29 நவம்பர், 2021

கலைவாணர். என்.எஸ். கிருஷ்ணன் பிறந்தநாள் & நினைவுநாள்


     

திரையுலகில் வள்ளல்தன்மையுடன் திகழ்ந்த இருவர் கலைவாணர் என்.எஸ்.கே மற்றும் எம்.ஜி.ஆர். “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான் ” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கே. அவரது பிறந்தநாளும், நினைவு நாளும் இன்று. 

     இருவரது திரையுலக அறிமுகமும் 1936 ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில்தான் நிகழ்ந்தது. திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர். நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தார்.

    என்.எஸ்.கிருஷ்ணன், வறுமையினால் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. சிறுவயதிலேயே நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்கத் தொடங்கினார்.

       சதிலீலாவதியில் அறிமுகமானாலும் முதற்படத்தை முந்திக்கொண்டு அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றி, பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவையைக் கொண்டு சேர்த்தது.

    முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கோமாளித்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பதுதான் அதுவரை தமிழ்சினிமாவில் நகைச்சுவைக் காட்சி என்பதன் வரையறையாக இருந்துவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. 



      நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர். 

     நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் நாடகக் குழுவைத் தொடங்கி அதில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் கலைவாணர்.

      'வசந்தசேனா' படப்பிடிப்புக்காகப் புனே சென்றபோது காதல் ஏற்பட்டுக் கல்யாணத்தில் முடிந்தது டி.ஏ மதுரத்துடனான அவரது நட்பு. தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக்கலைஞர்களான இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன. 

     பழம்பெருமை பேசித் தமிழர்கள் வீணாகி விடக்கூடாது என்ற கொள்கை கொண்ட என்.எஸ்.கே தனது திரைப்படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என நகைச்சுவையோடும் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிகழ்ந்து, கலைவாணரின் தீர்க்க தரிசனத்துக்குச் சான்றாக அமைந்தது.

    'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார் கிருஷ்ணன். தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் என்.எஸ்.கே வின் அறிவுரையைக்கேட்டு நடப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். 

    பிறர் மனதைப் புண்படுத்தாமல், பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. 

      1957 ஆம் ஆண்டு, இதே தேதியில் தனது 49 ஆவது வயதில் கலைவாணர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece