18 நவம்பர், 2021

உலக தத்துவ தினம்


   உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை உலக தத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.

       2002ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இத்தினம் தோற்றுவிக்கப்பட்டது. முதன்முதலில் 2005ஆம் ஆண்டில், உலக தத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

     இந்தத் தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூர முடியும்;  நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தைத் தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது.

     ஐநா சபையின் வரையறையின்படி, உலக அமைதிக்கு அடிப்படையான ஜனநாயகம், மனித உரிமைகள், நீதி, சமத்துவம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான கருத்தியல் தளத்தை அமைப்பது தத்துவம்.

       தத்துவம் என்பது அறிவு, அனுபவம், இருப்பு மற்றும் எதார்த்தத்தைப் பற்றிய படிப்பைக் குறிக்கிறது. தத்துவங்களால் மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முடியும் என்றும், தத்துவங்களே உலகை ஆள்கின்றன என்றும் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இயலும்.

     மக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்வதற்கும், புதிய கருத்துகளை வெளிப்படையாக ஆராய்ந்து விவாதிப்பதற்கும், சமூகச் சவால்கள் மீது விவாதத்தை மேற்கொள்ளவும், தத்துவங்கள் பயன்படுகின்றன.

     மாறி வரும் காலங்கள் நம் முன்வைக்கும் சிக்கல்களை சமாளிப்பதற்கும் தேவையான புதிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் வளர்ப்பதற்குத் தேவையான செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் மக்களை ஊக்குவிப்பதற்கும் இந்தத் தினம் ஏற்படுத்தப்பட்டது.

   இன்றைய தினத்தில், தற்போது நமக்கு என்ன மாதிரியான தத்துவங்கள் தேவை, அதை எப்படி உருவாக்குவது, எப்படி கற்பது கற்பிப்பது என்பது சம்பந்தமான கலந்துரையாடல்கள், விவாதங்கள் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் உலகமெங்கும் நடைபெறும்.

   தத்துவம் அனுபவத்தின் உடனடியான வெளிப்பாடு, நிதர்சனங்களின் நேரடியான குரல்கள். சுருங்கச் சொல்வது என்றால் தத்துவம் வாழ்க்கையின் அற்புதமான தரிசனம்.

17 நவம்பர், 2021

பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த தினம் - “உள்ளேன் ஐயா”


“தமிழ் மொழியின் உயர்விற்கும் உழைப்பதே எனது உறுகடன் என்றும், தமிழ்ப்போரே எனது வாழ்க்கைப் போர் என்ற குறிக்கோளையும் வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன்” 

என்று முழங்கிய சிறந்த தமிழ் அறிஞரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த தினம் இன்று (நவம்பர் 17).

   யாருக்கும் அடிபணியாத தன்மான உணர்வு, அஞ்சா நெஞ்சம், தமிழ் உணர்வு மிக்கவர். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார், ‘மாணவர் ஆற்றுப்படை’, ‘துரத்தப்பட்டேன்’, ‘தமிழிசைப் பாடல்கள்’, ‘என் வாழ்க்கைப் போர்’, ‘பழந்தமிழ்’, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ போன்ற தமிழ் நூல்கள், ‘தமிழ் லாங்வேஜ்’, ‘மீனிங் ஆஃப் தமிழ் கிராமர்’ என்பது போன்ற ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.

உள்ளேன் ஐயா

     தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை’Yes Sir’ என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர். இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.

     தொல்காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக போப்பைச் சந்தித்த போது, இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார்.

    "எழிலரசி" உள்ளிட்ட கவிதை நூல்கள், "தமிழ்க் கற்பிக்கும் முறை" , "அமைச்சர் யார்", "தொல்காப்பிய ஆராய்ச்சிகள்", "இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்", "வள்ளுவர் வகுத்த அரசியல்" உள்ளிட்ட ஆய்வு நூல்கள், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்.

     திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம் - தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும் தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்களை எழுதியுள்ளார்.

    சங்க இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியர், திராவிடன் ஃபெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார்.தமிழாசிரியராக, விரிவுரையா ளராக, பேராசிரியராக, துறைத்தலைவராகப் பரிணமித்தவர்.

    திருவாரூரில் தமிழாசிரியராய்ப் பணியாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் கலைஞர் மு.கருணாநிதி . "தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார் " என்று 'நெஞ்சுக்கு நீதி' நூலில் கலைஞர் மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

     கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர்க்குழுச் செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர். இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெருநடைப் பயணத்தாலும் சிறைவாசத்தை அனுபவித்தவர்.

    தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொதுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக் கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.

    செந்தமிழ் மாமணி', 'இலக்கணச் செம்மல்', 'முத்தமிழ்க் காவலர்', 'செம்மொழி ஆசான்', 'தமிழர் தளபதி' என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். "தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும், தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை.

    தமிழகத்தின் உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது கடமை. தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டு செயல்பட்ட  ஐயா இலக்குவனாரின் அடியொற்றி தமிழ்ப்பணியாற்றுவோமாக!


உலகக் குறைப்பிரசவ (விழிப்புணர்வு) தினம் (World Prematurity Day)

        


     2008 ஆம் ஆண்டு ,நவம்பர் 17 அன்று, ஐரோப்பியப் பெற்றோர் அமைப்புகள் ஒன்றுகூடி, குறைப்பிரசவ தினத்திற்கான முதல் சர்வதேச விழிப்புணர்வு நாளை உருவாக்கின. இந்நாள், 2011 ஆம் ஆண்டு முதல் உலக குறைப்பிரசவ தினமாக கொண்டாடப்படுகிறது.

      தற்போது உலகளாவிய  தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக குறைப்பிரசவ தினம் கொண்டாடப்பட்டது.

UNICEF மற்றும் WHO இவற்றிற்குத் தலைமையேற்றன.

     குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும்.

      எனவே, அந்நோய்கள் பற்றி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெற்றோர் குழுக்கள், குடும்பங்கள், சுகாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள், மருத்துவமனைகள்  போன்றவை செயல்படுகின்றன. 

யாருக்கெல்லாம் குறைப்பிரசவம் நேரலாம்..?

* கர்ப்பக்காலத்தில் உடல்நலனில் எந்தப் பிரச்னையோ, வேறுபாடுகளோ இல்லாத பட்சத்திலும், இரண்டு முதல் ஐந்து  சதவிகிதம், நல்ல உடல்நலம் கொண்ட பெண்களுக்கும் குறைப்பிரசவம் நேரலாம்.

* மிகக் குறைந்த அல்லது அதிக வயதுடைய பெண்களுக்கு...

* குறைந்த எடையுடைய அல்லது உடல் பருமன் அதிகமான பெண்களுக்கு...

* புரதச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட ஊட்டச் சத்துக் குறைபாடுடைய பெண்களுக்கு...

* இதயம், சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு...

* வலிப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு...

* கர்ப்பக்காலத்தில் ஏற்படும் சில உடல் மாறுபாடுகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு... 

* இரட்டைக் குழந்தைகள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கருவுற்ற பெண்களுக்கு...

* கர்ப்பவாயில் தொற்று (Bacterial vaginal infection) ஏற்பட்ட பெண்கள் மற்றும் குடல் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு...

* கர்ப்பப்பையில் கட்டி, சதை வளர்ச்சி, பலவீனமான கர்ப்பவாய் போன்ற பிரச்னைகள் இருக்கும் பெண்களுக்கு...

* நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் பெண்களுக்குக் கர்ப்பப்பை அதிகமாக விரிந்து கொடுக்கும். இந்தப் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு ...

* நஞ்சுக்கொடியில் (Placenta) தொற்று இருந்தால், நஞ்சுக்கொடி கீழிறங்கியோ, சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்கும் சூழலில்...

* சில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், ரத்தச்சோகை.

* வேலைப்பளு, மன அழுத்தம், தேவைக்கு அதிகமான ஓய்வு, காயம்படுவது, அதிர்ச்சி யடைவது.

* குடும்பத்தில் வேறு யாருக்கேனும் குறைப்பிரசவம் நிகழ்ந்திருந்து, அதே கர்ப்பப்பை குறைபாடு கர்ப்பிணிக்கும் இருக்கும் மரபுக் காரணம்,

* கர்ப்பிணியின்/ கணவரின் மது, புகைப் பழக்கம்.


       இதுபோன்ற காரணங்களால் பெண்களுக்குக் குறைப்பிரசவம் ஏற்படலாம்.

வாராது வந்த மாமணி போல் கிடைக்கும் குழந்தை வரத்தை முன்னெச்சரிக்கையுடன் இருந்து, பெற்று வளர்ப்போம்

16 நவம்பர், 2021

தேசிய பத்திரிக்கை தினம் - நவம்பர் 16

      


   தேசிய பத்திரிக்கை தினம் தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India )  தொடங்கப்பட்ட நவம்பர் 16ஆம் நாள், தேசிய பத்திரிக்கை தினமாக 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 

     ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கௌரவிக்க, தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.

    குரலற்றவர்களின் குரலாகப் பத்திரிக்கைகள் விளங்கவேண்டும். அரசியல் விருப்பு வெறுப்பின்றி , தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல், செய்திகளை பாரபட்சமின்றி வழங்குவது, தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்குச் சரியான பாதைகளை தெளிவுபடுத்துவது போன்ற பணிகளை பத்திரிக்கைகள் செய்யவேண்டும்.

     மக்கள் இன்னலுறும் காலங்களில், அவர்களுக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்வது பத்திரிக்கைகளே. சாதி, மதம், போன்ற எந்த ஒரு சார்பும் இன்றி, நாட்டிற்கும் ,சட்டத்திற்கும், உற்ற தோழனாக விளங்கவேண்டியது பத்திரிக்கைகளே. 

 

Our liberty depends on the freedom of the press, and that cannot be limited without being lost - Thomas Jefferson

உலக சகிப்புத்தன்மை தினம் - நவம்பர் 16

         


        கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரைக் கருத்தில் கொண்டு, உலக சகிப்புத்தன்மை நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் 1995ஆம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. 

        இந்த உறுதிமொழியின்படி 1996ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ஆம் தேதி உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று, மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

       வருங்காலச் சந்ததியினரை போர் என்ற சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஓர் உறுதி மொழியை 1995ஆம் ஆண்டு எடுத்தனர்.யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் அடிப்படைக் கூறுகள் இவ்வுலகில் நிலைத்து நிற்க, மனிதகுலம் அறிவுப்பூர்வமாகவும், நன்னெறியின் அடிப்படையிலும் ஒருங்கிணைய வேண்டும் என்று இவ்வுறுதிமொழி எடுத்துரைக்கிறது. 

        ஒரு மனிதன் சக மனிதனை மதித்தல், அவனின் உரிமைகள், சுதந்திரத்தை மதித்தல், ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து,வியந்து பாராட்டி, அவர்களின் உரிமைகளில் தலையிடாமல்,ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்கிறோம். 

       இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல் மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.

        மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது.

       புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச் செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது. 

      வருங்கால தலைமுறையின் வாழ்வு இனிதாக அமைய, சகிப்புத்தன்மை என்னும் வேர்களை நம் குழந்தைகள் மனதில் ஆழமாக ஊன்ற வேண்டியது நமது கடமை.

15 நவம்பர், 2021

பிர்சா முண்டா பிறந்தநாள்

 


130 ஆண்டுகளுக்கு முன்பே, தன்னுடைய புரட்சிகரச் சிந்தனையாலும், தீரமிக்கப் போராட்டத்தினாலும் பழங்குடிகள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினான் ஓர் இளைஞன்; இறந்து 120 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், இன்றளவும் பழங்குடிகள் மத்தியிலும், செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஆழ்ந்த தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் அந்த இளைஞன்தான் பிர்சா முண்டா.

     "உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை முன்வைத்த பிர்சா முண்டா, இந்தியாவில் பழங்குடிகள் உரிமைக்கான முதல் போராட்டத்தை முன்னெடுத்தவர். பிரிட்டிஷ் இந்தியாவில், அன்றைய பீகார் மாநிலத்தில் உலிஹதி என்ற கிராமத்தில் 1875-ம் ஆண்டு சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு முண்டா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் பிர்சா முண்டா.

      இந்தியாவின் காடுகளை தனக்குச் சொந்தமாக்கும் சட்டத்தைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்தபோது, "நீர் நமது... நிலம் நமது... வனம் நமது!" என்ற முழக்கத்தின் மூலம், பழங்குடி மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தினார் பிர்சா முண்டா. பழங்குடிகள் வரலாற்றின் முதல் போராட்டமான இது நடந்த 1895-ம் ஆண்டு பிர்சா முண்டாவின் வயது வெறும் 19 தான்.

      1899-ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு `உல்குலான்' என்று பெயர். பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக, 1900-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிர்சா முண்டா கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். 

     சிறையிலிருந்த மூன்று மாதங்களில், ரத்த வாந்தியெடுத்து, கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிர்சா முண்டா, காலரா பாதிப்பால் இறந்துவிட்டதாகப் பிரிட்டிஷ் காவல்துறை அறிவித்தது; பிர்சா முண்டா இறந்தபோது அவருக்கு வயது 25.

வினோபா பாவே நினைவு நாள்

 ** சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே (Vinoba Bhave)  மகாராஷ்டிர மாநிலம் கொலபா அருகே ககோடா என்ற கிராமத்தில் (1895) பிறந்தார். முழுப் பெயர் விநாயக் நரஹரி பாவே. இவரது ஆழமான அறிவுத் தேடலை பாடப் புத்தகங்கள் தணிக்காததால், துறவிகள், தத்துவ ஞானிகளின் புத்தகங்களைப் படித்தார்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece