2008 ஆம் ஆண்டு ,நவம்பர் 17 அன்று, ஐரோப்பியப் பெற்றோர் அமைப்புகள் ஒன்றுகூடி, குறைப்பிரசவ தினத்திற்கான முதல் சர்வதேச விழிப்புணர்வு நாளை உருவாக்கின. இந்நாள், 2011 ஆம் ஆண்டு முதல் உலக குறைப்பிரசவ தினமாக கொண்டாடப்படுகிறது.
தற்போது உலகளாவிய தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக குறைப்பிரசவ தினம் கொண்டாடப்பட்டது.
UNICEF மற்றும் WHO இவற்றிற்குத் தலைமையேற்றன.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும்.
எனவே, அந்நோய்கள் பற்றி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெற்றோர் குழுக்கள், குடும்பங்கள், சுகாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள், மருத்துவமனைகள் போன்றவை செயல்படுகின்றன.
யாருக்கெல்லாம் குறைப்பிரசவம் நேரலாம்..?
* கர்ப்பக்காலத்தில் உடல்நலனில் எந்தப் பிரச்னையோ, வேறுபாடுகளோ இல்லாத பட்சத்திலும், இரண்டு முதல் ஐந்து சதவிகிதம், நல்ல உடல்நலம் கொண்ட பெண்களுக்கும் குறைப்பிரசவம் நேரலாம்.
* மிகக் குறைந்த அல்லது அதிக வயதுடைய பெண்களுக்கு...
* குறைந்த எடையுடைய அல்லது உடல் பருமன் அதிகமான பெண்களுக்கு...
* புரதச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட ஊட்டச் சத்துக் குறைபாடுடைய பெண்களுக்கு...
* இதயம், சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு...
* வலிப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு...
* கர்ப்பக்காலத்தில் ஏற்படும் சில உடல் மாறுபாடுகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு...
* இரட்டைக் குழந்தைகள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கருவுற்ற பெண்களுக்கு...
* கர்ப்பவாயில் தொற்று (Bacterial vaginal infection) ஏற்பட்ட பெண்கள் மற்றும் குடல் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு...
* கர்ப்பப்பையில் கட்டி, சதை வளர்ச்சி, பலவீனமான கர்ப்பவாய் போன்ற பிரச்னைகள் இருக்கும் பெண்களுக்கு...
* நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் பெண்களுக்குக் கர்ப்பப்பை அதிகமாக விரிந்து கொடுக்கும். இந்தப் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு ...
* நஞ்சுக்கொடியில் (Placenta) தொற்று இருந்தால், நஞ்சுக்கொடி கீழிறங்கியோ, சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்கும் சூழலில்...
* சில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், ரத்தச்சோகை.
* வேலைப்பளு, மன அழுத்தம், தேவைக்கு அதிகமான ஓய்வு, காயம்படுவது, அதிர்ச்சி யடைவது.
* குடும்பத்தில் வேறு யாருக்கேனும் குறைப்பிரசவம் நிகழ்ந்திருந்து, அதே கர்ப்பப்பை குறைபாடு கர்ப்பிணிக்கும் இருக்கும் மரபுக் காரணம்,
* கர்ப்பிணியின்/ கணவரின் மது, புகைப் பழக்கம்.
இதுபோன்ற காரணங்களால் பெண்களுக்குக் குறைப்பிரசவம் ஏற்படலாம்.
வாராது வந்த மாமணி போல் கிடைக்கும் குழந்தை வரத்தை முன்னெச்சரிக்கையுடன் இருந்து, பெற்று வளர்ப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக