றம், இருகுரலிசை, ஒருபடப்பாட்டு போன்ற பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார்), கே. எஸ். ராஜா, பி.ஹெச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம்,நடராஜ சிவம், புவனலோஜனி 

    
ஒரு காலத்தில் வானொலி வைத்திருப்பவர் வசதியானவர் என்று கருதப்பட்டது. வானொலி வைத்திருக்க உரிமம் ( License) வைத்திருக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறோம். ஆனால் இன்று பலவிதமான ஊடகங்கள் வந்தாலும், வானொலி, அன்று தந்த மகிழ்ச்சியை இன்று பெறமுடிவதில்லை. இலங்கை வானொலியைக் கேட்க, அங்கு மின் வசதி இல்லாத போது, சைக்கிள் டைனமோ மின்சாரத்தைப் பயன்படுத்தி வானொலி கேட்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். 

    இலங்கை வானொலியில் அடிக்கடி நேரம் சொல்வார்கள். ஒரு பாடல் ஒலித்து முடிந்த பிறகும் அடுத்த பாடல் ஒலிக்கப் போகும் முன்பும் நேரம் சொல்வார்கள். இதனால் அப்போதெல்லாம் உழைக்கும் மக்கள் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. சாலையிலே நடந்தாலும் சோலையிலே இருந்தாலும் யார் வீட்டு வானொலியில் இருந்தோ நேரம் ஒலிக்கும். காற்றலையிலேயே கடிகாரம் பார்த்துக் கொள்வார்கள். கடிகாரம் உள்ளவர்கள் நேரத்தைச் சரிபார்க்கவும் இலங்கை வானொலியை நம்பியிருந்தார்கள்.

    இலங்கை வானொலியில் அனைத்து அறிவிப்பாளர்களும் அழகான தமிழில் பேசுவார்கள் .ஆங்கிலக் கலப்பின்றி அவர்கள் இயல்பாகவும் விரைவாகவும் தமிழ் பேசுவார்கள் .

    'மைக்' என்று சொல்ல மாட்டார்கள் ’ஒலிவாங்கி’ என்றுதான் சொல்வார்கள் . ’வால்யூமைக் குறைத்துப் பேசுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள் .’ஒலி அளவைக் குறையுங்கள்’ என்பார்கள்..’பெல் அடித்தது’ என்பதற்கு ’மணி ஒலித்தது’ என்பார்கள். ‘பட்டனைத் தட்டுங்கள்’ என்பதற்குப் ’பொத்தானை அழுத்துங்கள்’ என்பார்கள்.’டைம் அப்’ என்பதற்குப் பதிலாக ’உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது’ என்றுதான் சொல்வார்கள்.

    சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..
இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது.

    கே.எஸ். ராஜா "திரைவிருந்து" என்ற இலங்கையில் ஓடும் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியை நடத்துவார்.

கே.எஸ்.ராஜா

    கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா!

    "அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பானத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா!

பி.பி.சி தமிழோசை - சங்கரண்ணா

     பி.பி.சி - தமிழின்- சங்கரண்ணா, உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.

ராஜேஸ்வரி சண்முகம்

    மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பசுமை நிறைந்த வாழ்வின் சுவடுகளில் வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலும் பதியப்பட்டிருக்கும். காலையிலே இரண்டுவரிக் கவிதை குழைத்துத் தரும் பொங்கும் பூம்புனலில் இருந்து பெண்களுக்காகவே இவர் கொடுத்த பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி என்ற படைப்பைப் பால் வேறுபாடின்றி ரசித்த காலமும் நினைவுக்கு வருகின்றது. ஒருகாலத்தில் எட்டாக் கனியாக இருந்த இன்றைக்கு வானொலிப் பணி என்பது இன்று கையில் கிட்டிய பூமாலையாக வாய்த்திருக்கும் சூழலில் ஒரு வானொலி நிகழ்ச்சியை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு அளவுகோலாகத் திகழ்ந்தவர்களில் இவரும் ஒருவர். சொல்லப்போனால் வானொலித்துறையின் இலட்சணம் என்பது இவர் போன்ற அறிவிப்பாளர்களால் தான் துலங்கியது.

    இன்று ஒரு தகவல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களது பேச்சுகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பன.

    ஹாம் வானொலி, தற்போதைய சமூக வானொலிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.இன்று தனியார் பண்பலை வானொலிகள் பல வந்துவிட்டாலும் அகில இந்திய வானொலியின் சேவைகள் என்றும் தனித்து நிற்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் அகில இந்திய வானொலி செய்துவரும் சேவை ஓர் உதாரணம். இன்றும் அந்தப் பகுதிகளில் வாழும் 30 லட்சம் மக்களுக்காக 30 வெவ்வேறு பேச்சுவழக்கு மொழிகளில் தனது சேவையைச் செய்துவருகிறது.

    சரி, ‘ஆகாஷ்வாணி’ என்ற பெயர் எப்போது வைக்கப்பட்டது? 

    1938 இல் ரவீந்திரநாத் தாகூர் அகில இந்திய வானொலிக்கு அந்தப் பெயரை வைத்தார். 

    ‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும்.

    உலகின் பல்வேறு பகுதிகளிலிலும் இருந்த மக்களை ஒன்றிணைத்த ஒற்றைச் சாதனத்தின் வடிவம் இன்று மாறிப் போனாலும், அதன் நினைவுகள் என்றும் பசுமையாகவே இருக்கிறது. 

12 பிப்ரவரி, 2022

டார்வின் தினம்

       கடவுள் மனிதனை படைத்தார் என்ற நம்பிக்கை மிகுந்திருந்த காலத்தில்,  மனிதன் குரங்கிலிருந்துதான் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டவர்  "பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை" எனப் போற்றப்படும் சார்லஸ் டார்வின்.

     1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் இங்கிலாந்தின் Shrews-bury என்ற நகரில் பிறந்தார் டார்வின். சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். அவரது தாத்தாவும் தந்தையும் மருத்துவர்களாக இருந்தவர்கள். அதனால் டார்வினையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் (University of Edinburgh) பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் தந்தை.

    சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். இயற்கையின்மீது அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு. மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. 

    அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார் அவர். தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை ' Theology ’ அதாவது ‘இறையியல்’ பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்ஃப்ரிட்ஜ் (University of Cambridge) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின்.

    தமது 22 ஆவது வயதில் இறையியலில் பட்டம் பெற்றார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த John Stevens Henslow என்பவரிடம் நெருங்கிய நட்புக் கொண்டார் டார்வின். அவர் மூலமாக கேப்டன் Robert FitzRoy என்பவரின் நட்புக் கிட்டியது. 

    தென் அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் Robert FitzRoy-யின் தலைமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். 

    ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிச் சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.

    ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் Brazil, Rio de Janiro, Mondivideo, Falkland Island, Galapagos Island, Hobart, Newzealand என உலகையே ஒரு வலம் வந்தது. பல இடரும், இன்னல்களும் நிறைந்ததாக அந்தப் பயணம் அமைந்தது. ஆனால் இயற்கையின் மீது இருந்த அளவிடமுடியாத ஈடுபாட்டால் டார்வினுக்கு அது பெரும் துன்பமாகப் படவில்லை. சென்ற இடத்தையெல்லாம் கூர்ந்து ஆராய்ந்த டார்வின் அதுவரை அறியப்படாத பல விநோதமான விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தார். 

    ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லாவித உயிரினங்களையும் ஆராய்ந்தார். அவை இடத்துக்கு இடம் மாறுபட்டிருப்பதையும், சில ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதை கண்டு வியந்தார் டார்வின். உயிரினங்கள் அனைத்துமே பொதுவான மூதாதையர்களின் வழிதோன்றல்களாக இருக்குமா என்பதும் அவை தொடர்ச்சியாக சிறு சிறு மாற்றங்களைப் பெற்று தற்போதைய வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றனவா?  என்பதுதான் டார்வினின் கேள்வியாக இருந்தது.

    தான் சேகரித்த சில எலும்புகளுக்குச் சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். 

    இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1836 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார் டார்வின். ஐந்து ஆண்டுகளில், தான் சேகரித்த விபரங்களையும், ஆய்வுகளையும் வைத்து அவர் The voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். தமது 30 ஆவது வயதில் Emma Wedgwood என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து, ஏழு பிள்ளைகளுக்குத் தந்தையானார் டார்வின். திருமணத்திற்குப் பின்பும் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

    புதிய உயிரினங்கள் உருவாகும் முறை, பின்னர் அவை தங்களின் மூலத்திலிருந்து முழுமையாக மாறிவிடுவதன் காரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து 1859 ஆம் ஆண்டு உலகை வியப்பில் ஆழ்த்திய தனது புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். “The Origin of Species by Natural Selection” அதாவது ‘இயற்கையில் உயிரினங்களின் தோற்றம்’ என்ற அந்த புத்தகம் கூறிய சித்தாந்தம்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம்.

     அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும் என்று கூறினார் டார்வின். அதை ‘Natural Selection’ என்றும் “survival of the fittest” என்றும் அவர் விளக்கினார். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி, புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.

    பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. 

    ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே ,இந்தக்கருத்து, கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் சித்தாந்தம். அவர் வாழ்ந்த போதே அவரது “The Origin of Species” என்ற நூல், உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.    

டார்வின் பரிணாமக் கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது.

1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)

2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல்)

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்து, உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

    இதைத்தான் இன்றைய நாகரிக, விஞ்ஞான உலகம் -- அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமை பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை ‘நவீன டார்வினியம்’ என்கிறார்கள். இதன் விளக்கம் என்பது, ஜீவ போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது தான்.

-----------------------------------------------------------------------------------------------------------
“வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது” என்கிற இவரின் பரிணாம தத்துவத்தை சிலர் அவர் காலத்திலேயே கேலி செய்தார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------   “உலகை கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்”
-----------------------------------------------------------------------------------------------------------

    மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி, அறிவு ஒளி 1882 ஆம் ஆண்டு ஏப்ரல்19-ஆம் தேதி அடங்கிப் போனார். இங்கிலாந்தில் ‘விஞ்ஞானிகளின் கார்னர்’ என்று சொல்லப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் எபியில் (Westminster Abbey) டார்வினின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.

    கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சனையில் அவர் எப்போதும் ஈடுபட்டதே இல்லை. அப்படி ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றார். மனிதன் பிறப்பது வாழ்வதற்காக, அது தேவை! அவரின் கண்டுபிடிப்பான பரிணாம கோட்பாட்டிற்கும், மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், ஏன் மதம் இதில் மூர்க்கமாகத் தலையிடுகிறது என்பதும் தான் அவரின் உரத்தக் கேள்வியாக இருந்தது.

    கடவுள் நம்பிக்கை மனிதனின் மனதில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. அது மனிதனின் அறிவு வளர வளர உண்டானது, இதை வேறு வகையில் சொல்வதென்றால் மனிதனின் வியப்பும், இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டானது என்றார்!

    டார்வினின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு குரங்கிலிருந்துதான் நாம் தோன்றினோம் என்று நீங்கள் நம்பினாலும் சரி, இல்லை அது அபத்தமான கருத்து என்று புறம் தள்ளினாலும் சரி ஒன்றை மட்டும் நாம் மறுக்க முடியாது, வரலாற்றாலும் புறக்கணிக்க முடியாது. உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய மனுகுல அறிவை விருத்தி செய்ததில் டார்வின் என்ற தனி ஒரு மனிதன் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார் என்பதுதான் அந்த உண்மை!.

11 பிப்ரவரி, 2022

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள்

     தாமஸ் ஆல்வா எடிசன் 1847 பிப்ரவரி 11 அன்று சாமுவேல், நான்சி தம்பதியரின் மகனாக அமெரிக்காவில் மிலன் என்ற ஊரில் பிறந்தார். ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே ‘முட்டாள் பையன்’ என முத்திரை குத்தி எடிசனை வெளியேற்றிவிட்டது பள்ளி. எடிசனின் அன்னையே ஆசிரியர் என்பதால் வீட்டிலேயே செல்ல மகனுக்கு கல்வி புகட்டினார். 

    எடிசனும் ஆர்வத்துடன் அம்மாவிடம் பயின்றார். பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் நிறைய நூல்களை படிக்கத் தொடங்கினார். அவரது தந்தை, மகனின் அறிவு தாகத்தை மெச்சி உள்ளுர் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டார். எடிசன், பெறும் உற்சாகத்தோடு அறிவியல், தொழில்நுட்பம், அகரமுதலி, இலக்கியம் என தேடித்தேடிப் படித்தார். அறிவியல் நூல்களை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றில் உள்ள கருத்துக்களைச் சோதித்து அறிய விழைந்தார். 

    தனது வீட்டின் கீழ்த்தளத்தில் தட்டுமுட்டுப் பொருட்களுக்கு இடையில் சிறிய ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்துக் கொண்டார். ஆராய்ச்சி செய்வதற்குத் தேவைப்படும் வேதிப்பொருட்கள், கருவிகளை வாங்க பணம்? எடிசன் செயலில் இறங்கினார்.

     ரயிலில் பத்திரிக்கைகள், இனிப்புப் பண்டங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விற்றார். ரயிலில் பத்திரிக்கை விற்ற எடிசனுக்கு தானும் ஒரு பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ‘வீக்லி ஹெரால்டு’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். இளம் வயதில் எடிசனிடம் உருவான இந்த தொழில் முனைப்பு பிற்காலத்தில் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபராக அவரை உயர்த்தியது. 14 நிறுவனங்களுக்கு முதலாளியாக உயர்ந்தார். 

     இரயில் பெட்டியில் இன்னொரு புறத்தில் ரசாயனப் பரிசோதனைகள் செய்வதற்காக ஆராய்ச்சி கூடம் ஒன்றை நிறுவினார். பத்திரிகை வேலைகள் இல்லாத சமயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரு முறை வேதிப்பொருளொன்று சிந்தியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த ரெயில் பெட்டி தீப்பிடித்தது. ரெயிலின் நடத்துனர் கோபப்பட்டு எடிசனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதனால் அவருக்கு காது கேட்கும் திறன் குறைந்தது. 

     ஒரு முறை ரெயிலில் அடிபட இருந்த மூன்று வயது குழந்தை ஒன்றை, தாவிக் குதித்து மயிரிழையில் காப்பாற்றினார். அக்குழந்தையின் தந்தை எடிசனுக்கு வாய் வார்த்தைகளால் மட்டும் நன்றி சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பொழுது புழக்கத்திலிருந்த தந்தி எந்திரத்தை, மோர்ஸ் குறியீடு மூலம் இயக்குவது எப்படி என்று விளக்கி சொல்லிக்கொடுத்தார். 

     பங்குச்சந்தை குறியீட்டு எண்ணை அறிய உதவும் ‘ஸ்டாக் டிக்கர்' என்ற கருவியைக் கண்டு பிடித்தார். எடிசனின் முதல் கண்டுபிடிப்பு இதுதான். அதன் பிறகுஅமெரிக்காவில் நியு ஜெர்ஸி மாகாணத்தில் எடிசன் அமைத்திருந்த மென்லோ பார்க் ஆராய்ச்சிக்கூடம் படுசுறுசுறுப்பானது. 11 நாட்களுக்கு ஒரு சிறு கண்டுபிடிப்பு, ஆறு மாதத்திற்கு ஒரு பெரிய கண்டுபிடிப்பு என இலக்கு நிர்ணயித்து ஆராய்ச்சியில் ஓயாது ஈடுபட்ட எடிசன் ஏராளமான புதுக்கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்தார். 

     தந்தி அலுவலராகப் பணிபுரிந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த எடிசன், தனது இருபத்தி இரண்டாம் அகவையில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டறிந்து காப்புரிமை வாங்கினார். இதுதான் அவரின் முதல் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு. இது வாக்குகளைத் துல்லியமாய் பிரித்துக் காட்டியதால் அன்றைய அரசியல்வாதிகள் அந்த இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் பொதுமக்களுக்கு பயன்படும் பொருட்களை மட்டுமே கண்டுபிடிப்பேன் என்று உறுதிமொழி எடுத்தார். 

     இன்றைய தலைமுறையினரின் எல்லா மகிழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அடிப்படையாக எடிசனின் கண்டுபிடிப்புகள் உள்ளன. மின்விளக்கு, மின்சாரம், நான்மடித்தந்தி, போனோகிராப் எனும் கிராமபோன் இசைத்தட்டு கருவி, மின்சார ரயில், திரைப்படம், சிமெண்ட் கான்கிரீட் என எடிசன் 1368 கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். இது ஓர் உலக சாதனை. எடிசனும் ஆயிரக்கணக்கான தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், தோல்விகளை அவர் அணுகிய விதம் அசாத்தியமானது. 

    சேம மின்கலம் தயாரிப்பு ஆராய்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்களைப் பயன்படுத்திப் பார்த்து எதுவும் சரியாக வராமல், இறுதியாக கார்பன்தான் பொருத்தமானது என்று கண்டுபிடித்தார். இந்த தொடர் தோல்விகள் பற்றிக் கேட்டபோது, "நான் சேம மின்கலம் தயாரிக்கப் பயன்படாத 1000 பொருள்களைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்றார். இதுதான் எடிசனின் வெற்றி ரகசியம். 

     "ஓர் அஞ்சல் அட்டையில் அவருடைய உருவப்படத்தை மட்டும் வரைந்து அஞ்சல் பெட்டியில் போட்டால் அது நியூஜெர்சியில் மென்லோ பார்க்கில் உள்ள அவருக்கு சென்று சேர்ந்துவிடும்"- இப்படி ஒரு வேடிக்கைப் பேச்சு அந்த காலத்தில் அமெரிக்காவில் இருந்ததாம். அந்த அளவுக்கு தான் வாழ்ந்தகாலத்திலேயே மக்களால் கொண்டாடப்பட்ட மகத்தான விஞ்ஞானியாக விளங்கியவர் எடிசன்.

    தன்னுடைய 84-வது வயதில் 1931 அக்டோபர் 18-ந் தேதி நியூ ஜெர்சி மாகாணத்தில் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 21-ந் தேதி மாலை அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மின் விளக்குகளை நிறுத்தும்படி ஆணையிட்டார். அந்த ஒரு நிமிடம் நாட்டில் உள்ளோர் அனைவரும் எடிசனையும் அவரது கண்டுபிடிப்புகளையும் அமைதியாய் நினைவு கூர்ந்தனர்.

    தோல்வியையும் வெற்றியாய் மாற்றி, இருபதாம் நூற்றாண்டு மட்டுமல்ல வரும் பல நூறு நூற்றாண்டுகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற விஞ்ஞானியின் பிறந்தநாள் இன்று.

பிரபலமான இடுகைகள்