4 டிசம்பர், 2021

புதுக்கவிதைப் பிதாமகன் ந. பிச்சமூர்த்தி நினைவுநாள்


ந.பிச்சமூர்த்திக்கு அவரின் பெற்றோர் அவர் பிறந்தவுடன் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். ஆனால் இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்ததால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரைப் “பிச்சை” என்று அழைத்தனர். அதன்பிறகு பிச்சை என்ற பிச்சமூர்த்தி ஆனார்.

    தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். 

   “இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன. 

  யாப்புச் சிறையில் சிக்கித் தவிக்காமல் தங்கு தடையின்றி நெஞ்சில் நேரே ஊடுருவுவது புதுக்கவிதை.

   புதுக்கவிதையில் வடிவத்தை விட கருத்துக்கே முக்கியத்துவம் தரப்படுகின்றது. ஏனெனில் கருத்தற்ற வெற்றுச் சொல் கவிதை ஆகாது என்பதே இதன் அடிநாதம். பாரதிக்குப்பின் தமிழ்க் கவிதை உலகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. பல்வேறு கவியாளுமைகளும் தமிழ்க்கவிதையுலகை அணி செய்தனர். அவர்களில் முக்கியமானவர் ந. பிச்சமூர்த்தி. 

   பாரதியின் வசன கவிதையையும் வால்ட் விட்மனின் கவிதைகளையும் தன் முன்னோடியாகக் கொண்டு புதுக்கவிதை என்னும் புதிய வகைமையைத் தொடங்கி வைத்தார்.19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய ”புல்லின் இதழ்கள்” எனும் கவிதைத் தொகுப்பே புதுக்கவிதை இலக்கிய வகையின் முதல் முயற்சியாகும். 

     நா.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியன், கு.பா.ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், சி.மணி, நகுலன், ஞானக்கூத்தன், சிற்பி, மு.மேத்தா, கவிக்கோ அப்துல் ரகுமான், மீரா, ஈரோடு தமிழன்பன், நா.காமராசு போன்றோர். இவர்கள் ஆரம்பக் காலகட்டத்தில் புதுக்கவிதை எழுதி தமிழ்ப்புதுக்கவிதை வளர்ச்சிக்குத் துணை நின்றனர். 

    வாழ்க்கை சார்ந்த இயல்பான பார்வையே பிச்சமூர்த்தியின் கவிதைகள். இயற்கையை, அதன் அழகை, அதன் ஒழுங்கைப் பாடிவந்தாலும், சமகால வாழ்க்கையையும் அவர் பாடத் தவறவில்லை. 

     இவரின், கிளிக்கூண்டு, காட்டுவாத்து, வழித்துணை, பெட்டிக்கடை நாராயணன் ஆகிய கவிதைகள் மிகவும் புகழ்பெற்றவை. 

   இவருடைய முதல் கவிதை – நடுத்தெரு நாராயணன் இவருடைய முதல் சிறுகதை – சயின்சுக்குப் பலி இவருடைய முதல் வசனகவிதை – காதல் (1934) 1933 – “முள்ளும் ரோசாவும்” என்ற சிறுகதை, கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. 

    வாழ்க்கை மீதான விமர்சனங்கள், புலம்பல்கள் ஏதுமின்றி அவற்றை நம்பிக்கையோடும் அதே நேரம் எதார்த்தத்தோடும் அணுகியவர் பிச்சமூர்த்தி. அதற்கு ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளே சாட்சி. கலை, கலைக்காகவே என்று சொல்லும் ந. பி யின் இலக்கியக் கொள்கை என்றபோதும், அவர் படைப்புகளின் அடிநாதமாக விளங்குவது மானுடம் சார்ந்த மகத்தான நம்பிக்கை.

    அவர் படைப்புகளைப் படிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு மிகவும் அற்புதமானது. இன்றைய இளம் தலைமுறையினரிடமும் அவர் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.அப்போதுதான் தமிழ் இலக்கியப்படைப்புகளின் நீட்சி, பரப்பு,ஆழம் ஆகியவற்றை அவர்களும் கண்டு வியக்கமுடியும். 

    வானத்திலும் தெரியும் மண்ணின் ஒளிவெள்ளத்தையும், மனிதனின் மனநிழல்களையும் சொற்களில் ஒருசேரப் பிடிக்கத் துடித்தவர். பல்லாயிரமாண்டுக் கூட்டுச் சமூக நனவிலியின் நங்கூரத் தொன்மம் ந.பிச்சமூர்த்தி.

3 டிசம்பர், 2021

டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்த நாள்

 


      * இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாகக் கருதப்பட்ட மற்றும் நாட்டின் முதல் குடிமகன் என கௌரவமாகப் போற்றப்பட்ட ‘குடியரசு தலைவர்’ பதவியை ஏற்ற சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர், ‘டாக்டர் ராஜேந்திர பிரசாத்’ ஆவார். 

   * இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில், அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசுத் தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

    * ராஜேந்திர பிரசாத் -  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். எந்த அளவுக்கு என்றால் ஓர்ஆசிரியர் ,"இந்த விடைத்தாளை எழுதியவன் என்னை விடத் திறமைசாலி !"எனத் தேர்வுத்தாளில் குறிக்கிற அளவுக்கு. சட்டக்கல்லூரியில் தங்க பதக்கம் பெற்றார் ராஜேந்திர பிரசாத்.

     * காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நல்ல வருமானம் தந்த தன் வக்கீல் தொழிலைத் துறந்தார். தரையைத் துடைப்பது ,கழிவறையைக் கழுவுவது,பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட கிளம்பினார் ஆங்கிலேய கவர்னர் திரட்டியது மாதிரி மூன்று மடங்கு அதிகமாக, முப்பத்தி எட்டு லட்சம் ரூபாய் திரட்டினார்.

    * மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1942 ல் “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்” கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனையும் பெற்றார்.

    * அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார். எந்த பணியிலும் ஈடுபடக் கூடாது என அரசு விதித்த தடையை மீறி, சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். காந்தியின் அழைப்புக்கு இணங்கி ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு தன் மகனை வெளியேற்றினார். காங்கிரசின் தலைவராகப் போஸிற்குப் பின் ,கிருபாளினிக்குப் பின் பதவியேற்றார்.

    * சட்ட வரைவுக்குழுவின் தலைவர் ஆக இருந்தார். இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பன்னிரெண்டு ஆண்டுகள் அவர் பதவி வகித்தது இன்றுவரை சாதனை. 

    ஜனவரி இருபத்தைந்து அவரின் உடன் பிறந்த சகோதரி இறந்து போனார் ,ஆனாலும் அடுத்த நாள் குடியரசு தினத்தன்று முறைப்படி கொடியேற்றி விட்டு அதற்கு அடுத்தத் தினமே போய் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அது தான் தேச ரத்னா ராஜேந்திர பிரசாத். 

    * இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதை மே 13, 1962 ஆம் ஆண்டில்  வழங்கிக் கெளரவித்தது.


பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

       உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை, உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3 ஐ அனுசரிக்கின்றது.

      1981 ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

      மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசாங்கமும், சேவை வழங்கும் நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

    இளமையில் கண்பார்வை இழந்த, கவிஞர் ஜான்மில்டன்  “இழந்த சொர்க்கம்” (https://www.britannica.com/topic/Paradise-Lost-epic-poem-by-Milton)  “மீண்ட சொர்க்கம்” எனும் புகழ் பெற்ற படைப்புகளை இயற்றினார். 

   கற்கும் திறனற்றவர் என்று பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனை (https://en.wikipedia.org/wiki/Thomas_Edison) ஊக்கப்படுத்தி அவருக்குக் கல்வியைக் கற்றுத்தந்து ஆய்வாளராக்கியதில் அவர் தாய் நான்சி எடிசனுக்குப் பங்குண்டு. மூளைவளர்ச்சித் திறனற்றவர் என்று முத்திரை குத்தப்பட்ட எடிசன், தன் மாற்றுத்திறனால் ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார்.

     முன்னேறுபவர்கள் ஒருநாளும் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதில்லை!அவர்கள் மூச்சுப்பிடித்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். 

    தடுமாறி விழுந்தவர்கள் களையும், தடம்மாறிச் சென்றவர்களையும் நேர்வழிப்படுத்தும் பேராசிரியர்களாக உலகப்புகழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்று பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கிங் ( https://www.hawking.org.uk/ ) இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் கற்று எல்லோரையும் போல் இயல்பாய் வாழ்ந்துகொண்டிருந்தபோது 21 வயதில் இயக்கு நரம்பணு நோயால் பாதிக்கப்பட்டுக் கைகால்கள் செயலிழந்து வாய்பேசமுடியா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    கணினியைப் பயன்படுத்தி அவர் சொல்வதை மாணவர்கள் புரிந்துகொள்ளுமளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன் குறையை அவர் துணிச்சலாக எதிர்கொண்டார். உடல்குறையை ஒரு பொருட்டாக எண்ணாமல் கடும்முயற்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

    உலகின் சிறந்த இசைமேதையான லுடுவிக் வான் பீத்தோவன், 


பியானோ இசைக்கலைஞராகத் தொடக்கத்தில் அறியப்பட்டார். புகழ்பெற்ற இசையமைப்பாளராக அவர் உருவான காலத்தில் 26 ஆவது வயதில் செவித்திறனை முற்றிலும் இழந்தார். இழந்த செவித்திறன் குறித்து அவர் வருந்தினார், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது.

    அவரது நண்பர்கள் தந்த ஊக்கத்தின் உதவியால் அதிலிருந்து மீண்டு இசையில் மூழ்கினார். உலகப் புகழ்பெற்ற நைன்த் சிம்பனி, வயலின் நோட்ஸ்களை உருவாக்கினார். அவரது இறுதிஊர்வலத்தில் இருபதாயிரம் பேர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஒருதிறன் குறைந்தால் மாற்றுத் திறன் உள்ளுக்குள்ளிருந்து பீறிட்டெழுந்தே தீரும் என்பதற்குச் சான்று பீத்தோவன்.

     இதுபோன்று உடல் குறைபாட்டைக் கருதாது வாழ்க்கையை வென்றவர்கள் ஏராளம். பாரா ஒலிம்பிக் என்ற விளையாட்டுப்போட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போட்டியாகும்.

மாற்றுத்திறனாளர்கள் வகைப்பாடு  (இந்திய அளவில்)

1 . பார்வைக் குறைபாடுடையோர். 

2 . கை,கால் குறைபாடுடையோர். 

3 . செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர்

 4 . மனவளர்ச்சி குன்றியவர்கள். 

5 . தொழுநோய் பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள். 

 என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளனர்.

      மாற்றுத்தினாளிகளைச் சமூகம் அங்கவீனர்கள் எனக் சுட்டிக் காட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

      இவ்வுலகில் மானிடராக பிறப்பதே அரியதாகும். அம்மானிடப்பிறப்பில் ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறையல்ல. ஒவ்வொருவரதும் ஊனமும் அங்கவீனமும் அவரது உடம்பில் தான் உண்டு. மனதிலே இல்லை என்பதை புரிந்து கொண்டு அனைவரும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதே நியதி.


2 டிசம்பர், 2021

உலக கணினி எழுத்தறிவு தினம் (World Computer Literacy Day)


 
       ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி உலக கணினி எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. நம் அன்றாட வாழ்வில் கணினி ஓர் அத்தியாவசியப்பொருளாகி விட்டது. நாம் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ கணினியைச் சார்ந்து வாழவேண்டியுள்ளது. சிறு வணிகத்தலங்கள் முதல் செயற்கைக் கோள் ஈறாகக் கணினியின் பயன்பாடு இன்றியமையாதது. 

       அத்தகைய காலகட்டத்தில், ஒவ்வொருவரும், அடிப்படைக் கணினி அறிவையாவது பெற்றிருக்கவேண்டியது அவசியமாகிறது.கற்றதோடு மட்டுமல்லாமல், அவ்வறிவை அன்றாட வாழ்வில் செயல்படுத்தும் திறமையுள்ளவர்களே மிளிர முடியும்.

       தகவல், தொழில் நுட்பத்துறையினர் மட்டுமன்றி, ஆசிரியர்கள், மருத்துவர்கள், அறிவியல் அறிஞர்கள்,ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், நீதித்துறையினர், போக்குவரத்துத் துறையினர் எனப் பல்வேறு பிரிவினரும் தங்களை இத்துறையில் UPDATE செய்துகொள்வது அவசியம்.

     “அனுபவமே சிறந்த ஆசான்” எனும் வாக்கு இத்துறைக்கு மிகவும் பொருத்தமானதாகும். நாம் ஏட்டில் கற்றுக்கொண்டதை விட, அனுபவத்தில் கற்றுக்கொள்வதே நிலைத்து நிற்கும்.

       உலகில் தகவல் தொழில்நுட்பத்துறையை ஆள்பவர்கள் இந்தியர்களே. அதிலும் குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே.இதற்குக் காரணம் தாய்மொழிக்கல்வி வாயிலாக அறிவு பெறுவதும், ஐயம் தீரக் கற்பதும் ஆகும்.

    இத்தகு பெருமை மிகு நாளில், நாமும், நம்மைச் சார்ந்தோரையும் கணினி அறிவு பெற்றவர்களாக மாற்றுவோம். கணினி மற்றும் அதன் தொடர்புடைய தொழில்நுட்பம் பற்றி விரிவாக அறியச் சிறந்த வாய்ப்பாக இந்த நாளை எடுத்துக்கொள்வோம்.

  இன்றைய சூழலில், கணினியை இயக்குபவர்கள் மட்டுமல்ல,  நன்றாகக் கையாளத் தெரிந்தவர்களே, அதிகம் வேண்டப் படுபவர்களாக இருக்கிறார்கள். தாய்மொழியைக் கணினியில் கையாளுங்கள். உலகம், இன்னும் உங்களை அதிகம் மதிக்கும். 

சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம்

     


     அடிமை முறை தொன்மைக் காலங்களில் இனங்களுக்கிடையே போரினால் ஏற்பட்டது. தோற்ற வீரர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாக்கப்பட்டனர். எகிப்தியர், போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தினர். 

       நாகரிக நிலையினால் உருவான தனிச்சொத்துகளைப் பெருக்கவும், உற்பத்தி முறையைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் மனிதன் அடிமையை உருவாக்கினான். 

     கிரேக்கம், ரோம், எகிப்து, பாபிலோன் போன்ற தொன்மையான நாகரிகங்களின் வளர்ச்சிக்கு அடிமைகளின் உழைப்பே மூலாதாரமாக இருந்தது. இங்கு உழைப்பு என்பது எந்த வரையறைக்கும் உட்படாதது. அதனாலேயே 

அடிமைகளைப் ‘பேசும் கருவிகள்’ என்று அரிஸ்டாட்டில் குறிப்பிட்டார். 

    அடிமைகள் முதலில் அரசருக்குச் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்க்கு அடிமைகளைப் பரிசளிக்கும் வழக்கம் இருந்தது. அடிமை முறை கிரேக்க நாகரிகத்தில் பெரும்பங்கு வகித்தது.

    அடிமைகளின் கொடூரமான வரலாறாகக் கருதப்படும் ரோமில் மன்னர்கள் தங்களின் பொழுதுபோக்கு பொருளாக அவர்களை நடத்தினார்கள். ‘கிளாடியேட்டர்’ எனப்படும் அடிமைகளை மற்றொரு அடிமையுடன் அல்லது சிங்கம், புலி என விலங்குகளுடன் மோதவிட்டு ரசிக்கும் வழக்கம் ரோமிலிருந்தது.

      “அமெரிக்காவே நீ இலக்கற்றுப் போய்விட்டாய். உனது சகோதரர்களை மிதித்துவிட்டுச் சென்று கொண்டிருக்கிறாய். ஏதோ சில மனிதர்கள் மட்டுமல்ல. எல்லோரும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். எழுந்திரு அமெரிக்கா. இலக்கு நோக்கித் திரும்ப வா” என போர்க் குரலெழுப்பி நிறவெறிச் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடிய மக்களின் போராளி மார்டின் லூதர் கிங்கின், அடிமை முறை ஒழிப்பிற்கான பங்களிப்பு ஈடு இணையற்றது. மகத்துவமானது. 

     உலக மக்களிடையே அடிமைத்தனத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் டிசம்பர் 2ஆம் தேதி சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. 

      1949-ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அன்று ஆள்கடத்தலை ஒடுக்குதல் மற்றும் பிறர் பாலியல் தொழிலுக்குட்படுத்தப்பட்டுச் சுரண்டப்படுவதை தடுப்பதற்கான உடன்படிக்கை ஐ.நா.சபையின் பொது அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாக (United nations conventions for the suppression of the Traffic in person and of the exploitations of the prostitution of others) இத்தினம் கொண்டாடப்படுகின்றது. 

    ஆண்டுதோறும் வால்க் ப்ரீ பவுண்டேஷன் எனும் அமைப்பால் உலக அடிமைத் தன குறியீடு (Global Slavery index) வெளியிடப்படுகின்றது. இந்த அமைப்பானது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (International labour Organisation) சார்பாக “நவீன அடிமைத்துவத்தின் உலகளாவிய மதிப்பீடுகள்”  (Global Estimates of modern slavery) என்ற அறிக்கையை வெளியிடுகிறது. இவற்றில் நாடுகள் வாரியான மதிப்பீடுகள் வெளியிடப் படுவதில்லை.இந்த அறிக்கையின் படி, உலகம் முழுவதும் 40.3 மில்லியன் அளவிற்கு நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 

    சுதந்திர நாட்டில் மனிதர்களின் சம உரிமை நசுக்கப்பட்டு போராட்டக்களமாக்கப்படும் வெட்கக்கேடு. அழு என்றால் அழுவதற்கும், சிரி என்றால் சிரிப்பதற்கும், விழு என்றால் விழுந்து சாவதற்கும் அவர்கள் ஒன்றும் திக்கற்றவர்கள் அல்லர். 

   மக்களை அடிமைகளாக்கும்,குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு, உடனடி தண்டனையும் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகளையும், சலுகைகளையும் வழங்குவதன் மூலமாக ஒரு பாதுகாப்பான மனிதக் கடத்தலற்ற சமூகத்தை உருவாக்க முடியும்.எனவே அடிமைளை மீட்டுப் புதிய சமூகம் படைப்பதில், நாம் ஒவ்வொருவரும் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செலுத்துவோம் எனச் சூளுரைப்போம். 

  “குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் 

    வடுவன்று வேந்தன் தொழில்” 

        குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும் குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும் என்பது வள்ளுவர் வாக்கு. கடும் சட்டங்கள் மூலம், மனிதன் அடிமையாவதைத் தடுத்து, மனிதநேயம் மலரச்செய்வோம்.

1 டிசம்பர், 2021

உலக எய்ட்ஸ் தினம்

 

    1988 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார நிறுவனம், டிசம்பர் 1ஆம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தினம்’ என அனுசரித்து வருகிறது. உலக எய்ட்ஸ் தடுப்பு தினத்தை எச்.ஐ.வி தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வு நாள் என்றும் அழைக்கலாம்.

     உலக அளவில் 3 கோடியே 80 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி பாதிப்போடு வாழ்கிறார்கள்; அவர்களில் 18 லட்சம் பேர் குழந்தைகள்’ என்கிறது, 2015ஆம் ஆண்டுக்கான ஒரு புள்ளிவிவரம். அதே 2015ஆம் ஆண்டில்தான் 11 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி இறந்துபோயிருக்கிறார்கள்.

     வருவாயில் பின்தங்கிய மற்றும் நடுத்தர நாடுகளில்தான் பெரும்பான்மையானோர் HIV யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2015ஆம் ஆண்டு, இந்தியாவில் HIV பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 21 லட்சம். எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் இறந்தவர்கள் 68,000 பேர்.

    இதில் கொடுமை என்னவென்றால், உலகில், HIV பாதிப்போடு வாழ்கிறவர்களில் 40 சதவிகிதத்தினருக்கு, தங்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருப்பதே தெரியாது என்பதுதான்.

    ஒரு தினத்தை நினைவுபடுத்தி அனுசரிப்பதன் நோக்கம், அதற்கான முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணரவைப்பதாகும். மருத்துவம், தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்ட இன்றைய சூழலில் நமக்குத் தேவை, எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி குறித்த போதிய விழிப்புணர்வு. 

    எச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 % எயிட்ஸ் நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாகவும், 4 % எச் ஐ வி தொற்று உள்ள கர்ப்பிணிகளின் மூலமாகவும், 2 % சரியாகச் சுத்தம் செய்யப்படாத ஊசிகளைப் பயன்படுத்துவதின் மூலமும், 2 % பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் வழியாகவும், மீதி 6 % பிற காரணங்களாலும் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

எச்.ஐ.வி என்றால் என்ன?

     HUMAN IMMUNO DEFICIENCY VIRUS 

என்பதைத்தான் சுருக்கமாக எச்.ஐ.வி எனக் கூறுகிறோம். அதாவது, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியைக் குறைத்திடும் வைரஸ் கிருமி உள்ள நபரையே எச்.ஐ.வி தொற்றுள்ள நபர் என்கிறோம். 

    நமது உடலில் இயற்கையாகவே ரத்தத்தில் நோயை எதிர்க்கும் வெள்ளை அணுக்கள் உள்ளன. நோய் வராமல் தடுப்பது வெள்ளை அணுக்களின் பணியே. நோய்க்கிருமிகள் நமது உடலின் எந்தப் பகுதியிலாவது நுழைந்து விட்டால், வெள்ளை அணுக்கள் ஒன்று திரண்டு நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளை, போராடி அழித்து நம்மை நோயிலிருந்து காக்கும். 

     எச்.ஐ.வி கிருமியானது நமது விந்து / ரத்தம்/ நிணநீர் வழிபாக உள்ளே நுழையும் போது வெள்ளை அணுக்களைப் போல, தன்னை மாற்றி உள்ளே நுழைந்து வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கி விடுகிறது. வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கும் போது உடலில் எவ்வித அறிகுறிகளும் தெரிவதில்லை. வெள்ளை அணுக்கள் குறைவதால் மெல்ல மெல்ல உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. 

    உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.இந்த நிலையில் பல நோய்கள் உடலின் உள்ளே புகுந்து உடலை பலவீனப்படுத்துகிறது பல நோய்களின் கூட்டு தொகுப்பையே எய்ட்ஸ் என்கிறோம் .உடலில் வைரஸ் கிருமிகள் இருக்கும் நிலையினையே எச்.ஐ.வி நிலை என்கிறோம். தொற்றில்லாத நபருடன் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளும் போது எச்.ஐ.வி- யை இவரால் பரப்ப முடியும்.

     எச்.ஐ.வி உடலில் உள்ளது என்பதற்கு எவ்வித அறிகுறியும் தெரிவதில்லை. பிறரைப் போலவே இளம் வயதாக இருக்கலாம், அழகாக இருக்கலாம். ஆனாலும் அவர் கிருமிகளுடன் வாழ்பவர் ஆவார்.இந்த நிலையே எச்.ஐ.வி நிலை

எய்ட்ஸ்

       இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை, எச்.ஐ.வி நோய்க்கிருமி படிப்படியாகக் கொன்று நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடுகின்றன. வெள்ளை அணுக்களை, எச்.ஐ.வி கிருமிகள் கொல்வதால், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் பல்வேறு நோய்களின் தாக்கதிற்கு உட்பட்ட இறுதி நிலையே எய்ட்ஸ் ஆகும்.

இந்த நிலை ஏற்பட 6 முதல் 12 ஆண்டுகள் ஆகும்.

A – Aquired - தேடிப் பெற்றது.

I – Immune – உடலின் பாதுகாப்பு சக்தியை அழித்தல்.

D – Deficiency – நோயெதிர்ப்பு சக்தி முழுவதுமாக அழித்துநோய் உடலை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது.

S – Syndrome - பல்வேறு நோய்களின் தொகுப்பு.

     உடலில் கிருமிகள் உட்புகுந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் வெள்ளை அணுக்களை அழிப்பதால்,எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் வரக்கூடிய நோய்களை சந்தர்ப்பவாத நோய்கள் என்கிறோம்.

    எயிட்ஸை வெற்றிகொள்ள “யுவா”  என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது  “Youth Unite for Victory on Aids”  என்பதன் சுருக்கமாகும். அதாவது எயிட்ஸை வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம். 

     இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசுத் துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது. இதில், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை,நேரு யுவ கேந்த்ரா,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தன்னார்வத் தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.

உலக மக்கள் அனைவரும் இணைந்து எய்ட்ஸ் என்னும் கொடிய அரக்கனை வெல்வோம்.

30 நவம்பர், 2021

ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்

 


        நமது இந்திய தேசத்தின் விஞ்ஞானியுமான, அறிவியல் ஆராய்ச்சியாளருமான சர். ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இன்று 163 ஆவது பிறந்தநாள். தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவைகளுக்கும் மகிழ்ச்சி, துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மையைக் கண்டறிந்து சொன்ன, அந்த அதிசய விஞ்ஞானியின் பிறந்த நாள் இன்று

      1858 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தற்போதைய பங்களாதேஷ் நாட்டின் பகுதி, ஃபரீத்பூர் மாவட்டத்தில் மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார் போஸ். அவரது தந்தை ஒரு மருத்துவர். தம் ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு கல்கத்தாவின் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார் போஸ். 19 வயதில் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டினார்.

    இங்கிலாந்தில் இருந்தபோது லார் ரிலே (Lore Rele) என்ற விஞ்ஞானியின் நட்பு போஸுக்குக் கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதல் மற்றும் தூண்டுதலின் பேரில் தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் போஸ். கேம்பிரிட்ஜில் கல்வியை முடித்து இந்தியா திரும்பிய பிறகு கல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

      அப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பில் இருந்ததால் ஒரு விநோதமான பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்திய மண்ணில் ஒரு வேலையைச் செய்வதற்காக ஓர் ஆங்கிலேயருக்குக் கொடுக்கும் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்குதான் அதே வேலையைச் செய்யும் இந்தியருக்குக் கொடுக்கப்பட்டது. அந்தப்பழக்கம் அந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள் என்பதால் முழு ஊதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்பதுதான் அதற்குக்கூறப்பட்ட காரணம். 

    ஜெகதீஸ் சந்திரபோஸ் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை தனது அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி நன்கு கற்பித்ததோடு மட்டுமன்றி, பல ஆராய்ச்சிகளையும் செய்தார். அவரது பணியில் முழு திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸுக்கு முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்குத் தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க உத்தரவிட்டது.

       அவ்வாறு கிடைத்த தொகையைக் கொண்டு, ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார் போஸ். அந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 

    அடிப்படையில் அவர் ஓர் இயற்பியல் வல்லுநராக இருந்தாலும் ரேடியோ வேவ்ஸ் (Radio waves) எனப்படும் வானொலி அலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார். உண்மையில் வானொலியின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி மார்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிப்பரப்பு அமைப்பு முறையை போஸ் உருவாக்கிவிட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் அந்தக்கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் அப்போது கண்டுகொள்ளவில்லை என்கிறது அந்தக்குறிப்பு.

      தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று நம்பிய போஸ் அசைவுகளையும், சலசலப்புகளையும் அளக்கும் பல்வேறு நுண்ணிய உணர் கருவிகளைச் சொந்தமாக உருவாக்கி அவற்றைக்கொண்டு தாவரங்களின்மீது பல்வேறு சோதனைகளைச் செய்தார். அந்த சோதனைகளின் மூலம் வெப்பம்,குளிர், ஒளி, ஒலி போன்ற stimuli அதாவது புறத்தூண்டுதல்கள் எப்படி மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கின்றனவோ, அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார். 

     போஸ் ஒரு புகழ்பெற்ற பரிசோதனையையும் செய்து காட்டினார் புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை ஊசி மூலம் ஒரு எலிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் அதே தனிமத்தை ஓர் தாவரத்திலும் செலுத்தினார். எலி, தாவரம் இரண்டுமே மரணத்தின் விளிம்பில் போராடியதைக் கண்டு வியந்த அறிவியல் உலகம் போஸின் ஆய்வுகளைப் பாராட்டியது.

      தனது பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு இரண்டு புகழ்பெற்ற நூல்களை வெளியிட்டார் போஸ். (Response in the Living and Non-Living), (The Nervous Mechanism of Plants) என்ற அந்த இரண்டு நூல்களும் சொன்ன கருத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. 

    தாவரங்களுக்கும் உயிர் உண்டு அவை மனிதர்களைப் போலவே உணவு உண்டு செரிப்பதுடன், இரவில் உறங்கி காலையில் விழிக்கின்றன. தாவரங்களுக்கும்கூட பிறப்பும், இறப்பும் உண்டு, நம்மைப்போலவே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகளும் உண்டு. இவைதான் அந்த நூல்கள் சொன்ன கருத்துகளாகும். 

    தாவரங்களை நேசிப்பவர்கள் ஒன்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம் அவற்றுடன் தினசரி அன்பாக பேசினால் அவை நன்றாக வளருமாம். ஜகதீஸ் சந்திரபோஸின் ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது அந்தக்கூற்றும் உண்மை என்றே தோன்றுகிறது.

      அறிவியல் ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் ஜகதீஷ் சந்திர போஸ்க்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது அப்போது இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம். 1920 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் கழகத்தின் உறுப்பினராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

   "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலாரைத் தந்த நமது இந்திய தேசம்தான் அந்தப்பயிர்களுக்கு உயிர் உண்டு என்ற உண்மையைக் கண்டு சொன்னவரையும் தந்திருக்கிறது. 



29 நவம்பர், 2021

குணசித்திர நடிகர்.எஸ்.வி.சகஸ்ரநாமம் பிறந்த தினம்

 


* பிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29)

* கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913). சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். 13 வயதில், உள்ளூர் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்ததும் நடிப்பில் ஆர்வம் பிறந்தது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

* அப்பா எழுதியதைப்போல கடிதம் எழுதி அவருடைய கையெழுத்தையும் தானே போட்டு தயாரித்த சம்மதக் கடிதத்தை டி.கே.எஸ்.சகோதரர்களின் மதுரை பாலசண்முகானந்த சபா மேலாளரிடம் கொடுத்து, நாடகக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார். நடிப்பு மட்டுமின்றி, பல தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

* நாடகம் தவிர பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்றார். வாலிபால், பேட்மின்டன் ஆட்டத்திலும் கைதேர்ந்தவர். கார் மெக்கானிக் வேலையும் தெரியும். சிலகாலம் பஸ் கண்டக்டராகவும் பணியாற்றினார். பல நாடகக் குழுக்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

* 1935இல் முதன்முதலாக ‘மேனகா’ திரைப்படத்தில் நடித்தார். ஆழமான உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தியும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். வித்தியாசமான வில்லன் பாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார். வெள்ளையர் ஆட்சியின்போது சுதந்திரப் போராட்டத் தாகத்தைப் பிரதிபலிக்கும் நாடகங்களில் துணிச்சலுடன் முக்கிய வேடங்களில் நடித்தார்.

* இவரே நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்தும் வந்தார். வ.ரா., ப.ஜீவானந்தம் உள்ளிட்டோர் இவரது நாடகங்களை விரும்பிப் பார்த்தனர். நாடகங்கள் வாயிலான இவரது சமூக மறுமலச்சிப் பங்களிப்பைப் பாராட்டி, ‘பாரதி கலைஞர் சகஸ்ரநாமம்’ என்ற பட்டத்தை ப.ஜீவானந்தம் இவருக்கு வழங்கினார். ‘மேனகா’, ‘பராசக்தி’, ‘ஆனந்தஜோதி’, ‘நல்லதம்பி’, ‘மர்மயோகி’, ‘உரிமைக் குரல்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘நவாப் நாற்காலி’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* என்.எஸ்.கிருஷ்ணன் சிறை சென்றிருந்தபோது அவருடைய நாடகக் கம்பெனியின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும் செயல்பட்டுள்ளார். 1950களில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும், ‘சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ்’ என்ற நாடகக் குழுவைத் தொடர்ந்து நடத்தி வந்தார். நாடகத் துறையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டார்.

* பல பிரபலங்கள், இலக்கியவாதிகளின் தொடர்பால் வாசிப்பு ஆர்வமும் கொண்டிருந்தார். திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பாரதியார் கவிதைகள், கட்டுரைகளை வாசித்தார்.

* நாடகங்களில் பின்னணி பாடும் உத்தியை அறிமுகப்படுத்தியது இவர்தான். இதன் மூலம் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நாடகத்தில் நடிக்க முடியும் என்ற நிலையை மாற்றினார். ஆர்.முத்துராமன், என்.எஸ்.லட்சுமி, வி.சகுந்தலா, காந்திமதி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இவரது கம்பெனியில் நடித்து புகழ் பெற்றனர்.

* மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். இறுதிவரை கதராடையே அணிந்தவர். நாடகக் கலையில் இவரது சிறப்பான பங்களிப்புக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. பாரதியின் கவிதைகளை மிகச் சிறப்பாக நாடகமாக அரங்கேற்றியவர்.

* சீனப் போர் சமயத்தில் தேசிய எல்லைப் பாதுகாப்பு நிதி திரட்ட பல நாடகங்களை நடத்தினார். சினிமாவிலும், நாடகங்களிலும் தனக்கு அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகள் அனைத்தையும் யுத்த நிதிக்காக காமராஜரிடம் வழங்கினார். 

* குணச்சித்திர நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராகப் போற்றப்பட்ட எஸ்.வி.சகஸ்ரநாமம் 75 ஆவது வயதில் (1988) மறைந்தார்.

கலைவாணர். என்.எஸ். கிருஷ்ணன் பிறந்தநாள் & நினைவுநாள்


     

திரையுலகில் வள்ளல்தன்மையுடன் திகழ்ந்த இருவர் கலைவாணர் என்.எஸ்.கே மற்றும் எம்.ஜி.ஆர். “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான் ” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கே. அவரது பிறந்தநாளும், நினைவு நாளும் இன்று. 

     இருவரது திரையுலக அறிமுகமும் 1936 ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில்தான் நிகழ்ந்தது. திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர். நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தார்.

    என்.எஸ்.கிருஷ்ணன், வறுமையினால் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. சிறுவயதிலேயே நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்கத் தொடங்கினார்.

       சதிலீலாவதியில் அறிமுகமானாலும் முதற்படத்தை முந்திக்கொண்டு அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றி, பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவையைக் கொண்டு சேர்த்தது.

    முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கோமாளித்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பதுதான் அதுவரை தமிழ்சினிமாவில் நகைச்சுவைக் காட்சி என்பதன் வரையறையாக இருந்துவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. 



      நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர். 

     நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் நாடகக் குழுவைத் தொடங்கி அதில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் கலைவாணர்.

      'வசந்தசேனா' படப்பிடிப்புக்காகப் புனே சென்றபோது காதல் ஏற்பட்டுக் கல்யாணத்தில் முடிந்தது டி.ஏ மதுரத்துடனான அவரது நட்பு. தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக்கலைஞர்களான இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன. 

     பழம்பெருமை பேசித் தமிழர்கள் வீணாகி விடக்கூடாது என்ற கொள்கை கொண்ட என்.எஸ்.கே தனது திரைப்படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என நகைச்சுவையோடும் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிகழ்ந்து, கலைவாணரின் தீர்க்க தரிசனத்துக்குச் சான்றாக அமைந்தது.

    'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார் கிருஷ்ணன். தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் என்.எஸ்.கே வின் அறிவுரையைக்கேட்டு நடப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். 

    பிறர் மனதைப் புண்படுத்தாமல், பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. 

      1957 ஆம் ஆண்டு, இதே தேதியில் தனது 49 ஆவது வயதில் கலைவாணர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.

28 நவம்பர், 2021

தேசிய மாணவர்படை அமைப்பு தினம் (NCC RAISING DAY)

 


       தேசிய மாணவர் படை, (National Cadet Corps) இந்தியாவில் ஏப்ரல் 16, 1948-ஆம் வருடம் தொடங்கப் பெற்றது. Unity and Discipline என்பதே இதன் குறிக்கோளுரையாகும்.இந்தியாவில் 30 இலட்சம் பேர் தேசிய மாணவர் படையில் உள்ளனர். 

      தமிழ‌த்‌தி‌ல் தேசிய மாணவர் படையில் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.மேலும் இந்த எண்ணிக்கையை வருடாவருடம் அதிகரிக்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌டுகிறது.

      1965ஆண்டிலும், 1971ஆண்டிலும் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில், இரண்டாம் வரிசை அணியினராக தேசியப்படை மாணவர் நின்றது, வரலாற்று புகழ் வாய்ந்த நிகழ்வாகும்.

      பள்‌ளி‌ப் பருவ‌த்‌திலும், கல்லூரிப் பருவத்திலும் சமூக‌த்‌தி‌ன் ‌மீது அ‌க்கறை செலு‌த்து‌ம் ‌வித‌த்‌தி‌ல், இளவயதினரை வ‌ழிநட‌த்த, எ‌ன்‌சி‌சி எனப்படும் தேசிய மாணவர் படை அமைக்கப் பட்டுள்ளது. இராணுவ‌த்‌திலும், காவ‌ல் துறையிலும் சேர்ந்து பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு படிப்பு காலத்திலேயே அதற்கேற்ற பயிற்சியை என்சிசி அளிக்கிறது.

        தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு தனி ஆளுமைத் திறன், பேச்சுபயிற்சி, கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். அவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல், தீயணைப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.வேலைவாய்ப்பு பற்றித் தெரிந்து கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு தேசிய மாணவர் படை பிரிவு அலுவலகத்திலும், வேலைவாய்ப்பு வழிகாட்டி பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

        தேசிய மாணவர் படையின் கீழ் மூன்று பெரும்பிரிவுகள் அமைந்துள்ளன. இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருமே, தேசிய மாணவர் படையினர் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆடவர்களுக்கு மட்டுமே அமைந்திருந்த இந்தப் பிாிவில் தற்பாேது பெண்களும் சேர்க்கப்படுகின்றனர்.

1.தரைப்படை அணி 2. விமானப்படை அணி 3. கடற்படை அணி

     தேசிய மாணவர் படையை எல்லையோர மற்றும் கடலோரப் பகுதிகளில் விரிவுபடுத்துவது குறித்த அறிவிப்பு 2020 ஆகஸ்ட் 15 அன்று பிரதமரால் வெளியிடப்பட்டது.




முகாம்கள் 

1. தேசிய மாணவர் படை (இந்தியா)

2. இளைஞர் பரிமாற்ற நிரல் (Youth Exchange Programme)

3. தலைமைப் பண்பிற்கான முகாம்கள் (Leadership Camp)

4. வாயு சைனிக் முகாம் (Vayu Sainik Camp)

5. நவ் சைனிக் முகாம் (Nau Sainik Camp)

6. பாறையேற்ற முகாம்கள் (Trekking Camp)

7. மலையேற்ற முகாம்கள் (Mountaineering Camp)

8. தேசிய ஒற்றுமைக்கான முகாம்கள் (National Integration Camp)

9. தள் சைனிக் முகாம் (Tal Sainik Camp)

10. படை ஒருங்கிணைவு முகாம் (Army Attachment Camp)

11. கடற்படை ஒருங்கிணைவு முகாம் (Naval Attachment Camp)

12. வான்படை ஒருங்கிணைவு முகாம் (Airforce Attachment Camp)

13. குடியரசு நாளுக்கான முகாம் (Republic Day Camp)

14. வருடாந்திர பயிற்சி முகாம் (Annual Training Camp)

15. கூட்டு வருடாந்திர பயிற்சி முகாம் (Combained Annual Training Camp)


உறுதிமொழி

    தேசிய மாணவர் படை மாணவர்களான நாங்கள், இந்தியாவின் ஒருமைப்பாட்டை எப்பொழுதும் நிலைநிறுத்துவோம் என்று உறுதியளிக்கிறோம்.

      எங்கள் தேசத்தின் ஒழுக்கமான மற்றும் பொறுப்பான குடிமகனாக இருக்க நாங்கள் தீர்மானிக்கிறோம்.

     சுயநலமின்மை மற்றும் நமது சக உயிரினங்களின் மீது அக்கறை கொண்ட நேர்மறையான சமூக சேவையை நாங்கள் மேற்கொள்வோம்.

இப்டையின் 73ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாமும் அவர்களை வாழ்த்தி நமது தேசப்பற்றை வெளிப்படுத்துவோம்