1988 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார நிறுவனம், டிசம்பர் 1ஆம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தினம்’ என அனுசரித்து வருகிறது. உலக எய்ட்ஸ் தடுப்பு தினத்தை எச்.ஐ.வி தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வு நாள் என்றும் அழைக்கலாம்.
உலக அளவில் 3 கோடியே 80 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி பாதிப்போடு வாழ்கிறார்கள்; அவர்களில் 18 லட்சம் பேர் குழந்தைகள்’ என்கிறது, 2015ஆம் ஆண்டுக்கான ஒரு புள்ளிவிவரம். அதே 2015ஆம் ஆண்டில்தான் 11 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி இறந்துபோயிருக்கிறார்கள்.
வருவாயில் பின்தங்கிய மற்றும் நடுத்தர நாடுகளில்தான் பெரும்பான்மையானோர் HIV யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2015ஆம் ஆண்டு, இந்தியாவில் HIV பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 21 லட்சம். எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் இறந்தவர்கள் 68,000 பேர்.
இதில் கொடுமை என்னவென்றால், உலகில், HIV பாதிப்போடு வாழ்கிறவர்களில் 40 சதவிகிதத்தினருக்கு, தங்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருப்பதே தெரியாது என்பதுதான்.
ஒரு தினத்தை நினைவுபடுத்தி அனுசரிப்பதன் நோக்கம், அதற்கான முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணரவைப்பதாகும். மருத்துவம், தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்ட இன்றைய சூழலில் நமக்குத் தேவை, எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி குறித்த போதிய விழிப்புணர்வு.
எச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 % எயிட்ஸ் நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாகவும், 4 % எச் ஐ வி தொற்று உள்ள கர்ப்பிணிகளின் மூலமாகவும், 2 % சரியாகச் சுத்தம் செய்யப்படாத ஊசிகளைப் பயன்படுத்துவதின் மூலமும், 2 % பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் வழியாகவும், மீதி 6 % பிற காரணங்களாலும் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி என்றால் என்ன?
HUMAN IMMUNO DEFICIENCY VIRUS
என்பதைத்தான் சுருக்கமாக எச்.ஐ.வி எனக் கூறுகிறோம். அதாவது, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியைக் குறைத்திடும் வைரஸ் கிருமி உள்ள நபரையே எச்.ஐ.வி தொற்றுள்ள நபர் என்கிறோம்.
நமது உடலில் இயற்கையாகவே ரத்தத்தில் நோயை எதிர்க்கும் வெள்ளை அணுக்கள் உள்ளன. நோய் வராமல் தடுப்பது வெள்ளை அணுக்களின் பணியே. நோய்க்கிருமிகள் நமது உடலின் எந்தப் பகுதியிலாவது நுழைந்து விட்டால், வெள்ளை அணுக்கள் ஒன்று திரண்டு நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளை, போராடி அழித்து நம்மை நோயிலிருந்து காக்கும்.
எச்.ஐ.வி கிருமியானது நமது விந்து / ரத்தம்/ நிணநீர் வழிபாக உள்ளே நுழையும் போது வெள்ளை அணுக்களைப் போல, தன்னை மாற்றி உள்ளே நுழைந்து வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கி விடுகிறது. வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கும் போது உடலில் எவ்வித அறிகுறிகளும் தெரிவதில்லை. வெள்ளை அணுக்கள் குறைவதால் மெல்ல மெல்ல உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.இந்த நிலையில் பல நோய்கள் உடலின் உள்ளே புகுந்து உடலை பலவீனப்படுத்துகிறது பல நோய்களின் கூட்டு தொகுப்பையே எய்ட்ஸ் என்கிறோம் .உடலில் வைரஸ் கிருமிகள் இருக்கும் நிலையினையே எச்.ஐ.வி நிலை என்கிறோம். தொற்றில்லாத நபருடன் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளும் போது எச்.ஐ.வி- யை இவரால் பரப்ப முடியும்.
எச்.ஐ.வி உடலில் உள்ளது என்பதற்கு எவ்வித அறிகுறியும் தெரிவதில்லை. பிறரைப் போலவே இளம் வயதாக இருக்கலாம், அழகாக இருக்கலாம். ஆனாலும் அவர் கிருமிகளுடன் வாழ்பவர் ஆவார்.இந்த நிலையே எச்.ஐ.வி நிலை
எய்ட்ஸ்
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை, எச்.ஐ.வி நோய்க்கிருமி படிப்படியாகக் கொன்று நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடுகின்றன. வெள்ளை அணுக்களை, எச்.ஐ.வி கிருமிகள் கொல்வதால், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் பல்வேறு நோய்களின் தாக்கதிற்கு உட்பட்ட இறுதி நிலையே எய்ட்ஸ் ஆகும்.
இந்த நிலை ஏற்பட 6 முதல் 12 ஆண்டுகள் ஆகும்.
A – Aquired - தேடிப் பெற்றது.
I – Immune – உடலின் பாதுகாப்பு சக்தியை அழித்தல்.
D – Deficiency – நோயெதிர்ப்பு சக்தி முழுவதுமாக அழித்துநோய் உடலை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது.
S – Syndrome - பல்வேறு நோய்களின் தொகுப்பு.
உடலில் கிருமிகள் உட்புகுந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் வெள்ளை அணுக்களை அழிப்பதால்,எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் வரக்கூடிய நோய்களை சந்தர்ப்பவாத நோய்கள் என்கிறோம்.
எயிட்ஸை வெற்றிகொள்ள “யுவா” என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது “Youth Unite for Victory on Aids” என்பதன் சுருக்கமாகும். அதாவது எயிட்ஸை வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம்.
இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசுத் துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது. இதில், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை,நேரு யுவ கேந்த்ரா,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தன்னார்வத் தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.
உலக மக்கள் அனைவரும் இணைந்து எய்ட்ஸ் என்னும் கொடிய அரக்கனை வெல்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக