28 ஜனவரி, 2022

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் பிறந்த நாள்

     இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னோடியும், பஞ்சாப் சிங்கம் (பஞ்சாப் கேசரி)  என்றழைக்கப்படுவருமான, லாலா லஜபதி ராய் பிறந்த தினம் இன்று (ஜனவரி 28)

    லாலா லஜபதி ராய் ஓர் எழுத்தாளரும், அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். 

லால் - பால் -பால்

    லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.

    இவர் 1888 ஆம் ஆண்டில் இந்திய தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். ராய், சட்டம் பயின்றவரான லஜபதி ராய் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். 1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது. 

    ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், தன்மான உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது. லாலா உள்ளிட்ட முன் குறிப்பிட்ட மூவரும்,ஆங்கிலேயர்களிடமிருந்து ஓரளவு தன்னாட்சியைக் கோரினர். இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. முழுமையான அரசியல் விடுதலையை முதன் முதலில் கோரியவர்களும் இவர்களே.

    பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக, பிரிட்டிஷ் அரசு இவரைப் பர்மாவுக்கு நாடு கடத்தியது. அரசுக்கு எதிராகச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால், தாய்நாடு திரும்ப அனுமதித்தது. 

    1920 இல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 1928 அக்டோபர் 30 அன்று, சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, எதிர்த்து, அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தார். எனினும் பிரிட்டிஷ் அரசு கடுமையாகத் தாக்கியதை அடுத்து, சில தினங்களிலேயே உயிரிழந்தார்.

இராஜா ராமண்ணா பிறந்தநாள்

    இராஜா இராமண்ணா, இந்திய அணுஆற்றல் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞர். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர். இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படுபவர்.

    இராஜா ராமண்ணா,ஓர் எழுச்சியூட்டும் தலைவராகவும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர். இசைக்கலைஞர், சமஸ்கிருத இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதையாக விளங்கிய பன்முகத்தன்மை கொண்ட ஒரு முழுமையான மனிதர் எனப்போற்றப்படுபவர். 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha) என்ற மறைமுகச் சொல்லைப் பயன்படுத்தி முதல் அமைதியான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.

    1925 ஜனவரி 28 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் பெயர் பி. ராமண்ணா.இவர் நீதியரசராகப் பணியாற்றி வந்தார். தாயார் ருக்மணியம்மா. இவர் நல்ல அறிவாளியாகவும், கவிதை இயற்றுதல், மின்கருவிகளைப் பழுது பார்த்தல் ஆகியவற்றில் திறம் பெற்றவராகவும் இருந்தார். இராமண்ணாவின் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்து இவரை ஈர்த்தவர், இவருடைய தாயின் சகோதரி இராஜம்மா ஆவார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அவர் கதைகள் புராணக் கதைகள், காப்பியக் கதைகள் ஆகியவற்றை இராமண்ணாவுக்குச் சொல்லி அவரின் அறிவு வளர்ச்சிக்கும் வழிகோலினார். இராமண்ணாவின் பெயரிலுள்ள இராஜா என்பது இராஜம்மா என்ற பெயரின் பகுதியாகும்.

    இராமண்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய அணுவியலறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா மீது மதிப்பு கொண்டிருந்தார். 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவில் தங்கியிருந்த திரித்துவ இசைக்கல்லூரியின் தேர்வாளர் முனைவர் ஆல்பிரெட் மிஸ்டோவ்ஸ்கி என்பவர் மூலம் பாபாவைச் சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. 

TIFR-Tata Institute of Fundamental Research

    மற்றொரு முறை பாபா லண்டன் சென்றிருந்த போது அங்கு கல்வி பயின்றுகொண்டிருந்த இராமண்ணா அவரை மீண்டும் சந்தித்தார். அப்போது பாபா இந்திய அணு ஆற்றல் நிகழ்வுகளுக்குத் தொட்டிலாய் விளங்கிய அடிப்படை ஆய்வுக்கான டாடா பயிற்சி நிறுவனத்தில் (TIFR-Tata Institute of Fundamental Research) சேர்ந்து பணியாற்ற இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார்.1949, டிசம்பர் 1 இல் இராமண்ணா அப்பணியில் அமர்ந்தார்.

    இங்கு அணுக்கருப் பிளவு மற்றும்ம் சிதறல் பற்றிய ஆய்வுகளை இவர் மேற்கொண்டார். இவர் சேரும்போது இந்நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகியிருந்தது. அப்பொழுது பாபாவின் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள் உலகப் புகழ் பெற்றிருந்தன. பாபாவின் தூண்டுதலால் தொடங்கப்பட்ட அணுக்கரு ஆய்வுக்குழு குறிப்பிடதக்க வகையில் பணியாற்றிய பெருமையுடையதாகும். தொழில்நுட்ப நடவடிக்கைகளும், அணுஆற்றல் திட்டங்களும் இந்தியாவில் தழைத்தோங்கி வளர இக்குழு மிகவும் கடுமையாக உழைத்தது. 

இந்தியாவின் முதல் அணுக்கரு உலை - அப்சரா
    நியூட்ரான், அணுக்கரு, அணுக்கரு உலை இயற்பியல் ஆகிய துறைகளில் இராமண்ணாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. பாபா அணு ஆய்வு மையத்தில் ஹோமி பாபாவின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுகளின் போது இராமண்ணா ஓரு இளைய ஆய்வாளராகப் பணியாற்றினார். 1956 ஆம் ஆண்டு ஆகஸ் 4 ஆம் நாள் முதல் அணுக்கரு உலையான 'அப்சரா' இக்குழுவினரால் உருவாக்கப்பட்டது. இதில் நியூட்ரான் பற்றிய ஆய்வுகளை இராமண்ணாவும், கோட்பாட்டு இயற்பியலில் கே. எஸ். சிங்வியும், மின்னணுத் துறையில் கருவிகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றில் ஏ. எஸ். ராவும் பங்களித்தனர். அணுக்கரு உலையில் அமைக்கப்படும் எரிபொருளுக்கான துளைகள் அமைப்பு உருவாக்கத்திற்கு எந்திரப் பொறியாளர் வி. டி. கிருஷ்ணன் என்பர் பொறுப்பேற்றார்.

    இராமண்ணா துடிப்புமிக்க நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீர் மற்றும் பெரிலியம் ஆக்சைடில் அதன் வேகத்தைப் மட்டுப்படுத்தி நியூட்ரான் விரலைத் திர்மானித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை நவீன முறைகளில் பல்வேறு ஆய்வுகள் மூலம் மேற்கொண்டார். அவ்வாறு செயல்படும்போது உருவாகும் நியூட்ரான் நிறமாலை பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் கிடைத்த வெப்ப நியூட்ரான்கள் கற்றை, அடிப்படை ஆய்வுகளுக்கு உதவியது. யுரேனியம்-235 இல் அணுக்கருப்பிளவினால் உருவாகும் துணைக்கதிர்வீச்சுகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் ஆற்றல் மற்றும் கோணங்கள் ஆகியவற்றை அளந்தார். இந்த அளவீடுகள், இக்கதிர்கள். நியூட்ரான்களின் வெளிப்பாடு, பிளவுத்துகள்களின் சராசரி சுழற்சி போன்றவற்றைப் பற்றிப் பல தகவல்களை அறிய உதவின. வெப்ப மற்றும் வேக நியூட்ரான்களினால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளிவரும் மின்னேற்றம்,பற்றிய முக்கியத் தகவல்களை அறிய உதவின.



    அணுக்கரு ஆய்வுகளில் ஈடுபட்ட இராமண்ணா, இந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட பல இளம் அறிவியலறிஞர்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார். அதற்காக 1975 இல் இவர் தலைமையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சிப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது, இவர் எடுத்த முதல் முக்கியமான முயற்சியாகும். இங்கு பல அறிவியல் அறிஞர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் அணு ஆற்றல் மற்றும் விண்வெளி ஆய்வு மையங்கள், பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர், பல்வேறு ஆய்வகங்களின் இயக்குநர்கள், இந்திய அரசாங்கத்தின் அறிவியல் துறைச் செயலர்கள் என்று இந்திய நாட்டிற்குள் பல்வேறு வகைகளில் பணியாற்றி வந்துள்ளனர்.

    1972 முதல் 1978 வரை இந்தியத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும், 1977-78 களில் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராகவும், அனைத்துலக அணுஆற்றல் நிறுவனத்தில் பொது இயக்குநருக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும், 1986 இல் அதன் முப்பதாவது பொது மாநாட்டின் தலைவராகவும் செயல்பட்டார். 1977-79 இல் இந்திய அறிவியல் கழகத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பொது இயக்குநராகவும் பணியாற்றினார். மும்பை பாபா அணுசக்சி ஆய்வு மையத்தின் இயக்குநராக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார்.

    முதல் ஆறாண்டுகளை இராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைகளின் பொற்காலம் என்று கூறலாம்! அப்போதுதான் குறிமொழிப் பெயர் பூண்ட 'சிரிக்கும் புத்தர்’ என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது. 1974 மே மாதம் 18 ஆம் தேதி இராஜஸ்தானிலுள்ள பொக்ரான் பாலைவனத்தில் நிலத்தடி குண்டு வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது. டாக்டர் ஹோமி ஜெ. பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என். சேத்னா ஆகியோருக்குப் பின்பு அதிபராக, அணுசக்திப் பேரவைக்கு, (Atomic Energy Commission) டாக்டர் ராஜா ராமண்ணா 1983 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்காண்டுகள் பணியாற்றினார்.

    1990 இல் வி. பி. சிங் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.1997-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பணிபுரிந்தார். பெங்களூருவில் உள்ள முன்னேறிய படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்டார். ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் [Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research], இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை [Indian Academy of Sciences ], மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் [Indian Institute of Technology, Bombay] ஆகியவற்றின் தலைவராகவும் இராமண்ணா பணியாற்றினார்.

    இவருடைய பணிகளைப் பாராட்டி

1963இல் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது

1968 இல் குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ விருது

1973இல் பத்ம விபூஷண் விருது

1984 இல் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் மேக்நாத் சாகா பதக்கம்

1985 இல் ஓம்பிரகாஷ் பாசின் விருது

1985-86 இல் ஆர். டி. பிர்லா நினைவு விருது

1996 இல் அசுதோஷ் முகர்ஜி தங்கப்பதக்கம்

ஆகியவை வழங்கப்பட்டன. பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவரைச் சிறப்பிக்கும் வகையில் மதிப்பியல் முனைவர் பட்டம் வழங்கின.

    இராமண்ணா 2004 செப்டம்பர் மாதம் 24 ஆம் நாள் மும்பையில்  காலமானார்.


27 ஜனவரி, 2022

ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள்

      திரு.ஆர்.வெங்கட்ராமன் ஒரு விடுதலைப்போராட்ட வீரர்,தொழிற்சங்கத் தலைவர், நிதித்துறை மேதாவி,, சட்ட வல்லுனர், சிறந்த சிந்தனைவாதி. தஞ்சாவூர் மாவட்டம் ராஜா மடம் என்ற கிராமத்தில் பிறந்தவர். பட்டுக்கோட்டை யில் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.


    லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1935ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். 1949 இல் ‘லேபர் லா ஜர்னல்’ என்னும் இதழைத் தொடங்கினார். தமிழகத்தில் பல தொழிற்சங்கங்களின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

  தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்குச் சங்கம் அமைத்தவர் சென்னை மாகாண வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளராகப் பணியாற்றினார்.தொழிலாளர் சட்ட ஜர்னலின் ஆசிரியர்.1951 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். சென்னை பிராந்திய பார் பெடரேசனின் செயலாளராகப் பணியாற்றினார். 

     சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்து போராடியதால் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கத்தின் தொழிலாளர் பிரிவில் தீவிரப் பங்காற்றினார். 

     இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக, சிறப்பாகப் பணியாற்றினார். சர்வதேச நிதித்துறையில் ஆளுநராகவும், சர்வதேசப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியிலும் பணியாற்றினார்.

     நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், இவரது சேவை தமிழகத்துக்குத் தேவை என்பதை உணர்ந்த அப்போதைய முதல்வர் காமராஜர், இவரை, தமிழக அமைச்சரவையில் பங்கேற்க வைத்தார். தொழிலாளர் நலத்துறை, மின் துறை, தொழில் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வணிகத்துறை என பல துறைகளை இவர் நிர்வகித்தார். 

     அரசியல் விவகாரக் குழு, பொருளாதார விவகாரங்களுக்கான குழு உறுப்பினராகவும் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராகவும் 1975 முதல் 1977 வரை ‘சுயராஜ்ய’ பத்திரிகையின் ஆசிரியராவும் பணியாற்றினார்.1946 ஆம் ஆண்டு மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று, அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார். 

     1957ஆல் இருந்து 1967வரை தமிழக மேலவை முன்னவர். கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற் பேட்டைகள் இவர் உருவாக்கியவை. கலை, ஓவியம்,சிற்பங்களுக்கு ஊக்கம் அளித்தவர். மாமல்லபுரம் சிற்ப பள்ளி, சுவமிமலை வெண்கலச் சிற்பக்கூடம், நாச்சியார் கோவிலில் பாரம்பரிய விளக்குகளை உருவாக்கும் கூடம் ஆகியவை இவர் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை. 

     1980 இல் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த மத்திய அரசில் நிதி அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அந்த நேரத்தில்தான் இந்திய ராணுவத்துக்கான ஏவுகணை திட்டப்பணிகள் தொடங்கின. 

     1984 இல் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.1987இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1992 வரை அப்பதவியில் நீடித்தார். 4 பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

    பாகிஸ்தானுக்குப் பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் இவரே. இவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோதுதான் மத்தியில் கூட்டணி அரசு தொடங்கியது. பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.

     காமராஜருடன் இவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணத்தின் அனுபவங்களை ‘சோவியத் நாடுகளில் காமராஜரின் பயணம்’ என்ற புத்தகமாக எழுதினார். இதற்காக இவருக்கு ‘சோவியத் லேன்ட்’ பரிசு வழங்கப்பட்டது. 

    சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்த ஆர்.வெங்கட்ராமன், தனது 98 ஆவது வயதில் காலமானார்.

26 ஜனவரி, 2022

73 ஆவது குடியரசு தினம்

     73


       ஆங்கிலேயர்கள், தங்களுக்கு எதிரான, தொடர் போராட்டங்களை எதிர்கொள்ள இயலாமல், இந்தியாவை விட்டு வெளியேற  முடிவு செய்தனர்.1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தது.அப்போது கிடைத்த சுதந்திரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி ஆங்கிலேயர் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். 

    சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க மாமேதை அம்பேத்கர் தலைமையில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு அதே ஆண்டு நவம்பர் மாதம் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை அறியும் வகையில் விவாதங்கள் நடத்தப்பட்டன. 



     1949 நவம்பர் 26 ஆம் தேதி முழுமையாக வடிவமைக்கப்பட்டு, 1950 ஜனவரி 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. நாடு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ஆம் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாகக் கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை முடிவு செய்தது. 

    308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.அம்பேத்கர் கொண்டு வந்த இந்த அரசியலமைப்புச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த நாளை நாம் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.

    அனைவருக்கும், இனிய குடியரசுதின வாழ்த்துகள். வலிமையான பாரதமே, நமது நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். நாம், நமது பொறுப்புகளை உணர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்.


25 ஜனவரி, 2022

தேசிய வாக்காளர் தினம்

     இந்தியத் தேர்தல் ஆணையமானது கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதனைக் குறிக்கும் விதமாக ஒவ்வோராண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் (National Voters’ Day) கொண்டாடப்படுகிறது. இது ராஷ்டிரிய மட்டதா திவாஸ் (Rashtriya Matdata Diwas) என்றும் அழைக்கப்படுகிறது. 


    இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) அமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையிலும்,  வாக்காளர்கள் சேர்க்கையை ஊக்குவித்தல், குறிப்பாக புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்த தினம் கொண்டாப்படுகிறது. அரசியலமைப்பின் 324 ஆவது பிரிவு, இந்தியாவில் தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் 1950-ல் நடைமுறைக்கு வந்திருந்தாலும், இந்தத் தினத்தை, முறையாகக்  கொண்டாடத் தொடங்கியது 2011 இல் தான்.

தேசிய வாக்காளர் தினத்தின் குறிக்கோள்
(Objective of the National Voters’ Day) 

    இந்தியாவில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுதான் தேசிய வாக்காளர் தினத்தை மத்திய அரசு கொண்டாடத் தூண்டியது எனலாம். வாக்களிக்கும் பணியில் பங்கேற்க இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு  `Proud to be a voter, ready to vote’ என்று எழுதப்பட்ட பேட்ஜ்கள் வழங்கப்படும். வாக்காளர்களாகச் சேருவதில் பலருக்கும் ஆர்வமின்மை ஏற்பட்டதால், இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

    இந்த ஆண்டு, தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள்,    "தேர்தல்களை, உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்கதாக மாற்றுதல்” (Making Elections Inclusive, Accessible and Participative) என்பதே.

    தேர்தல்களின் போது வாக்காளர்கள் தீவிரமாக பங்கேற்பதை எளிதாக்குவதற்கும், முழுமையான செயல்முறையை சிரமமின்றி மற்றும் அனைத்து வகை வாக்காளர்களுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக மாற்றுவதற்கும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துகிறது.

    நாட்டில் அரசியல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி நாடு முழுவதும் 8.5 முதல் 10 லட்சம் வாக்குச் சாவடிகளில் 18 வயதை எட்டும் அனைத்து தகுதியான வாக்காளர்களையும் அரசு அடையாளம் காணவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய வாக்காளர்கள் தங்கள் தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை ஜனவரி 25ஆம் தேதி பெறுவார்கள்.

    நாட்டை ஆளுகின்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும், அதிகாரமளிக்கும் முயற்சியை மேலும் வலுப்படுத்த, இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் பெருமை உணர்வைத் தூண்டுவதற்காக,  `No voter to be left behind’ என்ற முழக்கம் உருவாக்கப்பட்டது.

    மக்கள், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தவும், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்யவும், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதில் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் இருக்க குடிமக்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களை அரசாங்கம் இருகரம்கூப்பி  வரவேற்கிறது. 


    வினாடி வினாக்கள், விவாதங்கள், மாதிரி வாக்கெடுப்புகளை (quizzes, debates, mock polls) நடத்துவதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நாளை அனுசரிக்க ஊக்குவிக்கப்படுகின்றன.

    இதனால் தகுதியுடைய மாணவர்கள்/மாணவர்களின் பெற்றோர்கள் வாக்களிக்க ஒரு புரிதல் ஏற்படும். இந்த முயற்சியை இன்னும் அதிகரிக்கும் பொருட்டு, இந்திய அரசு புதுமைகளுக்கான தேசிய விருது (National Award for innovation), என்ற ஒன்றை தேர்தல் எந்திரங்களால் தேர்தல் நடைமுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கிறது.

    சமூக ஊடகங்களில் தேசிய வாக்காளர் 
விழிப்புணர்வுப் 
போட்டிகள்

    'எனது வாக்கு எனது எதிர்காலம்- ஒரு வாக்கின் சக்தி' 2022


     சட்டமன்றத் தேர்தல்களில் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தும் வகையில் தொடங்கப்படும். பாடல், ஸ்லோகன், வினாடி வினா, வீடியோ மேக்கிங் மற்றும் போஸ்டர் டிசைன், போட்டிகள் அனைவருக்குமானவை. வெற்றியாளர்களுக்கு உற்சாகமூட்டும் பணப் பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்படும்.

உறுதிமொழி



24 ஜனவரி, 2022

தேசிய பெண்குழந்தைகள் தினம்

     ஜனவரி 24 பெண் குழந்தைகள் தினம், கடந்த 2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளுக்கு நேரும் பிரச்னைகளைத் தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்யவும், சமூகத்தில் அவர்களுக்கான சம உரிமையை அளிக்கவுமே தேசிய பெண் குழந்தைகள் நாள் கொண்டு வரப்பட்டது.ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கி, பெருமை சேர்க்கும் பெண் குழந்தைகளின் சாதனைகளை போற்றும் விதமாகவும் இந்த தினம் அமைகிறது.

பெண்குழந்தைகளின் பாதுகாப்புக்காக

    குழந்தை திருமணத் தடை சட்டம், 2006 

     இந்த சட்டம் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து பெண் குழந்தைகளின் கல்விக்கு உறுதியளிக்கிறது. இந்தச் சட்டத்தின்படி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மட்டுமல்லாது இதற்குத் துணை நிற்கும் உறவினர்கள், நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் தண்டனை அளிக்கப்படும். இச்சட்டம் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 1 லட்சம் வரை அபராதமும் விதிப்பதற்கு வழிவகை செய்கிறது.

மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம், 1971 

    ந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்கிறது இந்தச் சட்டம். அதாவது கருவில் இருக்கும் போதே குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து, பெண்ணாக இருப்பின் கருக்கலைப்புச் செய்யும் போக்கு அதிகரித்த நிலையில், கருக்கலைப்புச் செய்வதே குற்றம் எனக் கூறி இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. அதேபோல் கர்ப்பிணியின் குழந்தைப் பிறப்பில் சிக்கல்கள் இருந்தால் மட்டுமே அதுவும் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் ஒப்புதலோடுதான் கருக்கலைப்புச் செய்ய வேண்டும். இல்லையெனில் அது சட்டத்திற்கு எதிரானது. அவ்வாறு செய்பவர்கள்,தண்டனைக்குரியவர்களாகக் கருதப்படுவார்கள்.

பெண் குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம், 2009 

     இது குழந்தைகளுக்கான பொதுவான சட்டம் என்றாலும்  பெண் குழந்தைகளின் கல்விக்கும் உறுதியளிப்பது பெரும் பயனளிக்கிறது. இந்தச் சட்டம் 1 - 8 வகுப்பு வரை குழந்தைகளின் கல்வி கட்டாயமாக்கியுள்ளது. இதற்குத் தடையாக இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனைக்குரியவர்கள்.

பெண் குழந்தைகளைப் பாலியல் தொழிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 

     18 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி அல்லது கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதேபோல் பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகளை விற்பதும், வாங்குவதும் குற்றமாகும். அப்படி செய்தால்  IPC பிரிவு 372 மற்றும் 373 இன் படி 10 வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    சட்டப் பிரிவு 363-A இன் படி 10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தையைக் கடத்தினால் அவர்களுக்கு ஜாமினில் வெளிவராதபடி கடுமையான தண்டனை வழங்கப்படும்.

    18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப மரண தண்டனை வரை விதிக்கப்படும் சட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள்

சுகன்யா சம்ரித்தி: மத்திய அரசு பெண் குழந்தைகளின் சேமிப்புத் திட்டமாக ’சுகன்யா சம்ரித்தி’ என்ற நலத்திட்டத்தைக் கொண்டு வந்தது. இது பெண் குழந்தை பிறந்து 10 வயது வரை அவர்களின் பெயரில் மாதம் 1000 ரூபாய் பெற்றோர்கள் சேமிப்பாக வைக்க வேண்டும். 10 வயதுக்குப் பின் அந்த பெண் குழந்தையே தானாக வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 18 வயதில் இந்த சேமிப்பு முடிவடையும். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கு அல்லது திருமணத்திற்கு உதவுவதற்கான கொண்டுவரப்பட்டது.

விளக்கமாக அறிய: செல்வமகள் சேமிப்புத்திட்டம்

    பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்: அதாவது பெண் குழந்தைகளைக் காப்போம் கற்பிப்போம் என்ற நலத்திட்டமும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இது குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதித்தை அதிகரித்து, அவர்களுக்கு அதிகாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அதோடு இயல்பாக வாழ்வதற்காக உத்திரவாதம் அளிக்கவும் , அவர்களுக்குக் கல்வியை உறுதி செய்யவுமே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை: இடைநிலைக் கல்வி பயிலும் சிறுமிகளுக்கான தேசிய ஊக்கத் தொகை திட்டம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை அளிக்கிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தால் அவர்களின் பெயரில் 3000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அவர்கள் 10 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றபின் அந்த பணத்தை எடுத்து உயர்நிலைக் கல்விக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியில்லையென்றால் 18 வயது பூர்த்தி அடைந்தபின் எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல் தமிழக அரசும் பெண் குழந்தைகளுக்கான சில திட்டங்களை வகுத்துள்ளது.

    அதில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: இத்திட்டம் பெண்குழந்தைகளுக்கு உதவித் தொகை அளிக்கிறது. 20 வயது முடியும் போது வட்டியுடன் முதிர்வுத் தொகையாக அளிக்கிறது.

    குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை என்றால் மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் 20  ஆண்டுகள் முதலீடு செய்து அதன் பிறகு 50,000 ரூபாய் அளிக்கிறது. அதேபோல் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் 25,000 ரூபாய் பணம் செலுத்தப்படுகிறது. மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தாலோ, தத்து எடுத்தாலோ இந்த திட்டம் செல்லாது.

23 ஜனவரி, 2022

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்

 “ரத்தம் கொடுங்கள் நான் சுதந்திரம் தருகிறேன்” 


     பார்வைக் குறைபாடு என்று ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அந்த இளைஞர், பின்பு ஒரு ராணுவத்தையே தலைமையேற்று நடத்தினார் என்பது, தங்களது முயற்சிகளில் உள்ளம் சோர்ந்த இளைஞர்களுக்கெல்லாம் உற்சாகமும் ஊக்கமும் தரும் அனுபவப் பாடம். 

    ஓர் ஆன்மீகவாதி, சிறந்த தலைவர், தன்னார்வலர், தேசபக்தர், தனி ராணுவத்தைக் கட்டமைத்தவர், உலகத் தலைவர்களை நேர்கொண்டவர், மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் மதிக்கும் பண்பாளர் என,ஒரு சிறந்த தலைவருக்கு இருக்கவேண்டிய அத்தனை குணாதிசயங்களையும் ஒருங்கே பெற்றவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ். 

     நேதாஜி 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கோதாலியா கிராமத்தில், வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஜானகிநாதர், தாய் பிரபாவதி தேவி. தந்தை கட்டாக் நகரில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தார். கட்டாக்கிலுள்ள ஐரோப்பியப் பள்ளியில் படித்த சுபாஷ், பின்னர் கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். 

     சிறுவயதில் தாயிடம் துர்க்காதேவி புராணம் கேட்டு வந்ததால் அவர் கடவுள் பக்தியோடு, எளிய வாழ்க்கை முறையை கைக் கொண்டார். பகட்டான உடையுடுத்துவதில்லை. அடுத்தவர் துயர் கண்டு வருந்துவார் அடுத்தவர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தயங்கமாட்டார். 

    இராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் படித்ததில் அவருக்கு ஆன்மிக நாட்டம் ஏற்பட்டது.1919 இல் எம்.ஏ பட்டம் பெற்றவர் தந்தையின் வற்புறுத்தலுக்கிணங்கி இங்கிலாந்து சென்றார். தந்தை விரும்பியபடி ஐ.சி.எஸ் (Indian Civil Service) தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால்,அப்பணியை ஏற்றால், இந்தியர்களுக்கு எதிராக, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டியிருக்கும் என்பதால் ஐ.சி.எஸ் அதிகாரியாய் பணியாற்ற மறுத்து விட்டார்

    அவர் இந்தியா திரும்பியதும், சித்தரஞ்சன் தாஸுடன் இணைந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டார். சித்தரஞ்சன் தாஸைத் தனது அர்சியல் குருவாக ஏற்றுக்கொண்டார். 1922 இல் இங்கிலாந்து இளவரசர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது நாடெங்கும் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன. வங்காளத்தில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கடையடைப்பு நடத்திய நேதாஜி கைதானார். ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

     1922 இல் ‘இளைஞர் கட்சி’ என்றோர் அமைப்பை ஏற்படுத்தினார் நேதாஜி. இளைஞர்களின் ஒத்துழைப்போடு 1924 இல் கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் வென்று தலைவரானார். அவருடைய பலம் நாளுக்கு நாள் பெருகவும், ஆங்கிலேய அரசு அவரை 1924 அக்டோபர் மாதத்தில் கைது செய்து சிறையிலடைத்தது. அலிப்பூர் சிறை, பர்ஹாம்பூர் சிறை என்று மாற்றிக் கொண்டே போய் பர்மாவிலுள்ள மாண்டலே சிறையில் அடைத்து வைத்தது.

     சிறைவாசத்தில் அவருடைய உடல் நலம் சீர்குலைந்தது. நேதாஜியை விடுதலை செய்யும்படி கோரி மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். அவரது உடல் நிலை மோசம் அடைவதைக் கண்ட அரசு அவரை விடுவித்தது. காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகப் போரை அறிவித்த போது, போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே நேதாஜி கைது செய்யப்பட்டார். பின்பு அரசுடன் காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 

     1931 ஜனவரி 25 ஆம் நாள் நேதாஜி விடுதலை செய்யப்பட்டார். உடல் நலத்தைக் கருதி சுவிட்சர்லாந்து சென்றவர், அங்கிருந்து ரோம், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். முசோலினி, டிவேலரா (அயர்லாந்து) போன்ற தலைவர்களைச் சந்தித்தார். இந்தியா திரும்பியவரைக் கைது செய்த அரசு ஒன்றரை ஆண்டு சிறை வைத்தது. 

     மாகாண சுயாட்சி சட்டம் பற்றிய விவாதத்தில் காந்திஜியுடன் நேதாஜிக்குக் கருத்து மோதல் ஏற்பட்டது. 1939 இல் நேதாஜியே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருதரப்பினர் ஒத்துழைக்க மறுத்தனர். இதனால், நேதாஜி பதவியை உதறியதோடு, கட்சியைவிட்டு வெளியேறினார். 1940 இல் ‘பார்வர்டு பிளாக் என்று ஒரு புதிய கட்சியைத் துவக்கினார். 

    தம்முடைய தீவிரப் போக்கின் காரணமாய் நேதாஜி மீண்டும் சிறை செல்ல நேர்ந்தது. சிறையில் இருந்தபோது அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டிருந்தார். காந்தியின் அகிம்சைப் போராட்ட முறைக்கு மாறான ஒரு வழிமுறையை சுபாஷ் சந்திரபோஸ் தேர்ந்துகொண்டார். இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதில் இருவருக்கும் இடையே எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட வழிமுறைகள் மட்டுமே வேறு வேறு. 

    விடுதலை பெற்ற இந்தியாவில் வெவ்வேறு சமய நம்பிக்கைளைச் சேர்ந்தவர்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றே இருவருமே மனதார விரும்பினார். அது வெளிநாடுகளின் ஆதரவோடு ஆங்கிலேயரை விரட்டியடிப்பது என்ற தீர்மானம். ஐந்து மாத சிறை வாசத்துக்குப்பின் வீடு திரும்பினார். அவருடைய வீட்டைச் சுற்றிலும் காவல் படையின் ரகசியக் கண்காணிப்பு இருந்தது.1941 ஜனவரி 14. அன்று நேதாஜி ஒரு முஸ்லீம் சந்நியாசி போல் வேடமிட்டு, வீட்டிலிருந்து வெளியேறினார். 

    பீகார் சென்று அங்கிருந்து, பெஷாவர், காபூல், மாஸ்கோ, இத்தாலி என்று பயணித்து ஜெர்மனியை அடைந்தார். பல இடையூறுகளைக் கடந்து 73 நாட்கள் பயணித்திருந்தார் அவர். ஹிட்லருடன் நடந்த சந்திப்பு பலனளிப்பதாயிருந்தது. 

    ஜெர்மனியில் ஹிட்லரை சுபாஷ் அவர்கள் சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், சுபாஷின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது. இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட, அதை எதிர்த்துப் பேசிய போஸ், அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார்.

     “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, “எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்”

    என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார் சுபாஷ். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முன் முதல்முறையாக அப்படி ஒருவர் பேச, சுபாஷின் திராணியை நினைத்து வியந்தனர்

    ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.அப்போது பிரிட்டிஷ் அரசுக்காகப் போரிட்ட இந்தியப் படைவீரர்கள் ஜெர்மனியிடம் தோற்று, ஜெர்மனியிடம் யுத்தக் கைதிகளாயிருந்தனர். நேதாஜி அவர்களைக் கொண்டு ‘இந்திய சுதந்திரச் சங்கம்’ என்ற அமைப்பையும், அதன்கீழ் ஒரு தேசிய ராணுவத்தையும் உருவாக்கினார். 

    விவேகானந்தர், தாகூர், அரவிந்தர் போலவே நேதாஜியும் தமிழகத்தின் மனம்கவர்ந்த வங்க ஆளுமை. சென்னைச் சிறையில் சுபாஷ் அடைக்கப்பட்டது, இந்திய தேசிய ராணுவம் உருவாவதற்கு ஓர் வலுவான அடித்தளத்தை உருவாக்கியது. 


    இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயப் படைக்கு எதிரான நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அந்நாடுகளிடம் உதவி கேட்டார். ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது போகவே, ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று, ராணுவ ஜெனரல் டோஜோவைச் சந்தித்து உதவி கேட்டார்.
 

    ஆங்கிலேய அரசுக்கு எதிராக உருவாகி, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்குப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது.


    1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசுப் பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராக, தேசியக் கொடியை ஏற்றினார். அதை, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.

      ஹிட்லரின் உதவியாளர்கள். இந்தியாவிலுள்ள ஆங்கிலேய அரசுடன் போரிட அவர் தருணம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் போர் மூண்டுவிட்டது. அதனால் அவருடைய திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. அங்கிருந்து அவர் 1914 இல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் இந்தோ-பர்மா எல்லை வழியே இம்பால் (நாகாலாந்து) வரை முன்னேறியது. ஆனால் பிரிட்டீஷ் அரசு, அந்தப் போர் முயற்சியை முறியடித்து அவர்களைச் சிறை பிடித்தது. 

     நேதாஜி ஜப்பானிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காகச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் நேதாஜி மரணமடைந்ததாக, ஜப்பானிய அரசு அறிவித்தது. இந்தியாவுக்கு வெளியிலேயே, ஓர் இந்திய அரசாங்கம் அமைத்து, படை நடத்திய தீரர் அவர். இந்த மண்ணின் வீரம், அவரைப் போன்றவர்களால்தான், உலக அளவில் உன்னதம் பெற்றது. 

     இன்று, பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் சொல்லிவரும், ‘ஜெய் ஹிந்த்’ சுலோகத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் நேதாஜி தான். 

    இந்த வார்த்தையைச் சொல்லும்போதெல்லாம் நமக்குள் எழும் அந்த தேசப்பற்றுதான், அந்த மாபெரும் மனிதனுக்கு நமது காணிக்கை.

     நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களது பிறந்த  நாள்  “பராக்கிரம தினமாக”க் கொண்டாடப்படுகிறது

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece