9 நவம்பர், 2021

சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம் (International Guinness World Records Day)

 



1.கின்னஸ் பிரிவெரி என்பவர் உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டில் முதன்முதலாக கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டார்.

2. உலக சாதனை புரிபவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர். 

3.முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது. 

4.1998-க்குப் பிறகு புத்தகத்தின் தலைப்பில் 'உலகச் சாதனை' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, 'கின்னஸ் சாதனைப் புத்தகம்' என்ற பெயரில் வெளியாகி வருகிறது.

5.இது ஆண்டுதோறும் வெளியாகும் தொகுப்பு நூல். Click Here

6.உலகில் நிகழ்த்தப்படும் இயற்கைச் சாதனைகள், மனிதச் சாதனைகள் இரண்டும் இதில் தொகுக்கப்படுகின்றன. 

7.இயற்கைச் சாதனைகளை எல்லோரும் அறிந்துகொள்ள விரும்பினாலும், அது அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.

8.மனிதச் சாதனைகள் என்ற பெயரில், வேடிக்கையான, விநோதமான, ஒரு செயலைச் செய்வதால் குறிப்பிட்ட எந்தப் பயனும் கிடைக்காவிட்டாலும் கூட, பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. 

9.கின்னஸ் புத்தகத்தில் எப்படியாவது இடம்பிடித்துவிட வேண்டும் என்ற பலருடைய ஆசைதான், இதற்கு அடிப்படைக் காரணம்.

10.இன்றைக்கு உலகச் சாதனைகளைப் பட்டியலிடும் மிகப் பெரிய சர்வதேச அமைப்பாக, கின்னஸ் சாதனை அமைப்பு வளர்ந்திருக்கிறது. 

11.புத்தகமாக மட்டுமல்லாமல் தொலைக்காட்சித் தொடராகவும், அருங்காட்சியகமாகவும் பல்வேறு வடிவங்களுக்கு அது பரவலாகியுள்ளது.

12.இந்தப் புத்தகத்தில் சாதனைகளைச் சேர்ப்பதற்கு எனத் தனி விதிமுறைகள் இருக்கின்றன. அதிகாரப்பூர்வக் கின்னஸ் நடுவர்கள் முன்னிலையில்தான் புதிய சாதனையை நிகழ்த்தவோ, ஏற்கெனவே உள்ள சாதனையை முறியடிக்கவோ முடியும்.

  நாம் நிகழ்த்தும் சாதனைகள் நம் பெருமையை உயர்த்த மட்டுமல்லாமல், சமூகத்தை உயர்த்தக் கூடியதாக இருக்கட்டும்

தேசிய சட்டசேவைகள் தினம்

       


      ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1987- ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால்  சட்ட சேவைகள் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.   “அனைவருக்கும் நீதி” என்ற குறிக்கோளோடு உச்சநீதிமன்றம் 1995 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இலவச சட்ட சேவையைத் துவங்கியது. இந்த தினமே சட்ட சேவைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உதவி கிடைப்பதை அரசியல் சட்டத்தின் 39-ஆம் பிரிவு உறுதி செய்கிறது

     மாற்றுத்திறனாளிகள், பலவீனமானவர்கள், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க உச்சநீதிமன்றம் விரும்பியது.

     இளம் வயதில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அரசியலமைப்பு உரிமைகளையும், அதன் தொடர்பான சட்டங்களையும் தெரிந்துகொள்ள இத்தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

     இதன் மூலம் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்குத் தகுதியான சட்ட உதவி இலவசமாகக்  கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

8 நவம்பர், 2021

மின்னல், இடி - பாதுகாப்பு

இடி, மின்னலின் போது....



வீட்டில் இருக்கும்போது செய்யக்கூடியவை

1) இருண்ட கருமேகங்களையும், அதிகப்படியான காற்றினையும் கவனிக்க வேண்டும்.

2) இடியின் சப்தத்தை நீங்கள் கேட்டால், மின்னல் தாக்கும் இடத்தின் அருகில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

3) இடி மற்றும் மின்னல் குறித்த முன்னெச்சரிக்கைத் தகவல்களுக்கு, ஊடகங்களைத் தொடர்ந்து கவனிக்கவும்.

4) வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும், முடிந்த வரை பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

5) ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும். வெளியில் உள்ள பொருட்களை (தளவாடங்கள், தொட்டிகள் முதலியன) பாதுகாப்பாக வைக்கவும்.

6) கால்நடைகள் உட்புறம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

7) மின்னல் தாக்கத்தின் போது, மின் எழுச்சி ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவசியமற்ற மின்சாதனங்களின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது பொருட்கள் வீசி எறியப்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மரக்கட்டைகள், இடிந்த சிதிலங்கள், தேவையற்ற பொருட்கள் இருப்பின் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்

8) மின்னல் தாக்கத்தின் போது தொலைபேசி, மின் சாதனங்கள், கம்பி வேலிகள், மரங்கள், மலை உச்சி ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும்போது செய்யக்கூடாதவை

1) தரையில் சமமாக படுக்கும் போது, மின்னலின் தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தரையில் சமமாக படுக்கக்கூடாது.

2) இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது மரங்களில் மின்சாரம் பாயும் என்பதால் மரங்களுக்கு அடியில் நிற்கக் கூடாது.

3) இரப்பர் செருப்புகள் மற்றும் கார் டயர்கள் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவாது என்பதால் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

பயணம் மேற்கொள்ளும் போது செய்யக்கூடியவை

1) சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் வேளான் வாகனங்களில் பயணிக்கும் போது உடனடியாக பாதுகாப்பான தங்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.

2) படகுச் சவாரி மற்றும் நீச்சல் மேற்கொள்ளும் போது மின்னல் தாக்கம் ஏற்படின் உடனடியாக கரைக்குத் திரும்பி பாதுகாப்பான தங்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.

3) புயலின் தாக்கத்தின் போது மீட்பு உதவி கிடைக்கும் வரை அல்லது புயல் கடந்து செல்லும் வரை உங்களது வாகனத்திலேயே இருக்க வேண்டும். வாகனத்தில் உள்ள உலோக பாகங்களை நீங்கள் தொடாமல் இருந்தால் உங்கள் வாகனத்தின் உலோக கூரை உங்களுக்கு பாதுகாப்பாக அமையும்.

4) வாகனங்களில் ஜன்னல்களை மூடி வைக்கவும். மரங்கள் மற்றும் மின் இணைப்புகளில் அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

செய்யக்கூடாதவை

1) உலோக குழாய்களில் மின்னல் பாயும் என்பதால், இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது குளிப்பதை தவிர்க்கவும். மேலும் ஓடும் நீரோடைகளிலிருந்து இருந்து விலகி இருக்கவும்.

2) கதவுகள், ஜன்னல்கள், நெருப்பு மூட்டப்படும் இடங்கள், அடுப்புகள், குளியல் தொட்டிகள் மற்றும் மின்சாரம் பாயும் பொருட்களிலிருந்து விலகி இருக்கவும்.

வெளியில் இருக்கும் போது செய்யக்கூடியவை

1) உடனடியாக பாதுகாப்பான தங்குமிடத்திற்கு செல்ல வேண்டும். உலோகக் கட்டமைப்புகளையும் கட்டுமானங்களையும், உலோகத் தகடு கொண்ட தங்குமிடங்களையும் தவிர்க்கவும்.

2) தாழ்வான பகுதியில் உள்ள தங்குமிடத்தை கண்டறிவதோடு, அந்த இடம் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகாத இடம் என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தில் தங்க வேண்டும்.

3) குதிகால்களை ஒன்று சேர்த்து, தலை குனிந்து தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும்.

4) உங்களது கழுத்திற்குப் பின்னால் இருக்கும் முடியில் நீங்கள் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மின்னலின் தாக்கம் உடனடியாக நிகழப்போகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சிகிச்சை

1) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் இயன்றவரை அடிப்படையான முதலுதவிச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

2) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபரது உடலில் மின்சாரம் இருக்காது என்பதால், காலம் தாழ்த்தாமல் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

3) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதையும் செவித்திறன் மற்றும் கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளனவா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

4) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபருக்கு தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவரது உடலில் எந்த பகுதியில் மின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும், காயத்திற்கான அடையாளங்கள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும்.

டாக்டர்.கமல் ரணதிவே பிறந்த தினம்

 



புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் பிரபலமான இந்திய உயிரணு உயிரியலாளர் டாக்டர் கமல் ரணதிவேயின் பிறந்தநாளையொட்டி, சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை (Doodle)வெளியிட்டு, கூகுள் கௌரவித்துள்ளது.

   இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் கமல் ரணதிவே, புற்றுநோய் ஆராய்ச்சிக்காகவும், அறிவியல் மற்றும் கல்வியின் மூலம் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பிற்காகவும் பாடுபட்டவர்.

    கமல் ரணதிவே கடந்த 1917 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள புனேயில் பிறந்தவர். இந்தியாவில் முதன் முறையாக பெண் விஞ்ஞானிகளுக்கான சங்கத்தை தொடங்கியவரும் கூட.

1949 ஆம் ஆண்டில், இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் (ICRC) பணிபுரிந்த பொழுது உயிரணுக்கள் பற்றிய ஆய்வான சைட்டாலஜியில் முனைவர் பட்டம் பெற்றார்.

உயிரணு உயிரியலில் மருத்துவப் பட்டம் பெற்ற அவரின் ஆராய்ச்சி, புற்றுநோய் சிகிச்சையில் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

    மார்பகப் புற்றுநோய்க்கும் மரபுவழிக்கும் இடையேயும் அதுபோல புற்றுநோய்களுக்கும் சில வைரஸ்களுக்கும் இடையேயும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தவர்.

  மருத்துவம் பயின்று, நம்முடைய சமூகத்தினருக்குச் சேவையாற்ற வேண்டும் என்று இந்திய மாணவர்களை, தொடர்ந்து ஊக்குவித்துப் பலரை மக்கள் பணியில் ஈடுபடுத்தியவர்.

7 நவம்பர், 2021

உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள் - நவம்பர் 7

        


   புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7-ந் தேதி, நாடு முழுவதும் ‘உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்' அனுசரிக்கப்படுகிறது. 

     உண்மையில் புற்றுநோய் ஒரு புரியாத புதிர் என்றே சொல்லலாம்.உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் ‌புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதம் அதிகரித்தே வருகிறது. 1984 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு இருந்த புற்றுநோயின் தாக்குதல், தற்போது 90 முதல்100 பேராக அதிகரித்துள்ளது. 

    இந்த உலகளாவிய அவசரநிலையைச் சமாளிக்கவும் நோயைக் கட்டுப்படுத்துவதில் நமது பங்கு என்ன என்ற முக்கியமான செய்தியைப் பரப்ப இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், நோய் குறித்த தவறான கருத்துக்கள், புற்றுநோயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காணவும், சரியான சிகிச்சையைப் பெறவும் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மக்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

 இந்த தினத்தின் பின்னணியில் உள்ள வரலாற்று உண்மைகள்:

    1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் UICC  கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது. உலகளவில் புற்றுநோய் விழிப்புணர்வை ஒருங்கிணைத்துப் பரப்புவதற்கான முயற்சிகளில் WHO மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் UICC-ஐ ஆதரித்து வருகின்றன.

         2021-ஆம் ஆண்டு உலக புற்றுநோய் தினத்திற்கான தீம்

 ஒவ்வொரு வருடமும் UICC இந்த தினத்திற்கு ஒரு கருப்பொருளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் ‘I can, we can’ என்பது தீர்மானமாக இருந்தது. புற்றுநோய் சுமையை எதிர்த்து என்னால் போராடமுடியும். நம் அனைவராலும் போராட முடியும் என்பது தான் அதன் அர்த்தம். எனவே, புற்றுநோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கவும், ஆரம்பகால நோயறிதல், சிகிச்சைகள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையின் சவால்களை சமாளிக்கவும் நம்மால் முடியும்.

  அதன்படி 2021 இன் தீம் என்னவென்றால் ‘I Am and I Will’ என்பது தான். இதன் பொருள் புற்றுநோயை எதிர்த்து இந்தப் போரில் வெற்றி பெறுவதற்கான திறனை நான் கொண்டுள்ளேன் என்பதாகும். 

 பாதிப்புக்கு காரணம் 

     கார்சினோஜென் கார்சினோஜென்கள் எனப்படும் ஒருவகை ஊக்கிதான் நமது உடம்பில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இது புகையிலையில் மட்டுமே இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் வழியாகவும் உடலுக்குள் நுழைகின்றது. செயற்கை வேதிப்பொருட்கள் செயற்கை வேதிப்பொருட்களான சோடியம் பென்சோயிட், சோடியம் நைட்ரேட் ஆகியவை குழந்தைகளைப் பாதிப்பதுடன், பெரியவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வரக் காரணமாகின்றன. 

     செல்கள் பாதித்தால் கட்டியாகும். மரபுவழி, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணிகள் சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய்க்கான கட்டியா என்று தீர்மானிக்கின்றன. 

   புற்றுநோய்கள் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டவை. எந்த அளவு பாதிப்பு, குணப்படுத்த முடிவு, எவ்வளவு காலமாகும் என்பதை புற்றுநோயின் காலம்தான் முடிவு செய்யும். 

   ஆரம்ப நிலையில் நோய் கண்டறியப்பட்டால் நோயை குணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எளிது 

    மார்பகம், கர்ப்பப் பை பெண்களின் மார்பு பகுதியில் ஏற்படும் இந்த வகை புற்றுநோய் மிகவும் ஆபத்தானது என்றே கூறலாம். ஏனென்றால், 2018-ம் ஆண்டில் மட்டும் 21 லட்சம் பேருக்கு மார்பகப் புற்றுநோய் வந்துள்ளது. அதில் இந்தியாவில் 1,62,468 பதிவாகியுள்ளது. 50-64 வயதுடைய பெண்களுக்கு இவ்வகை அதிகமாக வருகிறது. 

  உலகம் முழுவதும் 2018-ல் 6,27,000 பேரை, இந்தியாவில் 87,090 பேரையும் பலிவாங்கியுள்ளது இந்தப் புற்றுநோய். இதற்கு அடுத்தப்படியாக 21-67 வயதுடைய பெண்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் வருகிறது. இந்தியாவில் 2018ல் 96,922 பேருக்கு இவ்வகை புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 60,078 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

   நுரையீரல் புற்றுநோய் புகைப்பழக்கம் அல்லது மாசு அதிகம் உள்ள காற்றை அதிகம் சுவாசிப்பதால் இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது. 2018ல் 67,795 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 63, 475 பேர் பலியாகினர். 

 ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோய் 

     இந்தியாவில் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் 16 சதவீதம் இவ்வகை புற்றுநோய்தான். புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவை உட்கொள்வதால், இந்த புற்றுநோய் வருகிறது. 2018-ல் 72,616 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

 கல்லீரல் புற்றுநோய் 

   அதிவேகமாகப் பரவும் புற்றுநோயில் 2ஆவது இடம் வகிக்கிறது கல்லீரல் புற்றுநோய். சர்வதேச அளவில் ஒவ்வோர் ஆண்டும் 7,50,000 பேர் இதனால் இறக்கின்றனர். அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 7,80,000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இந்தியாவில் 2019ல் ஜூலை வரை 25,999 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதேபோல், 19,676 பேர் பலியாகியுள்ளனர். 

 மனவலிமை வேண்டும் 

      புற்றுநோய் ஒன்றும் பரவும் நோய் இல்லை. ஆனால், பரவும் என்று எண்ணி புற்றுநோயாளிகள் பலர் தனிமைப்படுத்தப் படுகிறார்கள். இதனாலே மனவலிமையற்று, பல நோயாளிகள் நடைபிணமாக மாறிவிடுகின்றனர். உணவுப் பழக்கம், உடற்பயிற்சி தினமும் உடற்பயிற்சி செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது புற்றுநோயிலிருந்து மட்டுமன்று எந்த நோயில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

    ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி, நோய்க்குத் தீர்வு கண்டு வாழ்வை மீட்டு எடுக்கலாம். பரிசோதனை அவசியம் புற்றுநோய் ஒரு நாளில் ஊருவாவதில்லை. நாள் பட்ட புண் போன்றதுதான். எனவே குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது முழு உடலைப் பரிசோதனை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை இல்லை என்றாலும், இதற்காக ஒரு தொகையை தனியார் மருத்துவமனையில் கொடுப்பதில் தவறேதுமில்லை. 

       இந்தியாவிலேயே வசதி புற்றுநோயின் தீவிரத்துக்கு ஏற்றாற்போல அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சுச் சிகிச்சை, கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை, இலக்குச் சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை போன்ற பலவகையான சிகிச்சை முறைகள் இந்தியாவிலே உள்ளன.

    புற்றுநோய் வந்து, அதை மன உறுதியோடு அதை எதிர்த்துப் போராடி வெற்றிகொண்டவர்கள் பலர் நம்மிடையே உள்ளனர் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்தநாள்

 



    சிறுவயதில் நாம் பல பாடல்களைப் பாடியிருப்போம்.

     "கைவீசம்மா கைவீசு!',... "தோசையம்மா தோசை!',... "அம்மா இங்கே வா வா!',....."மாம்பழமாம் மாம்பழம்” இந்த பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் யார் தெரியுமா?


     பள்ளியில் சக மாணவன் ஒருமுறை தட்டு கிட்டு, லட்டு, கட்டு, மட்டு, வட்டு, விட்டு, பிட்டு என்று வேடிக்கையாக சொற்களை  அடுக்கிக் கொண்டே போனான்! ஒத்த ஓசையுடைய அந்தச் சொற்கள் சிறுவன் மனதில் ஒரு பாடலைத் தோற்றுவித்தன.

    அதை உடனே தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டான். அது பிற்காலத்தில் ஒரு பெரிய குழந்தை இலக்கியப் பாடலாக மாறப்போகிறது என்பது அன்று அவனுக்குத் தெரியாது! அந்தப் பாடல்தான் எளிய பொருள் நிறைந்த பல பாடல்கள் அச்சிறுவனால் பிற்காலத்தில் எழுதக் காரணமானது. அவர் யார் தெரியுமா?

     அவர்தான் பிற்காலத்தில் 'குழந்தைக் கவிஞர்' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட கவிஞர் திரு.அழ.வள்ளியப்பா ஆவார்.

    இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள "ராயவரம்' என்னும் சிற்றூரில் 7.11.1922 அன்று பிறந்தார். குடும்பப் பொறுப்புகள் காரணமாக அவரால் கல்வியைத் தொடர முடியவில்லை. எனவே தனது 18-ஆவது வயதில் சென்னையில் இருந்த "சக்தி' பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்தார். இவர் எழுதிய முதல் கதை "ஆளுக்குப் பாதி' என்பதாகும்.

     1941 ஆம் ஆண்டு இவருக்கு வங்கியில் வேலை கிடைத்தது. வங்கியில் பணிபுரிந்து கொண்டே பாலர் மலர், சங்கு போன்ற சிறுவர் இதழ்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1951 முதல் 1954 வரை "பூஞ்சோலை' என்ற சிறுவர் இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார்.அந்நாளில் சிறுவர் இதழ்களில் பலர் எழுதிவந்தனர். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, 1950 இல் "குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.

      இவர் எழுதிய சிறுவர் பாடல்கள் யாவும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளி வந்தன.1944 ஆம் ஆண்டு "மலரும் உள்ளம்' என்ற தொகுதியும்,1954 ஆம் ஆண்டு 135 பாடல்கள் கொண்ட தொகுதியும் ,1961இல் மற்றொரு தொகுதியும் வெளிவந்தன.

     "நம் நதிகள்' என்ற தலைப்பில், இவர் தமிழகத்தின் ஆறுகள் பற்றிய நூல் ஒன்றை எழுதினார். இந்நூலை, புதுதில்லியில் உள்ள "தேசியப் புத்தக டிரஸ்ட்' (National Book Trust) பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டது! இது, தமிழக எழுத்தாளர் ஒருவருக்கும் கிடைக்காத பெருமையாகும். இவர் 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம்,1 ஆய்வு நூல், 2 மொழி பெயர்ப்பு நூல்கள், 1தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.

     இவற்றில் 2 நூல்களுக்கு மத்திய அரசின் பரிசுகளும், 6 நூல்களுக்கு மாநில அரசின் பரிசுகளும் கிடைத்துள்ளன. இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்லாது தலை சிறந்த பேச்சாளரும் ஆவார். 1979ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்திலும், 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரைகள் மிக முக்கியமானவையாகும்.

      பல தொண்டு நிறுவனங்கள் இவருக்கு "குழந்தை இலக்கிய முன்னோடி', "பிள்ளைக் கவியரசு,' "மழலைக் கவிச் செம்மல்” போன்ற பல விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன .1982 ஆம் ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்ற விருது அளித்தது.

      வள்ளியப்பா குழந்தைகளோடு பழகும் பொழுது, தானும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். அவர்களோடு மனம் விட்டுப் பேசி ஆடிப்பாடி மகிழ்வார். அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளை அழைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் கதை சொல்வார். இதற்காக ஏராளமான குழந்தைகள் அவர் வீட்டுக்கு வருவர். 

       ஒருநாள் சிறுவன் ஒருவன் புதுச்சட்டை அணிந்து வந்தான். காரணம் கேட்டதற்கு, "எனக்கு இன்று பிறந்தநாள்!' என்று கூறினான். உடனே சிறுமி ஒருத்தி, "நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன்!' என்று கூறினாள். மற்றொரு சிறுமி குறுக்கிட்டு, "நான் புதன்கிழமை பிறந்தேன்!' என்று கூறினாள்.


வள்ளியப்பாவிற்கு உடனே ஒரு பாடல் தோன்றியது அதுதான். 

"ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை நன்றாய் 

பாடம் படித்திடுமே!

திங்கள்கிழமை பிறந்த பிள்ளை தினமும் 

உண்மை பேசிடுமே!'

இவ்வாறு ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு சிறப்பைக் கூறி, "இந்தக் கிழமை ஏழுக்குள் எந்தக் கிழமை நீ பிறந்தாய்?' என்று முடித்திருப்பார். 




        அவரது திறமைக்கு இந்தப் பாடல் ஒன்றே சான்றாகும். குழந்தைகளோடு ஒன்றி வாழ்ந்த நம் கவிஞர் 16.3.1989 அன்று காலமானார்.

தகவல் துளிகள்

(1) வள்ளியப்பா ஓய்வு பெற்றபின் 1983 முதல் 1987 வரை கோகுலம் இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

(2) இவரது பல பாடல்கள் நூல்களாக மட்டும் இல்லாமல் குறுந்தகடு வடிவிலும் வெளிவந்துள்ளன.

(3) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இவரது பாடல்களை மிகவும் நேசித்தார் . "குழந்தை உள்ளம் கொண்டவர் மட்டுமே குழந்தைகளுக்கு எழுத முடியும்!' என்று கூறினார்.

(4) மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கம், வள்ளியப்பா பற்றி இப்படி குறிப்பிட்டார்."தமிழில் நான்கு வகையான பாக்கள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் என்னை பொருத்தவரை பா வகைகள் ஐந்து. அவை ஆசிரியப்பா ,வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் வள்ளியப்பா!'

(5) கவிஞரும், எழுத்தாளருமான கொத்தமங்கலம் சுப்பு, வள்ளியப்பா அவர்களை பின்வருமாறு பாராட்டினார்.

"வள்ளியப்பா ஒரு புள்ளியப்பா! அவர் வரையும் பாக்கள் வெள்ளியப்பா! வளரும் பிள்ளைகளுக்கு பள்ளியப்பா!'

(6) இவருக்கு "குழந்தைக் கவிஞர்' என்ற பட்டத்தை வழங்கியவர் திரு தமிழ்வாணன் ஆவார்.

(7) இவர் இறக்கும் பொழுதும் குழந்தை இலக்கியம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். "குழந்தை இலக்கியத்தை பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்க வேண்டும்' என்று பேசி முடித்து மயங்கிச் சரிந்தார், இந்தத் தமிழ் குழந்தை இலக்கியத்தின் முன்னோடி.

       குழந்தைகளின் கவனத்தைக் கவர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. குழந்தைக் கவிஞர் என்று சொன்னாலே அழ. வள்ளியப்பாதான் மனதில் தோன்றுவார். இந்தச் சாதனையை குழந்தைகள் உலகம் என்றும் கொண்டாடும்.

6 நவம்பர், 2021

போர் மற்றும் ஆயுத மோதல் வரலாற்றில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம்

       

     போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் 2001 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் தொடங்கப்பட்டு,ஆண்டுதோறும் நவம்பர் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

     போர் மற்றும் ஆயுத மோதல்கள் இயற்கைச் சூழலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, பயிர்கள் அழிக்கப்படுகின்றன, நீர் வழங்கல்கள் விஷமாகின்றன,காடுகள் எரிக்கப்படுகின்றன. போருக்குப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழலின் அழிவுக்கும் சேதத்திற்கும் காரணமாகின்றது. அதைவிட நீண்டகால விளைவுகள் மோசமாக இருக்கும். 

    இறந்த மற்றும் காயமடைந்த வீரர்கள் மற்றும் குடிமக்கள், அழிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் அடிப்படையில் மனிதகுலம் எப்போதுமே போர் இழப்புகளைக் கணக்கிட்டாலும், சுற்றுச்சூழல் பெரும்பாலும் போரின் விளம்பரப்படுத்தப்படாத பலியாகவே இருந்து வருகிறது. 

     போர் அல்லது மோதலின் போது, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்நாள் முயல்கிறது. 

இந்த நாளின் நோக்கங்கள் இரண்டு வகையானவை. 

1. தங்கம், எண்ணெய், மரம், வைரங்கள் அல்லது பிற அரிய வளங்கள் போன்ற அதிக மதிப்புள்ள சுற்றுச்சூழல் வளங்கள் மீது ஏற்படும் மோதல்களைக் கட்டுப்படுத்துவது. 

2. மக்களின் வாழ்க்கையை நிலைநிறுத்தும் இயற்கை வளங்கள் சேதமடைந்தால் நீண்ட காலத்திற்கு அமைதி இருக்காது என்பதை ஐக்கிய நாடுகள் சபை உணர்ந்துள்ளது.எனவே அவற்றைக் காப்பது.

    எனவே போர்கள் மற்றும் மோதல்களின் சுற்றுச்சூழல் அம்சத்தில் போர்த் தடுப்பு, அமைதி காத்தல், மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற நோக்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, கடந்த 60 ஆண்டுகளில், அனைத்து உள்நாட்டு மோதல்களில் 40% இயற்கை வளங்களை சுரண்டப்பட்டுள்ளன. 

     மோதல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, உலகின் பெரும்பாலான நாடுகளை விட, மிகப்பெரிய இராணுவங்கள் அதிக கார்பன் டை ஆக்சைடு வாயுவை உருவாக்குகின்றன. 

   பல ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தான், கொலம்பியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இயற்கை வளங்களின் பெரும் இழப்புகளுக்குப் போர்களே வழிவகுத்தன. ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின் படி, 2018 இல் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் காடழிப்பு விகிதம் 95% அளவை எட்டியது.

     இத்தகு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும், போர்களைப் புறந்தள்ளுவோம். சுற்றுச்சூழலைக் காத்து, உயிர்கள் வாழ ஏதுவான இடமாக இவ்வுலகை மாற்றுவோம்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece