29 நவம்பர், 2021

குணசித்திர நடிகர்.எஸ்.வி.சகஸ்ரநாமம் பிறந்த தினம்

 


* பிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29)

* கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913). சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். 13 வயதில், உள்ளூர் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்ததும் நடிப்பில் ஆர்வம் பிறந்தது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

* அப்பா எழுதியதைப்போல கடிதம் எழுதி அவருடைய கையெழுத்தையும் தானே போட்டு தயாரித்த சம்மதக் கடிதத்தை டி.கே.எஸ்.சகோதரர்களின் மதுரை பாலசண்முகானந்த சபா மேலாளரிடம் கொடுத்து, நாடகக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார். நடிப்பு மட்டுமின்றி, பல தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

* நாடகம் தவிர பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்றார். வாலிபால், பேட்மின்டன் ஆட்டத்திலும் கைதேர்ந்தவர். கார் மெக்கானிக் வேலையும் தெரியும். சிலகாலம் பஸ் கண்டக்டராகவும் பணியாற்றினார். பல நாடகக் குழுக்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

* 1935இல் முதன்முதலாக ‘மேனகா’ திரைப்படத்தில் நடித்தார். ஆழமான உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தியும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். வித்தியாசமான வில்லன் பாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார். வெள்ளையர் ஆட்சியின்போது சுதந்திரப் போராட்டத் தாகத்தைப் பிரதிபலிக்கும் நாடகங்களில் துணிச்சலுடன் முக்கிய வேடங்களில் நடித்தார்.

* இவரே நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்தும் வந்தார். வ.ரா., ப.ஜீவானந்தம் உள்ளிட்டோர் இவரது நாடகங்களை விரும்பிப் பார்த்தனர். நாடகங்கள் வாயிலான இவரது சமூக மறுமலச்சிப் பங்களிப்பைப் பாராட்டி, ‘பாரதி கலைஞர் சகஸ்ரநாமம்’ என்ற பட்டத்தை ப.ஜீவானந்தம் இவருக்கு வழங்கினார். ‘மேனகா’, ‘பராசக்தி’, ‘ஆனந்தஜோதி’, ‘நல்லதம்பி’, ‘மர்மயோகி’, ‘உரிமைக் குரல்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘நவாப் நாற்காலி’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* என்.எஸ்.கிருஷ்ணன் சிறை சென்றிருந்தபோது அவருடைய நாடகக் கம்பெனியின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும் செயல்பட்டுள்ளார். 1950களில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும், ‘சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ்’ என்ற நாடகக் குழுவைத் தொடர்ந்து நடத்தி வந்தார். நாடகத் துறையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டார்.

* பல பிரபலங்கள், இலக்கியவாதிகளின் தொடர்பால் வாசிப்பு ஆர்வமும் கொண்டிருந்தார். திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பாரதியார் கவிதைகள், கட்டுரைகளை வாசித்தார்.

* நாடகங்களில் பின்னணி பாடும் உத்தியை அறிமுகப்படுத்தியது இவர்தான். இதன் மூலம் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நாடகத்தில் நடிக்க முடியும் என்ற நிலையை மாற்றினார். ஆர்.முத்துராமன், என்.எஸ்.லட்சுமி, வி.சகுந்தலா, காந்திமதி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இவரது கம்பெனியில் நடித்து புகழ் பெற்றனர்.

* மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். இறுதிவரை கதராடையே அணிந்தவர். நாடகக் கலையில் இவரது சிறப்பான பங்களிப்புக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. பாரதியின் கவிதைகளை மிகச் சிறப்பாக நாடகமாக அரங்கேற்றியவர்.

* சீனப் போர் சமயத்தில் தேசிய எல்லைப் பாதுகாப்பு நிதி திரட்ட பல நாடகங்களை நடத்தினார். சினிமாவிலும், நாடகங்களிலும் தனக்கு அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகள் அனைத்தையும் யுத்த நிதிக்காக காமராஜரிடம் வழங்கினார். 

* குணச்சித்திர நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராகப் போற்றப்பட்ட எஸ்.வி.சகஸ்ரநாமம் 75 ஆவது வயதில் (1988) மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...