3 பிப்ரவரி, 2012

03/02/2012


1. சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதீசுவில், புதிய தூதரை நியமிப்பது என்றும், அதற்கான புதிய தூதரகம் அமைப்பது என்றும் இங்கிலாந்து அறிவித்தது.புதிய தூதரகம் அமைக்கப்படும் வரை, தற்காலிகமாக,கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில், இத்தூதரகம் செயல்படும்.
2.  தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கு பிரதமர் யூசுப் ரசா கிலானி உத்தரவிட்டுள்ளார்.
3. உள்நாட்டுப் போரின் போது நடந்த அத்துமீறல்கள் பற்றிய அறிக்கையை, ஐக்கிய நாடுகள் அவைக்கு அனுப்பப் போவதில்லை என இலங்கை அரசு கூறியுள்ளது.
4. இஸ்ரேலைத் தாக்கும் நோக்கில், 2 இலட்சம் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்பட சுமார் 100 கிலோ எடை கொண்ட, யுரேனியம் செறிவூட்டப்பட்ட 4 அணு குண்டுகளை, ஈரான் தயாரித்துள்ளதாக, இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
5. 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட 122, 2ஜி அலைக்கற்றை உரிமங்களை
உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நீக்கம் செய்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வெளிப்படையாக இருக்கவேண்டும் என்ற, பிரதமரின் அறிவுரை புறக்கணிக்கப் பட்டுள்ளது என்றும், சட்டத்துக்கு முரணான முறையில் அந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கடுமையாகச் சாடியுள்ளது.
6. ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோருக்கு 15 நாள்களுக்குள் சம்பளம் கொடுக்க வேண்டும் என, பிரதமர் கூறியுள்ளார்.
7.  தங்களுக்குச் செலுத்த வேண்டிய பாக்கியை செலுத்தாததால், இந்தியன் ஆயில் உட்பட மூன்று எண்ணெய் நிறுவனங்கள், ஏர் இந்தியாவுக்கு நேற்று எரிபொருள் தருவதை நிறுத்தின.  இந்தப் பிரச்னையால், ஏர் இந்தியா விமானங்கள் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
8.  புவி வெப்பமடைவதைத் தடுக்க வேண்டும் என்பதில் வளர்ச்சியடைந்த நாடுகளிடையே போதிய அக்கறையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
9. பாரதியார் பல்கலைக்கழகத்தில் ` 60 கோடியில் 5 மெகாவாட்  திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
10. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர்கள் கொண்ட, மட்டைப்பந்துப் போட்டி இன்று மெல்போர்னில் நடக்கிறது. தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய அணி, இம்முறை, முதல் வெற்றியைத் தேடி களமிறங்குகிறது.

2 பிப்ரவரி, 2012

02/02/2012


1.  சிரியாவில் நிலவி வரும் அரசியல் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இராணுவத் தீர்வு பலன் தராது என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
2. சவுதி அரேபியாவில், ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்தப் போவதாக, வெளியான தகவல்களை, தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.
3. இதுவரை, தென் சீனக் கடலில், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் தீவிரம் காட்டி வந்த சீனா, தற்போது, கிழக்கு சீனக் கடலிலும், தனது தலையீட்டைத் துவக்கியுள்ளதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
4. தனியார் கூரியர் நிறுவனங்கள் மத்திய அரசுடன் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
5. ஈராஸ் என்ற 34 கிலோ மீட்டர் அகலமான, இரண்டாவது பெரிய விண்கல், செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பூமியைக் கடந்து சென்றது.
6. குஜராத் கலவரம் தொடர்பாக, முதல்வர் மோடிக்கு, அழைப்பாணை அனுப்பி விசாரிக்கும்படி, நானாவதி கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
7. மேற்கு வங்கத்தில், காவல்துறை சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை, அரசு நேற்று நீக்கியது. 
8. கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வீசிய சூறைக்காற்றின் காரணமாக,கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், திருவள்ளுவர் சிலைக்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
9. கோவை மாநகராட்சியில் புதிதாக 3,443 பணியிடங்களைத் தோற்றுவிக்க, ஒப்புதல் அளிக்கக் கோரி,தமிழக அரசுக்கு மாநகராட்சி மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
10. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இருபது ஓவர் மட்டைப்பந்து ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா.

1 பிப்ரவரி, 2012

01/02/2012


1. பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில், அமெரிக்கா, ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி வருவதாக, முதன் முறையாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். 
2. இலங்கையில், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கு, அதிகாரம் தருவது குறித்த அரசியல் சட்டதிருத்தத்தை, அமல்படுத்துவது குறித்து, நாடாளுமன்றத் தேர்வுக் குழுவே முடிவு செய்யும் என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்தார்.
3. உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள லிபிய நாட்டுக்கு, இந்தியா, உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ` 5 கோடி மதிப்பிலான, மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
4.  நாடு முழுவதும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
5. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு உதவும் வகையிலான, திட்டங்களை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
6. முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளதா என்பதை, நேரில் ஆய்வு செய்ய, மத்திய அரசு அதிகாரிகள் வந்துள்ளனர்.
7. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இந்த உயர்வு கணக்கிடப்படும்.
8. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரண உதவிகளை அறிவிக்க உள்ளோம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
9.  தமிழகத்தில் உள்ள 19 ஆயிரம் அரசுப் பேருந்துகளில், 9,389 பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுவதாக,தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
10. இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் மட்டைப்பந்துப் போட்டி , ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புதன்கிழமை நடைபெறுகிறது.

31 ஜனவரி, 2012

31/01/2012


1. அமெரிக்கா - தென் கொரியா நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போரைத் தூண்டி விடும் என, வடகொரியா எச்சரித்துள்ளது. 
2.தென் அமெரிக்க நாடான பெருவில், நேற்று, ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகள் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில்,60 பேர் காயமடைந்தனர். 
3.ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதாகவும், 2060 ஆம் ஆண்டு, தற்போதைய மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
4. பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல், அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது. பஞ்சாபில் 80 விழுக்காடு வாக்குகளும், உத்தரகண்டில்,70 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின.
5.எந்த அரசு பதவியையும் வகிக்கக் கூடாது என, தனக்கும், மற்ற மூன்று விஞ்ஞானிகளுக்கும் அரசு சார்பில் விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். 
6. சங்க இலக்கியத்தில் பெருமை பெற்ற புறநானூற்றுப் பாடல்கள் அடங்கிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல், திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
7. புயலால் ஏற்பட்ட பாதிப்பை போக்க, இடைக்கால நிவாரண நிதியாக ` 500 கோடி மத்திய அரசு வழங்கியதற்கு, தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.
8.தானே புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான கடலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், `1000 கோடி செலவில், 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. இன்றைய மாணவர்கள், எதிர்காலத்தில் முதியோர் இல்லங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்.
10. சர்வதேச டென்னிஸ் மகளிர் இரட்டையர் தரவரிசையில், இந்தியாவின் சானியா மிர்சா, மிக அதிகபட்சமாக 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

30 ஜனவரி, 2012

30/01/2012


1. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுகளைத் தடுப்பதிலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் இந்தியா 125-வது இடம் வகிப்பதாக யேல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.  இந்தியா - பாகிஸ்தான் உறவு சுமுகமாக வேண்டியது மிகவும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ரசா கிலானி கூறியுள்ளார்.
3. சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளை, எதிர்த்தரப்பினரிடம் இருந்து கைப்பற்றுவதற்காக, அதிபரின் ராணுவம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.
4.பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்கள், பலத்த பாதுகாப்புடன் இன்று நடக்கின்றன. 
5.  மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில், சாதாரண வகுப்புக்கான கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தெரியவந்துள்ளது.
6.  ஊழலால் விளையும் தீமைகள் குறித்து, பள்ளிப் பாடநூல்களில் புதிய பாடத்திட்டங்களைப் புகுத்தி, மாணவ, மாணவியரிடையே ஊழல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
7. இந்திய, ஜப்பான் கடலோரக் காவல் படையினர் இணைந்து, சென்னை அருகே, நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர். 
8.  வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில், 141வது தைப்பூச ஜோதி தரிச விழா எதிர்வரும், 7ஆம் தேதி நடக்கிறது. 
9. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாமல், படுதோல்வி கண்டதன் எதிரொலியாக, டெஸ்ட் தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர் இந்திய வீரர்கள்.
10. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், ஆடவர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
                                                                

28 ஜனவரி, 2012

28/01/2012


1.  ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலை விரிவாக்க வேண்டும் என்ற, ஜி 4 நாடுகளின் பரிந்துரைக்கு, பல நாடுகள் ஆதரவளித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. 
2. ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் படைகள் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் வெளியேறும் என அதிபர் நிகோலஸ் சர்கோஸி தெரிவித்துள்ளார். 
3. சர்வதேச அளவில் உயர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 750 மில்லியன் டாலர்களை அளித்துள்ளார்.
4.  பகவத் கீதை மத நூல் அல்ல ;அது வாழும் நெறி எனவும், சமூக நீதி காக்கும் நூல் எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்புக்கூறியுள்ளது.
5. இந்திய விமானப் படைக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள, லகுரக ஆளில்லா போர்விமானம் லக்ஷயா-2 ,வெள்ளிக்கிழமை இரண்டாவது முறையாக வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
6. தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, இதுவரை ` 52.41 கோடி வழங்கப்பட்டுள்ளது.
7.  கூடங்குளம் அணுமின் நிலையம் 3 மாதங்களில் செயல்படத் தொடங்கும் என, இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.
8. தஞ்சை மாவட்ட விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
9. நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாக ஜி.இ. நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.அடிலெய்டில் நடைபெற்ற இறுதி மட்டைப்பந்துப் போட்டித் தொடரிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.இத்தொடருடன் ராகுல் திராவிட் ஓய்வுபெறுவார் என நம்பப்படுகிறது.                                                           


Free Code Script

27 ஜனவரி, 2012

27/01/2012


1. ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.
2.  இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முக்கியக் காரணமே, அந்நாட்டின் பொருளாதார நிலைதான் என்று அல்-காய்தா தெரிவித்துள்ளது.
3. தோட்டக்கலைத் துறையில் அதிக விளைச்சல் தரும், உயர் ரக கனகாம்பரம், சவுக்கு மரக்கன்றுகளை கண்டு பிடித்து, சாதனை படைத்த புதுச்சேரி கூடப்பாக்கம் விவசாயி வெங்கடபதிக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை கட்டாயமாக்க பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார்.
5.  மணிப்பூர் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை வியாழக்கிழமை மாலை முடிவடைந்தது. அங்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
6.  ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில், பதக்கம் பெறும் அளவுக்கு சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் ஒரு திட்டத்தை ரூ.1.25 கோடி நிதியில் தொடங்க தமிழக முதல்வர் உத்தரவு.
7. தமிழகப் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8.  நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல் போன்ற பணிகளுக்காக ரூ.152.78 கோடியை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.
9. நேற்று வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த, குடியரசு தின விழாவில், பயனாளிகள் 136 பேருக்கு ரூ.82 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான,அரசு  நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
10. அடிலெய்டு டெஸ்டில், துணிச்சலாகப் போராடிய இளம் விராத் கோஹ்லி மட்டும், சதம் அடித்து ஆறுதல் தந்தார். தற்போது, இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது.                                                                 -பாரதிஜீவா

Free Code Script

25 ஜனவரி, 2012

25/01/2012


1. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கும். இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.
2. கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் சிக்கலான உறவே இருந்துள்ளது. எனவே அதை சுமுகமானதாக மாற்றுவது சுலபமான காரியமல்ல என்று, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
3. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இதய நோய் உள்ளவர்களுக்கு போலியான மருந்துகளை அளித்ததில் 67 பேர் உயிரிழந்தனர்.
4.முல்லைப் பெரியாறு அணை தொடர்பான, நீதிபதி ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை, பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது
5. தண்டனைக் காலம் முடிந்த பின்னரும், இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்களை விடுவிக்காத, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
6. கன்னியாகுமரி திருவள்ளுர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசுவதற்கு சுற்றுலா அதிகாரிகள் தொல்பொருள் தொல்பொருள் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
7. கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.400 ஆக உயர்த்தி வழங்க,தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
8. திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கமான முடிவு ஏற்படாததையடுத்து, மீண்டும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
9. இந்தியாவுக்கு எதிரான 4ஆவது தொடர் மட்டைப்பந்துப் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 335 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
10. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த மகளிர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா- ரஷ்யாவின் எலினா வெஸ்னினா இணை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.                                              
                                                                                                                                       -- பாரதிஜீவா

Free Code Script

24 ஜனவரி, 2012

24/01/2012


1. எகிப்தில், ஹோஸ்னி முபாரக்கின் வெளியேற்றத்திற்குப் பின் நேற்று, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது. 
2.  நாடு திரும்ப உள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்ய, அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
3. தேசிய மனித உரிமை ஆணையத்தில், இன்னும் 15 ஆயிரத்து 400 புகார்கள் இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
4. நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் படுத்துத் தூங்கும் மக்களுக்கு, இரவு நேர தற்காலிகத் தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக மைய மின் துறை அமைச்சர் சுசீல்குமார் சிண்டே அறிவிப்பு.
6.  இந்திய கடற்படைக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டு குத்தகை அடிப்படையில், ஷ்யா அளித்துள்ளது  இதற்கு 90 கோடி அமெரிக்க டாலரை இந்தியா அளிக்கும்.
7.  சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டப் பணியின் இரண்டாம் கட்டமாக, நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை சாலை அமைக்க ரூ. 1,075 கோடியை ஒதுக்கீடு செய்து,தமிழகமுதல்வர் உத்தரவு.
8. மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
9. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா ஜோடி, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
10.  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது, கடைசித் தொடர் மட்டைப்பந்துப்போட்டி அடிலெய்ட் நகரில்,இன்று தொடங்குகிறது.
                                                                                                          -பாரதிஜீவா.

Free Code Script

23 ஜனவரி, 2012

23/01/2012


1.  நைஜீரியாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலர் பான் கீ-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. மக்களின் பேராதரவுடன், தான், நாடு திரும்பப் போவதாக, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்,தெரிவித்துள்ளார்.
3. இலக்கிய விழாவில் நான் கலந்து கொள்வதை தடுக்கவே, என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, ராஜஸ்தான் போலீசார் பொய் கூறியுள்ளனர் என, சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.
4. பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, பிப்ரவரி 17ஆம் தேதி துவங்கும் என, உச்சநீதிமன்றம் நியமித்த மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார். 
5. தன்னைக் கேலிசெய்த மூன்று இளைஞர்களை காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகா. அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் அவர்கள் மீது புகார் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.
6.  இந்தியாவில் நடக்கும், இந்திய-அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான "யூத் அபியாஸ்' எனும் கூட்டுப் பயிற்சியில், முதல்முறையாக, அமெரிக்க டாங்குகள் பங்கேற்க உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
7. தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்காக, இந்தக் கல்வி ஆண்டிலேயே 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக தோற்றுவிக்க முதலமைச்சர் உத்தரவு.
8. திருக்குறளை, இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று, சென்னை "தலைநகர் தமிழ்ச் சங்கம்' கோரிக்கை விடுத்துள்ளது.
9.  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
10.  5ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 313 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா.                   -பாரதிஜீவா

Free Code Script

பிரபலமான இடுகைகள்