26 டிசம்பர், 2021

சார்லஸ் பேபேஜ் (Charles Babbage) பிறந்த தினம்

 தற்கால கணினியின் தந்தை என்று போற்றப்படும், உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் சார்லஸ் பேபேஜ் (Charles Babbage) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 26).



 * லண்டனில் (1791) பிறந்தவர். பொற்கொல்லராக இருந்த தந்தை, பின்னர் வியாபாரி, வங்கியாளராக உயர்ந்தவர்.

 *சிறுவயதில் மோசமான உடல்நிலை காரணமாக சார்லஸ், பள்ளிக்குப் போக முடியவில்லை. வீட்டுக்கே ஆசிரியர்களை வரவழைத்துக் கல்வி கற்பித்தனர்.

 * ஹோம்வுட் அகாடமியில் சிறிது காலம் பயின்றார். அங்கு நூலகத்தில் இருந்த நூல்கள், இவரிடம் கணித ஆர்வத்தைத் தூண்டின. வானியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்ட பள்ளி ஆசிரியரால், இவருக்கு அறிவியலிலும் ஆர்வம் அதிகரித்தது.

 * அல்ஜீப்ராவை ஆர்வத்துடன் கற்றார்.1810 இல் கேம்ப்ரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஏற்கெனவே பல மேதைகளின் நூல்களைப் பயின்று சுயமாக கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த இவருக்கு, அங்கு கற்பிக்கப்படும் கணிதம் ஏமாற்றம் அளித்தது.

 * நண்பர்கள் ஜே.ஹெர்ஷல், ஜி.பீகாக் உள்ளிட்ட பலருடன் இணைந்து ‘அனலிட்டிகல் சொசைட்டி’ என்ற அமைப்பை 1812இல் தொடங்கினார். கேம்ப்ரிட்ஜில் பாரம்பரியக் கற்பித்தல் முறையை மாற்றி, நவீன கணித முறைகளை அறிமுகம் செய்வதுதான் இதன் நோக்கம். இந்த அமைப்பு விரைவில் பிரபலமடைந்தது.

 * சிறந்த கணித வல்லுனராக உயர்ந்ததால், தேர்வு இல்லாமலேயே 1814 இல் இவருக்குப் பட்டம் வழங்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜில் பேராசிரியர் பதவிக்கு 3 முறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டார்.

* 1827இல் தந்தையின் சொத்துகள் இவருக்கு வந்தன. அதன் பின்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டார். அதுவரை மறுக்கப்பட்ட பேராசிரியர் பணி தேடி வந்தது.

 * வானியலிலும் சிறந்து விளங்கினார். ராயல் கல்வி நிறுவனத்தில் வானியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்தின் முன்னணி கணித வல்லுநர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். உலகப் புகழ்பெற்ற வானியலாளர் ஹெர்சலுடன் இணைந்து மின்காந்தவியல் குறித்து ஆராய்ந்தார்.

 * 1820 இல் வானியல் கழகம் தொடங்கப்பட உறுதுணையாக இருந்தார். கணிதம், வானியல் தொடர்பான கணிப்புகளை மேற்கொள்ள, புரோகிராம் செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இறுதியாக 1835 இல் இப்படிப்பட்ட ஒரு சாதனத்தை (அனலிட்டிகல் இன்ஜின்) உருவாக்கினார்.

 * இதில் மில், ஸ்டோர் என்ற 2 பகுதிகள் இருந்தன. மில் என்பது தற்போதைய கணினிகளின் ‘சிபியூ’வுக்கு இணையானதாகவும், ‘ஸ்டோர்’ தற்போதைய கணினியின் மெமரி பகுதியாகவும் செயல்பட்டன. இதுவே இன்றைய கணினியின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. வானியல் கணிப்புகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டது.

 * இதற்காக இவருக்கு வானியல் கழகத்தின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. அனலிட்டிகல் இன்ஜின் அடிப்படையில் ‘செகண்ட் டிஃபரென்ஸ்’ என்ற இன்ஜினைக் கண்டறிந்தார். மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, ரயில்பாதையை அளவிடும் கருவி, சீரான அஞ்சல் கட்டண முறைக்கான கருவி, கிரீன்விச் ரேகைக் குறியீடு, சூரிய ஒளியைக் கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி உள்ளிட்ட இயந்திரங்களைக் கண்டறிந்தார்.

 * பல நூல்களை எழுதினார். இவரைப் பற்றி நூல்கள், நாவல்களும் எழுதப்பட்டன. திரைப்படங்கள், ஆவணப் படங்களும் தயாரிக்கப்பட்டன. கணிதம், கண்டுபிடிப்பு, பகுப்பாய்வு, தத்துவம் இயந்திரப் பொறியியல் எனப் பல்வேறு களங்களில் முத்திரை பதித்த சார்லஸ் பேபேஜ் 80 ஆவது வயதில் (1871) மறைந்தார்.

25 டிசம்பர், 2021

தேசிய நல் ஆளுகை (Good Governance Day ) தினம் (வாஜ்பாய் பிறந்தநாள்)

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி ஆண்டுதோறும்  நாடு முழுவதும் தேசிய நல் ஆளுகை (Good Governance Day) தினமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.

     நாடு முழுவதும், வெளிப்படையான, பொறுப்புடைய நிர்வாகத்தை வழங்குவதில் அரசாங்கத்திற்கு உள்ள நிர்வாக அர்ப்பணிப்பைப் பற்றி மக்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தரநிலைப்படுத்துவதற்காகவும், நாட்டு மக்களுக்கு அதிகத் திறனுடைய, பொறுப்புடைய நிர்வாகத்தை வழங்கிடும் வகையில் அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

     நிர்வகிப்பில் அரசுக்கு உள்ள பொறுப்புடைமையைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து அதன் மூலம் வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டு இத்தினம் தோற்றுவிக்கப்ட்டது.

வாஜ்பாயியின் சாதனைகள்

   1. இந்தியா இப்போது அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. ”நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம்” என்று கூறியவர் வாஜ்பாய். உலக நாடுகளின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு, இந்தியா, போக்ரான் அணு குண்டு சோதனை செய்த பின்பு வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இவை.

  2. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை (NTP - New Telecom Policy) இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியை 3% லிருந்து 70% அளவிற்கு (2012) உயர்த்தியது. இந்தச் சாதனை  ”தொலைத் தொடர்புத் துறையில் ஒரு புரட்சி” எனப்படுகிறது.

  3. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில்தான் "கல்விபெறுவதற்கான உரிமைச் சட்டம்" (RTE) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது. இதனால் பலர் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றனர். கல்வித் துறையில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

        4. வாஜ்பாய் ஆட்சியின் கீழ் தான் கார்கில் போரை எதிர்கொண்டது இந்தியா. அதே போல 1999, 2000 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரும் சூறாவளிக் காற்றுத் தாக்குதல், 2001 இல் பெரும் பூகம்பம், 2002-2003 இல் வறட்சி மற்றும் எண்ணெய் நெருக்கடி, இரண்டாம் கல்ஃப் போர் என பல தாக்கங்கள்.. ஆனால், ஒருபோதிலும் இவை அனைத்தும் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வாஜ்பாய்.


     5. 1998 இல் இந்தியாவில் நேஷனல் ஹைவே டெவலப்மென்ட் பிராஜக்ட் (தங்கநாற்கர) என்ற பெயரில் உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய். இந்த திட்டத்தின் கீழ் 49,260 கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்டன. 

    நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ள வாஜ்பாய், நான்கு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து (உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், டெல்லி) வெவ்வேறு காலங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற, மக்கள் பிரதிநிதியாகத்
திகழ்ந்தார்.


24 டிசம்பர், 2021

எம்.ஜி.ஆர் நினைவு நாள்

 வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி....


      இலங்கையில் தேயிலை உள்ளிட்ட பிற தோட்டங்கள் நிறைந்த கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோபால மேனனுக்கும், சத்யபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்ஜிஆர். இவரது மூத்த சகோதரர் பெயர் எம்.ஜி. சக்ரபாணி. எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா பூர்விகமான கேரளத்தின் பாலக்காடுக்குத் திரும்ப முடிவெடுத்தார்.

       ஆனால், உறவினர்களின் ஆதரவு கிடைக்காததால் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வேலு நாயரின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார் சத்யபாமா. அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.

       பதினான்கு வயதில் நடிப்புத்துறைக்குள் நுழைந்த எம்ஜிஆருக்கு ஆரம்ப காலத்தில் கைகொடுத்தது மேடை நாடகமும் நாடகக் கலைஞர்களும்தான். பதின்ம வயதில் தனது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியுடன் பாய்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் எம்ஜிஆர். அங்கு கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்தாலும் எம்ஜிஆரின் கனவு, வெள்ளித்திரை மீதே இருந்தது.

     அந்தக் காலத்தில் நடிப்புத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதுவும் கதாநாயகனாக வேண்டுமானால், அவருக்கு இயல்பாகவே ஆடலும், பாடலும், வார்த்தை சுத்தமாக தமிழ் பேசவும் சரியான உச்சரிப்பும் தெரிந்திருப்பது கட்டாயம்.

     இந்த நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் அவரது சகோதரரை மேடை நாடகங்களில் பங்கேற்கச் செய்ய ரங்கூனுக்கு அனுப்பி வைத்தார் கந்தசாமி முதலியார். அவர்தான் எம்ஜிஆரின் திரை வாழ்க்கைக்கான ஆதர்ச வழிகாட்டி என பின்னொரு நாளில் எம்ஜிஆரே குறிப்பிட்டார். ரங்கூனில் ஆண், வேடம் மட்டுமின்றி பெண் வேடத்திலும் எம்ஜிஆர் நடித்தார்.

     14 வயதில் மேடை நாடகங்களில் தோன்றிய எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரை செட்டுக்குள் நுழைய ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சதி லீலாவதி என்ற படத்தில் ஓர் ஊழல் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர்.

      அதன் பிறகு சிறு, சிறு வேடங்கள் அவருக்கு கிடைத்தாலும், எல்லா திரை நாயக, நாயகிகளுக்கும் ஏற்படுவது போன்ற திருப்புமுனை, எம்ஜிஆருக்கு 1950ஆம் ஆண்டில்தான் நடந்தேறியது. அப்போது வரலாறறுக்காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை ஏழை, எளியவர்களின் நாயகனாக, உலகுக்கு அடையாளப்படுத்தியது வெள்ளித்திரை.


    அந்த ஒரு திருப்பத்திலேயே தனக்கான பாதை எது என்பதை உணர்ந்தவராக தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாகவும், அவை சாமானியர்களை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். அதற்கு கைகொடுத்தவை,  கதை வசனங்கள் மற்றும் திரைப்பாடல்கள்.

     1936 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டுவரை அவர் இறப்புக்குப் பிறகு வெளியான இரண்டு படங்கள் உட்பட எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 136. அவற்றில் 132 படங்கள் தமிழிலும், இரண்டு படங்கள் மலையாள மொழியிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தலா ஒரு படமும் அடங்கும்.

    எம்ஜிஆருக்குப் பல விஷயங்கள் அவரை முதன்மையானவராக உலகுக்கு அடையாளப்படுத்தின. அது இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தின் முதல்வராக முதலாவதாக பதவிக்கு வந்த நடிகர் என்பது. அதைப்போல, இந்திய திரைப்பட வரலாற்றில், குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்ற முதலாவது நடிகராக அவர் அறியப்பட்டார். 1972ஆம் ஆண்டில் ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது.

    திரையில் முதல் படத்தில் தனக்குக் கிடைத்த புகழ், சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர், திரை வாழ்க்கையுடன் சேர்த்து அரசியல் வாழ்க்கையையும் தேர்வு செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

    1972இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். தனது புதிய கட்சி, அண்ணாவின் கோட்பாடுகளைப் பின்பற்றும் என்று அறிவித்தார் எம்ஜிஆர்.எம்ஜிஆர் தமது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த பள்ளிகளில் சத்துணவு, இலவச பற்பொடி, சீருடை, காலணி போன்றவை சிறார்கள் மனதில் எம்ஜிஆருக்கு ஒரு நீங்காத இடத்தை பெற்றுத்தந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் எம்ஜிஆரின் அரசியலைக் கொண்டு சேர்க்க உதவியது.

    1984இல் சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகளால் சுகவீனம் அடைந்தார் எம்ஜிஆர். அதன் பிறகு வெளிநாட்டு மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை மேற்கொண்டார்.

     பின்னர் நடந்த தேர்தலில் பிரசாரத்துக்கு செல்லாமலேயே வென்ற எம்ஜிஆர், ஆட்சியில் தொடர்ந்தபோதும், அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், எம்ஜிஆரின் உயிர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிரிந்தது.

அவரது வாழ்வு 

“வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? 


என்ற கேள்விக்கு விடையாக அமைந்தது.

நன்றி : பி.பி.சி

23 டிசம்பர், 2021

தேசிய விவசாயிகள் தினம் & சரண்சிங் பிறந்த தினம்

 எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்


    ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 23ஆம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

        இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாளானது, கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து  21 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுவதற்குத் தனிப்பட்ட காரணங்கள் உண்டு.

       பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979ஆம் ஆண்டு, இந்தியாவின் 7 ஆவது பிரதமராகப் பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தைக் கொண்டு வந்தார். அதேசமயம் நிலச்சுவான்தார்கள், வட்டிக்குப் பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.

      உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திற்குட்பட்ட நூர்பூரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தார். உத்தரப்பிரதேச அரசில் வேளாண்துறை மற்றும் வனத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. 

      அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். கூட்டுறவு பண்ணைகள் இந்தியாவில் வெற்றி பெறும் என்று சரண்சிங் கருத்து தெரிவித்தார். சரண்சிங் அவரது குறுகிய பதவிக்காலத்தில் ஒரு நாள்கூட மக்களவையை சந்திக்காத இந்தியாவின் ஒரே பிரதமர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.

      இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதையும், உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் விவசாயிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

    உத்தரப்பிரதேச மாநிலத்தில், தேசிய விவசாயிகள் தினத்தன்று அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது 

     'ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர்,1987 மே 29 ஆம் தேதி இயற்கை எய்தினார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.

     'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றார், திருவள்ளுவர். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றார் பாரதி. அப்பெருமக்கள் போற்றிய வேளாண்மையை நாமும் போற்றுவோம். விவசாயிகள் துயர் நீக்கவும், தொழில் உயரவும், வருமானம் பெருகவும், வழிகாணவும், துணைநின்று விவசாயிகள் வாழ்வு வளம் பெற என்றும் பாடுபடுவோம்.

    வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனுபவிக்கலாம் ஆனால் ஒருபோதும் அது உணவிற்கு மாற்றாக இருக்க முடியாது. எனவே, விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால்தான், நாம் நிலவில் மட்டுமல்ல, எங்கும் கால் பதிக்க முடியும். இதை உணர்ந்துகொண்டு விவசாயிகளின் வியர்வைக்கும், உழைப்புக்கும் மதிப்பளித்து எந்நாளும் அவர்கள் வாழ்வு செழிக்கப்பாடுபடுவோம் என உறுதியேற்போம்.


    விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்குத் தாங்களே விலைநிர்ணயம் செய்யும் காலம்தான் விவசாயிகளின் வாழ்வில் பொற்காலமாக இருக்கும்.இடைத்தரகர்களை ஒழித்து நேரடி விற்பனையில் விவசாயிகளே இறங்கும்போது மட்டுமே,பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலைமாறி,விவசாயியின் வீட்டு வாசலில் அனைவரும் நிற்கும் காலம் வரும். இது சா(ச)த்தியம். 

முடிவு விவசாயிகள் கையில்...

22 டிசம்பர், 2021

தேசிய கணித தினம்

       ஜீரோவை, ஹீரோ ஆக்கியவர்

     1887ஆம் ஆண்டு இதே நாளில்தான், உலகம் போற்றும் ஒரு கணிதமேதை தமிழகத்தில் உருவானார். காசுக்குக் கணிதத்தை விற்றவரல்ல அவர்; தன் மூளையின் மூலதனமாக்கியவர். கணிதத்தை மனப்பாடம் செய்யாமல், மனம் மயங்கிக் கற்றவர். அவர்தான் ராமானுஜம். ஈரோட்டில் சீனிவாச ஐயங்கார், கோமளத்தம்மா தம்பதி தவமாய் தவமிருந்து பெற்ற வரம் தான் ராமானுஜம். 

ராமானுஜம் வாழ்ந்த வீடு

       குடும்பச் சூழ்நிலை காரணமாக ஈரோட்டில் இருந்து கும்பகோணத்துக்கு இடம்பெயர்ந்தது ராமானுஜத்தின் குடும்பம். ராமானுஜத்தையும் வகுப்பறையில் பார்ப்பது கடினம். கோவில் மண்டபங்களில் சாக்பீஸ்கள் மூலம் பலவித கணக்குகளைப் போட்டு அதற்கு விடை காண்பார். விடையே கிடைக்காத பல கணக்குகளுக்கு, தூங்கும்போதும் கனவில் விடை கண்டுபிடிப்பார். 

     ஒருமுறை ராமானுஜத்தின் நண்பர் சாரங்கபாணி கணிதப் பாடத்தில், அவரை விட மதிப்பெண் கூடுதலாக பெற்றுவிட்டார். இதனால், அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் ராமானுஜம். அந்த அளவுக்கு எதிலும் முதலிடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 9ஆம் வகுப்பிலேயே பட்டப்படிப்பின் கணக்குகளுக்குத் தீர்வுகண்டதால், அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவே பின்னாளில் அவர் கணித மேதையாக உயர ஊக்கம் அளித்தது என்றால் மிகையல்ல. 

     கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் படிக்கும்போது கணிதத்தின் மீது கொண்ட ஆர்வமிகுதி காரணமாக மூன்று முறை ஆங்கில பாடத்தில் தோல்வியுற்றார். 

     அவர்தான், பின்னாளில் கணிதத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேற்றங்களை எழுதி வியக்கவைத்தார். ஒவ்வொரு நாளும் தனது கணிதக் குறிப்புகளை, சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதிவைத்தார். அதுவே பிற்காலத்தில் “ராமானுஜன் கணிதம்” என்ற புகழ்பெற்ற நூலானது. 

    1909 இல் திருமணமனவுடன் வேலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. இருபது ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துகொண்டே ‘பெர்நெவுவியன் எண்கள்’ என்ற கணிதத்துறை பற்றிய, சிறப்புக் கட்டுரையை வெளியிட்டார். 

   இதனால் உலகமே இவரது அறிவாற்றலைக் கண்டு வியந்தது. இதை அறிந்த சென்னை துறைமுக கழகப் பொறுப்பு தலைவர் ஸ்பிரிஸ் என்ற ஆங்கிலேயர்,இவரது கணிதக் குறிப்புகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். இதை படித்து பார்த்து வியந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்டி என்பவர், இங்கிலாந்துக்கு வரும்படி ராமானுஜத்துக்கு அழைப்பு விடுத்தார். 

பேராசிரியர் ஹார்டி

      1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்று பல கணித மேதைகளுடன் உரையாடினார். கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914–1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 

    அங்கு கிடைத்த உதவித்தொகை மூலம் டிரினிட்டி கல்லூரியில் பயின்றார். அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிரச் செய்தார். அவரை ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து இங்கிலாந்து நாடு பெருமைப்படுத்தியது. பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஃபெலோஷிப் பதவியும் (Fellowship Of Royal Society - FRS) அவருக்கு கிட்டியது. 

        ஒருமுறை, பேராசிரியர் ஹார்டி, சீனிவாச இராமானுசன் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது, தனது வாகன இலக்கமான 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்றார். உடனே, சீனிவாச இராமானுசன், அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.

1729 = 10 3  + 9 3    =  12 3   +  1  

     33 வயதை கடப்பதற்குள் அவரைக் காலன் கவர்ந்து சென்றுவிட்டான். குறுகிய காலத்தில் கணித மேதை ராமானுஜம் மறைந்தாலும், அவருடைய புகழ் காலத்தை வென்று சரித்திரம் படைத்து இருக்கிறது. 

      ராமானுஜம் கண்டுபிடித்த கணிதத்தின் ஆழ் உண்மைகள் தான் இன்று, அனைத்துத் துறையிலும் பயன்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. நேரு, தான் எழுதிய நூலில், ‘ராமானுஜத்தின் குறுகிய கால வாழ்வும், மரணமும் இந்தியாவின் நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தியாவில் உண்பதற்கு உணவும், கல்வியும் ஏற்படுத்தி கொடுத்தால், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், எழுத்தாளர்களும் உருவாகி, புதிய பாரதத்தினைப் படைப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

     ஜெர்மனியும், சுவீடனும் ஆண்டு முழுவதும் கணித மேதை ராமானுஜம் என்ற பெயரில் ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் மாநாட்டை நடத்துகின்றன. இதன் மூலம் தமிழரின் பெருமை போற்றப்படுகிறது. 

     2012ஆம் ஆண்டு ராமானுஜரின் 125ஆவது பிறந்த ஆண்டையொட்டி, அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும், அவர் பிறந்த தினமான டிசம்பர் 22 ஆம் தேதியை தேசிய கணித தினமாகவும் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியும் “தேசிய கணித தினம்” கொண்டாடப்படுகிறது. 

      கணித மேதையின் பிறந்த நாளான இன்று, இளைய தலைமுறை இணையத்திலேயே செலவழிக்காமல் ராமானுஜரின் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் போற்றி, தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும்.

21 டிசம்பர், 2021

ரேடியம் கண்டறியப்பட்ட நாள்

         அறிவியலுக்குக் கிடைத்த ஓர் அற்புதத் தனிமம்


மேரி கியூரி

      ரேடியம் என்பது கதிர்வீச்சுள்ள ஒரு தனிமம். போலந்து நாட்டைச் சேர்ந்த பிரெஞ்சு அறிவியலாளரான மேரி கியூரி, அவரது கணவர், பியரி கியூரி இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும் கதிர் வீசுகிறதா என்று பிட்ச்பிளன்ட் தாதுவை, தொடர்ந்து ஆய்வு செய்தார்கள். 

பியரி கியூரி

     பிட்ச்பிளென்ட் நிறைய தனிமங்களைக் கொண்ட ஒரு தனிமமாகும். போலோனியத்தைக் கண்டுபிடிப்பது சிறிது சுலபமாக இருந்தது. ஏனெனில் வேதியியல் ரீதியாக அது பிஸ்மத்தை ஒத்திருந்தது. மேலும் பிஸ்மத்தை ஒத்த தனிமமாக பிட்ச்பிளென்டில் இது மட்டுமே இருந்தது. 

      ஆனால் ரேடியத்தைக் கண்டுபிடிப்பதோ கடினமாக இருந்தது. ஏனெனில் அது பேரியத்தை ஒத்திருந்தது. மேலும் பிட்ச்பிளென்டில் பேரியமே இருக்கிறது. இறுதியாக 1902இல் ஒரு டன் பிட்ச்பிளென்டில் இருந்து 0.1 கிராம் ரேடியம் குளோரைடைப் பிரித்தெடுத்தனர். அப்போதுதான் யுரேனியத்தை விடப் பல மடங்கு தீவிரக் கதிர்வீச்சு கொண்ட ரேடியம் என்னும் புதிய மூலகத்தை,1898 டிசம்பர் 21 ஆம் தேதி, கண்டுபிடித்தார்கள்.

      இந்த அரிய கண்டு பிடிப்புக்காக, மேரி கியூரி, பியரி கியூரி, இருவருக்கும் ரசாயன விஞ்ஞானத்திற்கு 1903 ல் நோபல் பரிசு கிடைத்தது.மேரி கியூரிதான் நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்ணாவார். கியூரி தம்பதிகள், வேலைப்பளு அதிகம் இருந்ததால், நோபெல் பரிசை பெற்றுக்கொள்ள, ஸ்டாக்ஹோம் செல்லவில்லை. நோபெல் பரிசு பெறுபவர்கள் தங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்பதால் இருவரும் 1905 இல் ஸ்டாக்ஹோமிற்குச் சென்றனர். 

நோபெல் பரிசு

        ஜூலை 4,1934 இல் மேரி பச்சியில் உள்ள சன்செல்லிமொஸ் சானிடோரியத்தில் பல்லாண்டுகள் கதிரியக்க வெளிப்பாடோடு பழகியதால், இரத்த சோகையால் உயிரிழந்தார். அவர் பையில் கதிரியக்க ஓரிடத்தான்கள் கொண்ட சோதனைக் குழாய்களை வைத்திருந்திருக்கிறார். மேலும் அவைகளை தனது மேசையிலும் வைத்திருந்திருக்கிறார். போரின் போது மருத்துவமனைகளில் ஒரு கதிரியக்கராக பணியாற்றியபோது ஒழுங்கான உபகரணங்கள் அணிந்திருக்கவில்லை. அதனாலும் அவருக்கு ஆபத்து நேர்ந்தது.

     மேரி கியூரி, தனது கணவர் பியரியுடன் ச்கேயுக்ஸில் புதைக்கப்பட்டார். அறுபது வருடங்களுக்கு பிறகு, 1995 ஆம் ஆண்டில், தங்கள் சாதனைகளின் நினைவாக, பாரிஸ் பாந்தியனுக்கு இருவரின் கல்லறைகளும் மாற்றப்பட்டன. இதுவரை இப்படி மரியாதை வழங்கப்பட்ட ஒரே பெண் மேரி கியூரிதான்.

      அவரது,1890 காலத்து ஆவணங்கள், கையாள மிகவும் ஆபத்தானவையாக, இன்றும் கருதப்படுகின்றன. ஏனெனில் அவைகள் கதிரியக்க வெளிப்பாடு கொண்டிருக்கின்றன. அவரது சமையல் புத்தகம்கூட, அதிக கதிரியக்க வெளிப்பாடு கொண்டதாகும்.

20 டிசம்பர், 2021

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - வள்ளலார்.

      உலகில் வளரும் நாடுகள் மற்றும் ஏழைநாடுகள் சந்திக்கும் இரு சவால்கள் வறுமையும்,வேலைவாய்ப்பின்மையும். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. என்றாலும் வறுமைக்கே இதில் முதலிடம். 

"உலகில் ஏதாவது ஓரிடத்தில், வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது" என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. 

       சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், மக்களின் உடல்நலம், அவர்களுக்குக் கிடைக்கும் உணவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உலகளவில் ஆய்வு செய்து, பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. உலகில் ஒன்பது பேரில் ஒருவர், பசியால் வாடுவதாகச் சொல்கிறது அந்தப் பட்டியல். 

      உண்ண உணவின்றி பசி, பட்டினியால் வாடுவதுதான் வறுமை என்ற வரையறையும் இப்போது மாறிவிட்டது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதி, ஊட்டச் சத்து, வருமானம், கல்வி போன்ற வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை தான் வறுமை என இப்போது கூறப்படுகிறது.

     ஐ.நா சபை கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி சர்வதேச மனித ஒருமைப்பாடு தினத்தை அறிவித்தது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது, மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது மற்றும் மனித சமூக மேம்பாட்டுக்கு உதவுவதே இந்நாளின் நோக்கமாகும். 

      "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற தாயுமானவரின் வரிகள், அனைவரது மகிழ்ச்சி குறித்தும் தமிழர்களுக்கு இருந்த அக்கறை உணர்வினை உணர்த்துகிறது. இந்தச் சூழலில் அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் பசிப்பிணி போக்கும்முயற்சியில் இறங்கவேண்டும். 

     வறுமை விலகும்போதுதான் மகிழ்ச்சி வரும். மகிழ்ச்சியைத் தொடர்ந்து வளர்ச்சியும் அமைதியும் நிரந்தரமாகும். பசியும் பட்டினியும் இல்லாத பூமி பூக்கட்டும். புன்னகை மட்டுமே இந்த பூமியின் அடையாளமாக மாறட்டும். அதற்கு உலக நாடுகள் கைகோர்க்கட்டும். சர்வதேச மனித ஒருமைப்பாடு தினத்தில், நாம் அனைவரும், இதுகுறித்துச் சிந்தித்தல் அவசியம்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece