18 நவம்பர், 2021

உலக தத்துவ தினம்


   உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை உலக தத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.

       2002ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இத்தினம் தோற்றுவிக்கப்பட்டது. முதன்முதலில் 2005ஆம் ஆண்டில், உலக தத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

     இந்தத் தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூர முடியும்;  நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தைத் தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது.

     ஐநா சபையின் வரையறையின்படி, உலக அமைதிக்கு அடிப்படையான ஜனநாயகம், மனித உரிமைகள், நீதி, சமத்துவம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான கருத்தியல் தளத்தை அமைப்பது தத்துவம்.

       தத்துவம் என்பது அறிவு, அனுபவம், இருப்பு மற்றும் எதார்த்தத்தைப் பற்றிய படிப்பைக் குறிக்கிறது. தத்துவங்களால் மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முடியும் என்றும், தத்துவங்களே உலகை ஆள்கின்றன என்றும் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இயலும்.

     மக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்வதற்கும், புதிய கருத்துகளை வெளிப்படையாக ஆராய்ந்து விவாதிப்பதற்கும், சமூகச் சவால்கள் மீது விவாதத்தை மேற்கொள்ளவும், தத்துவங்கள் பயன்படுகின்றன.

     மாறி வரும் காலங்கள் நம் முன்வைக்கும் சிக்கல்களை சமாளிப்பதற்கும் தேவையான புதிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் வளர்ப்பதற்குத் தேவையான செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் மக்களை ஊக்குவிப்பதற்கும் இந்தத் தினம் ஏற்படுத்தப்பட்டது.

   இன்றைய தினத்தில், தற்போது நமக்கு என்ன மாதிரியான தத்துவங்கள் தேவை, அதை எப்படி உருவாக்குவது, எப்படி கற்பது கற்பிப்பது என்பது சம்பந்தமான கலந்துரையாடல்கள், விவாதங்கள் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் உலகமெங்கும் நடைபெறும்.

   தத்துவம் அனுபவத்தின் உடனடியான வெளிப்பாடு, நிதர்சனங்களின் நேரடியான குரல்கள். சுருங்கச் சொல்வது என்றால் தத்துவம் வாழ்க்கையின் அற்புதமான தரிசனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...