14 நவம்பர், 2021

உலக நீரிழிவு நாள் (World Diabetes Day) - நவம்பர் 14

 

 

உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ல் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிரட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.
சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலக நீரிழிவு தினத்தின் இலக்குகள்

 இத்தினம் உலக நீரிழிவு கூட்டமைப்பின் முன்னோடி முயற்சிகளை ஆண்டு முழுவதும் ஊக்கப்படுத்துகிறது. நீரிழிவை முக்கிய உலகப் பிரச்சினையாகக் கருதி,அதை எதிர் கொள்வதற்காக, நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உலக அளவில் ஊக்கப்படுத்துகிறது. இந்தப் பிரச்சாரத்தில், நீரிழிவு பற்றிய விழிப்புணர்வு, உலகச் சின்னமான நீல வட்ட அடையாளத்தால் குறிக்கப்படுகிறது. மேலும், நீரிழிவு நோயை எதிர்கொள்ள, உலக நீரிழிவு நோயாளிகளின் ஒற்றுமையை இது குறிக்கிறது. 

 நீரிழிவு நோயின் அறிகுறிகள் 

 1.மங்கலான பார்வை, 2.சோர்வு, 3.அதிக பசி மற்றும் தாகம், 4.அடிக்கடி சிறுநீர் கழித்தல், 5.கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு, 6.ஆறாத புண்கள்,7.விவரிக்க முடியாத எடை இழப்பு. 

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலும் அது தவறாக பயன்படுத்தப்பட்டாலும், உடல் ஆற்றலை உருவாக்க முயற்சிக்கும் போதும் இந்த அறிகுறிகள் வேறு மாதிரி உண்டாகலாம்.குறிப்பாக ஒரு நபர் சோர்வு மற்றும் பசியை அனுபவிக்கலாம். அவர் உண்ணும் உணவுகளில் இருந்து போதுமான சக்தியை உறிஞ்ச முடியாது. 

அதிகப்படியான குளுக்கோஸ் உடலிலிருந்து அதிக அளவு திரவத்தை வெளியேற்றும் என்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம். தாகம் எடுக்கலாம்.  

ஆபத்தான விளைவுகள்

        இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றுவதனால், இதனை உடல் சீர்குலைவுகளில் (physical disorder) ஒன்றாகக் கொள்ளலாம். 

மனித உடலில், சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலைமைகளும் உருவாகலாம். கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதயக் குழலிய நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் என்பன ஏற்படலாம். உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்புப் படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.

கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யவேண்டியவை 

 1.உடற்பயிற்சி: ரெகுலரான உடற்பயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் போது தசை அசைவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோய் வராமல் தடுக்க சில எளிய உடற்பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், நடனம், சைக்ளிங் போன்றவை உதவும். 

 2.கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்தல்: அதிகளவிலான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்ககூடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. 

 3.உடல் எடையைச் சீராக வைத்தல்: ஆரோக்கியமான உடல் எடை, நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மற்றும் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலை, சுறுசுறுப்பாகவும், கட்டுக்கோப்பாகவும் வைக்கிறது. 

 4.நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்: காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்துக் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகளின் சர்க்கரை செரிமானத்தையும், சர்க்கரையை உறிஞ்சுவதையும் மெதுவாக்குகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. 

 5.மன அழுத்தத்தைக் குறைத்தல்: மன அழுத்தம் உடலில், குளுகோகன் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே வழக்கமான உடல் பயிற்சிகள், யோகா மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். 

 6.போதுமான தண்ணீர் குடிப்பது: தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு (Dehydrate) ஏற்படாமல் தடுக்கலாம். ஆரோக்கியமான சிறுநீரகச் செயல்பாட்டின் மூலம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றுவதை,இது ஊக்குவிக்கிறது. 

 7.போதுமான தூக்கம்: எந்தவித இடையூறும் இல்லாமல் தூங்குவது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஒழுங்கற்ற தூக்கப் பழக்கம் கார்டிசோலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. 

 8.குரோமியம், மெக்னீசியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது : குரோமியம் மற்றும் மெக்னீசியம்,போன்றவை, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே, இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக அறியப்படுகிறது மற்றும் இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டுமே நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைத் தடுக்கின்றன.
கவனத்தில் கொள்ளவேண்டியவை 

மரபணுக் குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்புத் தன்மை இவற்றால் வரும் நீரிழிவு நோய்க்கு எவ்வித தடுப்பும் உபயோகிக்கப்படாது. மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதனின் உடலை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குவது, நீரிழிவு நோய்தான். 

ஆராய்ச்சிகள் பல செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் புதுப்புது தகவல்கள் கூறப்படுவதால், நாம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த என்னதான் வழிமுறைகளை எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...