13 பிப்ரவரி, 2022

உலக வானொலி நாள்

     


    தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திடாத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டு பிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை  இழக்கவில்லை. இப்போதும் உலக மக்கள் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது.

    வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நாவின் துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13 ஐ உலக வானொலி நாளாக 2011 இல் அறிவித்தது. 1946 இல் ஐ.நா வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13 ,உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    இன்றளவில் தொலைக்காட்சி, இணையம் என, ஊடகம் பல்வேறு புதுமைகளுக்கு உட்பட்ட போதிலும், வானொலி என்பது பெரும்பான்மையோர் பயன்படுத்தும் ஊடகங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான கிராமங்களில் மக்கள் வானொலியைப் பயன்படுத்தித்தான் அன்றாடத் தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.

உலக வானொலிநாள் 2022 - துணைக் கருப்பொருள்கள்

1. வானொலி இதழியல் மீது நம்பிக்கை 2. நம்பிக்கை மற்றும் அணுகல்  3. வானொலி நிலையங்களின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை

     பரபரப்புச் செய்திகளாகட்டும், பயனுள்ள தகவல்களாகட்டும் படிக்காத பாமரர்களுக்கும் அதனைக் கொண்டு சேர்த்ததில் வானொலியின் பங்கு அளப்பரியது. இன்று எத்தனையோ தொலைத்தொடர்பு சாதனங்களும் நிகழ்ச்சிகளும் வந்துவிட்டாலும், வானொலியில் கேட்ட , இன்று ஒரு தகவலோ, ஒலிச்சித்திரமோ தந்த அந்த உணர்வை, நிச்சயம் ஈடுசெய்ய முடியாது என்பதே அந்தக் காலத்து மக்களின் ஒரே குரல். 

    அடர்ந்த காட்டிலோ,யாருமற்ற தனிமையிலோ, மனக்கவலையிலோ, உற்சாகமற்ற வேளைகளிலோ, காத்திருக்க வேண்டிய நேரத்திலோ, உறக்கம் தவிர்க்கவோ, அறிவை வளர்க்கவோ, தெரிந்த அறிவைப் புதுப்பித்துக் கொள்ளவோ, உறங்க வைக்கவோ,மகிழ்ச்சியைக் கூட்டவோ…. இவ்வாறு வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் நம்மோடு உற்ற நண்பனாய் இருப்பது வானொலி.



செய்திகள் வாசிப்பது - சரோஜ் நாராயணசாமி

  

செய்திகள் வாசிப்பது - ஜெயாபாலாஜி

     மனதில் நின்ற செய்தி வாசிப்பாளர்கள் சிலரை நினைகூர்வோம்.சரோஜ் நாராயணசாமி, சாம்பசிவம், ஜெயாபாலாஜி…. இன்னும் பலர்.

எஸ்.பி.பி உடன் பி.ஹெச்.அப்துல் ஹமீது


நடராஜ சிவம்


    இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர்கள் - எஸ். பி. மயில்வாகனம் (இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில், திருப்பிப்பார், ஜோடி மாற்றம், இருகுரலிசை, ஒருபடப்பாட்டு போன்ற பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார்), கே. எஸ். ராஜா, பி.ஹெச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம்,நடராஜ சிவம், புவனலோஜனி 

    
ஒரு காலத்தில் வானொலி வைத்திருப்பவர் வசதியானவர் என்று கருதப்பட்டது. வானொலி வைத்திருக்க உரிமம் ( License) வைத்திருக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறோம். ஆனால் இன்று பலவிதமான ஊடகங்கள் வந்தாலும், வானொலி, அன்று தந்த மகிழ்ச்சியை இன்று பெறமுடிவதில்லை. இலங்கை வானொலியைக் கேட்க, அங்கு மின் வசதி இல்லாத போது, சைக்கிள் டைனமோ மின்சாரத்தைப் பயன்படுத்தி வானொலி கேட்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். 

    இலங்கை வானொலியில் அடிக்கடி நேரம் சொல்வார்கள். ஒரு பாடல் ஒலித்து முடிந்த பிறகும் அடுத்த பாடல் ஒலிக்கப் போகும் முன்பும் நேரம் சொல்வார்கள். இதனால் அப்போதெல்லாம் உழைக்கும் மக்கள் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. சாலையிலே நடந்தாலும் சோலையிலே இருந்தாலும் யார் வீட்டு வானொலியில் இருந்தோ நேரம் ஒலிக்கும். காற்றலையிலேயே கடிகாரம் பார்த்துக் கொள்வார்கள். கடிகாரம் உள்ளவர்கள் நேரத்தைச் சரிபார்க்கவும் இலங்கை வானொலியை நம்பியிருந்தார்கள்.

    இலங்கை வானொலியில் அனைத்து அறிவிப்பாளர்களும் அழகான தமிழில் பேசுவார்கள் .ஆங்கிலக் கலப்பின்றி அவர்கள் இயல்பாகவும் விரைவாகவும் தமிழ் பேசுவார்கள் .

    'மைக்' என்று சொல்ல மாட்டார்கள் ’ஒலிவாங்கி’ என்றுதான் சொல்வார்கள் . ’வால்யூமைக் குறைத்துப் பேசுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள் .’ஒலி அளவைக் குறையுங்கள்’ என்பார்கள்..’பெல் அடித்தது’ என்பதற்கு ’மணி ஒலித்தது’ என்பார்கள். ‘பட்டனைத் தட்டுங்கள்’ என்பதற்குப் ’பொத்தானை அழுத்துங்கள்’ என்பார்கள்.’டைம் அப்’ என்பதற்குப் பதிலாக ’உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது’ என்றுதான் சொல்வார்கள்.

    சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..
இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது.

    கே.எஸ். ராஜா "திரைவிருந்து" என்ற இலங்கையில் ஓடும் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியை நடத்துவார்.

கே.எஸ்.ராஜா

    கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா!

    "அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பானத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா!

பி.பி.சி தமிழோசை - சங்கரண்ணா

     பி.பி.சி - தமிழின்- சங்கரண்ணா, உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.

ராஜேஸ்வரி சண்முகம்

    மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பசுமை நிறைந்த வாழ்வின் சுவடுகளில் வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலும் பதியப்பட்டிருக்கும். காலையிலே இரண்டுவரிக் கவிதை குழைத்துத் தரும் பொங்கும் பூம்புனலில் இருந்து பெண்களுக்காகவே இவர் கொடுத்த பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி என்ற படைப்பைப் பால் வேறுபாடின்றி ரசித்த காலமும் நினைவுக்கு வருகின்றது. ஒருகாலத்தில் எட்டாக் கனியாக இருந்த இன்றைக்கு வானொலிப் பணி என்பது இன்று கையில் கிட்டிய பூமாலையாக வாய்த்திருக்கும் சூழலில் ஒரு வானொலி நிகழ்ச்சியை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு அளவுகோலாகத் திகழ்ந்தவர்களில் இவரும் ஒருவர். சொல்லப்போனால் வானொலித்துறையின் இலட்சணம் என்பது இவர் போன்ற அறிவிப்பாளர்களால் தான் துலங்கியது.

    இன்று ஒரு தகவல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களது பேச்சுகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பன.

    ஹாம் வானொலி, தற்போதைய சமூக வானொலிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.இன்று தனியார் பண்பலை வானொலிகள் பல வந்துவிட்டாலும் அகில இந்திய வானொலியின் சேவைகள் என்றும் தனித்து நிற்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் அகில இந்திய வானொலி செய்துவரும் சேவை ஓர் உதாரணம். இன்றும் அந்தப் பகுதிகளில் வாழும் 30 லட்சம் மக்களுக்காக 30 வெவ்வேறு பேச்சுவழக்கு மொழிகளில் தனது சேவையைச் செய்துவருகிறது.

    சரி, ‘ஆகாஷ்வாணி’ என்ற பெயர் எப்போது வைக்கப்பட்டது? 

    1938 இல் ரவீந்திரநாத் தாகூர் அகில இந்திய வானொலிக்கு அந்தப் பெயரை வைத்தார். 

    ‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும்.

    உலகின் பல்வேறு பகுதிகளிலிலும் இருந்த மக்களை ஒன்றிணைத்த ஒற்றைச் சாதனத்தின் வடிவம் இன்று மாறிப் போனாலும், அதன் நினைவுகள் என்றும் பசுமையாகவே இருக்கிறது. 

12 பிப்ரவரி, 2022

டார்வின் தினம்

       கடவுள் மனிதனை படைத்தார் என்ற நம்பிக்கை மிகுந்திருந்த காலத்தில்,  மனிதன் குரங்கிலிருந்துதான் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டவர்  "பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை" எனப் போற்றப்படும் சார்லஸ் டார்வின்.

     1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் இங்கிலாந்தின் Shrews-bury என்ற நகரில் பிறந்தார் டார்வின். சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். அவரது தாத்தாவும் தந்தையும் மருத்துவர்களாக இருந்தவர்கள். அதனால் டார்வினையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் (University of Edinburgh) பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் தந்தை.

    சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். இயற்கையின்மீது அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு. மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. 

    அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார் அவர். தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை ' Theology ’ அதாவது ‘இறையியல்’ பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்ஃப்ரிட்ஜ் (University of Cambridge) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின்.

    தமது 22 ஆவது வயதில் இறையியலில் பட்டம் பெற்றார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த John Stevens Henslow என்பவரிடம் நெருங்கிய நட்புக் கொண்டார் டார்வின். அவர் மூலமாக கேப்டன் Robert FitzRoy என்பவரின் நட்புக் கிட்டியது. 

    தென் அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் Robert FitzRoy-யின் தலைமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். 

    ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிச் சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.

    ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் Brazil, Rio de Janiro, Mondivideo, Falkland Island, Galapagos Island, Hobart, Newzealand என உலகையே ஒரு வலம் வந்தது. பல இடரும், இன்னல்களும் நிறைந்ததாக அந்தப் பயணம் அமைந்தது. ஆனால் இயற்கையின் மீது இருந்த அளவிடமுடியாத ஈடுபாட்டால் டார்வினுக்கு அது பெரும் துன்பமாகப் படவில்லை. சென்ற இடத்தையெல்லாம் கூர்ந்து ஆராய்ந்த டார்வின் அதுவரை அறியப்படாத பல விநோதமான விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தார். 

    ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லாவித உயிரினங்களையும் ஆராய்ந்தார். அவை இடத்துக்கு இடம் மாறுபட்டிருப்பதையும், சில ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதை கண்டு வியந்தார் டார்வின். உயிரினங்கள் அனைத்துமே பொதுவான மூதாதையர்களின் வழிதோன்றல்களாக இருக்குமா என்பதும் அவை தொடர்ச்சியாக சிறு சிறு மாற்றங்களைப் பெற்று தற்போதைய வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றனவா?  என்பதுதான் டார்வினின் கேள்வியாக இருந்தது.

    தான் சேகரித்த சில எலும்புகளுக்குச் சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். 

    இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1836 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார் டார்வின். ஐந்து ஆண்டுகளில், தான் சேகரித்த விபரங்களையும், ஆய்வுகளையும் வைத்து அவர் The voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். தமது 30 ஆவது வயதில் Emma Wedgwood என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து, ஏழு பிள்ளைகளுக்குத் தந்தையானார் டார்வின். திருமணத்திற்குப் பின்பும் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

    புதிய உயிரினங்கள் உருவாகும் முறை, பின்னர் அவை தங்களின் மூலத்திலிருந்து முழுமையாக மாறிவிடுவதன் காரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து 1859 ஆம் ஆண்டு உலகை வியப்பில் ஆழ்த்திய தனது புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். “The Origin of Species by Natural Selection” அதாவது ‘இயற்கையில் உயிரினங்களின் தோற்றம்’ என்ற அந்த புத்தகம் கூறிய சித்தாந்தம்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம்.

     அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும் என்று கூறினார் டார்வின். அதை ‘Natural Selection’ என்றும் “survival of the fittest” என்றும் அவர் விளக்கினார். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி, புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.

    பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. 

    ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே ,இந்தக்கருத்து, கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் சித்தாந்தம். அவர் வாழ்ந்த போதே அவரது “The Origin of Species” என்ற நூல், உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.    

டார்வின் பரிணாமக் கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது.

1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)

2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல்)

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்து, உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

    இதைத்தான் இன்றைய நாகரிக, விஞ்ஞான உலகம் -- அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமை பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை ‘நவீன டார்வினியம்’ என்கிறார்கள். இதன் விளக்கம் என்பது, ஜீவ போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது தான்.

-----------------------------------------------------------------------------------------------------------
“வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது” என்கிற இவரின் பரிணாம தத்துவத்தை சிலர் அவர் காலத்திலேயே கேலி செய்தார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------   “உலகை கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்”
-----------------------------------------------------------------------------------------------------------

    மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி, அறிவு ஒளி 1882 ஆம் ஆண்டு ஏப்ரல்19-ஆம் தேதி அடங்கிப் போனார். இங்கிலாந்தில் ‘விஞ்ஞானிகளின் கார்னர்’ என்று சொல்லப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் எபியில் (Westminster Abbey) டார்வினின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.

    கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சனையில் அவர் எப்போதும் ஈடுபட்டதே இல்லை. அப்படி ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றார். மனிதன் பிறப்பது வாழ்வதற்காக, அது தேவை! அவரின் கண்டுபிடிப்பான பரிணாம கோட்பாட்டிற்கும், மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், ஏன் மதம் இதில் மூர்க்கமாகத் தலையிடுகிறது என்பதும் தான் அவரின் உரத்தக் கேள்வியாக இருந்தது.

    கடவுள் நம்பிக்கை மனிதனின் மனதில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. அது மனிதனின் அறிவு வளர வளர உண்டானது, இதை வேறு வகையில் சொல்வதென்றால் மனிதனின் வியப்பும், இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டானது என்றார்!

    டார்வினின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு குரங்கிலிருந்துதான் நாம் தோன்றினோம் என்று நீங்கள் நம்பினாலும் சரி, இல்லை அது அபத்தமான கருத்து என்று புறம் தள்ளினாலும் சரி ஒன்றை மட்டும் நாம் மறுக்க முடியாது, வரலாற்றாலும் புறக்கணிக்க முடியாது. உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய மனுகுல அறிவை விருத்தி செய்ததில் டார்வின் என்ற தனி ஒரு மனிதன் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார் என்பதுதான் அந்த உண்மை!.

11 பிப்ரவரி, 2022

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள்

     தாமஸ் ஆல்வா எடிசன் 1847 பிப்ரவரி 11 அன்று சாமுவேல், நான்சி தம்பதியரின் மகனாக அமெரிக்காவில் மிலன் என்ற ஊரில் பிறந்தார். ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே ‘முட்டாள் பையன்’ என முத்திரை குத்தி எடிசனை வெளியேற்றிவிட்டது பள்ளி. எடிசனின் அன்னையே ஆசிரியர் என்பதால் வீட்டிலேயே செல்ல மகனுக்கு கல்வி புகட்டினார். 

    எடிசனும் ஆர்வத்துடன் அம்மாவிடம் பயின்றார். பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் நிறைய நூல்களை படிக்கத் தொடங்கினார். அவரது தந்தை, மகனின் அறிவு தாகத்தை மெச்சி உள்ளுர் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டார். எடிசன், பெறும் உற்சாகத்தோடு அறிவியல், தொழில்நுட்பம், அகரமுதலி, இலக்கியம் என தேடித்தேடிப் படித்தார். அறிவியல் நூல்களை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றில் உள்ள கருத்துக்களைச் சோதித்து அறிய விழைந்தார். 

    தனது வீட்டின் கீழ்த்தளத்தில் தட்டுமுட்டுப் பொருட்களுக்கு இடையில் சிறிய ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்துக் கொண்டார். ஆராய்ச்சி செய்வதற்குத் தேவைப்படும் வேதிப்பொருட்கள், கருவிகளை வாங்க பணம்? எடிசன் செயலில் இறங்கினார்.

     ரயிலில் பத்திரிக்கைகள், இனிப்புப் பண்டங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விற்றார். ரயிலில் பத்திரிக்கை விற்ற எடிசனுக்கு தானும் ஒரு பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ‘வீக்லி ஹெரால்டு’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். இளம் வயதில் எடிசனிடம் உருவான இந்த தொழில் முனைப்பு பிற்காலத்தில் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபராக அவரை உயர்த்தியது. 14 நிறுவனங்களுக்கு முதலாளியாக உயர்ந்தார். 

     இரயில் பெட்டியில் இன்னொரு புறத்தில் ரசாயனப் பரிசோதனைகள் செய்வதற்காக ஆராய்ச்சி கூடம் ஒன்றை நிறுவினார். பத்திரிகை வேலைகள் இல்லாத சமயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரு முறை வேதிப்பொருளொன்று சிந்தியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த ரெயில் பெட்டி தீப்பிடித்தது. ரெயிலின் நடத்துனர் கோபப்பட்டு எடிசனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதனால் அவருக்கு காது கேட்கும் திறன் குறைந்தது. 

     ஒரு முறை ரெயிலில் அடிபட இருந்த மூன்று வயது குழந்தை ஒன்றை, தாவிக் குதித்து மயிரிழையில் காப்பாற்றினார். அக்குழந்தையின் தந்தை எடிசனுக்கு வாய் வார்த்தைகளால் மட்டும் நன்றி சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பொழுது புழக்கத்திலிருந்த தந்தி எந்திரத்தை, மோர்ஸ் குறியீடு மூலம் இயக்குவது எப்படி என்று விளக்கி சொல்லிக்கொடுத்தார். 

     பங்குச்சந்தை குறியீட்டு எண்ணை அறிய உதவும் ‘ஸ்டாக் டிக்கர்' என்ற கருவியைக் கண்டு பிடித்தார். எடிசனின் முதல் கண்டுபிடிப்பு இதுதான். அதன் பிறகுஅமெரிக்காவில் நியு ஜெர்ஸி மாகாணத்தில் எடிசன் அமைத்திருந்த மென்லோ பார்க் ஆராய்ச்சிக்கூடம் படுசுறுசுறுப்பானது. 11 நாட்களுக்கு ஒரு சிறு கண்டுபிடிப்பு, ஆறு மாதத்திற்கு ஒரு பெரிய கண்டுபிடிப்பு என இலக்கு நிர்ணயித்து ஆராய்ச்சியில் ஓயாது ஈடுபட்ட எடிசன் ஏராளமான புதுக்கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்தார். 

     தந்தி அலுவலராகப் பணிபுரிந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த எடிசன், தனது இருபத்தி இரண்டாம் அகவையில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டறிந்து காப்புரிமை வாங்கினார். இதுதான் அவரின் முதல் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு. இது வாக்குகளைத் துல்லியமாய் பிரித்துக் காட்டியதால் அன்றைய அரசியல்வாதிகள் அந்த இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் பொதுமக்களுக்கு பயன்படும் பொருட்களை மட்டுமே கண்டுபிடிப்பேன் என்று உறுதிமொழி எடுத்தார். 

     இன்றைய தலைமுறையினரின் எல்லா மகிழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அடிப்படையாக எடிசனின் கண்டுபிடிப்புகள் உள்ளன. மின்விளக்கு, மின்சாரம், நான்மடித்தந்தி, போனோகிராப் எனும் கிராமபோன் இசைத்தட்டு கருவி, மின்சார ரயில், திரைப்படம், சிமெண்ட் கான்கிரீட் என எடிசன் 1368 கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். இது ஓர் உலக சாதனை. எடிசனும் ஆயிரக்கணக்கான தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், தோல்விகளை அவர் அணுகிய விதம் அசாத்தியமானது. 

    சேம மின்கலம் தயாரிப்பு ஆராய்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்களைப் பயன்படுத்திப் பார்த்து எதுவும் சரியாக வராமல், இறுதியாக கார்பன்தான் பொருத்தமானது என்று கண்டுபிடித்தார். இந்த தொடர் தோல்விகள் பற்றிக் கேட்டபோது, "நான் சேம மின்கலம் தயாரிக்கப் பயன்படாத 1000 பொருள்களைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்றார். இதுதான் எடிசனின் வெற்றி ரகசியம். 

     "ஓர் அஞ்சல் அட்டையில் அவருடைய உருவப்படத்தை மட்டும் வரைந்து அஞ்சல் பெட்டியில் போட்டால் அது நியூஜெர்சியில் மென்லோ பார்க்கில் உள்ள அவருக்கு சென்று சேர்ந்துவிடும்"- இப்படி ஒரு வேடிக்கைப் பேச்சு அந்த காலத்தில் அமெரிக்காவில் இருந்ததாம். அந்த அளவுக்கு தான் வாழ்ந்தகாலத்திலேயே மக்களால் கொண்டாடப்பட்ட மகத்தான விஞ்ஞானியாக விளங்கியவர் எடிசன்.

    தன்னுடைய 84-வது வயதில் 1931 அக்டோபர் 18-ந் தேதி நியூ ஜெர்சி மாகாணத்தில் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 21-ந் தேதி மாலை அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மின் விளக்குகளை நிறுத்தும்படி ஆணையிட்டார். அந்த ஒரு நிமிடம் நாட்டில் உள்ளோர் அனைவரும் எடிசனையும் அவரது கண்டுபிடிப்புகளையும் அமைதியாய் நினைவு கூர்ந்தனர்.

    தோல்வியையும் வெற்றியாய் மாற்றி, இருபதாம் நூற்றாண்டு மட்டுமல்ல வரும் பல நூறு நூற்றாண்டுகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற விஞ்ஞானியின் பிறந்தநாள் இன்று.

9 பிப்ரவரி, 2022

     தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர், சிறந்த இதழியலாளரான ‘சாவி’ (சா.விஸ்வநாதன்) நினைவு தினம் இன்று வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் (1916) பிறந்தார். 4 ஆம் வகுப்பு வரைதான் படித்தார். சிறிது காலம் விளம்பரப் பலகை எழுதிவந்தார். எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது கனவு. அதை நிஜமாக்கிக்கொள்ள, கடுமையாக உழைத்தார்.

    தன் ஊரில் இருந்துகொண்டே ‘விடாக்கண்டர்’ என்ற பெயரில் எழுதிவந்தார். பின்னர் ‘கல்கி’ ஆசிரியர் சதாசிவம் இவரை அழைத்து, உதவி ஆசிரியராக நியமித்தார். காந்திஜியின் நவகாளி யாத்திரைக்கு நேரில் சென்று கண்டு, அதுகுறித்து எழுதினார். தந்தை சாமா சுப்ரமணியன் மற்றும் தனது பெயரின் முதல் எழுத்துகளை இணைத்து ‘சாவி’ என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார்.

    தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய ‘மாறுவேஷத்தில் மந்திரி’, ‘சூயஸ் கால்வாயின் கதை’ உள்ளிட்ட நகைச்சுவைக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னர் ‘ஆனந்த விகடன்’ இதழ் ஆசிரியராகி, ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார். இது இவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. அந்தக் காலத்தில், பெரும்பாலான திருமண விழாக்களில், தாம்பூலப் பையில் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தையும் வைத்துக் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது.

     ‘வாஷிங்டனில் திருமணம்’ பல புதுமைகளை உள்ளடக்கியிருந்தது. அத்தியாய எண்களுக்குப் பதிலாக, தலைப்பில் உள்ள வா, ஷி, ங், ட... என்கிற எழுத்துக்களையே அத்தியான எண்களாக்கி, 11 வாரம் இந்தத் தொடர்கதையை எழுதினார் சாவி. எந்த வாரமும் இதன் எழுத்தாளர் பெயர் வெளியிடப்படவே இல்லை. 

    கடைசி அத்தியாயத்தின் இறுதியில்தான் மிகச் சிறியதாக ‘சாவி’ என்ற பெயர் காணப்பட்டது. வாராவாரம் வாசகர்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்த இந்தக் கதை, சாவியின் மாஸ்டர் பீஸ் படைப்பாகவே ஆகிவிட்டது. இது பூர்ணம் விஸ்வநாதன் குழு உள்பட பல்வேறு குழுக்களால் நாடகமாக நடிக்கப்பட்டு, ஆயிரம் முறைகளுக்கு மேல் அரங்கேறியது. 

    இவரது பல படைப்புகள் பிரபலமாயின. ‘வெள்ளிமணி’, ‘சாவி’, ‘பூவாளி, ‘திசைகள்’, ‘மோனா’ ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். பெரியார், காமராஜர், ராஜாஜி, கல்கி உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகினார். கட்சி வேறுபாடின்றி அனைவரின் அன்பை யும் ஆதரவையும் பெற்றிருந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்தார்.‘பூவாளி’, ஆங்கில ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு இணையான தமிழ்ப் பத்திரிகையாக விளங்கியது. 

    கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். பின்னர் ‘சாவி’ என்ற பெயரில் வார இதழைத் தொடங்கிப் பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.அதற்கு முன்பே விசித்திரன், ஹனுமான், சந்திரோதயம், தமிழன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார் சாவி.

    சாவி, தினமணிக் கதிரிலிருந்து விலகிய போது, நட்பின் காரணமாக சாவி அவர்களுக்காகவே ஒரு பத்திரிகையைத் தொடங்கினார் கலைஞர் மு.கருணாநிதி. அதுதான் ‘குங்குமம்’. 

    இளம் வயதில் போதுமான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்தவர் என்பதால், எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களிடம் அவருக்கு இயல்பான பரிவு இருந்தது. சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், மாலன், பாலகுமாரன் என பல எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்த்தவர்.


    புதுமை விரும்பி என்பதால் தன் பத்திரிகைகளில் ஏதாவது புதுமையாகப் புகுத்திக்கொண்டே இருப்பார். நல்ல ஆலோசனை களை யார் கூறினாலும், அதை உடனடியாக அமல்படுத்திவிடுவார். அவர்களை மனதாரப் பாராட்டுவார்.

    சில நண்பர்களுடன் சேர்ந்து ‘ஞானபாரதி’ என்ற அமைப்பைத் தொடங்கி, கலைத்துறையிலும் பத்திரிகைத் துறையிலும் முத்திரை பதிப்பவர்களுக்கு ‘ஞானபாரதி’ விருதும் பொற்கிழியும் அளித்து கவுரவித்து வந்தார்.

    இவரது படைப்புகளில் நகைச்சுவையுடன் கருத்துச் செறிவும் இணைந்தே காணப்படும். நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர். நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று பட்டியல் இட்டால், கல்கி, தேவனுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருபவர் சாவி அவர்கள்தான்.

    பழக இனியவர். பத்திரிகை தர்மம், தனது கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவர். கல்கியைத் தன் குருவாக மதித்துப் போற்றியவர். காஞ்சிப் பெரியவரிடம் பக்தி கொண்டவர். 

    கர்நாடக இசைக்குப் பரம ரசிகர் சாவி. மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் கச்சேரி என்றால் உயிர். கர்னாடக இசைப் பாடகர் மதுரை சோமுவைத் தமது இல்லத்துக்குப் பலமுறை வரவழைத்து, கச்சேரி செய்யச் சொல்லி அனுபவித்து ரசித்து, அவரை கௌரவப்படுத்தி அனுப்பியுள்ளார்.

    60 ஆண்டுகளுக்கு மேல் எழுதி வந்தார். இவரது எழுத்துக்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. தனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சாதித்துக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம், எழுத்தாற்றலால் சிறந்த எழுத்தாளராக உயர்ந்து, தமிழ் இதழியலில் தனிமுத்திரை பதித்த ‘சாவி’ 85ஆவது வயதில் (2001) மறைந்தார்.

7 பிப்ரவரி, 2022

பாவாணர் பிறந்தநாள்

     ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர் - தேவநேயப்பாவாணர்.



    ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.இளமையிலேயே கவி பாடும் திறன் பெற்றதால் `கவிவாணன்' என்ற பட்டத்தைப் பெற்றார். தனித்தமிழ் ஈடுபாட்டின் காரணமாக, தன் பெயரைத் `தேவநேயப் பாவாணர்' என மாற்றி அமைத்துக்கொண்டார். 

    பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர். 1919-ல் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே. சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தான் பணியாற்றிய இடங்களிலெல்லாம் மொழியின் மீது பற்றுகொண்ட மாணவர்களை உருவாக்கினார். `பாவாணர் பரம்பரை' என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு அவரின் மாணவர்கள் திறம்கொண்டு விளங்கினர். 

    தமிழின் மறுமலர்ச்சிக் காலத்துக்கு முன்பு வரை, தமிழ் நடை என்பது புரிந்துகொள்வதற்குக் கடினமான சொற்றொடர்களோடு சம்ஸ்கிருதச் சொற்களும் விரவிக்கிடந்தன. `மணிப்பிரவாள நடை’ என்று அதைக் குறிப்பிடுவர். தமிழின் கட்டுகளை உடைத்து மொழியை எளிமைப்படுத்திய இயக்கமே தனித்தமிழ் இயக்கம்.

    பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், உ.வே.சா, பி.தி.சீனிவாச ஐயங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், வள்ளலார் என நீளும் சான்றோர்களே, தமிழை எளிமைப்படுத்தியவர்கள். அவர்களின் தொடர்ச்சியாக உருவானவர் ஞா.தேவநேயப் பாவாணர்.

    பாவாணர் வாழ்ந்த காலத்தில் விடுதலை வேட்கை, நாடு முழுக்க பற்றி எரிந்தபோது இவர் மனதில் உருவானது `மொழி விடுதலை.’ தமிழின் தொன்மையை அறிந்த பாவாணர், அதைச் சூழ்ந்திருக்கும் சம்ஸ்கிருதத்திலிருந்து விடுதலை பெறுவதே தமிழின் மேன்மைக்கு வழிவகுக்கும் என உணர்ந்தார். அதை முன்னெடுக்கவே தமிழ் மொழி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் `தமிழே மற்ற மொழிகளுக்குத் தாய்' என்றுணர்த்தும் கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ந்து எழுதினார்.

     வடமொழிச் சொற்களில் ஐந்தில் இரண்டு பங்கு தமிழ்ச் சொற்கள்தான் என்பதை நிறுவினார். வடமொழியிலிருந்து பிறந்தது தமிழ் என்று பரப்பப்பட்ட கருத்தைக் கடுமையாகச் சாடினார்.

    பாவாணரின் சுவடுகள், உலக மொழி ஆராய்ச்சி வரலாற்றிலேயே இதுவரை எவரும் மேற்கொள்ளாத சாதனை. மொழியின் ஆழத்தை நோக்கிய அவரது பயணங்களில் எதிர்காலம் குறித்த கனவு இருந்தது. சொற்கள் வரலாற்றைத் தாங்கியவை என்பது அவரின் கருத்து. சொல்லிலே ஒளிந்திருக்கும் வரலாற்றைத் தேடி, நெடுந்தூரம் பயணித்த பாவாணர் சென்றடைந்த இடம், தமிழ் மொழியே உலகில் தோன்றிய முதல் மொழி என்னும் கருத்தை நிரூபித்தது.

    `மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக் கண்டம். முதல் மனிதன் பேசிய மொழி தமிழ். தமிழே திராவிட மொழிகளுக்கும் ஆரியத்துக்கும் தாய்'

என்கிற அவரது கோட்பாடுகள், காற்றில் கைபிடித்த வரிகள் அல்ல. அதற்கான சான்றுகளை அறிவியல் முறையில் தொகுத்தளித்ததே பாவாணரை மற்ற ஆராய்ச்சியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

கட்டுரை இலக்கணம்

    ஆங்கில மொழியின் அடிப்படை இலக்கண நூலான `ரென் மற்றும் மார்டின்' - ஐ அனைவரும் அறிவோம். ஆங்கிலத்தைப் போலவே தமிழை முறையாகக் கற்க விரும்பும் மாணவர்களுக்காக பாவாணர் எழுதிய நூலே `உயர்தரக் கட்டுரை இலக்கணம்.' இரு தொகுதிகளாக வெளியான இந்நூல், மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தொடரியல், மரபியல், கட்டுரையியல்.

    தமிழ் இலக்கணங்களை அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல், இலக்கணத்துக்குக் கூறும் எடுத்துக்காட்டுகள் வழியாகக்கூடத் தமிழ் வரலாற்றை மாணவர்களுக்குக் கடத்த விரும்பினார் பாவாணர். 

    `தமிழ், இந்திய மொழிகளில் மிக முந்தியது. பழந்தமிழ்நாட்டின் பெரும்பகுதியாகிய குமரி நாடு கடலுள் முழுகிக் கிடக்கிறது’ 

     போன்ற எடுத்துக்காட்டுச் சொற்றொடர்களைப் பயன்படுத்தி இலக்கணத்தோடு வரலாற்றையும் கற்பித்தார்.

ஒப்பிலக்கணம்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

    மொழிகளை ஒன்றோடொன்று ஒப்பிட்டு அவற்றுக்கு இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை அறிவதே ஒப்பியல் இலக்கணம். இந்தத் தலைப்பிலான பாவாணரின் கட்டுரை. `இந்திய வரலாறு என்பது தெற்கிலிருந்து தொடங்க வேண்டும்' என்பதையும் `திராவிட மொழிகள் தமிழ் மொழியிலிருந்து உருவானவை' என்பதையும் சான்றோடு கூறுகின்றன.

    தமிழின் தொன்மை, ஒலியெளிமை, பிற மொழி கலவாத் தூய்மை, சொல்வளம், செம்மை ஆகியவற்றை மற்ற மொழிகளோடு ஒப்பிட்டும் இந்தி மொழிக்குக்கூடத் தமிழ் இலக்கணம் பொருந்துவதையும் நிறுவுகிறார். உலக மொழிகளின் ஒட்டுமொத்தத் தன்மையையும் ஒருங்கே கொண்டதால் தமிழே `முதற்றாய் மொழி' என்கிறார். 

தமிழர் மரபு

    சிதைந்த தமிழர் மரபை மீட்க, நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழிதான். `எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறார் தொல்காப்பியர். தமிழ் என்பது, வெறும் மொழியன்று.

 கலை, நாகரிகம், பண்பாடு, மரபு, கலாச்சாரம் எனத் தமிழ் மொழி தாங்கியுள்ள கூறுகளை வெளிக்கொணர்வதே தன் பணியாகத் தானே விருப்பத்துடன் ஏற்று செயல்பட்டார் தேவநேயப் பாவாணர்.

அகரமுதலி திட்டம்

    1971ஆம் ஆண்டில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் இயக்குநராகப் பாவாணர் பொறுப்பேற்றார். திட்டக்காலம் நான்கு ஆண்டுகள் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குள் முடிக்க இயலாத அளவு தமிழின் பரப்பு விரிந்து கிடப்பதை உணர்ந்தும் `தன்னால் மட்டுமே இத்தகைய பணியைச் செய்ய முடியும். இதை நிறைவேற்றுவதே இதற்கு முந்தைய தன்னுடைய உழைப்பின் பயன்' என்ற தன்னம்பிக்கையோடு செயல்படத் தொடங்கினார்.

    அணிகலன்கள், தொழிற்கருவிகள் என உலகிலேயே அச்சில் வராத சொற்களைத் தொகுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதை முடிக்கும் முன்பே இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார். அவர் தொகுத்த சொற்களோடு இன்னும் சிலவற்றையும் சேர்த்து `தேவநேயம்' என்கிற பெயரில் 13 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

திராவிட மொழிநூல் ஞாயிறு

    தமிழ் மொழி இன்று வரை தனித்து நிற்பதற்குக் காரணமான செவ்வியல் தன்மைகளை ஆய்வுசெய்த பாவாணர், பிற மொழிச்சொற்களைக் கையாள்வதற்கும் வழிமுறைகளைக் கற்பிக்கிறார். 

    மொழியாக்கம் செய்வது, புதிய சொற்களை உருவாக்குதல் இரண்டும் இயலாதபோது, தமிழ் ஒலிக்கேற்ப திரித்து வழங்குவது முதல் வேர்ச்சொற்களில் தொடங்கி புதிய கலைச் சொற்களை உருவாக்குவது வரை தன் வாழ்வையே தமிழ் மொழி ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்த பாவாணர் என்கிற தனி மனிதர், மொழிப் பல்கலைக்கழகமாகக் காட்சியளிக்கிறார். 

    தம் மக்களிடம் அவர் முன்வைப்பது எளிய வேண்டுகோள் தான்,
  
`தமிழை மேன்மையடையச் செய்ய, தமிழில் பேசுங்கள்.’ என்பதே அது.

பாவாணரின் படைப்புகள்

இலக்கணக்கட்டுரைகள்

இசைத் தமிழ்க் கலம்பகம்

ஒப்பியன் மொழிநூல்

சுட்டுவிளக்கம்

செந்தமிழ்க் காஞ்சி

செந்தமிழ்ச் சிறப்பு

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

தமிழர் மதம்

மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை

தமிழர் திருமணம்

தமிழர் வரலாறு

தமிழ் வரலாறு - 1

தமிழ் வரலாறு - 2

தமிழ்வளம்

தமிழியற் கட்டுரைகள்

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

திரவிடத்தாய்

தென்சொற் கட்டுரைகள்

பாவாணர்நோக்கில் பெருமக்கள்

பாவாணர் உரைகள்

மொழிநூற் கட்டுரைகள்

மொழியாராய்ச்சி கட்டுரைகள்

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

பழந்தமிழாட்சி

பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

மறுப்புரை மாண்பு

முதற்றாய்மொழி

வடமொழி வரலாறு - 1

வடமொழி வரலாறு - 2

வேர்ச்சொற் கட்டுரைகள்

The Primary Classical Language of the World

5 பிப்ரவரி, 2022

டன்லப் (DUNLOP) பிறந்தநாள்

     சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய நவீன ரப்பர் டயர்களின் கண்டுபிடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்ற ஜான் பாய்ட் டன்லப் ஒரு ஸ்காட்லாந்திய கண்டுபிடிப்பாளர்; 
கால்நடை அறுவை சிகிச்சையாளர்  - பிறந்தநாள்.

     குதிரைகள் கரடு முரடான சாலைகளில், கெட்டியான ரப்பரால் தயாரிக்கப்பட்ட கழுத்துப் பட்டையுடன் மிகவும் கனமான சுமைகளை கஷ்டப்பட்டு இழுத்து வருவதைப் பார்த்தார். அவற்றின் கஷ்டத்தை குறைக்கக் காற்று அடைக்கப்பட்ட குஷன்களை அதற்கு பதிலாக பயன்படுத்த முடியுமா என்ற சோதனையில் ஈடுபட்டார். 

    அந்தச் சமயத்தில் (1887) இவரது ஒன்பது வயது மகன் தன் சைக்கிளை உருளைக் கற்கள் நிறைந்த சாலையில் கஷ்டம் இல்லாமல் சவுகரியமாக ஓட்டுவதற்கு ஏதாவது செய்யுமாறு கேட்டான். சைக்கிளின் கெட்டியான ரப்பர் டயர்களில் ஏதாவது மாற்றங்கள் கொண்டு வந்து மகனுக்கு உதவ முடியுமா என்ற பரிசோதனையில் இறங்கிவிட்டார். 

    தோட்டத்தில் கிடந்த, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப் பயன்படுத்தப்படும் பழைய குழாயை வெட்டி ட்யூப் தயாரித்து அதில் காற்றை அடைத்துத் தன் மகனின் சைக்கிளின் பின்பக்கச் சக்கரத்தோடு இணைத்தார். சைக்கிளும் அவர் மகன் கேட்டபடியே எளிதாகச் சாலையில் உருண்டோடியது. உண்மையில் இதை மறுகண்டுபிடிப்பு என்றுதான் கூற வேண்டும். 

    ஏற்கெனவே 1845 இல் ராபர்ட் தாம்சன் இதைக் கண்டுபிடித்திருந்தார். ஆனால், அது அந்த அளவு பிரபலமாகவில்லை என்பதால், இது டன்லப்புக்குத் தெரியாது. காற்றடைக்கப்பட்ட இந்த டயரை மேலும் ஆராய்ந்து, பரிசோதனைகள் செய்து, மேம்படுத்தி 1888 இல் பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1890 இல் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற்றார்.


    
பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற மிதிவண்டி ஓட்டும் ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த W.H. டு கிராஸ் என்ற அயர்லாந்து தொழிலதிபருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது.

    டன்லப்புடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அது டன்லப் ரப்பர் கம்பெனி என்று அழைக்கப்பட்டது. தனது கண்டுபிடிப்பால் இவர் பெரிதாக லாபமடையவில்லை. தனது காப்புரிமையை 1896 இல் டு கிராசுக்கு விற்றுவிட்டு, ஊர் திரும்பிவிட்டார்.

    ஆனால் அந்த நிறுவனம் டன்லப் ரப்பர் கம்பெனி என்று இவரது பெயராலேயே இயங்கிவந்தது. 1888 இல் காற்று அடைக்கப்பட்ட டயர்கள் அறிமுகமான பிறகு பழைய டயர்கள் வழக்கொழிந்து போய் விரைவில் இவை புழக்கத்திற்கு வந்துவிட்டன.

    இது மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. 1895 முதல் மோட்டார் வாகனம் உருவானது. 1900 ஆம் ஆண்டுக்குப் பின் சைக்கிள்களுக்கும் மோட்டார் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படும் நீடித்து உழைக்கும் ரப்பர் பொருள்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது.

     இவரது கண்டுபிடிப்பு பல தொழிற்சாலைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய நவீன ரப்பர் டயர்களின் கண்டுபிடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் ஜான் பாய்ட் டன்லப்.

4 பிப்ரவரி, 2022

உலக புற்றுநோய் தினம்

     1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் ( Union for International Cancer Control - UICC) கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.


    உலக அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், அதுகுறித்த சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை 
உலக புற்றுநோய் தினம் குறிக்கிறது. 

    இந்த நாளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், நோய் குறித்த தவறான கருத்துக்கள், புற்றுநோயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காணவும், சரியான சிகிச்சையைப் பெறவும் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மக்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

     Theme : Close the Care Gap                                             

    'க்ளோஸ் தி கேர் கேப்' பிரச்சாரத்தின் முதல் ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள புற்றுநோய் சிகிச்சையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்துகொள்வது மற்றும் அங்கீகரிப்பது பற்றியது. இது திறந்த மனதுடன், சவாலான அனுமானங்கள் மற்றும் கடினமான உண்மைகளைப் பார்ப்பது பற்றியது.

    சமத்துவமின்மை, வருமானம், கல்வி, இருப்பிடம் மற்றும் இனம், பாலினம், பாலியல் நோக்குநிலை, வயது, இயலாமை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடு நீக்கப்படவேண்டும்.

     நோய்க் கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் (Centers for Disease Control and Prevention - CDC) அளித்த தகவலின் படி உலகில் ஆண்களின் மரணத்திற்கு இரண்டாவது காரணமாக இருப்பது கேன்சர்.  கேன்சர் நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
   

    இங்கு கொடுக்கப்பட்டுள்ள கேன்சர் அறிகுறிகள் குறித்த பட்டியல் உள்ள அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அது கட்டாயம் கேன்சராக தான் இருக்கும் என்பதில்லை. அதே நேரத்தில் ஒரு சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் உங்களுக்கு கேன்சருக்கான வாய்ப்பு இல்லை என்பதுமில்லை. இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் டாக்டரை அணுகுவது நல்லது.

 தோல் மாற்றம்

     நாம் வெளியில் செல்லும் போது நம் தோல்கள் அதிகமாக யூவி கதிர்கள் மற்றும் பலவிதமான கதிர்களை நேரடியாக எதிர்கொள்கிறது. அதில் ஆண்களுக்கு அதிகமாகத் தோல் கேன்சர் ஏற்படுவதாக CDC தெரிவித்துள்ளது. இந்த தோல் கேன்சர் இருப்பதற்கான அறிகுறிகள், குடும்பத்தில் முன்னோர்களுக்குத் தோல் கேன்சர் இருப்பது, அதிக எண்ணிக்கையிலான மச்சங்கள், வழக்கத்திற்கு மாறான மச்சங்கள், வெளிர் நிற தோல், தோல் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல் ஆகியன அறிகுறிகள் இவ்வாறான மாற்றம் எல்லாம் கேன்சர் எனச் சொல்லி விட முடியாது சில மாற்றங்கள் கேன்சராக இருக்கக்கூடும்.


 சிறுநீரில் ரத்தப்போக்கு

     கேன்சர் தொடர்பான மரணங்களில் 8வது முக்கியமான காரணம் சிறுநீரக கேன்சர். சிறுநீரக புற்றுநோய்க்கான முதல் அறிகுறி சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், இது ஏற்படும் போது வலியோ, எரிச்சலோ எதுவும் இருக்காது. ஆனால் சிறுநீரில் ரத்தம் கலந்து செல்லுதலைக் கட்டாயம் முக்கிய பிரச்சனையாக எடுத்து சோதனை செய்து கொள்வது நல்லது. சிறுநீரில் ரத்தம் கலந்து செல்லும் போது சிறுநீர், ஆரஞ்சு, பிங்க், மற்றும் சிவப்பு நிறத்தில் வெளியேறும். அதே நேரத்தில் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் கேன்சருக்கான அறிகுறி மட்டுமல்ல சிறுநீரக கிருமித் தொற்று, சிறுநீரக கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இந்த அறிகுறிகள் ஏற்படும்.

 உணவு சாப்பிடுவதில் பிரச்சனை

     பலருக்கு சில பிரச்சனைகள் இருப்பது மருத்துவ ரீதியிலான பிரச்சனைகள் என்பதே தெரியாது. சிலருக்கு உணவு சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போது அதை முழுமையாகச் செய்ய முடியாது. உணவு தொண்டைப்பகுதியிலோ அல்லது நெஞ்சு பகுதியிலோ அடைக்கும் உணர்வு ஏற்படலாம். இதனால் உணவு சாப்பிடும் போது எல்லாம் வாந்தி ஏற்படும், திடீரென உடல் எடை குறையும். இது வாய்/தொண்டை/ உணவு குழாயில் ஏற்படும் கேன்சருக்கான அறிகுறியாகும். இந்த கேன்சரை சிடி ஸ்கேன் மூலமே கண்டறிய முடியும்.

 கட்டி

     நம் உடலில் லிம்படிக் எனப்படும் ஒரு அமைப்பு இருக்கிறது. நம் உடலில் உள்ள தேவையில்லாத விஷயங்களை சேகரித்து அதை உடலில் ஒரே இடத்தில் வைத்துக் கட்டியாக மாற்றி வெடிக்க வைத்து வெளியேற்றி விடும். இது பெரும்பாலும், அடிவயிறு, கழுத்து, மற்றும் அக்குள் பகுதியில் ஏற்படும். உங்கள் உடலில் இது போன்ற கட்டிகள் ஏற்பட்டு 2 முதல் 4 வாரங்களுக்குள் தானாகச் சரியாகவில்லை என்றால் உடனடியாக நீங்கள் டாக்டரை அணுகுவது நல்லது. இப்படியான கட்டிகள் கேன்சர் கட்டிகளான மாற வாய்ப்புள்ளது. இவ்வாறான கட்டிகளை லிம்போனா கட்டிகள் என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.

 சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை
     ஆண்களுக்கு புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாகச் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்படும். இது சிலருக்கு புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக ஏற்படலாம் சிலருக்கு புரோஸ்டேட்டில் ஏற்படும் கேன்சர் கட்டியின் காரணமாகக் கூட ஏற்படலாம். இதனால் ஆண்களுக்குச் சிறுநீர் கழிக்கும் போது முதலில் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படலாம், அல்லது தொடர்ந்து சிறுநீரை வெளியேற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டும். சிலருக்குச் சிறுநீரை முழுவதுமாக வெளியேற்ற முடியாமல் பிரச்சனை ஏற்படும். பொதுவாக இது 50-69 வயதானவர்களுக்கே ஏற்படும். மொத்தத்தில் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் டாக்டரை அணுகுவது நல்லது.

 விரைப்பை கேன்சர்

     ஆண்களுக்கு விரைப்பிடையில் ஏற்படும் கட்டி டிஸ்டிகுலர் கேன்சராக இருக்கக்கூடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். விரைப்பையில் கட்டி எற்படுதல் அல்லது வழக்கத்திற்கு மாறாகக் கனமாக இருத்தல், ஆகியவை இந்த கேன்சருக்கான அறிகுறிகள். இந்த பிரச்சனை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது. இந்த கேன்சர் ஒரே நாளில் உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் அதனால் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

 வாய் கேன்சர்

     வாய் அல்லது உதடு பகுதியில் திடீரென புண் ஏற்பட்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருப்பது, அந்த புன்னை சுற்றி வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் வருவது வாய் கேன்சருக்கான அறிகுறிகளாகும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் பொதுவான டாக்டர்கள் அல்லது பல் மருத்துவர்களைத் தொடர்பு கொள்வது நல்லது. இந்த கேன்சர் வருவதற்கான முக்கியமான காரணம் அதிகமாகப் புகையிலை அல்லது மதுப்பழக்கம் இருப்பது காரணமாக இருக்கும்.

 திடீர் எடைக் குறைவு

     சிலருக்கு திடீரென எடைக்குறைவு ஏற்படலாம். அதாவது அவர்கள் அதற்காக எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் தானாக உடல் எடை குறைந்தால் அது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மருத்துவர்கள் ஒரு சராரி மனிதனின் எடையிலிருந்து 6-12 மாதங்களில் 5சதவீதமான எடை குறைந்தால் எந்த வித திட்டமிடலும் இல்லாமல் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருப்பதாக அர்த்தம் எனத் தெரிவித்துள்ளார். பல்வேறு விதமான கேன்சர்களுக்கு உடல் எடை குறைவே ஒரு விதமான அறிகுறியாகும். இதைத் தவிர வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் கேன்சர் உள்ளேயே இருந்து உடல் எடையை மட்டும் பாதித்து வரலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ​

காய்ச்சல் 

     காய்ச்சல் சாதாரணமாக எல்லோருக்கும் பரவக்கூடியது தான் சாதாரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாகக் காய்ச்சல் வரக்கூடும். ஆனால் கேன்சர் இருப்பவர்களுக்கு அந்த கேன்சர் செல்கள் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறும் போது காய்ச்சல் ஏற்படும் அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டால் இது குறித்து பரிசோதனை செய்து பார்த்துக்கொள்வது சிறந்தது. சிலருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது கூட காய்ச்சலுக்கு முக்கியமான காரணமாக இருக்கலாம் ஏதுவாக இருந்தாலும் டாக்டரை அணுகுவது சிறந்தது ​

சோர்வு 
     நாள் முழுவதும் சோர்வாக உணர்வதும் ஒரு விதமாக கேன்சரின் அறிகுறிதான். நாள் முழுவதும் இரவு தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற உணர்வு வயிற்றுப் பகுதியில் கேன்சர் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இரவு தூங்கவில்லை என்றால் இது போன்று சோர்வு மறுநாள் இருப்பது சாதாரணம் ஆனால் தொடர்ந்து இது போல இருப்பது உங்களை டாக்டர் அணுகச் சொல்வதற்கான அறிகுறி. 

 வறட்டு இருமல் 

     வறட்டு இருமல் என்பது நுரையீரல் அல்லது மூச்சு குழாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளால் வருகிறது. இது நுரையீரல் புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். தொண்டையில் குரல் வடபகுதியில் ஏற்படும் கேன்சருக்கும், தைராய்டு கேன்சருக்கும் இது போன்ற அறிகுறிகள் தான் இருக்கும். வறட்டு இருமல் ஒரு நோய்த் தொற்றாகவும் இருக்கும். அதிக நாட்களாக வறட்டு இருமல் சரியாகாமலிருந்தால் கேன்சாராக இருக்கலாம் அதனால் டாக்டரை பார்ப்பது சிறந்தது. ​

மார்பில் மாற்றம்

     மார்பு பகுதியில் மாற்றம் ஏற்படுவது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கேன்சருக்கான அறிகுறிதான். பெரும்பாலும் முன்னோர்கள் வழி மூலமாக இந்த கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்குத் தான் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மார்பு பகுதியில் ஏற்படும் கட்டி இந்த கேன்சருக்கான அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் வந்தால் கட்டாயம் டாக்டரை அணுகுங்கள். ​

    பார்வை மற்றும் நடையில் மாறுபாடு
 
     கேன்சரின் சில அறிகுறிகள் மிகவும் விசித்திரமாக இருக்கும். ஒருவருக்கு திடீரென பார்வையில் குறைபாடு வருவது, நடக்கும்போது தடுமாறுவது, அடிக்கடி கவனம் சிதறுவது போன்ற விஷயங்கள் மூளையில் இருக்கும் கேன்சர் கட்டிக்கான அறிகுறியாக இருக்கலாம். மூளையில் கேன்சர் வருவது மிகவும் ஆபத்தான விஷயம் ஆகும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது. ​

ரத்தம் கலந்த மலம்

     மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறுவது ஒரு வகையான கேன்சரின் அறிகுறிதான். இவ்வாறு மலத்தில் ரத்தம் வெளியேறுவது இரண்டு காரணங்களுக்காக இருக்கலாம் ஒன்று கேன்சர் மற்றொன்று மல குழாயில் ஏற்பட்ட புண்ணிலிருந்து வெளியேறும் ரத்தம். இதை இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். சில நேரம் மலத்துடரன் ரத்தம் கலந்து மலர் பளீர் சிவப்பு நிறத்திலோ, லேசான பிங்க் நிறத்திலோ, கருப்பு கலந்த பிளவுன் நிறத்திலோ அல்லது அடர் கருப்பு நிறத்திலோ வெளியேறினால் அதுவும் ரத்தம் கலந்து வெளியேறும் மலமாகவே கருத வேண்டும். ​

கீழ் முதுகு/ இடுப்பு வலி/குறுக்கு வலி 

     ஒவ்வொரு மனிதனும் இடுப்பு வலி, குறுக்கு வலி என்பது வயதானால் வரும் பெரும்பாலும் அதிக உடல் எடை, அதிகமாக இருப்பது, அதிக எடை கெண்ட பொருளைத் தூக்குவது, அளவிற்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட காரணங்களால் கூடவரலாம். ஆனால் புரோஸ்டேட் கேன்சர் என்பது எலும்பிற்குச் சென்று பரவினால் இந்த வகையான வலி ஏற்படும் நீண்ட நாட்களாக இது போன்ற வலி இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகவும்.

விரைவீக்கம்

     ஆண்களுக்கு விரைப்பையில் வீக்கம் ஏற்பட்டால் அவர்கள் தயங்காமல் டாக்டரை அணுகுவது முக்கியம்.விரைவீக்கம் இருந்தால் உடனடியாக டாக்டரை தொடர்பு கொள்ள வேண்டும். பீனைல் கேன்சர் என்பது மிக அரிதான நோய் 95 சதவீத மக்களுக்கு இந்த நோய் ஏற்படுவதில்லை. அரிதான வியாதி என்பதால் அசால்டாக இருந்து விடாதீர்கள் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவம் செய்வது சிறந்தது. ​

வலி 

     உடலில் தொடர்ந்து வலி ஏற்படுவது சிலருக்கு அதிக உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்வதால் வலி ஏற்படும் சிலருக்கு எதுவுமே இல்லாமல் உடல் வலி வருவதும் கேன்சருக்கான அறிகுறிதான். எந்த இடத்தில் வலி, எவ்வளவு தீவிரமான வலி, எவ்வளவு நாட்கள் இந்த வலி இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் டாக்டர்கள் இந்தவலிக்கான காரணத்தைக் கண்டறிவார்கள். இதனால் அசாதாரணமாக உடல் வலி வந்தால் டாக்டரை அணுகுவதைத் தவிர்க்கவும்.

புற்றுநோய்க்கான காரணங்கள்

    பொதுவாக என்னதான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகளை உற்றுநோக்கினால் இதுதான் என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், ஒருசிலவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

     முதலாவதாகப் பரம்பரை. அதாவது மரபு வழி. (Genes – The DNA type) உங்கள் குடும்பத்தில் தாய், தந்தை வழி இந்த நோய் இருந்தால் நிச்சயம் அலட்சியப்படுத்தாமல் சோதனை செய்துகொள்வது மிக அவசியம்.

     புகையிலை, கூரையாக வேயப்படும் ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு (Gamma and X Rays), மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் (carcinogens) இந்நோய் பரவுகிறது. 

  இதன் வீரியத்தை குறைக்கும் சக்தி ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுக்கு உண்டு. அதற்குத்தான் சத்துள்ள இயற்கையான காய்கறிகள், பழவகைகளையும் உண்ணச் சொல்கிறார்கள்.

    வைரஸ் தொற்று தாக்குதலினாலும் புற்றுநோய் உருவாகிறது என மருத்துவ ஆய்வுகள் முன்வைக்கின்றன. அதில் முக்கியமானது, HPV (Human pappiloma virus) (பெண்களுக்கான கருப்பைவாய் புற்று உருவாகிறது), ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி (Hepatitis), கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாகிறது. 



    எப்ஸ்ட்டீயின் பார் வைரஸ் (Epstein – Barr virus) குழந்தைகளின் பல்வேறு புற்றுநோய்களுக்கு இந்த வைரஸ் காரணம். எந்த வைரஸ் தொற்றாக இருந்தாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்கிறது. நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் இல்லாமல் போகிறது. இதனால் புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகம் ஏற்படுகின்றன.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece