17 நவம்பர், 2021

பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த தினம் - “உள்ளேன் ஐயா”


“தமிழ் மொழியின் உயர்விற்கும் உழைப்பதே எனது உறுகடன் என்றும், தமிழ்ப்போரே எனது வாழ்க்கைப் போர் என்ற குறிக்கோளையும் வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன்” 

என்று முழங்கிய சிறந்த தமிழ் அறிஞரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த தினம் இன்று (நவம்பர் 17).

   யாருக்கும் அடிபணியாத தன்மான உணர்வு, அஞ்சா நெஞ்சம், தமிழ் உணர்வு மிக்கவர். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார், ‘மாணவர் ஆற்றுப்படை’, ‘துரத்தப்பட்டேன்’, ‘தமிழிசைப் பாடல்கள்’, ‘என் வாழ்க்கைப் போர்’, ‘பழந்தமிழ்’, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ போன்ற தமிழ் நூல்கள், ‘தமிழ் லாங்வேஜ்’, ‘மீனிங் ஆஃப் தமிழ் கிராமர்’ என்பது போன்ற ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.

உள்ளேன் ஐயா

     தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை’Yes Sir’ என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர். இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.

     தொல்காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக போப்பைச் சந்தித்த போது, இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார்.

    "எழிலரசி" உள்ளிட்ட கவிதை நூல்கள், "தமிழ்க் கற்பிக்கும் முறை" , "அமைச்சர் யார்", "தொல்காப்பிய ஆராய்ச்சிகள்", "இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்", "வள்ளுவர் வகுத்த அரசியல்" உள்ளிட்ட ஆய்வு நூல்கள், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்.

     திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம் - தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும் தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்களை எழுதியுள்ளார்.

    சங்க இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியர், திராவிடன் ஃபெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார்.தமிழாசிரியராக, விரிவுரையா ளராக, பேராசிரியராக, துறைத்தலைவராகப் பரிணமித்தவர்.

    திருவாரூரில் தமிழாசிரியராய்ப் பணியாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் கலைஞர் மு.கருணாநிதி . "தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார் " என்று 'நெஞ்சுக்கு நீதி' நூலில் கலைஞர் மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

     கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர்க்குழுச் செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர். இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெருநடைப் பயணத்தாலும் சிறைவாசத்தை அனுபவித்தவர்.

    தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொதுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக் கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.

    செந்தமிழ் மாமணி', 'இலக்கணச் செம்மல்', 'முத்தமிழ்க் காவலர்', 'செம்மொழி ஆசான்', 'தமிழர் தளபதி' என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். "தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும், தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை.

    தமிழகத்தின் உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது கடமை. தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டு செயல்பட்ட  ஐயா இலக்குவனாரின் அடியொற்றி தமிழ்ப்பணியாற்றுவோமாக!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece