பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.
உலகளவில், பெண்கள் பலவிதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, வெளி உலகிற்குக் காட்டி அதற்கான நியாயமான, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஐ.நா. சபை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17இல் கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது.
இந்த நாளில் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்டு, விழிப்புணர்வை உருவாக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றவும் மக்களுக்குக் கல்வியூட்டுகின்றன.
டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர், ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் குரல் கொடுத்தவர்கள். “மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.
1980 ஆம் ஆண்டு முதல், அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தேர்வுசெய்யப்பட்டது.
இத்தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயல்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி முடிவடையும்.
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பல விதங்களில் நடைபெறுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவ மனைகளில், பள்ளிகளிலென பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பொதுவாக துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை, பெண் சிசுக் கொலை, பாலியல் வல்லுறவு, தரக் குறைவாக நடத்துதல், அடிமைத்தனம் மற்றும் உடல், உள ரீதியான துன்புறுத்தல்கள் என்பன பெண்களுக்கு எதிரான வன்முறைகளாகக் கருதப்படுகின்றன.
இவ்வுலகில் அனைத்து உயிர்களும் வாழ, உரிமை உண்டு என்னும் அடிப்படை உண்மையை உணர்ந்துகொள்ளாமல் இருப்பதே இவற்றிற்கெல்லாம் காரணம்.
அன்பின் காரணமாகத்தோன்றும் அக்கறை, கண்டிப்பு இவைகளுக்கும், அதீதக் கண்டிப்பு, வன்முறை,அடக்குமுறைக்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு உண்டு.இதை உணர்ந்து, ஆண்,பெண் இருபாலரும் ஒன்றே என்றறிந்து வாழ்வோமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக