ஜனவரி 24 பெண் குழந்தைகள் தினம், கடந்த 2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளுக்கு நேரும் பிரச்னைகளைத் தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்யவும், சமூகத்தில் அவர்களுக்கான சம உரிமையை அளிக்கவுமே தேசிய பெண் குழந்தைகள் நாள் கொண்டு வரப்பட்டது.ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கி, பெருமை சேர்க்கும் பெண் குழந்தைகளின் சாதனைகளை போற்றும் விதமாகவும் இந்த தினம் அமைகிறது.
பெண்குழந்தைகளின் பாதுகாப்புக்காக
குழந்தை திருமணத் தடை சட்டம், 2006
இந்த சட்டம் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து பெண் குழந்தைகளின் கல்விக்கு உறுதியளிக்கிறது. இந்தச் சட்டத்தின்படி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மட்டுமல்லாது இதற்குத் துணை நிற்கும் உறவினர்கள், நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் தண்டனை அளிக்கப்படும். இச்சட்டம் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 1 லட்சம் வரை அபராதமும் விதிப்பதற்கு வழிவகை செய்கிறது.
மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம், 1971
இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்கிறது இந்தச் சட்டம். அதாவது கருவில் இருக்கும் போதே குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து, பெண்ணாக இருப்பின் கருக்கலைப்புச் செய்யும் போக்கு அதிகரித்த நிலையில், கருக்கலைப்புச் செய்வதே குற்றம் எனக் கூறி இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. அதேபோல் கர்ப்பிணியின் குழந்தைப் பிறப்பில் சிக்கல்கள் இருந்தால் மட்டுமே அதுவும் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் ஒப்புதலோடுதான் கருக்கலைப்புச் செய்ய வேண்டும். இல்லையெனில் அது சட்டத்திற்கு எதிரானது. அவ்வாறு செய்பவர்கள்,தண்டனைக்குரியவர்களாகக் கருதப்படுவார்கள்.
பெண் குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம், 2009
இது குழந்தைகளுக்கான பொதுவான சட்டம் என்றாலும் பெண் குழந்தைகளின் கல்விக்கும் உறுதியளிப்பது பெரும் பயனளிக்கிறது. இந்தச் சட்டம் 1 - 8 வகுப்பு வரை குழந்தைகளின் கல்வி கட்டாயமாக்கியுள்ளது. இதற்குத் தடையாக இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனைக்குரியவர்கள்.
பெண் குழந்தைகளைப் பாலியல் தொழிலிருந்து பாதுகாக்கும் சட்டம்
18 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி அல்லது கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதேபோல் பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகளை விற்பதும், வாங்குவதும் குற்றமாகும். அப்படி செய்தால் IPC பிரிவு 372 மற்றும் 373 இன் படி 10 வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
சட்டப் பிரிவு 363-A இன் படி 10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தையைக் கடத்தினால் அவர்களுக்கு ஜாமினில் வெளிவராதபடி கடுமையான தண்டனை வழங்கப்படும்.
18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப மரண தண்டனை வரை விதிக்கப்படும் சட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள்
சுகன்யா சம்ரித்தி: மத்திய அரசு பெண் குழந்தைகளின் சேமிப்புத் திட்டமாக ’சுகன்யா சம்ரித்தி’ என்ற நலத்திட்டத்தைக் கொண்டு வந்தது. இது பெண் குழந்தை பிறந்து 10 வயது வரை அவர்களின் பெயரில் மாதம் 1000 ரூபாய் பெற்றோர்கள் சேமிப்பாக வைக்க வேண்டும். 10 வயதுக்குப் பின் அந்த பெண் குழந்தையே தானாக வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 18 வயதில் இந்த சேமிப்பு முடிவடையும். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கு அல்லது திருமணத்திற்கு உதவுவதற்கான கொண்டுவரப்பட்டது.
விளக்கமாக அறிய: செல்வமகள் சேமிப்புத்திட்டம்
பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்: அதாவது பெண் குழந்தைகளைக் காப்போம் கற்பிப்போம் என்ற நலத்திட்டமும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இது குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதித்தை அதிகரித்து, அவர்களுக்கு அதிகாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அதோடு இயல்பாக வாழ்வதற்காக உத்திரவாதம் அளிக்கவும் , அவர்களுக்குக் கல்வியை உறுதி செய்யவுமே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை: இடைநிலைக் கல்வி பயிலும் சிறுமிகளுக்கான தேசிய ஊக்கத் தொகை திட்டம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை அளிக்கிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தால் அவர்களின் பெயரில் 3000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அவர்கள் 10 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றபின் அந்த பணத்தை எடுத்து உயர்நிலைக் கல்விக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியில்லையென்றால் 18 வயது பூர்த்தி அடைந்தபின் எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல் தமிழக அரசும் பெண் குழந்தைகளுக்கான சில திட்டங்களை வகுத்துள்ளது.
அதில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: இத்திட்டம் பெண்குழந்தைகளுக்கு உதவித் தொகை அளிக்கிறது. 20 வயது முடியும் போது வட்டியுடன் முதிர்வுத் தொகையாக அளிக்கிறது.
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை என்றால் மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் 20 ஆண்டுகள் முதலீடு செய்து அதன் பிறகு 50,000 ரூபாய் அளிக்கிறது. அதேபோல் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் 25,000 ரூபாய் பணம் செலுத்தப்படுகிறது. மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தாலோ, தத்து எடுத்தாலோ இந்த திட்டம் செல்லாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக