7 பிப்ரவரி, 2022

பாவாணர் பிறந்தநாள்

     ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர் - தேவநேயப்பாவாணர்.



    ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.இளமையிலேயே கவி பாடும் திறன் பெற்றதால் `கவிவாணன்' என்ற பட்டத்தைப் பெற்றார். தனித்தமிழ் ஈடுபாட்டின் காரணமாக, தன் பெயரைத் `தேவநேயப் பாவாணர்' என மாற்றி அமைத்துக்கொண்டார். 

    பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர். 1919-ல் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே. சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தான் பணியாற்றிய இடங்களிலெல்லாம் மொழியின் மீது பற்றுகொண்ட மாணவர்களை உருவாக்கினார். `பாவாணர் பரம்பரை' என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு அவரின் மாணவர்கள் திறம்கொண்டு விளங்கினர். 

    தமிழின் மறுமலர்ச்சிக் காலத்துக்கு முன்பு வரை, தமிழ் நடை என்பது புரிந்துகொள்வதற்குக் கடினமான சொற்றொடர்களோடு சம்ஸ்கிருதச் சொற்களும் விரவிக்கிடந்தன. `மணிப்பிரவாள நடை’ என்று அதைக் குறிப்பிடுவர். தமிழின் கட்டுகளை உடைத்து மொழியை எளிமைப்படுத்திய இயக்கமே தனித்தமிழ் இயக்கம்.

    பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், உ.வே.சா, பி.தி.சீனிவாச ஐயங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், வள்ளலார் என நீளும் சான்றோர்களே, தமிழை எளிமைப்படுத்தியவர்கள். அவர்களின் தொடர்ச்சியாக உருவானவர் ஞா.தேவநேயப் பாவாணர்.

    பாவாணர் வாழ்ந்த காலத்தில் விடுதலை வேட்கை, நாடு முழுக்க பற்றி எரிந்தபோது இவர் மனதில் உருவானது `மொழி விடுதலை.’ தமிழின் தொன்மையை அறிந்த பாவாணர், அதைச் சூழ்ந்திருக்கும் சம்ஸ்கிருதத்திலிருந்து விடுதலை பெறுவதே தமிழின் மேன்மைக்கு வழிவகுக்கும் என உணர்ந்தார். அதை முன்னெடுக்கவே தமிழ் மொழி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் `தமிழே மற்ற மொழிகளுக்குத் தாய்' என்றுணர்த்தும் கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ந்து எழுதினார்.

     வடமொழிச் சொற்களில் ஐந்தில் இரண்டு பங்கு தமிழ்ச் சொற்கள்தான் என்பதை நிறுவினார். வடமொழியிலிருந்து பிறந்தது தமிழ் என்று பரப்பப்பட்ட கருத்தைக் கடுமையாகச் சாடினார்.

    பாவாணரின் சுவடுகள், உலக மொழி ஆராய்ச்சி வரலாற்றிலேயே இதுவரை எவரும் மேற்கொள்ளாத சாதனை. மொழியின் ஆழத்தை நோக்கிய அவரது பயணங்களில் எதிர்காலம் குறித்த கனவு இருந்தது. சொற்கள் வரலாற்றைத் தாங்கியவை என்பது அவரின் கருத்து. சொல்லிலே ஒளிந்திருக்கும் வரலாற்றைத் தேடி, நெடுந்தூரம் பயணித்த பாவாணர் சென்றடைந்த இடம், தமிழ் மொழியே உலகில் தோன்றிய முதல் மொழி என்னும் கருத்தை நிரூபித்தது.

    `மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக் கண்டம். முதல் மனிதன் பேசிய மொழி தமிழ். தமிழே திராவிட மொழிகளுக்கும் ஆரியத்துக்கும் தாய்'

என்கிற அவரது கோட்பாடுகள், காற்றில் கைபிடித்த வரிகள் அல்ல. அதற்கான சான்றுகளை அறிவியல் முறையில் தொகுத்தளித்ததே பாவாணரை மற்ற ஆராய்ச்சியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

கட்டுரை இலக்கணம்

    ஆங்கில மொழியின் அடிப்படை இலக்கண நூலான `ரென் மற்றும் மார்டின்' - ஐ அனைவரும் அறிவோம். ஆங்கிலத்தைப் போலவே தமிழை முறையாகக் கற்க விரும்பும் மாணவர்களுக்காக பாவாணர் எழுதிய நூலே `உயர்தரக் கட்டுரை இலக்கணம்.' இரு தொகுதிகளாக வெளியான இந்நூல், மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தொடரியல், மரபியல், கட்டுரையியல்.

    தமிழ் இலக்கணங்களை அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல், இலக்கணத்துக்குக் கூறும் எடுத்துக்காட்டுகள் வழியாகக்கூடத் தமிழ் வரலாற்றை மாணவர்களுக்குக் கடத்த விரும்பினார் பாவாணர். 

    `தமிழ், இந்திய மொழிகளில் மிக முந்தியது. பழந்தமிழ்நாட்டின் பெரும்பகுதியாகிய குமரி நாடு கடலுள் முழுகிக் கிடக்கிறது’ 

     போன்ற எடுத்துக்காட்டுச் சொற்றொடர்களைப் பயன்படுத்தி இலக்கணத்தோடு வரலாற்றையும் கற்பித்தார்.

ஒப்பிலக்கணம்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

    மொழிகளை ஒன்றோடொன்று ஒப்பிட்டு அவற்றுக்கு இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை அறிவதே ஒப்பியல் இலக்கணம். இந்தத் தலைப்பிலான பாவாணரின் கட்டுரை. `இந்திய வரலாறு என்பது தெற்கிலிருந்து தொடங்க வேண்டும்' என்பதையும் `திராவிட மொழிகள் தமிழ் மொழியிலிருந்து உருவானவை' என்பதையும் சான்றோடு கூறுகின்றன.

    தமிழின் தொன்மை, ஒலியெளிமை, பிற மொழி கலவாத் தூய்மை, சொல்வளம், செம்மை ஆகியவற்றை மற்ற மொழிகளோடு ஒப்பிட்டும் இந்தி மொழிக்குக்கூடத் தமிழ் இலக்கணம் பொருந்துவதையும் நிறுவுகிறார். உலக மொழிகளின் ஒட்டுமொத்தத் தன்மையையும் ஒருங்கே கொண்டதால் தமிழே `முதற்றாய் மொழி' என்கிறார். 

தமிழர் மரபு

    சிதைந்த தமிழர் மரபை மீட்க, நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழிதான். `எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறார் தொல்காப்பியர். தமிழ் என்பது, வெறும் மொழியன்று.

 கலை, நாகரிகம், பண்பாடு, மரபு, கலாச்சாரம் எனத் தமிழ் மொழி தாங்கியுள்ள கூறுகளை வெளிக்கொணர்வதே தன் பணியாகத் தானே விருப்பத்துடன் ஏற்று செயல்பட்டார் தேவநேயப் பாவாணர்.

அகரமுதலி திட்டம்

    1971ஆம் ஆண்டில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் இயக்குநராகப் பாவாணர் பொறுப்பேற்றார். திட்டக்காலம் நான்கு ஆண்டுகள் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குள் முடிக்க இயலாத அளவு தமிழின் பரப்பு விரிந்து கிடப்பதை உணர்ந்தும் `தன்னால் மட்டுமே இத்தகைய பணியைச் செய்ய முடியும். இதை நிறைவேற்றுவதே இதற்கு முந்தைய தன்னுடைய உழைப்பின் பயன்' என்ற தன்னம்பிக்கையோடு செயல்படத் தொடங்கினார்.

    அணிகலன்கள், தொழிற்கருவிகள் என உலகிலேயே அச்சில் வராத சொற்களைத் தொகுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதை முடிக்கும் முன்பே இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார். அவர் தொகுத்த சொற்களோடு இன்னும் சிலவற்றையும் சேர்த்து `தேவநேயம்' என்கிற பெயரில் 13 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

திராவிட மொழிநூல் ஞாயிறு

    தமிழ் மொழி இன்று வரை தனித்து நிற்பதற்குக் காரணமான செவ்வியல் தன்மைகளை ஆய்வுசெய்த பாவாணர், பிற மொழிச்சொற்களைக் கையாள்வதற்கும் வழிமுறைகளைக் கற்பிக்கிறார். 

    மொழியாக்கம் செய்வது, புதிய சொற்களை உருவாக்குதல் இரண்டும் இயலாதபோது, தமிழ் ஒலிக்கேற்ப திரித்து வழங்குவது முதல் வேர்ச்சொற்களில் தொடங்கி புதிய கலைச் சொற்களை உருவாக்குவது வரை தன் வாழ்வையே தமிழ் மொழி ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்த பாவாணர் என்கிற தனி மனிதர், மொழிப் பல்கலைக்கழகமாகக் காட்சியளிக்கிறார். 

    தம் மக்களிடம் அவர் முன்வைப்பது எளிய வேண்டுகோள் தான்,
  
`தமிழை மேன்மையடையச் செய்ய, தமிழில் பேசுங்கள்.’ என்பதே அது.

பாவாணரின் படைப்புகள்

இலக்கணக்கட்டுரைகள்

இசைத் தமிழ்க் கலம்பகம்

ஒப்பியன் மொழிநூல்

சுட்டுவிளக்கம்

செந்தமிழ்க் காஞ்சி

செந்தமிழ்ச் சிறப்பு

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

தமிழர் மதம்

மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை

தமிழர் திருமணம்

தமிழர் வரலாறு

தமிழ் வரலாறு - 1

தமிழ் வரலாறு - 2

தமிழ்வளம்

தமிழியற் கட்டுரைகள்

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

திரவிடத்தாய்

தென்சொற் கட்டுரைகள்

பாவாணர்நோக்கில் பெருமக்கள்

பாவாணர் உரைகள்

மொழிநூற் கட்டுரைகள்

மொழியாராய்ச்சி கட்டுரைகள்

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

பழந்தமிழாட்சி

பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

மறுப்புரை மாண்பு

முதற்றாய்மொழி

வடமொழி வரலாறு - 1

வடமொழி வரலாறு - 2

வேர்ச்சொற் கட்டுரைகள்

The Primary Classical Language of the World

5 பிப்ரவரி, 2022

டன்லப் (DUNLOP) பிறந்தநாள்

     சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய நவீன ரப்பர் டயர்களின் கண்டுபிடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்ற ஜான் பாய்ட் டன்லப் ஒரு ஸ்காட்லாந்திய கண்டுபிடிப்பாளர்; 
கால்நடை அறுவை சிகிச்சையாளர்  - பிறந்தநாள்.

     குதிரைகள் கரடு முரடான சாலைகளில், கெட்டியான ரப்பரால் தயாரிக்கப்பட்ட கழுத்துப் பட்டையுடன் மிகவும் கனமான சுமைகளை கஷ்டப்பட்டு இழுத்து வருவதைப் பார்த்தார். அவற்றின் கஷ்டத்தை குறைக்கக் காற்று அடைக்கப்பட்ட குஷன்களை அதற்கு பதிலாக பயன்படுத்த முடியுமா என்ற சோதனையில் ஈடுபட்டார். 

    அந்தச் சமயத்தில் (1887) இவரது ஒன்பது வயது மகன் தன் சைக்கிளை உருளைக் கற்கள் நிறைந்த சாலையில் கஷ்டம் இல்லாமல் சவுகரியமாக ஓட்டுவதற்கு ஏதாவது செய்யுமாறு கேட்டான். சைக்கிளின் கெட்டியான ரப்பர் டயர்களில் ஏதாவது மாற்றங்கள் கொண்டு வந்து மகனுக்கு உதவ முடியுமா என்ற பரிசோதனையில் இறங்கிவிட்டார். 

    தோட்டத்தில் கிடந்த, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப் பயன்படுத்தப்படும் பழைய குழாயை வெட்டி ட்யூப் தயாரித்து அதில் காற்றை அடைத்துத் தன் மகனின் சைக்கிளின் பின்பக்கச் சக்கரத்தோடு இணைத்தார். சைக்கிளும் அவர் மகன் கேட்டபடியே எளிதாகச் சாலையில் உருண்டோடியது. உண்மையில் இதை மறுகண்டுபிடிப்பு என்றுதான் கூற வேண்டும். 

    ஏற்கெனவே 1845 இல் ராபர்ட் தாம்சன் இதைக் கண்டுபிடித்திருந்தார். ஆனால், அது அந்த அளவு பிரபலமாகவில்லை என்பதால், இது டன்லப்புக்குத் தெரியாது. காற்றடைக்கப்பட்ட இந்த டயரை மேலும் ஆராய்ந்து, பரிசோதனைகள் செய்து, மேம்படுத்தி 1888 இல் பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1890 இல் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற்றார்.


    
பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற மிதிவண்டி ஓட்டும் ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த W.H. டு கிராஸ் என்ற அயர்லாந்து தொழிலதிபருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது.

    டன்லப்புடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அது டன்லப் ரப்பர் கம்பெனி என்று அழைக்கப்பட்டது. தனது கண்டுபிடிப்பால் இவர் பெரிதாக லாபமடையவில்லை. தனது காப்புரிமையை 1896 இல் டு கிராசுக்கு விற்றுவிட்டு, ஊர் திரும்பிவிட்டார்.

    ஆனால் அந்த நிறுவனம் டன்லப் ரப்பர் கம்பெனி என்று இவரது பெயராலேயே இயங்கிவந்தது. 1888 இல் காற்று அடைக்கப்பட்ட டயர்கள் அறிமுகமான பிறகு பழைய டயர்கள் வழக்கொழிந்து போய் விரைவில் இவை புழக்கத்திற்கு வந்துவிட்டன.

    இது மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. 1895 முதல் மோட்டார் வாகனம் உருவானது. 1900 ஆம் ஆண்டுக்குப் பின் சைக்கிள்களுக்கும் மோட்டார் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படும் நீடித்து உழைக்கும் ரப்பர் பொருள்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது.

     இவரது கண்டுபிடிப்பு பல தொழிற்சாலைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய நவீன ரப்பர் டயர்களின் கண்டுபிடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் ஜான் பாய்ட் டன்லப்.

4 பிப்ரவரி, 2022

உலக புற்றுநோய் தினம்

     1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் ( Union for International Cancer Control - UICC) கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.


    உலக அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், அதுகுறித்த சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை 
உலக புற்றுநோய் தினம் குறிக்கிறது. 

    இந்த நாளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், நோய் குறித்த தவறான கருத்துக்கள், புற்றுநோயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காணவும், சரியான சிகிச்சையைப் பெறவும் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மக்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

     Theme : Close the Care Gap                                             

    'க்ளோஸ் தி கேர் கேப்' பிரச்சாரத்தின் முதல் ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள புற்றுநோய் சிகிச்சையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்துகொள்வது மற்றும் அங்கீகரிப்பது பற்றியது. இது திறந்த மனதுடன், சவாலான அனுமானங்கள் மற்றும் கடினமான உண்மைகளைப் பார்ப்பது பற்றியது.

    சமத்துவமின்மை, வருமானம், கல்வி, இருப்பிடம் மற்றும் இனம், பாலினம், பாலியல் நோக்குநிலை, வயது, இயலாமை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடு நீக்கப்படவேண்டும்.

     நோய்க் கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் (Centers for Disease Control and Prevention - CDC) அளித்த தகவலின் படி உலகில் ஆண்களின் மரணத்திற்கு இரண்டாவது காரணமாக இருப்பது கேன்சர்.  கேன்சர் நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
   

    இங்கு கொடுக்கப்பட்டுள்ள கேன்சர் அறிகுறிகள் குறித்த பட்டியல் உள்ள அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அது கட்டாயம் கேன்சராக தான் இருக்கும் என்பதில்லை. அதே நேரத்தில் ஒரு சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் உங்களுக்கு கேன்சருக்கான வாய்ப்பு இல்லை என்பதுமில்லை. இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் டாக்டரை அணுகுவது நல்லது.

 தோல் மாற்றம்

     நாம் வெளியில் செல்லும் போது நம் தோல்கள் அதிகமாக யூவி கதிர்கள் மற்றும் பலவிதமான கதிர்களை நேரடியாக எதிர்கொள்கிறது. அதில் ஆண்களுக்கு அதிகமாகத் தோல் கேன்சர் ஏற்படுவதாக CDC தெரிவித்துள்ளது. இந்த தோல் கேன்சர் இருப்பதற்கான அறிகுறிகள், குடும்பத்தில் முன்னோர்களுக்குத் தோல் கேன்சர் இருப்பது, அதிக எண்ணிக்கையிலான மச்சங்கள், வழக்கத்திற்கு மாறான மச்சங்கள், வெளிர் நிற தோல், தோல் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல் ஆகியன அறிகுறிகள் இவ்வாறான மாற்றம் எல்லாம் கேன்சர் எனச் சொல்லி விட முடியாது சில மாற்றங்கள் கேன்சராக இருக்கக்கூடும்.


 சிறுநீரில் ரத்தப்போக்கு

     கேன்சர் தொடர்பான மரணங்களில் 8வது முக்கியமான காரணம் சிறுநீரக கேன்சர். சிறுநீரக புற்றுநோய்க்கான முதல் அறிகுறி சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், இது ஏற்படும் போது வலியோ, எரிச்சலோ எதுவும் இருக்காது. ஆனால் சிறுநீரில் ரத்தம் கலந்து செல்லுதலைக் கட்டாயம் முக்கிய பிரச்சனையாக எடுத்து சோதனை செய்து கொள்வது நல்லது. சிறுநீரில் ரத்தம் கலந்து செல்லும் போது சிறுநீர், ஆரஞ்சு, பிங்க், மற்றும் சிவப்பு நிறத்தில் வெளியேறும். அதே நேரத்தில் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் கேன்சருக்கான அறிகுறி மட்டுமல்ல சிறுநீரக கிருமித் தொற்று, சிறுநீரக கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இந்த அறிகுறிகள் ஏற்படும்.

 உணவு சாப்பிடுவதில் பிரச்சனை

     பலருக்கு சில பிரச்சனைகள் இருப்பது மருத்துவ ரீதியிலான பிரச்சனைகள் என்பதே தெரியாது. சிலருக்கு உணவு சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போது அதை முழுமையாகச் செய்ய முடியாது. உணவு தொண்டைப்பகுதியிலோ அல்லது நெஞ்சு பகுதியிலோ அடைக்கும் உணர்வு ஏற்படலாம். இதனால் உணவு சாப்பிடும் போது எல்லாம் வாந்தி ஏற்படும், திடீரென உடல் எடை குறையும். இது வாய்/தொண்டை/ உணவு குழாயில் ஏற்படும் கேன்சருக்கான அறிகுறியாகும். இந்த கேன்சரை சிடி ஸ்கேன் மூலமே கண்டறிய முடியும்.

 கட்டி

     நம் உடலில் லிம்படிக் எனப்படும் ஒரு அமைப்பு இருக்கிறது. நம் உடலில் உள்ள தேவையில்லாத விஷயங்களை சேகரித்து அதை உடலில் ஒரே இடத்தில் வைத்துக் கட்டியாக மாற்றி வெடிக்க வைத்து வெளியேற்றி விடும். இது பெரும்பாலும், அடிவயிறு, கழுத்து, மற்றும் அக்குள் பகுதியில் ஏற்படும். உங்கள் உடலில் இது போன்ற கட்டிகள் ஏற்பட்டு 2 முதல் 4 வாரங்களுக்குள் தானாகச் சரியாகவில்லை என்றால் உடனடியாக நீங்கள் டாக்டரை அணுகுவது நல்லது. இப்படியான கட்டிகள் கேன்சர் கட்டிகளான மாற வாய்ப்புள்ளது. இவ்வாறான கட்டிகளை லிம்போனா கட்டிகள் என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.

 சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை
     ஆண்களுக்கு புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாகச் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்படும். இது சிலருக்கு புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக ஏற்படலாம் சிலருக்கு புரோஸ்டேட்டில் ஏற்படும் கேன்சர் கட்டியின் காரணமாகக் கூட ஏற்படலாம். இதனால் ஆண்களுக்குச் சிறுநீர் கழிக்கும் போது முதலில் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படலாம், அல்லது தொடர்ந்து சிறுநீரை வெளியேற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டும். சிலருக்குச் சிறுநீரை முழுவதுமாக வெளியேற்ற முடியாமல் பிரச்சனை ஏற்படும். பொதுவாக இது 50-69 வயதானவர்களுக்கே ஏற்படும். மொத்தத்தில் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் டாக்டரை அணுகுவது நல்லது.

 விரைப்பை கேன்சர்

     ஆண்களுக்கு விரைப்பிடையில் ஏற்படும் கட்டி டிஸ்டிகுலர் கேன்சராக இருக்கக்கூடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். விரைப்பையில் கட்டி எற்படுதல் அல்லது வழக்கத்திற்கு மாறாகக் கனமாக இருத்தல், ஆகியவை இந்த கேன்சருக்கான அறிகுறிகள். இந்த பிரச்சனை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது. இந்த கேன்சர் ஒரே நாளில் உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் அதனால் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

 வாய் கேன்சர்

     வாய் அல்லது உதடு பகுதியில் திடீரென புண் ஏற்பட்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருப்பது, அந்த புன்னை சுற்றி வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் வருவது வாய் கேன்சருக்கான அறிகுறிகளாகும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் பொதுவான டாக்டர்கள் அல்லது பல் மருத்துவர்களைத் தொடர்பு கொள்வது நல்லது. இந்த கேன்சர் வருவதற்கான முக்கியமான காரணம் அதிகமாகப் புகையிலை அல்லது மதுப்பழக்கம் இருப்பது காரணமாக இருக்கும்.

 திடீர் எடைக் குறைவு

     சிலருக்கு திடீரென எடைக்குறைவு ஏற்படலாம். அதாவது அவர்கள் அதற்காக எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் தானாக உடல் எடை குறைந்தால் அது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மருத்துவர்கள் ஒரு சராரி மனிதனின் எடையிலிருந்து 6-12 மாதங்களில் 5சதவீதமான எடை குறைந்தால் எந்த வித திட்டமிடலும் இல்லாமல் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருப்பதாக அர்த்தம் எனத் தெரிவித்துள்ளார். பல்வேறு விதமான கேன்சர்களுக்கு உடல் எடை குறைவே ஒரு விதமான அறிகுறியாகும். இதைத் தவிர வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் கேன்சர் உள்ளேயே இருந்து உடல் எடையை மட்டும் பாதித்து வரலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ​

காய்ச்சல் 

     காய்ச்சல் சாதாரணமாக எல்லோருக்கும் பரவக்கூடியது தான் சாதாரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாகக் காய்ச்சல் வரக்கூடும். ஆனால் கேன்சர் இருப்பவர்களுக்கு அந்த கேன்சர் செல்கள் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறும் போது காய்ச்சல் ஏற்படும் அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டால் இது குறித்து பரிசோதனை செய்து பார்த்துக்கொள்வது சிறந்தது. சிலருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது கூட காய்ச்சலுக்கு முக்கியமான காரணமாக இருக்கலாம் ஏதுவாக இருந்தாலும் டாக்டரை அணுகுவது சிறந்தது ​

சோர்வு 
     நாள் முழுவதும் சோர்வாக உணர்வதும் ஒரு விதமாக கேன்சரின் அறிகுறிதான். நாள் முழுவதும் இரவு தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற உணர்வு வயிற்றுப் பகுதியில் கேன்சர் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இரவு தூங்கவில்லை என்றால் இது போன்று சோர்வு மறுநாள் இருப்பது சாதாரணம் ஆனால் தொடர்ந்து இது போல இருப்பது உங்களை டாக்டர் அணுகச் சொல்வதற்கான அறிகுறி. 

 வறட்டு இருமல் 

     வறட்டு இருமல் என்பது நுரையீரல் அல்லது மூச்சு குழாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளால் வருகிறது. இது நுரையீரல் புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். தொண்டையில் குரல் வடபகுதியில் ஏற்படும் கேன்சருக்கும், தைராய்டு கேன்சருக்கும் இது போன்ற அறிகுறிகள் தான் இருக்கும். வறட்டு இருமல் ஒரு நோய்த் தொற்றாகவும் இருக்கும். அதிக நாட்களாக வறட்டு இருமல் சரியாகாமலிருந்தால் கேன்சாராக இருக்கலாம் அதனால் டாக்டரை பார்ப்பது சிறந்தது. ​

மார்பில் மாற்றம்

     மார்பு பகுதியில் மாற்றம் ஏற்படுவது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கேன்சருக்கான அறிகுறிதான். பெரும்பாலும் முன்னோர்கள் வழி மூலமாக இந்த கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்குத் தான் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மார்பு பகுதியில் ஏற்படும் கட்டி இந்த கேன்சருக்கான அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் வந்தால் கட்டாயம் டாக்டரை அணுகுங்கள். ​

    பார்வை மற்றும் நடையில் மாறுபாடு
 
     கேன்சரின் சில அறிகுறிகள் மிகவும் விசித்திரமாக இருக்கும். ஒருவருக்கு திடீரென பார்வையில் குறைபாடு வருவது, நடக்கும்போது தடுமாறுவது, அடிக்கடி கவனம் சிதறுவது போன்ற விஷயங்கள் மூளையில் இருக்கும் கேன்சர் கட்டிக்கான அறிகுறியாக இருக்கலாம். மூளையில் கேன்சர் வருவது மிகவும் ஆபத்தான விஷயம் ஆகும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது. ​

ரத்தம் கலந்த மலம்

     மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறுவது ஒரு வகையான கேன்சரின் அறிகுறிதான். இவ்வாறு மலத்தில் ரத்தம் வெளியேறுவது இரண்டு காரணங்களுக்காக இருக்கலாம் ஒன்று கேன்சர் மற்றொன்று மல குழாயில் ஏற்பட்ட புண்ணிலிருந்து வெளியேறும் ரத்தம். இதை இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். சில நேரம் மலத்துடரன் ரத்தம் கலந்து மலர் பளீர் சிவப்பு நிறத்திலோ, லேசான பிங்க் நிறத்திலோ, கருப்பு கலந்த பிளவுன் நிறத்திலோ அல்லது அடர் கருப்பு நிறத்திலோ வெளியேறினால் அதுவும் ரத்தம் கலந்து வெளியேறும் மலமாகவே கருத வேண்டும். ​

கீழ் முதுகு/ இடுப்பு வலி/குறுக்கு வலி 

     ஒவ்வொரு மனிதனும் இடுப்பு வலி, குறுக்கு வலி என்பது வயதானால் வரும் பெரும்பாலும் அதிக உடல் எடை, அதிகமாக இருப்பது, அதிக எடை கெண்ட பொருளைத் தூக்குவது, அளவிற்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட காரணங்களால் கூடவரலாம். ஆனால் புரோஸ்டேட் கேன்சர் என்பது எலும்பிற்குச் சென்று பரவினால் இந்த வகையான வலி ஏற்படும் நீண்ட நாட்களாக இது போன்ற வலி இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகவும்.

விரைவீக்கம்

     ஆண்களுக்கு விரைப்பையில் வீக்கம் ஏற்பட்டால் அவர்கள் தயங்காமல் டாக்டரை அணுகுவது முக்கியம்.விரைவீக்கம் இருந்தால் உடனடியாக டாக்டரை தொடர்பு கொள்ள வேண்டும். பீனைல் கேன்சர் என்பது மிக அரிதான நோய் 95 சதவீத மக்களுக்கு இந்த நோய் ஏற்படுவதில்லை. அரிதான வியாதி என்பதால் அசால்டாக இருந்து விடாதீர்கள் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவம் செய்வது சிறந்தது. ​

வலி 

     உடலில் தொடர்ந்து வலி ஏற்படுவது சிலருக்கு அதிக உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்வதால் வலி ஏற்படும் சிலருக்கு எதுவுமே இல்லாமல் உடல் வலி வருவதும் கேன்சருக்கான அறிகுறிதான். எந்த இடத்தில் வலி, எவ்வளவு தீவிரமான வலி, எவ்வளவு நாட்கள் இந்த வலி இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் டாக்டர்கள் இந்தவலிக்கான காரணத்தைக் கண்டறிவார்கள். இதனால் அசாதாரணமாக உடல் வலி வந்தால் டாக்டரை அணுகுவதைத் தவிர்க்கவும்.

புற்றுநோய்க்கான காரணங்கள்

    பொதுவாக என்னதான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகளை உற்றுநோக்கினால் இதுதான் என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், ஒருசிலவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

     முதலாவதாகப் பரம்பரை. அதாவது மரபு வழி. (Genes – The DNA type) உங்கள் குடும்பத்தில் தாய், தந்தை வழி இந்த நோய் இருந்தால் நிச்சயம் அலட்சியப்படுத்தாமல் சோதனை செய்துகொள்வது மிக அவசியம்.

     புகையிலை, கூரையாக வேயப்படும் ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு (Gamma and X Rays), மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் (carcinogens) இந்நோய் பரவுகிறது. 

  இதன் வீரியத்தை குறைக்கும் சக்தி ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுக்கு உண்டு. அதற்குத்தான் சத்துள்ள இயற்கையான காய்கறிகள், பழவகைகளையும் உண்ணச் சொல்கிறார்கள்.

    வைரஸ் தொற்று தாக்குதலினாலும் புற்றுநோய் உருவாகிறது என மருத்துவ ஆய்வுகள் முன்வைக்கின்றன. அதில் முக்கியமானது, HPV (Human pappiloma virus) (பெண்களுக்கான கருப்பைவாய் புற்று உருவாகிறது), ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி (Hepatitis), கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாகிறது. 



    எப்ஸ்ட்டீயின் பார் வைரஸ் (Epstein – Barr virus) குழந்தைகளின் பல்வேறு புற்றுநோய்களுக்கு இந்த வைரஸ் காரணம். எந்த வைரஸ் தொற்றாக இருந்தாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்கிறது. நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் இல்லாமல் போகிறது. இதனால் புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகம் ஏற்படுகின்றன.

3 பிப்ரவரி, 2022

அறிஞர் அண்ணா நினைவுநாள்

     தமிழகத்தில் இருமொழி‌க் ‌‌கொள்கையை கொண்டுவந்தவர், சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொ‌ண்ட, “தெ‌ன்னாட்டு‌ பெர்னாட்ஷா” என்று ‌‌அழைக்கப்படு‌ம் அறிஞர் அண்ணாவி‌ன் நினைவு நாள் இன்று‌. 

     குள்ளமான உருவம், கறைபடிந்த பற்கள், கவலையில்லாத் தோற்றம், சீவாத தலை, பொருத்தமில்லாத உடைகள் - அறிஞர் அண்ணாவைப்பற்றி நாவலர் நெடுஞ்செழியன் கூறிய வர்ணனைகள் தான் இவை. 

    1937 தொடக்கக் காலக்கட்டத்திலும், அதற்கு‌‌ பின்பும்‌‌ தமிழ் மொழி அழியும் நிலை ஏற்பட்டபோது, மொழி பிழைத்தால்தான் இனம் பிழைக்கும், நாமும் தலைநிமிர்ந்து வாழ முடியும் என தமிழ்ச் சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தவர். 

    தேர்தல் அரசியல் பாதையில் தமிழ்நாடு கண்டெடுத்த மாபெரும் தலைவர். தமிழர் என்ற சொல்லால் அனைத்து அடையாளங்கள் மற்றும் பேதங்களைக் களையும் கனவு அரசியலைத் தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, 1949 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் என்றொரு கட்சியை நிறுவினார். அடுக்கு மொழி வசனங்கள் மூலம், மக்களைத் தன்பால் ஈர்த்த அறிஞர் அண்ணா 1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் பிறந்தார். 



    காஞ்சிபுரத்தில் நடராஜன் - பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்த அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். நாடகத்தின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு, பின்னாளில், திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதக் காரணமாக இருந்தது. ஓர் இரவு, வேலைக்காரி, நல்லதம்பி உள்ளிட்ட திரைப்படங்கள் வாயிலாக, வசனங்கள் மூலம் மக்கள் மனதில் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பினார்.

     குறுகிய காலத்திலேயே அண்ணா தன்னுடைய ஆழமான கருத்துக்களினாலும், பேச்சாற்றலினாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தில் ஒரு பேரியக்கமாக வளர்த்தார். தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் அண்ணா பேச்சாற்றலில் ஈடு இணையற்றவராக இருந்தார். 

     அண்ணாவால் வேகமாக வளர்ந்த தி.மு.க. சட்டப்பேரவைத் தேர்தல்களில் பங்கு கொண்டு, 1957 இல் 15 உறுப்பினர்களுடனும், 1962 இல் 50 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இருப்பினும், 1962 இல் அண்ணா காஞ்சியில் நடைபெற்ற தேர்தலில், பண பலத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல், வெற்றி வாய்ப்பினை இழந்தார் . அது ஒருவகையில் நல்ல சம்பவமாக மாறியது. 

    அண்ணா உடனடியாக, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய ஆங்கிலப் புலமையையும், பேச்சாற்றலையும், அறிவையும் இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்துவதற்கு நல்வாய்ப்பாக கிடைத்தது.

     அந்தக்காலத்தில் தி.மு.க. "திராவிட நாடு' கொள்கையில் உறுதியாக இருந்தது. மாநிலங்களவையில், தன்னுடைய கன்னிப்பேச்சில் , "I would rather have a committee of nations than a conglomeration of states" என்று தனது கம்பீரமான குரலில் பேசி முடித்தார். அன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அடல் பிகாரி வாஜ்பாய், அண்ணா அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று "உங்களின் கருத்துக்களை நான் ஏற்கவில்லை என்றாலும், நீங்கள் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது' எனக் கூறினார். 

     இந்நிகழ்ச்சி நடந்த ஆறு மாதங்களுக்குள் (1962 நவம்பரில்) சீன நாட்டின் ராணுவப் படைகள் நம்முடைய வடகிழக்குப் பகுதியான தேச்பூரை கடுமையாகத் தாக்கின. உடனடியாக அண்ணா, தன்னுடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி தம்முடைய கட்சி, காங்கிரசை கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் பாரதப்பிரதமர் பண்டித நேருவின் மத்திய அரசுடன் தி.மு.க. முழுமையாக ஒத்துழைக்கும் என அறிவித்ததுடன்" நாட்டின் பிரிவினை கொள்கையை கைவிட முடிவெடுத்துள்ளது' எனக் கூறி, "திராவிட நாடு' பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

     1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக வெற்றி பெற முதலமைச்சராக பொறுப்பேற்றார் அண்ணா. சுயமரியாதைத் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இவரின் காலத்திலேயே நடந்தது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட 1969ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

2 பிப்ரவரி, 2022

உலக சதுப்பு நில நாள்

   உலக சதுப்பு நில நாள், சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்துகொள்ளக் கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும் நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியே சதுப்பு நிலங்கள் எனப்படுகின்றன.

    பூமியின் மொத்த பரப்பில் 6 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. 

    அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்த்தேங்கும் பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

    1971 இல் காஸ்பியன் கடற்பகுதியில் உள்ள ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவு செய்து அது பற்றிய விவாத கூட்டத்தையும் அதே ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உலக சதுப்பு நில நாளாக ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகின்றது. 

      161 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ள இந்த ராம்சர் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. முதன்முதலில் ராம்சர் நகரில் கூடியதால், இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை ஆராய்ந்த இந்த அமைப்பு, அவற்றில் சிறப்பானவை என 1950 சதுப்பு நிலங்களைப் பட்டியலிட்டுள்ளது. 

    இந்திய அளவில் இந்த பட்டியலில் 25 சதுப்பு நிலங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் கோடியக்கரை, பழவேற்காடு ஆகியவை இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

    பெருகி வரும் நகர்மயமாக்கல், தொழிற்சாலைகளுக்கான ஆக்கிரமிப்புகள், புதிதாக உருவாகும் குடியிருப்புகள், ரியல் எஸ்டேட், சுற்றுலாத்தலங்கள் அமைத்தல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல், வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போன்றவைகளால் மிகப்பெரிய அழிவைச் சந்தித்து வருகின்றன.


    ஈர நிலங்களை "உயிர் பேரங்காடி" என்பார்கள். உள்ளூர், வெளியூர், வெளிநாட்டுப் பறவைகள் வாழ்விடமாகவும் ஈரநிலம் உள்ளது. 

    மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துதல், வாடும் பயிர்களுக்கு உயிர் நீராகச் செயல்படுதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், சுனாமி அலைகளை எதிர்கொள்ளுதல், வெள்ள நீரை உள்வாங்கி, வெள்ளச் சேதத்தைத் தடுத்தல் போன்றவற்றை ஈரநிலங்கள் செய்கின்றன. 

சதுப்பு நிலங்கள் அழிவதால் ஏற்படும் விளைவுகள்

    உயிர்ச் சங்கிலி உடையும், பல்லுயிர் வளம் பாதிக்கப்படும், சூழல் சூனியமாகும். நிலத்தடி நீர்வளம் நீர்த்துப்போகும். முக்கியமாக, நீரை வடிகட்டி நன்னீராக மாற்றும் செயல் நின்றுபோகும். உணவுச் சங்கிலியின் உறுதியான பிணைப்பை உறுதி செய்யும் ஈரநிலங்களின் அழிவு, பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

    ஆழிப்பேரலையான சுனாமியின் சீற்றத்தை தடுத்ததில் அலையாத்திக் காடுகள் ஆற்றிய மகத்தான பணியை மறந்துவிடக் கூடாது. இந்த ஈரநிலங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்

1 பிப்ரவரி, 2022

பம்மல் சம்பந்தம் பிறந்தநாள்

     தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் பிறந்த தினம் இன்று.

    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந்தவர். இவரது அப்பா தமிழாசிரியராக, பிறகு பள்ளி ஆய்வாளராக இருந்தவர். புத்தகங்களையும் வெளியிட்டுவந்தார். அவர்கள் வீட்டில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன.

    சிறு வயது முதலே, புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பார். புராணக் கதைகளை அம்மா கூறுவார். கோவிந்தப்பர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரியில் பயின்றார்.

     'நாடக உலகப் பிதாமகர்' என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்.  சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார்.

    அது 1891 ஆம் வருடம். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அப்போது புதிதாகத் திறக்கப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹாலில் பெருங்கூட்டம்.  கார்களிலும், ஜட்கா வண்டிகளிலுமாக வந்திறங்கிய பெரிய மனிதர்களுடன், சாதாரண மக்களும் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்  எடுத்தபடி இருந்தனர். எதற்குத் தெரியுமா? ஆந்திராவிலுள்ள பெல்லாரியிலிருந்து (இன்று கர்நாடகாவில் உள்ளது இந்நகரம்) வந்த, ‘சரச  விநோதினி சபா’ என்ற நாடகக் குழு  தெலுங்கு மொழியில் அரங்கேற்றிய ‘சிரகாரி’ நாடகத்தைக் காண்பதற்காக!

    இதை நடத்தியவர் பெல்லாரியில் வக்கீலாகப் பணியாற்றிய கிருஷ்ணமாச்சார்லு. இவரது நாடகக் குழுவில் இருந்த பலரும் அரசுப்பணியாற்றி வந்தனர். அன்று நாடகம் என்றாலே கூத்து என்றும், அதைப் போடுபவர்களைக் கூத்தாடிகள் என்றும் மோசமாகவே  சித்தரித்தது சமூகம். 

    ஆனால், இந்நாடகத்தைத் தயாரித்தவர்கள் அனைவரும், நன்கு படித்து, அரசுப் பணியில் இருந்த மனிதர்கள். அதனாலேயே மொழி  புரியாவிட்டாலும் இதைப் பார்க்க வேண்டுமென பெரும் ஆவல், மெட்ராஸின் பெரிய மனிதர்களுக்கும் ஏற்பட்டது.

     இக்கூட்டத்தில்  நாடகத்தைக் காண, தன் தந்தையுடன் அந்தப் பதினெட்டு வயது இளைஞனும் சென்றிருந்தான். ஆயிரக்கணக்கான பேர் போய் பார்த்தாலும், அந்த இளைஞனுக்கே தமிழிலும் இப்படியொரு நாடக சபையை உருவாக்க வேண்டுமெனும் எண்ணம் தோன்றியது.

    அந்த இளைஞன்தான் தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார்! அவர் எண்ணப்படி, 1891 ஆம் வருடம் ஜூலை  முதல் நாள், ‘சுகுண விலாச சபா’ பிறந்தது. ‘‘மேற்கண்ட தேதியில் சபையை ஸ்தாபித்தவர் எழுவர். அவர்கள் ஸ்ரீமான்கள்  ஊ.முத்துகுமாரசாமி செட்டியார், வி.வெங்கடகிருஷ்ண நாயுடு, அ.வெங்கடகிருஷ்ண பிள்ளை, த.ஜெயராம் நாயக்கர், ஜி.இ.சம்பத்து  செட்டியார், சுப்பிரமணியப் பிள்ளை, நான்’’ என தன் ‘நாடக மேடை நினைவுகள்’ நூலில் குறிப்பிடுகிறார் பம்மல் சம்பந்த முதலியார்.

    தெருக்கூத்துதான் நாடகம் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார். ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், எம்.கந்தசாமி முதலியார் ஆகியோரையும் நடிக்கவைத்தார்.

    மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப் பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். 

    தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் "சாற்றுக் கவிதை' எழுதி அனுப்பினார்.  சம்பந்தனாரைவிட, பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர் என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.

    அவரது முதல் நாடகம் "புஷ்பவல்லி'. அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோகரா'.

    சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார். நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார்.

    22 ஆவது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற Hamlet, As you like it, Macbeth, Cymbeline, Merchant of Venice  உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார்.

        சம்பந்தனார் எழுதிய  நாடகங்கள் மொத்தம் 94. அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதிஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார். மொத்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை.

    இவரது ‘இந்தியனும்-ஹிட்லரும்’, ‘கலையோ காதலோ’ உள்ளிட்ட 30 தமிழ் நூல்கள், அமலாதித்யா, லார்ட் புத்தா உள்ளிட்ட 30 ஆங்கில நூல்களை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியுள்ளது.

    சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண் விருது, நாடகப் பேராசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார். நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்பட்ட இவர் 91 வயதில் மறைந்தார்.நாடகக் கலைக்குத் தனிச் சிறப்பும் மரியாதையையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும் அழியாது.

31 ஜனவரி, 2022

நாகேஷ் நினைவு நாள்

     நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ், தாராபுரம் பகுதியில் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.

    தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார்.

    சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

    வசன உச்சரிப்பு ஒரு நடிகருக்கு மிக அவசியம். முக பாவனைகள் மிக மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனும் உடல்மொழி ரொம்பவே அவசியம். வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும் அந்த உணர்வுகளை நமக்குக் கடத்துகிற நடிகர்கள் - கலைஞர்கள். மகா கலைஞர்கள். அப்படியான உன்னதக் கலைஞன் - நாகேஷ்.

    ஒல்லியான தேகம்தான். வேலை பார்த்துக்கொண்டே நாடகம், நாடகத்தில் நடித்தபடியே சினிமாவில் வாய்ப்பு தேடுதல் என தொடர்ந்த முயற்சிகளும், முயற்சிகளின் போது பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனாலும் நாடகத்தில், அங்கே ஒன்று, இங்கே ஒன்று என வாய்ப்புகள் வந்தன.

    கவிஞர் வாலியும் நாகேஷும் நண்பர்கள். ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பாராம் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. வாலியிடம் இருந்தால் அது நாகேஷின் பணம்.

    சினிமா தேவதை, நாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத்தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தில் இவரை இயக்கினார். நாடகங்களில் வாய்ப்பு தந்த பாலசந்தர், திரைத்துறையிலும் பயன்படுத்தினார். தன் முதல்படமான ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷை நடிக்கவைத்தார். நாகேஷ் தான் நாயகன். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் நடிப்பைக் கண்டு திரையுலகமே வியந்து மிரண்டது.

    இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ, பெரிய கேரக்டரோ, ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.

    எம்ஜிஆருக்கு நண்பன், சிவாஜிக்கு நண்பன், ஜெமினிக்கு நண்பன், முத்துராமனுக்கு நண்பன், பிறகு ஜெய்சங்கருக்கு நண்பன் என்றெல்லாம் நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.

    அந்தக் காலத்தில், ஏவிஎம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி, ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி, முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்ஜிஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.

    ‘எங்க வீட்டு பிள்ளை’ படம் முழுக்க, ஒவ்வொரு முறை பேசும்போதும், வார்த்தையை மாற்றி மாற்றிப் பேசி காமெடி பண்ணுவார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வைத்தி எனும் கேரக்டரும் ‘திருவிளையாடல்’ படத்தின் தருமி கதாபாத்திரமும் சாதாரணன் மிகப்பெரிய நடிகனாகிற ‘சர்வர் சுந்தரம்’ படமும் சினிமாப் படமெடுக்கிற ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் ‘காதலிக்க நேரமில்லை’ செல்லப்பாவும் கற்பனையில் இருந்து நிஜமாகவே உருவெடுத்து உலவவிட்டதில் நாகேஷின் நடிப்புக்கும் உடல்மொழிக்கும் பெரும்பங்கு இருக்கிறது. 'பாமா விஜயம்’ ‘அனுபவி ராஜா அனுபவி’ என நாகேஷ் முத்திரை பதிக்காத படங்களே இல்லை.

    மாடிப்படி மாது (எதிர்நீச்சல்)வை எவராலும் மறக்கவே முடியாது. ‘வேட்டைக்காரன்’, ’பாமா விஜயம்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘நூற்றுக்கு நூறு’, ‘ஊட்டி வரை உறவு’ என நடித்த படங்களைப் பட்டியலிடுவது அசாதாரணம்.

    ஒருகட்டத்துக்குப் பிறகு, மீண்டும் நடிப்பில் பிஸியானார் நாகேஷ். நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக நடித்தவர் இந்த முறை வில்லனாக நடித்தார். அதிலும் வில்லன்களுக்கெல்லாம் பெரிய வில்லன் இவர்தான். அதுதான் ‘அபூர்வ சகோதரர்கள்’. இதைத் தொடர்ந்து, ‘இந்திரன் சந்திரன்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நம்மவர்’, ‘அவ்வை சண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’ என அடுத்த ரவுண்டிலும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து வெளுத்து வாங்கினார் நாகேஷ். அதிலும் ‘நம்மவர்’ படத்தில் இவர் நடித்ததெல்லாம் வேற லெவல். மகளைப் பறிகொடுத்து அவர் புலம்புகிற அந்தப் பத்துநிமிடங்களும் நம்மை உலுக்கிப் போட்டுவிடுவார்.

    ‘பீம்பாய் பீம்பாய்’ அதுவொரு ரகம் காமெடி. ‘மேகின்னா ஸ்டெப்னியா?’ என்று கேட்கும் ‘பஞ்ச தந்திரம்’ காமெடி வேறு வகை சரவெடி. ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடித்ததைப் பார்த்து, பிணமே எழுந்து வாய்விட்டுச் சிரிக்கும்.

    எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுகிற, தனி முத்திரை பதித்துவிடுகிற மகா கலைஞன், நகைச்சுவை நாயகன் நாகேஷ். சாகாவரம் பெற்ற கலைஞன். பூமியும் வானமும் உள்ளவரை, பூமிக்கும் வானுக்குமாக விஸ்வரூபமெடுத்து நின்றிருப்பார் நாகேஷ். மக்கள் மனங்களின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.

    அடைமொழி கூடிய சினிமா உலகம். இரண்டு படங்கள் நடித்தாலே பெயருக்கு முன்னே பட்டம் வைத்துக் கொள்கிற உலகில், நாகேஷுக்கு எந்த அடைமொழியும் இல்லை என்பது ஆச்சரியம்தான். ஆனால் என்ன ? நகைச்சுவையின் இன்னொரு பெயர் -  நாகேஷ் என்கிறது சினிமா அகராதி.

நன்றி : இந்து தமிழ் திசை

எழுத்தாளர் அகிலன் நினைவுநாள்

     நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் வாய்ந்தவரும் தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் அவர்களது நினைவுநாள் இன்று.

    நான் எழுதிய முதற் கதையும் சரி, இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக்  கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே.

     ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம், மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள்-இதையே என் கதைக் கருத்து என்று சொல்லலாம்'' என்று கூறியுள்ளார் அகிலன்.

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் (1922) பிறந்தவர். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்த பிறகு, அம்மாதான் கஷ்டப்பட்டு இவரைப் படிக்கவைத்தார்.

    பள்ளிப் பருவத்தில் ‘சக்தி வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.

    இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார்.மாணவப்பருவத்தில் - 1938  முதலே அகிலன் எழுதத் தொடங்கினார். பள்ளி இதழுக்காக, பதினாறாவது வயதில் அவர் எழுதிய  "அவன் ஏழை' எனும் அவரது முதல் சிறுகதை, அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கிறது. இதை அவரே தனது "எழுத்தும் வாழ்க்கையும்' என்ற நூலில்  குறிப்பிட்டுள்ளார்.

    முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ 1944 இல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியம் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர். சமூக அக்கறை, சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், அழகிய, எளிய நடை இவரது படைப்புகளின் சிறப்பம்சங்கள்.

    அகிலனின் சிறுகதைகள், வாழ்வின் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவை. எளிய நடையில், வலிமையான கருத்துகளை சுவாரசியமான தனது எழுத்து நடையால் வாசகரின் மனதில் பதிய வைப்பதே காலத்தை வென்ற படைப்பாளியான அகிலனின் தனித்துவம்.

    ஒரு படைப்பாளி எந்த உணர்வால் உந்தப்பட்டுப் படைக்கின்றானோ அதே உணர்வை, படிக்கும்போது வாசகரும் பெறுவதே அந்தப்  படைப்பின் வெற்றி, அத்தகு படைப்பாளி அகிலன்.

    இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலகின் பல மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் என பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரது படைப்புகள் வலம் வருகின்றன.


    இவரது ‘பாவை விளக்கு’ நாவல் அதே பெயரிலும், ‘கயல்விழி’ நாவல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற பெயரிலும் திரைப்படங்களாக வந்தன. ஆனந்த விகடன், குமுதம், கலைமகள், தினமணி ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 2 பாகங்களாக வெளிவந்தன.

    ‘நெஞ்சின் அலைகள்’, ‘பெண்’, ‘எங்கே போகிறோம்’ ஆகிய நாவல்கள், ‘சத்ய ஆவேசம்’, ‘ஊர்வலம்’, ‘எரிமலை’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர் நூல்கள், பயண நூல்கள், கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

    ‘வேங்கையின் மைந்தன்’ நாவல் 1963 இல் சாகித்ய அகாடமி விருதையும் ‘சித்திரப்பாவை’ 1975 இல் ஞானபீட விருதையும் பெற்றன. பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன. சோவியத் லாண்ட் விருதும் பெற்றுள்ளார்.

    அகிலனின் "பாவை விளக்கு' அவரது சுய வாழ்வின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஓர் இலக்கிய வாதியின் போராட்ட  வாழ்வை மிக இயல்பாகக்  கூறிச் செல்லும் இந் நாவல், திரைப்படமாக்கப்பட்டு சிவாஜி கணேசனால் நடிக்கப்பட்டது. கலப்புமணப் பிரச்னையை "வாழ்வு எங்கே?' நாவல் அலசுகிறது. இது "குலமகள் ராதை' - என்ற பெயரில் திரைப்படமானது.

    காந்தியத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அகிலன், மூன்று முறை அரசு அழைப்பை ஏற்று ரஷ்யா சென்றார். தமது பயண அனுபவங்களை "நான் கண்ட ரஷ்யா', "சோவியத்  நாட்டில்' என்ற புத்தகங்களில்  பதிவு செய்தார்.

    மு.வரதராசனார், கி.வா.ஜகன்னாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி.நாகராஜன், கே.சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்சலம் என பல துறைகளின் ஜாம்பவான்களுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.காமராஜர், சி.எஸ்., ஜீவா, மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், கர்பூரி தாகூர், எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி, கே.முத்தையா ஆகிய தலைவர்களுடனான அகிலனின் நட்பு குறிப்பிடத்தக்கது.

    எளிமை, உண்மை, மனித நேயம், கலைத்தன்மை, நேர்மை, அஞ்சாமை, என்கிற சத்திய ஆளுமைப் பாதையில் தானும் வாழ்ந்து, கலையழகுக் கொள்கைப் பிடிப்பும் நிறைந்த தன் படைப்புகளின் வழி - தமிழ் வாசகர்களையும் மேம்படவைத்த படைப்பாளி அகிலன், தனது 66 ஆவது வயதில் (1988) மறைந்தார்.