29 நவம்பர், 2021

குணசித்திர நடிகர்.எஸ்.வி.சகஸ்ரநாமம் பிறந்த தினம்

 


* பிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29)

* கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913). சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். 13 வயதில், உள்ளூர் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்ததும் நடிப்பில் ஆர்வம் பிறந்தது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

* அப்பா எழுதியதைப்போல கடிதம் எழுதி அவருடைய கையெழுத்தையும் தானே போட்டு தயாரித்த சம்மதக் கடிதத்தை டி.கே.எஸ்.சகோதரர்களின் மதுரை பாலசண்முகானந்த சபா மேலாளரிடம் கொடுத்து, நாடகக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார். நடிப்பு மட்டுமின்றி, பல தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

* நாடகம் தவிர பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்றார். வாலிபால், பேட்மின்டன் ஆட்டத்திலும் கைதேர்ந்தவர். கார் மெக்கானிக் வேலையும் தெரியும். சிலகாலம் பஸ் கண்டக்டராகவும் பணியாற்றினார். பல நாடகக் குழுக்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

* 1935இல் முதன்முதலாக ‘மேனகா’ திரைப்படத்தில் நடித்தார். ஆழமான உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தியும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். வித்தியாசமான வில்லன் பாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார். வெள்ளையர் ஆட்சியின்போது சுதந்திரப் போராட்டத் தாகத்தைப் பிரதிபலிக்கும் நாடகங்களில் துணிச்சலுடன் முக்கிய வேடங்களில் நடித்தார்.

* இவரே நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்தும் வந்தார். வ.ரா., ப.ஜீவானந்தம் உள்ளிட்டோர் இவரது நாடகங்களை விரும்பிப் பார்த்தனர். நாடகங்கள் வாயிலான இவரது சமூக மறுமலச்சிப் பங்களிப்பைப் பாராட்டி, ‘பாரதி கலைஞர் சகஸ்ரநாமம்’ என்ற பட்டத்தை ப.ஜீவானந்தம் இவருக்கு வழங்கினார். ‘மேனகா’, ‘பராசக்தி’, ‘ஆனந்தஜோதி’, ‘நல்லதம்பி’, ‘மர்மயோகி’, ‘உரிமைக் குரல்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘நவாப் நாற்காலி’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* என்.எஸ்.கிருஷ்ணன் சிறை சென்றிருந்தபோது அவருடைய நாடகக் கம்பெனியின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும் செயல்பட்டுள்ளார். 1950களில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும், ‘சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ்’ என்ற நாடகக் குழுவைத் தொடர்ந்து நடத்தி வந்தார். நாடகத் துறையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டார்.

* பல பிரபலங்கள், இலக்கியவாதிகளின் தொடர்பால் வாசிப்பு ஆர்வமும் கொண்டிருந்தார். திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பாரதியார் கவிதைகள், கட்டுரைகளை வாசித்தார்.

* நாடகங்களில் பின்னணி பாடும் உத்தியை அறிமுகப்படுத்தியது இவர்தான். இதன் மூலம் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நாடகத்தில் நடிக்க முடியும் என்ற நிலையை மாற்றினார். ஆர்.முத்துராமன், என்.எஸ்.லட்சுமி, வி.சகுந்தலா, காந்திமதி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இவரது கம்பெனியில் நடித்து புகழ் பெற்றனர்.

* மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். இறுதிவரை கதராடையே அணிந்தவர். நாடகக் கலையில் இவரது சிறப்பான பங்களிப்புக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. பாரதியின் கவிதைகளை மிகச் சிறப்பாக நாடகமாக அரங்கேற்றியவர்.

* சீனப் போர் சமயத்தில் தேசிய எல்லைப் பாதுகாப்பு நிதி திரட்ட பல நாடகங்களை நடத்தினார். சினிமாவிலும், நாடகங்களிலும் தனக்கு அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகள் அனைத்தையும் யுத்த நிதிக்காக காமராஜரிடம் வழங்கினார். 

* குணச்சித்திர நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராகப் போற்றப்பட்ட எஸ்.வி.சகஸ்ரநாமம் 75 ஆவது வயதில் (1988) மறைந்தார்.

கலைவாணர். என்.எஸ். கிருஷ்ணன் பிறந்தநாள் & நினைவுநாள்


     

திரையுலகில் வள்ளல்தன்மையுடன் திகழ்ந்த இருவர் கலைவாணர் என்.எஸ்.கே மற்றும் எம்.ஜி.ஆர். “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான் ” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கே. அவரது பிறந்தநாளும், நினைவு நாளும் இன்று. 

     இருவரது திரையுலக அறிமுகமும் 1936 ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில்தான் நிகழ்ந்தது. திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர். நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தார்.

    என்.எஸ்.கிருஷ்ணன், வறுமையினால் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. சிறுவயதிலேயே நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்கத் தொடங்கினார்.

       சதிலீலாவதியில் அறிமுகமானாலும் முதற்படத்தை முந்திக்கொண்டு அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றி, பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவையைக் கொண்டு சேர்த்தது.

    முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கோமாளித்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பதுதான் அதுவரை தமிழ்சினிமாவில் நகைச்சுவைக் காட்சி என்பதன் வரையறையாக இருந்துவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. 



      நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர். 

     நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் நாடகக் குழுவைத் தொடங்கி அதில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் கலைவாணர்.

      'வசந்தசேனா' படப்பிடிப்புக்காகப் புனே சென்றபோது காதல் ஏற்பட்டுக் கல்யாணத்தில் முடிந்தது டி.ஏ மதுரத்துடனான அவரது நட்பு. தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக்கலைஞர்களான இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன. 

     பழம்பெருமை பேசித் தமிழர்கள் வீணாகி விடக்கூடாது என்ற கொள்கை கொண்ட என்.எஸ்.கே தனது திரைப்படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என நகைச்சுவையோடும் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிகழ்ந்து, கலைவாணரின் தீர்க்க தரிசனத்துக்குச் சான்றாக அமைந்தது.

    'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார் கிருஷ்ணன். தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் என்.எஸ்.கே வின் அறிவுரையைக்கேட்டு நடப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். 

    பிறர் மனதைப் புண்படுத்தாமல், பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. 

      1957 ஆம் ஆண்டு, இதே தேதியில் தனது 49 ஆவது வயதில் கலைவாணர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.

28 நவம்பர், 2021

தேசிய மாணவர்படை அமைப்பு தினம் (NCC RAISING DAY)

 


       தேசிய மாணவர் படை, (National Cadet Corps) இந்தியாவில் ஏப்ரல் 16, 1948-ஆம் வருடம் தொடங்கப் பெற்றது. Unity and Discipline என்பதே இதன் குறிக்கோளுரையாகும்.இந்தியாவில் 30 இலட்சம் பேர் தேசிய மாணவர் படையில் உள்ளனர். 

      தமிழ‌த்‌தி‌ல் தேசிய மாணவர் படையில் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.மேலும் இந்த எண்ணிக்கையை வருடாவருடம் அதிகரிக்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌டுகிறது.

      1965ஆண்டிலும், 1971ஆண்டிலும் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில், இரண்டாம் வரிசை அணியினராக தேசியப்படை மாணவர் நின்றது, வரலாற்று புகழ் வாய்ந்த நிகழ்வாகும்.

      பள்‌ளி‌ப் பருவ‌த்‌திலும், கல்லூரிப் பருவத்திலும் சமூக‌த்‌தி‌ன் ‌மீது அ‌க்கறை செலு‌த்து‌ம் ‌வித‌த்‌தி‌ல், இளவயதினரை வ‌ழிநட‌த்த, எ‌ன்‌சி‌சி எனப்படும் தேசிய மாணவர் படை அமைக்கப் பட்டுள்ளது. இராணுவ‌த்‌திலும், காவ‌ல் துறையிலும் சேர்ந்து பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு படிப்பு காலத்திலேயே அதற்கேற்ற பயிற்சியை என்சிசி அளிக்கிறது.

        தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு தனி ஆளுமைத் திறன், பேச்சுபயிற்சி, கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். அவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல், தீயணைப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.வேலைவாய்ப்பு பற்றித் தெரிந்து கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு தேசிய மாணவர் படை பிரிவு அலுவலகத்திலும், வேலைவாய்ப்பு வழிகாட்டி பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

        தேசிய மாணவர் படையின் கீழ் மூன்று பெரும்பிரிவுகள் அமைந்துள்ளன. இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருமே, தேசிய மாணவர் படையினர் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆடவர்களுக்கு மட்டுமே அமைந்திருந்த இந்தப் பிாிவில் தற்பாேது பெண்களும் சேர்க்கப்படுகின்றனர்.

1.தரைப்படை அணி 2. விமானப்படை அணி 3. கடற்படை அணி

     தேசிய மாணவர் படையை எல்லையோர மற்றும் கடலோரப் பகுதிகளில் விரிவுபடுத்துவது குறித்த அறிவிப்பு 2020 ஆகஸ்ட் 15 அன்று பிரதமரால் வெளியிடப்பட்டது.




முகாம்கள் 

1. தேசிய மாணவர் படை (இந்தியா)

2. இளைஞர் பரிமாற்ற நிரல் (Youth Exchange Programme)

3. தலைமைப் பண்பிற்கான முகாம்கள் (Leadership Camp)

4. வாயு சைனிக் முகாம் (Vayu Sainik Camp)

5. நவ் சைனிக் முகாம் (Nau Sainik Camp)

6. பாறையேற்ற முகாம்கள் (Trekking Camp)

7. மலையேற்ற முகாம்கள் (Mountaineering Camp)

8. தேசிய ஒற்றுமைக்கான முகாம்கள் (National Integration Camp)

9. தள் சைனிக் முகாம் (Tal Sainik Camp)

10. படை ஒருங்கிணைவு முகாம் (Army Attachment Camp)

11. கடற்படை ஒருங்கிணைவு முகாம் (Naval Attachment Camp)

12. வான்படை ஒருங்கிணைவு முகாம் (Airforce Attachment Camp)

13. குடியரசு நாளுக்கான முகாம் (Republic Day Camp)

14. வருடாந்திர பயிற்சி முகாம் (Annual Training Camp)

15. கூட்டு வருடாந்திர பயிற்சி முகாம் (Combained Annual Training Camp)


உறுதிமொழி

    தேசிய மாணவர் படை மாணவர்களான நாங்கள், இந்தியாவின் ஒருமைப்பாட்டை எப்பொழுதும் நிலைநிறுத்துவோம் என்று உறுதியளிக்கிறோம்.

      எங்கள் தேசத்தின் ஒழுக்கமான மற்றும் பொறுப்பான குடிமகனாக இருக்க நாங்கள் தீர்மானிக்கிறோம்.

     சுயநலமின்மை மற்றும் நமது சக உயிரினங்களின் மீது அக்கறை கொண்ட நேர்மறையான சமூக சேவையை நாங்கள் மேற்கொள்வோம்.

இப்டையின் 73ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாமும் அவர்களை வாழ்த்தி நமது தேசப்பற்றை வெளிப்படுத்துவோம்


27 நவம்பர், 2021

வி.பி. சிங் நினைவுநாள்

     


    வரலாற்றில் சில பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் எஞ்சி நிற்பதில்லை. அவை, பெரும் வரலாற்றின் சாட்சியங்களாக, நீண்டதொரு கனவின் தொடக்கமாக உருப்பெற்று நிற்கின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங்கின் பெயர், அப்படியான பெயர்களில் ஒன்று. 

      இந்திய வரைபடத்தின் கோடுகளைப் போல சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர் வி.பி.சிங். இன்று அவரது நினைவு தினம். 

     உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக் கொண்டார். படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய வி.பி.சிங், அணுசக்தி விஞ்ஞானப் பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். 

    அரச குடும்பம், செல்வாக்கான வாழ்வு என்றிருந்தவர் வி.பி.சிங். வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுதான் வி.பி.சிங்கின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க முதல் விஷயம். அவரின் பூமிதான இயக்கத்துக்குத் தனது சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார்.

    எளிய மக்களின்மீது அக்கறையும், சமூக நீதி எண்ணமும் கொண்டிருந்த வி.பி.சிங், 1969 இல் தேர்தல் அரசியலில் வென்றார். உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் என்னும் பரமபதத்தை வி.பி.சிங் தனது நேர்மையாலும் திறமையாலும் திறம்பட எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். 

   எம்.எல்.ஏ-வாகத் தேர்வான அடுத்த இரண்டு ஆண்டுகளில்,   1971 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங்கின் திறமையை அறிந்த இந்திரா காந்தி, தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக அவரை நியமித்தார். 

      நெருக்கடிகாலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் வர்த்தகத் துறையும் ஒன்று. பதுக்கல் ஒழிக்கப்பட்டதன் வாயிலாக, விலைவாசி, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதற்கு வி.பி.சிங்கின் பங்கு உண்டு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பர். 

    குறுகிய காலத்திலேயே இந்திய அரசியலில் வி.பி.சிங்கின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றானது. 1980 இல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திரா காந்தி, வி.பி.சிங்கை உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக நியமித்தார்.ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சர்,பாதுகாப்புத்துறை போன்ற பதவிகளை அலங்கரித்தார். 

    'ஜனமோர்ச்சா' என்ற கட்சியைத் தொடங்கினார். 1988 இல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து, ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

     1989 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியைக் கட்டமைத்து, ஆட்சியையும் அமைத்துப் பிரதமராகிக் காட்டினார், வி.பி.சிங். 

      பாபா சாகேப் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும்.

     இந்திய அரசியலில் மிக முக்கிய சீர்திருத்தத்தை அப்போது நிகழ்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் வி.பி.சிங். அவரின் இந்தச் செயல், இந்தியாவின் அசமன்பாடுகளைத் தவிடுபொடியாக்கி, பல எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது. 

     அவர் ஆட்சி செய்தது என்னவோ வெறும் 11 மாதங்கள்தான். அந்த 11 மாதங்களில், 'இந்திய அரசியலில் தன்னிகரற்றவர் வி.பி.சிங் ' என்ற பெரை அவருக்குப் பெற்றுத்தந்தது.

   பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம், கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும்போதே "காவிரி நடுவர் மன்றம்" அமைக்க உத்தரவிட்டார். 

     வி.பி.சிங் நல்ல ஓவியரும் கூட. அவரது ஓவியங்கள் கவித்துவமானவை. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது

   "ஒரு துளி வானம் ஒரு துளி கடல்" என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு. வானமும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான்.

   பிரதமர் பதவியைவிட்டு விலகும்போது, "பிரதமர் பதவியைவிட முக்கியமானது, தேசத்தின் ஒற்றுமை" என முழங்கிய வி.பி.சிங், கடைசி வரை அதுபோல வாழ்ந்தும் காட்டினார். 

     ஏழைகளின் பகதூர், இடஒதுக்கீட்டின் நாயகன் எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங், புற்றுநோய் காரணமாக 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி காலமானார். அவரது பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

வி.பி.சிங் அரசியலின் அதிசயம். தமிழர்களாகிய நாம் நன்றியுடன் அவரை நினைவில் கொள்வோம்.

26 நவம்பர், 2021

இந்திய அரசியல் சாசன தினம் (சம்விதான் திவாஸ்)

 இந்திய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் (சம்விதான் திவாஸ்) ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


     *நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. மக்களாட்சி சிறப்பாக நடைபெறவும், அதன் மாண்பு காப்பாற்றப்படவும் இந்நான்கு தூண்களும் வலுவாக இருப்பது அவசியம். 

     *ஜனநாயகத் தூண்களை எப்போதும் வலிமையுள்ளதாக வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது தான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 

     * இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர்.26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன (சட்ட) தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

     * அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது. 

     * பிரிட்டன், அயர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளிடம் இருந்து சில அம்சங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 

     * இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்புச் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

     * அரசியலமைப்பு வரைவுக் குழுவின் (Drafting committee) தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 

     * இந்திய அரசியலமைப்பு சாசனம் கையால் எழுதப்பட்ட ஆவணமாகும். இது உலகிலேயே கையால் எழுதப்பட்ட, மிக நீண்ட ஆவணங்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1,17,369 வார்த்தைகள் உள்ளன. 

     * கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவணப் பிரதி, ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. 

     * அசல் கையெழுத்து ஆவணத்தில் 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 

 * இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு, இந்திய அரசு சட்டம் 1935-ஐக் கொண்டு உருவாக்கப்பட்டது.

    * இந்திய அரசியலமைப்பின் முன்னுரை இதுவரை ஒரே ஒரு முறை (1976 டிசம்பர் 18 அன்று அவசர நிலையின்போது) மட்டுமே திருத்தப்பட்டுள்ளது. 

    * லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1950, ஜனவரி 26-ஆம் தேதி, இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. 

 இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறும் எழுத்து வடிவம் இல்லை. நம்முடைய உணர்வுகளையும் விருப்பங்களையும் வெளிபடுத்துகின்ற பிரகடனமாகும் .

25 நவம்பர், 2021

பிடல் காஸ்ட்ரோ நினைவுதினம்

 


     ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமில்லை! எதற்காக வாழ்ந்தான் என்பதில் தான் அவனது வாழ்க்கைத் தத்துவமே அடங்கியிருக்கிறது. அப்படி ஒரு சிலர் மட்டும் தான் தங்களது மறைவிற்குப் பின்னும் மற்றவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறார்கள்.

        அப்படியொருவர் தான் "மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ". தன் வாழ்நாள் முழுவதுமே புரட்சியின் மூலம் அமெரிக்காவின் சர்வாதிகாரத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

     பாட்டாளி வர்க்கத் தோழனாக வாழ்ந்து மறைந்த கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ அவர்கள் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி ஒரு வசதியான குடும்பத்தில்  பிறந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும்,அவரது சிந்தனை முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் மீதே இருந்தது.

        கியூபாவில் 1953 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இளைஞர்களைத் திரட்டி, கிழக்கு நகரான சாண்டியாகோவில் பாடிஸ்டாவின் சர்வாதிகார அரசுக்கு எதிராகப் போராடினார். ஆனால் அவருக்கு இப்போராட்டம் தோல்வியையே கொடுத்தது. இதன் விளைவாக பிடல் காஸ்ட்ரோவும், அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

     காஸ்ட்ரோ புரட்சிக்குத் திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார். மேலும் பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாகச் சாடினார். நீதி மன்றத்தில் பிடெல் நிகழ்த்திய இந்த உரையே.

நீதிபதி அவர்களே,
         தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

      ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.

       என் நாட்டு மக்கள், பலரும் பசியோடுதான் படுக்கப் போகிறார்கள். மருத்துவ வசதிகள் ஏதுமின்றிக் குழந்தைகள் கல்லறைகளை நாடுகிறார்கள். முப்பது சதவீத மக்களுக்குத், தங்கள் பெயரைக் கூட எழுதத் தெரியவில்லை. அதைவிடக் கொடுமை, தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களுக்கு நாட்டின் வரலாறே தெரியவில்லை.

      நீதிபதி அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுக்க இருக்கின்ற தண்டனை கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சிறையைக் கண்டோ அல்லது எனது எழுபது உடன்பிறந்தவனின் உயிரைக் குடித்த, இந்த கொடுக்கோல் ஆட்சியைக் கண்டோ, அஞ்சுபவனல்ல.

              நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால்,                 வரலாறு என்னை விடுவிக்கும்.

பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும்.

    கியூபா விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்குத் தயார்ப்படுத்தினார். பின் படிப்படியாக முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசலிசக் குடியரசை நிறுவினார். தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

    கியூபா பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் அந்நாட்டை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 

     49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

அன்னாரின் நினைவுதினம் இன்று.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

 

         பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.

         உலகளவில், பெண்கள் பலவிதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, வெளி உலகிற்குக் காட்டி அதற்கான நியாயமான, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

        ஐ.நா. சபை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17இல் கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது.

      இந்த நாளில் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்டு, விழிப்புணர்வை உருவாக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றவும் மக்களுக்குக் கல்வியூட்டுகின்றன.

     டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர், ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் குரல் கொடுத்தவர்கள்.  “மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 

     1980 ஆம் ஆண்டு முதல், அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தேர்வுசெய்யப்பட்டது.   

     இத்தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயல்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி முடிவடையும்.

   இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பல விதங்களில் நடைபெறுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவ மனைகளில், பள்ளிகளிலென பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

     பொதுவாக துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை, பெண் சிசுக் கொலை, பாலியல் வல்லுறவு, தரக் குறைவாக நடத்துதல், அடிமைத்தனம் மற்றும் உடல், உள ரீதியான துன்புறுத்தல்கள் என்பன பெண்களுக்கு எதிரான வன்முறைகளாகக் கருதப்படுகின்றன.  

   இவ்வுலகில் அனைத்து உயிர்களும் வாழ, உரிமை உண்டு என்னும் அடிப்படை உண்மையை உணர்ந்துகொள்ளாமல் இருப்பதே இவற்றிற்கெல்லாம் காரணம். 

    அன்பின் காரணமாகத்தோன்றும் அக்கறை, கண்டிப்பு இவைகளுக்கும், அதீதக் கண்டிப்பு, வன்முறை,அடக்குமுறைக்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு உண்டு.இதை உணர்ந்து, ஆண்,பெண் இருபாலரும் ஒன்றே என்றறிந்து வாழ்வோமாக!


Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece