7 பிப்ரவரி, 2022

பாவாணர் பிறந்தநாள்

     ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர் - தேவநேயப்பாவாணர்.



    ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.இளமையிலேயே கவி பாடும் திறன் பெற்றதால் `கவிவாணன்' என்ற பட்டத்தைப் பெற்றார். தனித்தமிழ் ஈடுபாட்டின் காரணமாக, தன் பெயரைத் `தேவநேயப் பாவாணர்' என மாற்றி அமைத்துக்கொண்டார். 

    பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர். 1919-ல் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே. சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தான் பணியாற்றிய இடங்களிலெல்லாம் மொழியின் மீது பற்றுகொண்ட மாணவர்களை உருவாக்கினார். `பாவாணர் பரம்பரை' என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு அவரின் மாணவர்கள் திறம்கொண்டு விளங்கினர். 

    தமிழின் மறுமலர்ச்சிக் காலத்துக்கு முன்பு வரை, தமிழ் நடை என்பது புரிந்துகொள்வதற்குக் கடினமான சொற்றொடர்களோடு சம்ஸ்கிருதச் சொற்களும் விரவிக்கிடந்தன. `மணிப்பிரவாள நடை’ என்று அதைக் குறிப்பிடுவர். தமிழின் கட்டுகளை உடைத்து மொழியை எளிமைப்படுத்திய இயக்கமே தனித்தமிழ் இயக்கம்.

    பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், உ.வே.சா, பி.தி.சீனிவாச ஐயங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், வள்ளலார் என நீளும் சான்றோர்களே, தமிழை எளிமைப்படுத்தியவர்கள். அவர்களின் தொடர்ச்சியாக உருவானவர் ஞா.தேவநேயப் பாவாணர்.

    பாவாணர் வாழ்ந்த காலத்தில் விடுதலை வேட்கை, நாடு முழுக்க பற்றி எரிந்தபோது இவர் மனதில் உருவானது `மொழி விடுதலை.’ தமிழின் தொன்மையை அறிந்த பாவாணர், அதைச் சூழ்ந்திருக்கும் சம்ஸ்கிருதத்திலிருந்து விடுதலை பெறுவதே தமிழின் மேன்மைக்கு வழிவகுக்கும் என உணர்ந்தார். அதை முன்னெடுக்கவே தமிழ் மொழி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் `தமிழே மற்ற மொழிகளுக்குத் தாய்' என்றுணர்த்தும் கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ந்து எழுதினார்.

     வடமொழிச் சொற்களில் ஐந்தில் இரண்டு பங்கு தமிழ்ச் சொற்கள்தான் என்பதை நிறுவினார். வடமொழியிலிருந்து பிறந்தது தமிழ் என்று பரப்பப்பட்ட கருத்தைக் கடுமையாகச் சாடினார்.

    பாவாணரின் சுவடுகள், உலக மொழி ஆராய்ச்சி வரலாற்றிலேயே இதுவரை எவரும் மேற்கொள்ளாத சாதனை. மொழியின் ஆழத்தை நோக்கிய அவரது பயணங்களில் எதிர்காலம் குறித்த கனவு இருந்தது. சொற்கள் வரலாற்றைத் தாங்கியவை என்பது அவரின் கருத்து. சொல்லிலே ஒளிந்திருக்கும் வரலாற்றைத் தேடி, நெடுந்தூரம் பயணித்த பாவாணர் சென்றடைந்த இடம், தமிழ் மொழியே உலகில் தோன்றிய முதல் மொழி என்னும் கருத்தை நிரூபித்தது.

    `மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக் கண்டம். முதல் மனிதன் பேசிய மொழி தமிழ். தமிழே திராவிட மொழிகளுக்கும் ஆரியத்துக்கும் தாய்'

என்கிற அவரது கோட்பாடுகள், காற்றில் கைபிடித்த வரிகள் அல்ல. அதற்கான சான்றுகளை அறிவியல் முறையில் தொகுத்தளித்ததே பாவாணரை மற்ற ஆராய்ச்சியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

கட்டுரை இலக்கணம்

    ஆங்கில மொழியின் அடிப்படை இலக்கண நூலான `ரென் மற்றும் மார்டின்' - ஐ அனைவரும் அறிவோம். ஆங்கிலத்தைப் போலவே தமிழை முறையாகக் கற்க விரும்பும் மாணவர்களுக்காக பாவாணர் எழுதிய நூலே `உயர்தரக் கட்டுரை இலக்கணம்.' இரு தொகுதிகளாக வெளியான இந்நூல், மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தொடரியல், மரபியல், கட்டுரையியல்.

    தமிழ் இலக்கணங்களை அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல், இலக்கணத்துக்குக் கூறும் எடுத்துக்காட்டுகள் வழியாகக்கூடத் தமிழ் வரலாற்றை மாணவர்களுக்குக் கடத்த விரும்பினார் பாவாணர். 

    `தமிழ், இந்திய மொழிகளில் மிக முந்தியது. பழந்தமிழ்நாட்டின் பெரும்பகுதியாகிய குமரி நாடு கடலுள் முழுகிக் கிடக்கிறது’ 

     போன்ற எடுத்துக்காட்டுச் சொற்றொடர்களைப் பயன்படுத்தி இலக்கணத்தோடு வரலாற்றையும் கற்பித்தார்.

ஒப்பிலக்கணம்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

    மொழிகளை ஒன்றோடொன்று ஒப்பிட்டு அவற்றுக்கு இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை அறிவதே ஒப்பியல் இலக்கணம். இந்தத் தலைப்பிலான பாவாணரின் கட்டுரை. `இந்திய வரலாறு என்பது தெற்கிலிருந்து தொடங்க வேண்டும்' என்பதையும் `திராவிட மொழிகள் தமிழ் மொழியிலிருந்து உருவானவை' என்பதையும் சான்றோடு கூறுகின்றன.

    தமிழின் தொன்மை, ஒலியெளிமை, பிற மொழி கலவாத் தூய்மை, சொல்வளம், செம்மை ஆகியவற்றை மற்ற மொழிகளோடு ஒப்பிட்டும் இந்தி மொழிக்குக்கூடத் தமிழ் இலக்கணம் பொருந்துவதையும் நிறுவுகிறார். உலக மொழிகளின் ஒட்டுமொத்தத் தன்மையையும் ஒருங்கே கொண்டதால் தமிழே `முதற்றாய் மொழி' என்கிறார். 

தமிழர் மரபு

    சிதைந்த தமிழர் மரபை மீட்க, நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழிதான். `எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறார் தொல்காப்பியர். தமிழ் என்பது, வெறும் மொழியன்று.

 கலை, நாகரிகம், பண்பாடு, மரபு, கலாச்சாரம் எனத் தமிழ் மொழி தாங்கியுள்ள கூறுகளை வெளிக்கொணர்வதே தன் பணியாகத் தானே விருப்பத்துடன் ஏற்று செயல்பட்டார் தேவநேயப் பாவாணர்.

அகரமுதலி திட்டம்

    1971ஆம் ஆண்டில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் இயக்குநராகப் பாவாணர் பொறுப்பேற்றார். திட்டக்காலம் நான்கு ஆண்டுகள் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குள் முடிக்க இயலாத அளவு தமிழின் பரப்பு விரிந்து கிடப்பதை உணர்ந்தும் `தன்னால் மட்டுமே இத்தகைய பணியைச் செய்ய முடியும். இதை நிறைவேற்றுவதே இதற்கு முந்தைய தன்னுடைய உழைப்பின் பயன்' என்ற தன்னம்பிக்கையோடு செயல்படத் தொடங்கினார்.

    அணிகலன்கள், தொழிற்கருவிகள் என உலகிலேயே அச்சில் வராத சொற்களைத் தொகுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதை முடிக்கும் முன்பே இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார். அவர் தொகுத்த சொற்களோடு இன்னும் சிலவற்றையும் சேர்த்து `தேவநேயம்' என்கிற பெயரில் 13 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

திராவிட மொழிநூல் ஞாயிறு

    தமிழ் மொழி இன்று வரை தனித்து நிற்பதற்குக் காரணமான செவ்வியல் தன்மைகளை ஆய்வுசெய்த பாவாணர், பிற மொழிச்சொற்களைக் கையாள்வதற்கும் வழிமுறைகளைக் கற்பிக்கிறார். 

    மொழியாக்கம் செய்வது, புதிய சொற்களை உருவாக்குதல் இரண்டும் இயலாதபோது, தமிழ் ஒலிக்கேற்ப திரித்து வழங்குவது முதல் வேர்ச்சொற்களில் தொடங்கி புதிய கலைச் சொற்களை உருவாக்குவது வரை தன் வாழ்வையே தமிழ் மொழி ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்த பாவாணர் என்கிற தனி மனிதர், மொழிப் பல்கலைக்கழகமாகக் காட்சியளிக்கிறார். 

    தம் மக்களிடம் அவர் முன்வைப்பது எளிய வேண்டுகோள் தான்,
  
`தமிழை மேன்மையடையச் செய்ய, தமிழில் பேசுங்கள்.’ என்பதே அது.

பாவாணரின் படைப்புகள்

இலக்கணக்கட்டுரைகள்

இசைத் தமிழ்க் கலம்பகம்

ஒப்பியன் மொழிநூல்

சுட்டுவிளக்கம்

செந்தமிழ்க் காஞ்சி

செந்தமிழ்ச் சிறப்பு

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

தமிழர் மதம்

மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை

தமிழர் திருமணம்

தமிழர் வரலாறு

தமிழ் வரலாறு - 1

தமிழ் வரலாறு - 2

தமிழ்வளம்

தமிழியற் கட்டுரைகள்

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

திரவிடத்தாய்

தென்சொற் கட்டுரைகள்

பாவாணர்நோக்கில் பெருமக்கள்

பாவாணர் உரைகள்

மொழிநூற் கட்டுரைகள்

மொழியாராய்ச்சி கட்டுரைகள்

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

பழந்தமிழாட்சி

பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

மறுப்புரை மாண்பு

முதற்றாய்மொழி

வடமொழி வரலாறு - 1

வடமொழி வரலாறு - 2

வேர்ச்சொற் கட்டுரைகள்

The Primary Classical Language of the World

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...