5 பிப்ரவரி, 2022

டன்லப் (DUNLOP) பிறந்தநாள்

     சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய நவீன ரப்பர் டயர்களின் கண்டுபிடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்ற ஜான் பாய்ட் டன்லப் ஒரு ஸ்காட்லாந்திய கண்டுபிடிப்பாளர்; 
கால்நடை அறுவை சிகிச்சையாளர்  - பிறந்தநாள்.

     குதிரைகள் கரடு முரடான சாலைகளில், கெட்டியான ரப்பரால் தயாரிக்கப்பட்ட கழுத்துப் பட்டையுடன் மிகவும் கனமான சுமைகளை கஷ்டப்பட்டு இழுத்து வருவதைப் பார்த்தார். அவற்றின் கஷ்டத்தை குறைக்கக் காற்று அடைக்கப்பட்ட குஷன்களை அதற்கு பதிலாக பயன்படுத்த முடியுமா என்ற சோதனையில் ஈடுபட்டார். 

    அந்தச் சமயத்தில் (1887) இவரது ஒன்பது வயது மகன் தன் சைக்கிளை உருளைக் கற்கள் நிறைந்த சாலையில் கஷ்டம் இல்லாமல் சவுகரியமாக ஓட்டுவதற்கு ஏதாவது செய்யுமாறு கேட்டான். சைக்கிளின் கெட்டியான ரப்பர் டயர்களில் ஏதாவது மாற்றங்கள் கொண்டு வந்து மகனுக்கு உதவ முடியுமா என்ற பரிசோதனையில் இறங்கிவிட்டார். 

    தோட்டத்தில் கிடந்த, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப் பயன்படுத்தப்படும் பழைய குழாயை வெட்டி ட்யூப் தயாரித்து அதில் காற்றை அடைத்துத் தன் மகனின் சைக்கிளின் பின்பக்கச் சக்கரத்தோடு இணைத்தார். சைக்கிளும் அவர் மகன் கேட்டபடியே எளிதாகச் சாலையில் உருண்டோடியது. உண்மையில் இதை மறுகண்டுபிடிப்பு என்றுதான் கூற வேண்டும். 

    ஏற்கெனவே 1845 இல் ராபர்ட் தாம்சன் இதைக் கண்டுபிடித்திருந்தார். ஆனால், அது அந்த அளவு பிரபலமாகவில்லை என்பதால், இது டன்லப்புக்குத் தெரியாது. காற்றடைக்கப்பட்ட இந்த டயரை மேலும் ஆராய்ந்து, பரிசோதனைகள் செய்து, மேம்படுத்தி 1888 இல் பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1890 இல் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற்றார்.


    
பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற மிதிவண்டி ஓட்டும் ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த W.H. டு கிராஸ் என்ற அயர்லாந்து தொழிலதிபருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது.

    டன்லப்புடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அது டன்லப் ரப்பர் கம்பெனி என்று அழைக்கப்பட்டது. தனது கண்டுபிடிப்பால் இவர் பெரிதாக லாபமடையவில்லை. தனது காப்புரிமையை 1896 இல் டு கிராசுக்கு விற்றுவிட்டு, ஊர் திரும்பிவிட்டார்.

    ஆனால் அந்த நிறுவனம் டன்லப் ரப்பர் கம்பெனி என்று இவரது பெயராலேயே இயங்கிவந்தது. 1888 இல் காற்று அடைக்கப்பட்ட டயர்கள் அறிமுகமான பிறகு பழைய டயர்கள் வழக்கொழிந்து போய் விரைவில் இவை புழக்கத்திற்கு வந்துவிட்டன.

    இது மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. 1895 முதல் மோட்டார் வாகனம் உருவானது. 1900 ஆம் ஆண்டுக்குப் பின் சைக்கிள்களுக்கும் மோட்டார் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படும் நீடித்து உழைக்கும் ரப்பர் பொருள்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது.

     இவரது கண்டுபிடிப்பு பல தொழிற்சாலைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய நவீன ரப்பர் டயர்களின் கண்டுபிடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் ஜான் பாய்ட் டன்லப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...