25 நவம்பர், 2021

பிடல் காஸ்ட்ரோ நினைவுதினம்

 


     ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமில்லை! எதற்காக வாழ்ந்தான் என்பதில் தான் அவனது வாழ்க்கைத் தத்துவமே அடங்கியிருக்கிறது. அப்படி ஒரு சிலர் மட்டும் தான் தங்களது மறைவிற்குப் பின்னும் மற்றவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறார்கள்.

        அப்படியொருவர் தான் "மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ". தன் வாழ்நாள் முழுவதுமே புரட்சியின் மூலம் அமெரிக்காவின் சர்வாதிகாரத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

     பாட்டாளி வர்க்கத் தோழனாக வாழ்ந்து மறைந்த கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ அவர்கள் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி ஒரு வசதியான குடும்பத்தில்  பிறந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும்,அவரது சிந்தனை முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் மீதே இருந்தது.

        கியூபாவில் 1953 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இளைஞர்களைத் திரட்டி, கிழக்கு நகரான சாண்டியாகோவில் பாடிஸ்டாவின் சர்வாதிகார அரசுக்கு எதிராகப் போராடினார். ஆனால் அவருக்கு இப்போராட்டம் தோல்வியையே கொடுத்தது. இதன் விளைவாக பிடல் காஸ்ட்ரோவும், அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

     காஸ்ட்ரோ புரட்சிக்குத் திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார். மேலும் பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாகச் சாடினார். நீதி மன்றத்தில் பிடெல் நிகழ்த்திய இந்த உரையே.

நீதிபதி அவர்களே,
         தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

      ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.

       என் நாட்டு மக்கள், பலரும் பசியோடுதான் படுக்கப் போகிறார்கள். மருத்துவ வசதிகள் ஏதுமின்றிக் குழந்தைகள் கல்லறைகளை நாடுகிறார்கள். முப்பது சதவீத மக்களுக்குத், தங்கள் பெயரைக் கூட எழுதத் தெரியவில்லை. அதைவிடக் கொடுமை, தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களுக்கு நாட்டின் வரலாறே தெரியவில்லை.

      நீதிபதி அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுக்க இருக்கின்ற தண்டனை கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சிறையைக் கண்டோ அல்லது எனது எழுபது உடன்பிறந்தவனின் உயிரைக் குடித்த, இந்த கொடுக்கோல் ஆட்சியைக் கண்டோ, அஞ்சுபவனல்ல.

              நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால்,                 வரலாறு என்னை விடுவிக்கும்.

பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும்.

    கியூபா விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்குத் தயார்ப்படுத்தினார். பின் படிப்படியாக முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசலிசக் குடியரசை நிறுவினார். தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

    கியூபா பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் அந்நாட்டை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 

     49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

அன்னாரின் நினைவுதினம் இன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...