130 ஆண்டுகளுக்கு முன்பே, தன்னுடைய புரட்சிகரச் சிந்தனையாலும், தீரமிக்கப் போராட்டத்தினாலும் பழங்குடிகள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினான் ஓர் இளைஞன்; இறந்து 120 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், இன்றளவும் பழங்குடிகள் மத்தியிலும், செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஆழ்ந்த தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் அந்த இளைஞன்தான் பிர்சா முண்டா.
"உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை முன்வைத்த பிர்சா முண்டா, இந்தியாவில் பழங்குடிகள் உரிமைக்கான முதல் போராட்டத்தை முன்னெடுத்தவர். பிரிட்டிஷ் இந்தியாவில், அன்றைய பீகார் மாநிலத்தில் உலிஹதி என்ற கிராமத்தில் 1875-ம் ஆண்டு சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு முண்டா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் பிர்சா முண்டா.
இந்தியாவின் காடுகளை தனக்குச் சொந்தமாக்கும் சட்டத்தைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்தபோது, "நீர் நமது... நிலம் நமது... வனம் நமது!" என்ற முழக்கத்தின் மூலம், பழங்குடி மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தினார் பிர்சா முண்டா. பழங்குடிகள் வரலாற்றின் முதல் போராட்டமான இது நடந்த 1895-ம் ஆண்டு பிர்சா முண்டாவின் வயது வெறும் 19 தான்.
1899-ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு `உல்குலான்' என்று பெயர். பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக, 1900-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிர்சா முண்டா கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்த மூன்று மாதங்களில், ரத்த வாந்தியெடுத்து, கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிர்சா முண்டா, காலரா பாதிப்பால் இறந்துவிட்டதாகப் பிரிட்டிஷ் காவல்துறை அறிவித்தது; பிர்சா முண்டா இறந்தபோது அவருக்கு வயது 25.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக