15 நவம்பர், 2021

வினோபா பாவே நினைவு நாள்

 ** சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே (Vinoba Bhave)  மகாராஷ்டிர மாநிலம் கொலபா அருகே ககோடா என்ற கிராமத்தில் (1895) பிறந்தார். முழுப் பெயர் விநாயக் நரஹரி பாவே. இவரது ஆழமான அறிவுத் தேடலை பாடப் புத்தகங்கள் தணிக்காததால், துறவிகள், தத்துவ ஞானிகளின் புத்தகங்களைப் படித்தார்.

14 நவம்பர், 2021

உலக நீரிழிவு நாள் (World Diabetes Day) - நவம்பர் 14

 

 

உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

13 நவம்பர், 2021

உலக கருணை தினம் (World Kindness Day)

     


    உலக கருணை தினம் (World Kindness Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 13-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 

       லூயிஸ் பர்பிட் - டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனித நேயர்கள்தான் முதன்முதலாக,1998-ம் ஆண்டு கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர்.அதன்பின் பல நாடுகள் கருணை தினத்தைக் கடைப்பிடிக்கின்றன. இந்த அமைப்பு மதம், அரசியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு விளங்குகிறது.

     

கருணை என்பது, அனைவரிடமும் அன்பு செலுத்துவது, எவ்விதப் பேதமுமின்றி சமரசமாக இருப்பதே கருணையின் வெளிப்பாடு. ஒவ்வொருவரும் சக மனிதனைச் சமமாகவும், கருணையோடும் அணுகவேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

நன்மைகள்

     கருணையை வெளிப்படுத்துவதால், நம் உடலில் ஆக்ஸிட்டோஸின் அளவை அதிகரிக்கிறது. இது இதயத்துக்கு மிகவும் நல்லது.

    கருணையால் எண்டர்ஃபின்ஸும் (endorphins) சுரக்கும். இது இயற்கையான வலி நிவாரணியாக உடலில் செயல்படுகிறது!

   கருணைச் செயல்பாடுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடியது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். 

    புன்னகையுடன் ஒருவரைப் பார்த்து ’நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று அக்கறையுடன் கேட்டால், அதுகூட ஒருவரின் மனநிலையை நேர்மறையானதாக மாற்றும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

   `தி ராபிட் எஃபக்ட் (The Rabbit Effect)`, என்ற புத்தகத்தின் ஆசிரியர் கெலி ஹார்டிங், "கருணையாக இருப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு நல்லது. அது ஒருவரின் ஆயுளைக் கூட்டும், இதை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டாம். இது எளிமையான ஒன்று," என்று கூறுகிறார்.


நீங்கள் கருணையுடன் நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? 

  1.  ஒருவர் சொல்வதை உண்மையாக காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் பேசி முடிப்பதற்கு முன்னரே உங்கள் மூளையில் பதில்களை யோசித்து வைக்காதீர்கள்.

   2. உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடமும் கருணையாக இருங்கள். ஒருவர் உங்களிடம் கடுமையான ஏதேனும் பேசினால், `என்னவாயிற்று, உங்கள் நாள் சரியாக அமையவில்லையா?` என்று கேளுங்கள் நிலைமை அப்படியே மாறிவிடும்.

  3.  பிறரால் பெரிதும் கவனிக்கப்படாதவர்களை, நீங்கள் கவனியுங்கள். அவர்கள் மீதும் அக்கறை காட்டுங்கள்.

   4.நீங்கள் ஏதேனும் கோபப்படும்படியான விஷயம் நடந்தால், ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்டுச் சில நிமிடங்கள் பொறுமையாக யோசியுங்கள்.

    பிறருக்கு, அவர்கள் மனம் மகிழும் வண்ணம்,பொருள் இல்லாவிட்டாலும் ,நல்ல சொற்களையாவது கொடுத்து உதவுவோம். மற்றவர்களின் மனக்காயத்திற்கு கருணை மருந்து கொடுத்துக் காப்போம்.👍

12 நவம்பர், 2021

பொதுச்சேவை ஒலிபரப்பு தினம் (Public Service Broadcasting Day)

        



காந்தியடிகளின் உரை👇

   


தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வருகை புரிந்த நாளான நவம்பர் 12, 1947 ஐ நினைவு கூரும் பொருட்டு  ‘பொதுச் சேவை ஒலிபரப்புதினம்’ (Public Service Broadcasting Day) ஆண்டுதோறும் நவம்பர் 12 அன்று கடைப்பிடிக்கப் படுகிறது. 

      இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது புலம்பெயர்ந்த மக்கள், ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில், தற்காலிகமாகத் தங்கியிருந்தனர்.அவர்கள் அமைதி காக்க வேண்டும் எனக்கூறுவதாக  காந்தியடிகளின் உரை அமைத்திருந்தது.

இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி பிறந்தநாள்

 

காக்கை குருவி எங்கள் ஜாதி’.‘நீள்கடலும்,மலையும் எங்கள் கூட்டம்‘ என்றார் பாரதியார். 

   அதை நிரூபித்த பெருமைக்குரிய, 'இந்தியாவின் பறவை மனிதர்' என்றழைக்கப்படும் சலீம் அலி பிறந்தநாள் இன்று.

    உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரான சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும் இவர் நவம்பர் 12, 1896 அன்று, மும்பையில் பிறந்தார்.

    இந்தியாவில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் புகைப்படத்துடன் பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் சலீம் அலி.

    இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர்.

    பறவைகளின் வாழ்வியல் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் பெற்றவை.

    சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி இயற்கைப் பாதுகாப்பிலும் பெருநாட்டம் கொண்டவர்.

     பறவைகளின் நல்வாழ்வும் பாதுகாப்பும் இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை; பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு இன்றியமையாதவை என்ற சூழலியல் சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

    இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன் வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலீம் அலியின் முக்கிய நூல்களாகும். Handbook of Indian birds புத்தகம், 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

     இவர், தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார். 1930 ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக்கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வேடு போல விளங்கியது. இக்கட்டுரை, பறவையியலில் சலீம் அலிக்குப் பெரும்புகழையும், பெயரையும் ஈட்டித்தந்தது.

    ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலீம் அலியை,மக்கள், “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர்.

    1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் பறவை மனிதனின் ஆவி, இவ்வுலகை விட்டு பிரிந்தது.

11 நவம்பர், 2021

தேசிய கல்வி தினம் (அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்) - நவம்பர் 11

 



    கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு 

   ஒரு மனிதனுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிறருக்குக் கொடுக்கக் கொடுக்க குறையாத ஒரே செல்வம் கல்வி தான்.

   அத்தகு கல்வியை நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு,வடிவமைத்த,அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், கடந்த 2008 ஆம் செப்டம்பர் 11 ஆம் தேதி, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவித்தது.

   இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின்போது சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய முஸ்லிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்து - முஸ்லிம் ஒற்றுமையுடன் இந்தியாவை மேம்படுத்தவேண்டும் என்று நாளும் உழைத்த நல்ல உள்ளம் கொண்ட பேரறிவாளர்.

   இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு முதல், தான் மறையும் 1958ம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக பணிபுரிந்தார். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவுசெய்ய உறுதிபூண்ட இவர், அதற்கான அடித்தளத்தை அமைத்தார். 

  இந்திய தொழில்நுட்ப கழகத்தை( IIT ) அமைத்ததும், பல்கலைக்கழக மானியக் குழு(UGC) என்ற அமைப்பிற்கு அடித்தளமிட்டதும், அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி மையம் (Centre for Scientific and Indusrial Research CSIR)   உருவாக்கியதும் இவரது பெரும் சாதனைகளில் சில. சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954)உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும் தோற்றுவித்தார். 

   உலக நாடுகளுக்குச் சவால் விடும் வகையில், இந்திய கல்வியில் பெரும் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் கொண்டு வந்தார்.

   உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தாம் பாரத ரத்னா விருது தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் மறுத்துவிட்டார். அவர் மறைந்த பிறகு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

  இவருடைய அறிவாற்றலையும் செயல்திறத்தையும் உணர்ந்த காந்தியடிகள் இவரைப் ‘பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் ஆகிய மூவரும் சேர்ந்த ஆளுமை உடையவர்’ எனப்  புகழாரம்  சூட்டிப் பாராட்டினார்.பேரறிவாளர் எனக் காந்தியடிகளால் போற்றப்பட்ட அபுல்கலாம் ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வோம்.

* எல்லா மாணவர்களுக்கும் சாதி,மத,இன பாகுபாடின்றி தரமான கல்வி வழங்க வேண்டும்.

* அனைத்துக் கல்வித் திட்டங்களும் மதசார்பற்ற அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

* 14 வயது வரை இலவசக் கல்வி யாவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

* பள்ளிக்கூடக்கல்வி தாய்மொழியில்தான் அமைதல் வேண்டும்.

   இவையெல்லாம் ஆசாத் அவர்களால் விடுதலை பெற்ற இந்தியாவின் மேன்மைக்காக முன்மொழியப்பட்ட கல்விச் சிந்தனைகள் 

உலக நிமோனியா தினம் - நவம்பர் 11


       


  ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையான நிமோனியாவின் தீவிரத் தன்மையை எடுத்துரைக்கவும், அந்நோயை எதிர்த்துப் போராட மேலும் அமைப்புகள்/நாடுகளை ஊக்கப்படுத்தவும் உலக நிமோனியா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

       குழந்தை நிமோனியாப் பிரச்சினையை எதிர்த்துப் பொது மற்றும் அரசியல் ஆதரவைத் திரட்ட உருவாக்கப்பட்ட,  குழந்தை நிமோனியாவுக்கு எதிரான உலக அமைப்பால் (Global Coalition against Child Pneumonia - GCCP) முதன் முறையாக 2009-ல் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டது. 

நிமோனியா என்றால் என்ன?

    நிமோனியா ஒரு கடும் மூச்சு மண்டலத் தொற்று நோய். இது நுரையீரலைப் பாதிக்கிறது. பொதுவாக நுரையீரல் நுண் அறைகளில், சுவாசிக்கும் போது காற்று நிரம்பி இருக்கும். ஆனால் நிமோனியாவில் இந்த நுண்ணறைகளில் சளியும், சீழும் நிரம்பி சுவாசிக்கும் போது வலியைக் கொடுத்து, உயிர்வளி உள்ளெடுப்பைத் தடை செய்யும். வைரஸ், நுண்ணுயிரி, காளான் போன்ற பலவற்றால் நிமோனியா உண்டாகிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நிமோனியா:

     காய்ச்சலோடு இல்லாமலும் இருமல் மற்றும்/அல்லது மூச்சு விடுவதில் சிரமம், வேகமான சுவாசம் மற்றும் நெஞ்சுச் சுவர்(விரிவதற்குப் பதில்) உள்ளொடுங்குதல் .

    கடுமையான பாதிக்கப்பட்ட குழந்தைகளால் உண்ண, குடிக்க இயலாமை, மயக்கம், குறைவெப்பம் அல்லது வலிப்பு ஏற்படலாம்.

     5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கும்

நாளின் முக்கியத்துவம்:

      நிமோனியாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிமோனியாவில் இருந்து காக்கவும் அதைத் தடுக்கவும் சிகிச்சைகளை ஊக்குவிக்கவும்,

    நிமோனியாவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை உருவாக்கவும்,ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 12-ஆம் தேதி இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

   உலக சுகாதார நிறுவனமும் (WHO) ஐக்கிய நாடுகள் குழந்தைகள் கல்வி அமைப்பும் (UNICEF) நிமோனியாவையும் வயிற்றுப் போக்கையும் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டத்தை (GAPPD) உருவாக்கியுள்ளன. 

இலக்குகள்

       நிமோனியா கட்டுப்பாட்டை வேகப்படுத்துவதோடு, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காத்து, சிகிச்சை அளிப்பது இதன் நோக்கம் ஆகும். உயிரோடு பிறக்கும் குழந்தைகளில் நிமோனியாவால் ஏற்படும் மரணத்தை ஆயிரத்துக்கு மூன்றாகவும், வயிற்றுப் போக்கால் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கையை ஆயிரத்தில் ஒன்றாகவும் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைப்பதே இதன் இலக்கு.


 “ நிமோனியாவைத் தடுப்பது அதிர்ஷ்டம் சார்ந்ததல்ல. நடவடிக்கை சார்ந்தது ”

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece