18 நவம்பர், 2021

வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்

 


         வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வெறியாட்டம், எங்கும் தங்கு தடையின்றி நடைபெற்ற காலம். கதர் சட்டையைக் கண்டால் அடி. கதர் குல்லாயைக் கொண்டால் அடி. வந்தேமாதரம் என்றால் உதை என்று ஆங்கியேர்களின் வெறியாட்டம் நடந்த காலம். அப்படிப்பட்ட காலத்தில் தமிழக மக்களிடம் மறைந்திருந்த புரட்சிக் கனலைத் தட்டியெழுப்பி ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர்முனைக்குத் தமிழ்ப்படைகளை அழைத்துச் சென்ற தமிழன் வ.உ.சிதம்பரனார்.

     தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர்கள் பன்னிரெண்டு மணிநேரம் ஓய்வில்லாமல் வேலை செய்வதையும், விடுமுறையே இல்லாமல் சிரமப்படுவதையும் கண்டு மனம் நொந்தார். அதை ஒன்பது நாள்கள் தொடர்ந்து நடத்திய  போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை, வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் தொழிலாளர்களுக்கு கிடைத்தது.

     பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று அழைத்தார்கள்

     சுதேசியின் மீது சிந்தனையைச் செலுத்திய வ.உ.சி. பல்வேறு சுதேசி உணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெள்ளையர்களின் கொள்ளைகளை உணர்ந்தார். அதை ஒழித்துக் கட்ட   “தரும சங்க நெசவுச்சாலை”, ”சுதேசிய நாவாய்ச் சங்கம்”, ”சுதேசிய பண்டகசாலை”களை ஆரம்பித்தார். அவர் மேடையிலேறி மக்களைத் திரட்டினார். அந்நிய ஆடைகளைக் கொளுத்தினார். அந்நியப் பொருள்களை கையால் கூட தொடுவதில்லை என்று உறுதியெடுத்தார்.

      ஆங்கிலேயர்களின் கொள்ளை லாபத்துக்கு உதவுவது கப்பல் வாணிபம் என்பதை உணர்ந்து அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தத் திட்டமிட்டார். பாண்டியர்கள், சோழர்கள் காலம் முதல் கடலாதிக்கம் பெற்றிருந்த தமிழர்கள், ஆங்கிலேயர்களின் கப்பல் வர்த்தகத்தால் தடைபட்டுவிட்டது என்று கருதினார்.இதனால் 1906-ம் ஆண்டு தூத்துக்குடியில் சுதேசி கப்பல் கம்பெனியை தொடங்கினார். 

      வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது “திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்”, என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். “எஸ்.எஸ். காலியோ” என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

     தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தினர். அந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே, “ சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று எழுதி நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார். பின்னர் அந்த தண்டனை மேல்முறையீட்டுக்கப்  பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.  வ.உ.சி சிறை சென்றதும், கப்பல் கம்பெனி நொடிந்து விட்டது.

      சிறைச்சாலையில் மாட்டிற்குப் பதிலாக வ.உ.சியை செக்கு இழுக்கச் செய்து ஆங்கிலேயர்கள் அவருக்கு சித்ரவதை கொடுத்தனர். கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின; சணல் நூற்று, கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப் புரட்டி போட்டது.  

    ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார்.

சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக தொடர்ந்து சேவை செய்தார். 1936-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக வ.உ.சி இயற்கை எய்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...