15 டிசம்பர், 2021

சர்வதேச தேயிலை தினம்

          சர்வதேச தேயிலை தினம் ஒவ்வோராண்டும் டிசம்பர் 15 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை  நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் தேதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

     2004 மற்றும் 2005ல் முறையே இந்தியாவின் மும்பை மற்றும் பிரேசிலின் போர்டோ அலெக்ரி போன்ற இடங்களில் நடைபெற்ற உலகச் சமூக மன்றத்தில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களுக்கிடையேயான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 15 ஆம் தேதியைச் சர்வதேச தேயிலை தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    முதல்முறையாக 2005 டிசம்பர் 15ஆம் தேதி புதுடெல்லியில் இத்தினம் கொண்டாடப்பட்டது. தேயிலை உற்பத்தியாளர்கள், தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் போன்றோரின் மீது உலகத் தேயிலை வர்த்தகம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும், தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலையைப் பயன்படுத்துவோர் எதிர்நோக்கும் பிரச்னைகளை, அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் கொண்டு செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

    உலகத் தேயிலை உற்பத்தியில், நம் நாடு, 2 ஆம் இடம் பெறுகிறது.தென் மாநிலங்களில், தமிழகம், 70 சதவீதம், கேரளா, 26 சதவீதம், கர்நாடகா, 4 சதவீதம் அளவுக்கு தேயிலையை உற்பத்தி செய்கின்றன.

    தேநீர் உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் பானமாக உள்ளது. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அருந்தப்படுவது தேநீர் என கூறப்படுகிறது. தேயிலைச் செடியில் உள்ள தளிர் இலைகளில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. சூடான நீரில் தேயிலைப் பொடியைக் கலந்து தேனீராக அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர்.

    தேயிலையைச் சர்வ நோய் நிவாரண பானமாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தமையால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன.

   தேயிலை வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா, திபெத் ஆகியவை அடங்கிய பகுதிகளில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து உலகின் 52 நாடுகளுக்கு, தேயிலை அறிமுகமானது. 

    ஆனால், சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இங்குதான் முதன்முதலில் தேயிலையை நீரில் ஊறவைத்து குடிப்பது சுவையானது என மனிதன் அறிந்து கொண்டான்.

   தேநீர்களுள் பலவகைகள் இருந்தாலும், அதை அளவுடன் நுகர்வதே நம் உடலுக்கு நன்மைபயக்கும் என்பதை மனத்துள் கொள்வோம்.

14 டிசம்பர், 2021

சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினம்

 

       ஆண்டு தோறும் டிசம்பர் 14 ஆம் தேதி சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

    நாம் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும், நம் அன்றாடப் பணிகளுக்கு அவசியமான ஆற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆற்றல்களை வீணாக்கி வருகிறோம். தற்போது, நம்மிடம் இருக்கும் இந்த ஆற்றல்கள் எல்லாம், 100 அல்லது 150 வருடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    ஆற்றல் பாதுகாப்புக் குறித்து கட்டுரைகள் எழுதுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல்,போட்டிகள் நடத்துதல் போன்றவற்றின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கியக் குறிக்கோளாகும்.

      தற்போது நிலக்கரி, பெட்ரோல், அணு, மின்சாரம் ஆகியவை முக்கிய எரிபொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எண்ணெய் வளம் அடுத்த 45 ஆண்டுகளுக்கும், எரிவாயு அடுத்த 65 ஆண்டுகளுக்கும், நிலக்கரி அடுத்த 200 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எரிசக்தியைச் சேமிக்கும் கட்டிடங்களைக் கட்டும்போது அவற்றின் எரிசக்திப் பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களைத் தொழிட்நுட்ப வல்லுநர்கள் கண்காணிப்பதற்கு வசதியான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

     தொடக்கத்தில் சற்று அதிக முதலீடு செய்ய வேண்டி இருப்பது இத்தகைய கட்டிடங்களை அமைப்பதில் ஒரு பெரும் தடையாக இருக்கலாம். ஆனால் தொடக்கத்தில் இதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருந்தாலும் அதனால் ஏற்படும் மின்சார சிக்கனம், அதன் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொடக்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டை விட பெருமளவு லாபம் கிடைக்கும். 

      எனவே எரிசக்தி சேமிப்பு கட்டிடங்களை கட்டுவதற்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற தயக்கத்தை போக்குவதற்கான முயற்சியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.

    மின்சாரத்தைப் போலவே நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் பயணமும் அதற்கான வாகனங்களும். இதற்காக வாகன எரிபொருளுக்கு நாம் பெருமளவு செலவு செய்கிறோம். அத்துடன் இந்த எரிபொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கேடும், உடல்நலக் கோளாறுகளும் அதிகரிக்கின்றன.

   பெட்ரோலும் டீசலும் பெட்ரோலியம் எனும் கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் அல்ல. இன்னும் 30-40 ஆண்டுகளில் தீர்ந்து போகக்கூடியது.

     இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலும் டீசலும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால், காலாகாலத்துக்கும் பெட்ரோல், டீசலைச் சார்ந்து நாம் இயங்க முடியாது.

    எரிபொருளைக் குறைவாகப் பயன்படுத்துவதால் இன்னும் அதிக ஆண்டுகளுக்கு அது தீர்ந்துபோகாமல் பார்த்துக்கொள்ள முடியும். பெட்ரோல், டீசலைச் சேமிப்பதன் மூலம் எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றையும் குறைத்துப் பணத்தையும் சேமிக்க முடியும்.

     பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக எரிவாயு மூலம் வாகனத்தை மாற்றி இயக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம். தனியாகக் காரில் செல்வதைத் தவிருங்கள். அலுவலகம், பள்ளி போன்ற இடங்களுக்கு வீட்டுக்கு அருகில் இருப்பவர்களுடன் வாகனத்தைப் பகிர்ந்துகொள்வது போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் செலவையும் குறைக்கும்.

     சைக்கிள், மின்ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து முறைகளை அதிகம் பயன்படுத்த முயற்சியுங்கள்.
எப்போதும் வாகனத்தை நிழல் பகுதியில் நிறுத்துங்கள். வெயில் நேரடியாகப் படும் இடத்தில் நிறுத்துவது எரிபொருளை அதிகம் ஆவியாக வைக்கலாம்.இந்த யோசனைகளைத் தொடர்ந்து நினைவில் வைத்துக் கடைப்பிடித்துவந்தால், எரிபொருள் செலவை நிச்சயம் குறைக்கலாம்.

     எனவே, நமது வருங்காலச் சந்ததியினருக்கு எரிபொருள் ஆற்றலை கொஞ்சமாவது விட்டு வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவுநாள்

 விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவுநாள் இன்று 

 * தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் (1879) பிறந்தார். இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சுப்பிரமணியனுக்கு நண்பரானார். இருவரும் இணைந்து பல நூல்களைக் கற்றனர். பாடல்கள் இயற்றினர். 

 * எட்டையபுரம் அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு பாப்புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர் . ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார் . அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி , பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். இருவரும் எழுதுகோல் பிடித்து உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல் தந்தனர். அதனைப் படித்துப் பார்த்த யாழ்ப்பாணப் புலவர் மெய்சிலிர்த்து “இதுவன்றோ , அருமைப்பாடல் ” எனக்கூறி இருவருக்கும் “பாரதி” பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.அன்றுமுதல் சோமசுந்தரம் “சோமசுந்தர பாரதி” என்றும் அழைக்கப்பட்டார் . 

 * எட்டயபுரத்திலும், நெல்லை சிஎம்எஸ் கல்லூரி பள்ளியிலும் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பையும் முடித்தார். 

 * வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டே, முதுநிலை சட்டம் படித்து பட்டம் பெற்றார். சிறந்த வழக்கறிஞர் என்று புகழ்பெற்றார். ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர் அதை விட்டுவிட்டு, வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் அவரது சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். 

 *வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்தை விட்டு நீங்கினால் பெரும் பதவி கிடைக்குமென்று ஆசை வார்த்தைகளை ஆங்கிலேயர் கூறி வந்தனர் . அவற்றுக்கு சோமசுந்தர பாரதியார் மயங்கிட மறுத்தார். மாறாக, ஆங்கிலேயர் வ.உ.சி. , சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது தொடுத்த இராசதுரோக வழக்குகளை எதிர் கொண்டு வாதாடினார். 

 * ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். நெல்லை, மதுரையில் காங்கிரஸ் கட்சி மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தினார். 

 * ‘என்னிடம் 2 சரக்கு கப்பலோடு, மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். 

 * காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார். தன் குடும்பத்தினரையும் விடுதலை இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு நன்கொடையாக, குழந்தைகளின் நகைகளைக் கழற்றி காந்தியிடம் அளிக்கச் செய்தார். இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

 * அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்க் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ உட்பட பல நூல்களையும், 5 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கி யங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு, மொழி பெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். 

 * தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதினார். ‘நான் கண்ட சுப்பிரமணிய பாரதி’ என்ற நூலை எழுதினார். மதுரை அடுத்த உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தொடக்கப்பள்ளியை நிறுவினார்.

 * இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டுப் புலவர் மன்றம் ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. திருவள்ளுவர் கழகம் ‘கணக்காயர்’ என்ற பட்டத்தையும், அண்ணாமலை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது. 

 * சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவர். சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செயல்பட்டார். தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் அருந்தொண்டுகள் ஆற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80ஆவது வயதில் (1959) மறைந்தார்.

13 டிசம்பர், 2021

எழுத்தாளர், தீபம் நா.பார்த்தசாரதி நினைவுநாள்

 

      நா.பார்த்தசாரதி புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. 

    வத்தலக்குண்டு அருகே நதிக்குடி கிராமத்தில், 1932-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி பிறந்தார் அமரர் "தீபம்' நா. பார்த்தசாரதி. வாழ்ந்த காலங்கள் 55 ஆண்டுகள்தான். அதற்குள் அவர் படைத்தவை 93 புத்தகங்கள். இவற்றில் சிறுகதை, குறுநாவல் தொகுதிகளும் உண்டு. அவற்றில் இடம்பெற்றுள்ள படைப்புகளின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பார்த்தால், அவர் படைத்த மொத்தப் படைப்புகளின் கூட்டுத்தொகை பிரமிக்க வைக்கும். எழுத்தே வாழ்வாக வாழ்ந்து மறைந்தவர் நா.பா.

     ராமன், கிருஷ்ணன் போன்ற இதிகாச நாயகர்கள் மாதிரி அவர் படைத்த "குறிஞ்சிமலர்' நாவலின் கதாபாத்திரங்களான அரவிந்தனும் பூரணியும் வாசகர்கள் மனத்தில் நிலைபெற்றுவிட்டார்கள். ஏராளமான பேர் தங்கள் குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணி என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார்கள், மகிழ்கிறார்கள்.

       எல்லாவகைப் படைப்புகளையும் எழுத முடிந்த ஆற்றல் மிக்க எழுத்தாளர் அவர். அவரது குறிஞ்சிமலர், பொன்விலங்கு முதலிய சமூக நாவல்கள் எத்தனை புகழ்பெற்றனவோ, அதற்கு இணையாக அவரது மணிபல்லவம், நித்திலவல்லி, பாண்டிமாதேவி, ராணி மங்கம்மாள் ஆகிய சரித்திர நாவல்களும் புகழடைந்தன. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என அவர் தொடாத துறையே கிடையாது.

           தற்கால இலக்கியவாதிகளில், நா.பா.வின் தனித்தன்மை அவரது எழில் கொஞ்சும் நடைதான். "அவள் பார்வையே ஒரு பேச்சாக இருந்தது என்றால், அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது” என்பதுபோல வார்த்தைகளை மடக்கிப்போட்டு அழகிய வாக்கியங்களை அவரால் எழுத முடிந்தது. 

       கதாநாயகியின் பாதங்களில் மருதோன்றிச் சுவடு தென்பட்டதைப் பற்றிச் சொல்லும்போது, "சிவப்பு மையால் அடிக்கோடிட்டதுபோல'' என்று எழுதினார் அவர். அழகிய கையெழுத்தைப் பற்றி எழுதும்போது, "தேர்ந்து பழகிய கை, பூத்தொடுத்த மாதிரி'' என்று எழுதினார். இப்படி இதுவரை யாரும் சொல்லாத புத்தம் புதிய உவமைகளை எழுதும் அவரது ரசனை மிகுந்த மனம் பலரையும் கவர்ந்தது.

   “அறிவாளிகள் சுயமரியாதை காரணமாகத் தட்டத் தயங்குகிற கதவுகளை முட்டாள்கள் உடைத்துக்கொண்டு உள்ளே போய் உட்கார்வதுதான் இன்று நாட்டின் அவலம்'' என்பன போன்ற அவரது வரிகள், அன்றைய காலத்தை விடவும் இன்று இன்னும் அதிகமாகப் பொருந்துகின்றன.

     அவரது எழுத்து இளைஞர்கள் பலரையும் ஈர்க்க முக்கியக் காரணம், அவற்றில் தென்பட்ட சுயமுன்னேற்றச் சிந்தனைகள். அவரது எழுத்தைப் படித்தால் ஒரு மில்லி மீட்டராவது மனம் மேம்படும் என்று நம்பியே இளைஞர்கள் அவர் எழுத்தைக் கொண்டாடினார்கள். 

"குறிஞ்சிமலர்” தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்டபோது, அதில் அரவிந்தனாக நடித்த இன்றைய முதல்வர் மாண்புமிகு. ஸ்டாலின், அந்தத் தொடரில் நடித்ததால் தன் மனம் மென்மைப்பட்டதாகக் கூறி மகிழ்ந்தார்.

 சாகித்ய அகாதெமி பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு உள்படப் பல பரிசுகள் பெற்றவர் நா.பா.

     நா.பா., எண்ணற்றவர்களின் உள்ளம் கவர்ந்த சிறந்த பேச்சாளரும் கூட. தற்கால இலக்கியம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் தம் பேச்சாற்றலால் முத்திரை பதித்தார். அக்காலகட்டத்தில் சோ, ஜெயகாந்தன் ஆகியோரோடு நா.பா.வும் ஸ்தாபன காங்கிரஸ் மேடைகளில் பேசினார். 

       காமராஜ் எந்த அளவு நா.பா.வைக் கவர்ந்தார் என்றால், தமது "சத்தியவெள்ளம்' என்ற நாவலில் அவரை ராமராஜ் என்ற பெயரில் பாத்திரமாக ஆக்கும் அளவு. 

      பழந்தமிழைக் கசடறக் கற்றுப் "பண்டிதர்' பட்டம் பெற்றவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட விருதுகளில் ஒன்று "கம்பராமாயணத் தத்துவக் கடல்” என்பது. கல்வி கற்க வயதே இல்லை என்ற கருத்துடைய நா.பா.,

       இறுதி நாள் வரை கல்வி கற்றார். தம் 45 வயதுக்குமேல் பச்சையப்பன் கல்லூரியில் மாலை வகுப்பில் சேர்ந்து தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றார். "பழந்தமிழர் கட்டிடக்கலையும் நகரமைப்பும்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

      டாக்டர் தி.முத்து கண்ணப்பர்தான் அவரின் நெறியாளர். ஆய்வேட்டைச் சமர்ப்பித்தும், நேர்காணலில் கலந்துகொள்ள வாய்ப்பின்றி, அது என்று நிகழவிருந்ததோ, அன்று காலமானார். முனைவர் பட்டம் பெறும் முன்பே அமரர் பட்டம் பெறும்படி நேர்ந்தது அவரது துரதிருஷ்டம்.

12 டிசம்பர், 2021

உலக சுகாதாரப் பாதுகாப்பு தினம்

      


     உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பதன் பொருள், பொருளாதாரச் சிரமம் இன்றி ஒவ்வொருவரும் தரமான சுகாதாரச் சேவைகளைப் பெறுவது என்பதே 

    உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப் படுகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலிவான தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்க வேண்டும் என நாடுகளுக்கு முதன் முதலில் அறைகூவல் விடுத்த ஐக்கிய நாடுகள் அவையில், ஒருமனதான தீர்மானம் நிறைவேறிய நாள் இதுவே.

    உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, 1948-ஆம் ஆண்டின் உலக சுகாதார நிறுவன அமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. 

    அது, சுகாதாரம் அனைவரின் அடைப்படை உரிமை என்றும், அனைவருக்கும் அடையக்கூடிய அதிக அளவை அதில் அடைய வேண்டும் என்றும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

    ஐக்கிய நாடுகளால் தழுவப்பட்ட, புதிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது.

    உலகின் எப்பகுதியிலும் இருக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் வருமான அளவு,  சமூக நிலை, பால், சாதி அல்லது மத வேறுபாடின்றி சுகாதாரப் பராமரிப்பைப் பெற சமமான வாய்ப்பை உறுதி செய்வதே உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பதற்குப் பொருளாகும். 

    மலிவான, பொறுப்பான, தகுந்த சுகாதாரச் சேவையை உறுதியான தரத்தோடு அளிப்பதே அதன் நோக்கமாகும். அதில் தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் புனர்வாழ்க்கைப் பரமரிப்புகள் அடங்கியுள்ளன.

   உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, உலக அளவில் ஏறத்தாழ 100 கோடி மக்களுக்குத் தங்களுக்குத் தேவைப்படும் சுகாதாரச் சேவைகளைப் பெற முடியவில்லை. 

     மருத்துவச் செலவுகளினால் ஆண்டுதோறும் சுமார் 1.50 கோடி மக்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உட்படுகின்றனர், மற்றும்  1 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுகின்றனர்.  

உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு ஏன்?

     இன, மத, அரசியல் நம்பிக்கை, சமூகப் பொருளியல் நிலை ஆகிய எந்த ஒரு வேறுபாடும் இன்றி உடல்மன ஆரோக்கியத்தை அனுபவிக்க உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள மனித உரிமை ஆகும். 

    குடும்ப ஆரோக்கியமும் நல்வாழ்க்கையும், உணவும், உடையும், உறைவிடமும், சுகாதாரப் பராமரிப்பும் அடங்கிய ஒரு தரமான வாழ்க்கையை ஒவ்வொரு மனிதரும் பெறவேண்டும்.

    வேலையின்மை, நோய், விபத்து, ஊனம், விதவைநிலை, முதுமை ஆகிய சூழ்நிலைகளைச் சமாளிக்க இவை முக்கியமானவை ஆகும். நீண்ட கால பொருளாதார மேம்பாட்டுக்குச், சிறந்த ஆரோக்கியமே அடிப்படை. 

    உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பைப் பின்பற்றும் நாடுகளுக்கு இருவித நன்மைகள் கிடைக்கின்றன: 

1. ஆரோக்கியமான சமுதாயம் 2. வலிமையான பொருளாதாரம்.

இந்தியாவில் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பை உருவாக்க வழிகாட்டிய பத்து கொள்கைகள்:

1. அனைவருக்குமானது 2. சமத்துவமானது 3.ஒதுக்கலோ பாகுபாடோ இல்லாதது 4. நியாயமான தரமான விரிவான பராமரிப்பு 5. பொருளாதாரப் பாதுகாப்பு 6. நோயாளியின் உரிமைப் பாதுகாப்பு 7. வலிமையான பொது சுகாதாரத்துக்கு வழிவகுப்பது 8. பொறுப்பானதும் வெளிப்படையானதும் 9.சமுதாயப் பங்கேற்பு 10. சுகாதாரத்தை மக்களின் கரத்தில் அளிப்பது 

உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பின் நன்மைகள்

 * பொதுமக்களின் ஆரோக்கிய மேம்பாடு

 * திறமையான, பொறுப்புள்ள, வெளிப்படையான சுகாதார அமைப்பு

 * வறுமை குறைதல்

 * அதிக உற்பத்தி

 * வேலைவாய்ப்புப் பெருகுதல்

 * பொருளாதாரப் பாதுகாப்பு

 * அதிக சமத்துவம்

11 டிசம்பர், 2021

மகாகவி பாரதி பிறந்தநாள்

 


பன்னாட்டு மலை நாள்

 

    பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.

https://www.fao.org/international-mountain-day/en/

     மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. 

     இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது

      உலகின் பல்லுயிர்ப்பெருக்கத்திற்குப் பாதிக் காரணம் மலைகளே. புவி நிலப்பரப்பில் 27% மலைகளே நிரம்பியுள்ளன. உலக மக்கள்தொகையில் 15% மக்களுக்கு மலைகளே இருப்பிடமாய் அமைந்துள்ளது.உலக மக்கள்தொகையில் பாதிப்பேர் தங்களது அன்றாடக் குடிநீர்த்தேவைக்காக மலைகளையே நம்பியுள்ளனர்.

     கடந்த 17 ஆண்டுகளில் மிக உயர்ந்த மலை உயரத்தில் உள்ள பகுதிகள் (3 500 மீட்டருக்கு மேல்) மக்கள்தொகை குறையும் போக்கை தொடர்ந்து அனுபவித்து வருகின்றன, மற்ற உயரங்களிலும் மக்கள் தொகை அதிகரித்தது. அனைத்து ஆப்பிரிக்கத் துணைப் பகுதிகளிலும், தென் அமெரிக்காவிலும், மத்திய மற்றும் மேற்கு ஆசியாவிலும், தாழ்வான பகுதிகளை விட மலைகளில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளது. 

    வளரும் நாடுகளில், 648 மில்லியன் மக்கள் (மொத்த மலை மக்கள் தொகையில் 65 சதவீதம்) கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களில் பாதி பேர் - 346 மில்லியன் - 2017 இல் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

     நமது தமிழ் இலக்கியங்களில், ஐவகை நிலங்களில் முதலிடம் வகிப்பது ,குறிஞ்சி ,என்னும் மலையும், மலை சார்ந்த இடமும் ஆகும்.வெற்பு, கிரி, அசலம், முதலான பல பெயர்களால் அழைக்கப்படும் மலைகளில் தான் ஆதிகுடிகள் வசித்தனர் என இலக்கியங்கள் கூறுகின்றன. 

   இத்தகு பெருமைகள் நிரம்பிய இயற்கை வளம் கொஞ்சும் மலைகளைக் காத்து, பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வழிவகுப்போம்.


Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece