உலக ஆண்கள் தினம் (International Men's Day),ஆண்களைப் பெருமைப் படுத்தும் வகையிலும் அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1999 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளிலுள்ள ட்ரினிடாட் & டொபாகோவில் இது தொடங்கப்பட்டது. ஐக்கியநாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட நாளாகவும் இதுவிளங்குகிறது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, ஹங்கேரி போன்றவற்றை உள்ளடக்கிய உலகின் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஆண்கள் - பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டும். வீரம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு ஆண்களுக்கு அதிகம்.
மேலும் அலுவலகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதைவிட அதிகம் என எண்ணும் போது அவர்களுடைய மனம் மற்றும் உடல் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது.
அலுவலகம், குடும்பம் என பல்வேறு இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் . ஆண்களுக்கான பிரச்சினைகளைக் களைவதற்கும், அவர்களின் மனம் மற்றும் உடல் நலத்தை பேண ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. ஆண்கள் தங்களுக்காகக் கொண்டாடப்படும் இந்த நாளில் அனைத்து கவலைகளையும் மறந்து கொண்டாட ஏற்படுத்தப்பட்டது.
“அன்பு காட்டத் தெரியாதவன் ஆண் அல்ல. அன்பைக் காட்ட நேரமில்லாமல் குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு ஜீவன்".
ஆண்கள் என்பவர்கள் இயந்திரம் அல்ல அவர்களும் சாதாரண மனிதர்களே. தன் குடும்பத்தின் தேவைக்காக தன்னையே அழித்துக்கொள்பவர் ஆண்கள்.பதற்றம், கவலை எல்லாமே ஆண்களுக்கும் உண்டு. உணர்ச்சிகள் என்பது மனித இயல்பு. உணர்ச்சிகள் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஆண்களின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு, அதனையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.
எதிர்பார்ப்புகள் ஆண்கள் மீது திணிக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்கள் மீது இந்த சமூகம் வைக்கும் எல்லா எதிர்பார்ப்புகளையும், எல்லா ஆண்களாலும் சமாளிக்க முடியா விட்டாலும், சமாளிக்க முயல்வார்கள்.
அன்பை வெளிப்படுத்துவது சிறப்பு என்றால், அந்த அன்பை ஒரு சிறப்பு நாளில் வெளிப்படுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும். நம் வாழ்க்கையில் தொடர்புடைய எல்லா ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக